Friday, 30 January 2015

அடிசில் 88

இனிப்பு நெல்லிக்காய்
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
நெல்லிக்காய்  -  500 கிராம்
சீனி  -  600 கிராம்
தண்ணீர் - 1 கப் 
வனிலா -  2 தேக்கதண்டி
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:
1. நெல்லிக்காய்களை நீரில் கழுவி, ஒவ்வொரு நெல்லிக்காயின் மேற்றரப்பிலும் முள்ளுக்கரண்டியால் குத்தி ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பைத் தூவிக் கலந்து வைக்கவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை விட்டு, சீனியைப் போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
3. பாகு கையில் ஒட்டும் பதமாக வரும்போது நெல்லிக்காய்களை அதற்குள் போட்டுக் கலக்கவும்.
4. பாகு மீண்டும் தண்ணித் தன்மை உள்ளதாக மாறிவரும்போது வனிலாவைச் சேர்க்கவும்.
5. தொடர்ந்து துழாவிக் காய்ச்சி பாகு தடித்த பாணிபோல் வரும் போது இறக்கவும்.
6. ஆறியபின்னர் காற்று போகமுடியாத ஈரமற்ற போத்தலில் போட்டு வைத்துப் பாவிக்கவும்.

Thursday, 29 January 2015

காலன் முதுகை விரிக்கும் பெருமாள்!

பக்திச்சிமிழ் - 85

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே. அதுவும் அந்த தமிழ்ச்சொல்லை யார் சொன்னார்கள் என்றதைப் பொருத்து அதன் உயர்வு கூடும். அடுக்கடுக்காகச் சொற்களை அள்ளித் தொடுத்து முருகனுக்குப் பாமாலை சூடி மகிழ்ந்தவர் அருணகிரிநாதர். முருகனின் திருப்புகழ் மணக்கும் அருணகிரிநாதரின் தமிழ்ச் சொற்களுக்கு ஈடேது! இணையேது! அவர் பாடிய முதலாவது திருப்புகழே
“முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்”
என சந்தங்களோடு விரைந்து பாடக்கூடியதாக இருக்கிறது. அருணகிரிநாதரும் தன் பாட்டுத்திறத்தல் தமிழை நன்றாக வளைத்துத் தொடுத்தார்.

சந்தங்களோடு தமிழை வளைத்துத் தொடுத்தபோது சில திருப்புகழ்களில் உட்கருத்து ஒன்றாக இருக்க மேலோட்டமாகப் பார்ப்போருக்கு வேறு கருத்துப்படத் தமிழை வளைத்திருக்கிறார். அப்படிபட்ட ஒரு திருப்புகழைப் பார்ப்போம். 

“பாண மலரது தைக்கும் படியாலே
பாவி யிளமதி கக்கும் கனலாலே
நாண மழிய வுரைக்கும் குயிலாலே
நானு மயலி லிளைக்குங் தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் திருமார்பா
தேவர் மகுட மணக்குங் கழல்வீரா
காண அருணையில் நிற்குங் கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே”

இத்திருப்புகழைப் பிரித்துப் படிப்போம்
“பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மயலில் இளைக்கும் தரமோதான்
சேணில் அரிவை அணைக்கும் திருமார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே!”

மேலோட்டமாக இதனைப் பார்க்கும் போது 
  1. மலர் தைக்குமா?
  2. மதி கனலைக் கக்குமா?
  3. குயில் நாணம் அழிய உரைக்குமா?
  4. தேவர்கள் மகுடம் மணக்குமா?
  5. காலனின் முதுகை விரிக்க முடியுமா? காலனின் முதுகை முருகன் விரித்தானா? எப்போது?
என்பன போன்ற கேள்விகள் எழலாம்.

தமிழ், அருணகிரி தரு தமிழில் வளைந்ததால் இத்திருப்புகழுக்கு கருத்து எழுதுவோர் தாமும் தடுமாறியதோடு மற்றவர்களையும் தடுமாற வைக்கின்றனர். இதில்
“காலன் முதுகை விரிக்கும் பெருமாளே” 
என்ற கடைசி அடிக்கு பலரும் எழுதிய கருத்தை வாசித்த ஒருவர் ‘முருகன், காலனுக்கு முதுகில் அடித்தாரா?’ என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். அப்போது அவர் இத்திருப்புகழைக் கூறி ‘முருக பக்தர்களை காலன் அணுகும் போது காலனின் முதுகில் முருகன் ஓங்கி அடிக்க முதுகு விரிந்து போகுமாம்’ என்றும் ‘யமனுடைய முதுகைப் பிளக்கும் படி அடித்து விரட்டும் பெருமாள்’ என்றும் எழுதுகிறார்கள், அது சரியா? என்றார். அவர் சென்னதை நானும் பார்த்தேன். அருணகிரிநாதர் வளைத்த தமிழே அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது. அதனாலேயே இத்திருப்புகழின் கருத்தை  எழுதுகிறேன்.

மன்மத பாணங்களாகிய மலர் [பாணமலர்] அம்பு தைக்கும் காரணத்தாலும் பேதலித்த [பாவி] இளைய நிலவு எரிப்பதாலும் [கக்கும் கனல்], [அருணகிரிநாதரது] நாணம் அழிந்து போகும்படி குயில் கூவுவதாலும் [உரைக்கும்] முருகன் மேல் கொண்ட மோகத்தால் [மையலில்] அருணகிரிநாதராகிய நானும் மெலிந்து [இளைத்து] போதல் சரிதானா [தரமோதான்]? விண்ணுலகில் [சேணில் - விண்ணில்] இருக்கும் தேவயானையை அணைக்கும் அழகிய மார்பை உடையவனே! தேவர்கள் தலைவணங்குவதால் [மகுடங்கள் - முடிகள் தாழ்வதால்] புகழ்மணக்கும் கால்களை [கழல்] உடைய வீரனே! நான் பார்க்க [காண] திருவண்ணாமலையில் [அருணை - அருணாசலம்] நிற்கின்ற ஒளிவீசும் வேலையிடையவனே [கதிர்வேலா]! காலன் தொன்றுதொட்டு செய்துவரும் செய்கையை [முதுகை] விரிவாக்கும் பெருமாளே! 

“காலன் முதுகை விரிக்கும் பெருமாளே,” முதுகை = முது + கை எனப்பிரியும். முது என்பது பழமை, தொன்மை என்ற கருத்தை இங்கு தருகிறது. பழமொழியை முதுமொழி என்போம் அல்லவா? அது போல. ஒருவர் செய்யும் செயலை ‘கை’ என்பர். செய்யும் செயல் செய்கை. முதுகை என்பது தொன்றுதொட்டு செய்யும் செய்கையாகும். காலன் தொன்று தொட்டு செய்யும் செய்கை என்ன? உயிர்களைப் பறித்து எடுத்தலே காலனின் செயலாகும். முருகன் சேனாதிபதி - படைத்தலைவன். ஆதலால் முருகன் போர்களில் உயிர்களைக் கொல்லக்கொல்ல காலனின் தொழில் விரிவடையும் தானே! எனவே அருணகிரிநாதர் காலனின் முதுகினை ‘முதுகை’ எனக்கூறவில்லை என்பதை அறியலாம்.

அருணகிரிநாதர் பேரின்பத்துக்கு ஏங்கும் காதலியாகத் தன்னைப் பாவித்து இத்திருப்புகழைப் பாடியிருக்கிறார். அதனால் அவர் ‘மன்மதனின் மலரம்பு தைக்கும் காரணத்தாலும் பேதலித்த இளம் நிலவு எரிப்பதாலும் தனது நாணம் அழியும்படி குயில் கூவுவதாலும் நானும் மோகத்தால் மெலிந்து போதல் சரிதானா? தேவலோகத்தில் இருக்கும் தேவயானையை அணைக்கும் அழகிய மார்பை உடையவனே! தேவர்கள் தலை வணங்குவதால் புகழ்மணக்கும் கழலுடைய வீரனே! நான் காணும்படி திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலனே! காலன் தொன்று தொட்டு செய்யும் செய்கையை விரிவாக்கும் பெருமாளே!’ என முருகனை வணங்கியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 28 January 2015

மறக்கப்படுமோ மானவீரம்?


மானம் என்பது உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயிர்த்துடிப்பாகும். பூனை மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் அதனையே ஓர் அறையுள் பூட்டிவைத்து அடித்துப்பாருங்கள். தன் முன்னங்கால் நகங்களை விரித்து கொடும்புலியைவிட வேகமாகப் சீறிப்பாய்ந்து கடித்துக் குதறும். அதுவும் மானமே. இப்படி உலக இயற்கையிடமிருந்து மனிதன் முதலில் கற்றபாடம் தற்காப்பு. தற்காப்பால் எழுந்ததே தன்மானம். அதனை மனித வரலாற்றின் அடிச்சுவட்டை நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் அறிவர். 

மொழியும் இனமும் தோன்றமுன் மனிதன் தன்னந் தனியாக நின்ற போது ஏனைய கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கையின் சீற்றத்தில் இருந்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவியது அவனது தன்மானம் கொடுத்த நெஞ்சத்துணிவே. தன்மானம் கொடுத்த நெஞ்சத் துணிவுடன் சேர்ந்த வேகத்தையே வீரம் என்கின்றோம். அந்த வீரம் மட்டும் மனிதனுக்கு இல்லாது இருந்தால் இன்றும் மனிதன் விலங்காகவே வாழ்ந்திருப்பான். காட்டுவாழ் விலங்கினத்திடமிருந்து மனிதனை மனிதனாக இனங்காட்டிய மனித செயற்பாடுகளுள் முக்கிய பங்குவகிப்பது தன்மான வீரமே. 

அதனால் பண்டைத்தமிழர் வீரத்தைப் போற்றினர். தமிழரின் வீரம் என்னும் அந்த நெஞ்சக்கனலை ஊட்டி வளர்த்தோர் தாய்மாரே. அதனாலேயே வீர சுதந்திரம் வேண்டி நின்ற பாரதியாராலும் ‘வீரம் சேர்ப்பது தாய்முலைப்பாலடா’ என்று பாடமுடிந்தது. எந்த உயிரும் தாய்மையின் செழுமையின் சிலிர்ப்போடு தான் பெற்றதை எதிரிகளிடம் இருந்து காக்க வீறு கொண்டு எதிர்த்து போராடும். அது இயற்கையின் நியதி. அந்தத் தனிப்பண்பில் சிறிதும் குறைந்தவர்களாக தமிழ்ப்பெண்கள் இருக்கவில்லை என்பதை பண்டைய இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், நடுகற்களும் இன்றும் சான்றுபகர்கின்றன. தமிழ்ப் பெண்களில் வீரைகள் இருந்ததை மணிமேகலை சொல்கிறது. பல மாவீரம் மிக்க மறக்குல வீரைகளை புறநாநூறு காட்டுகிறது.

குழந்தை இறந்தாலும், தசைப்பிண்டமாய்ப் பிறந்தாலும் அவற்றின் மார்பில் வாளால் கீறி வீரத்தழும்பு ஏற்படுத்திய பின்னரே அவற்றைச் நம்முன்னோர்கள் புதைத்தார்கள் என்பதற்கு  
“குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்”
என்று சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை எழுதிய சங்க இலக்கியப் பாடலே சாட்சி. 

தன்னலம் பொதுனலனாக மாறும் போது தன்மானம் இனமானமாக மாறுகிறது. தம் இனமானம் காப்பதற்காக இறந்தோரை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருன்ந்தே தமிழர் வணங்கினர் என்று சொல்வதைவிட அவர்களை விடச்சிறந்த கடவுளும் இல்லை என்று நம்பினர் என்பதை புறநானூறு சொல்கிறது. இனமானத்துடன் பகைவரின் படைகளின் முன்னின்று எதிர்த்துவராது  விலக்கிப் பாதுகாத்து, தாமும் இறந்து நடுகல்லானோரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு கிடையாது என்பதை
“கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”
என்று மாங்குடிமருதனார் என்னும் புலவர் சொல்வதால் அறியலாம்.

புறநாநூற்று மறக்குல வீரர்களை விடச்சிறந்த மாவீரர்களை மாவீரைகளை கடந்த முப்பது வருடத்தில் நமது ஈழம் கண்டது. மா என்றால் மரணம் என்ற கருத்தையும் தரும். மரணத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளும் வீரமே மாவீரமாகும். எமது மாவீரர்கள் யாருக்காக, எதற்காக, வன்னிமண்ணில் சாவே வா! உன்னை சாப்பிடுகின்றேன் என நின்றார்கள்? எதை நினைந்து தம் ஆசைகளை, பாசங்களைத் துறந்து களம் புகுந்தார்கள்? தம் இன்னுயிரை கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் ஏன் கொட்டிக் கொடுத்தார்கள்?

தன் இனம் வாழ, தன் தாய்மொழி நின்று நிலைக்க, வருங்கால ஈழத்தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ தம்மையே ஈந்த அந்தச் செம்மல்களை நாம் மாறப்போமா? ஒன்றா! இரண்டா! எத்தனை ஆயிரம் மாவீரர் தம் ஆருயிரைக் ஈழத்து விடியலுக்கு வித்திட்டுச் சென்றிருக்கிறார்கள். சுந்திரம் வேண்டும் மனிதராய், தமிழராய் அவற்றை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா? 

ஆசை, பாசங்களைத் துறத்தல் தவம் என்றால், தன்நலம் கருதாது பிறர் நலனுக்காக தம் இன்னுயிரத் துறந்து மாவீரர் ஆனோர் யாவரும் மாதவத்தோர் அல்லவா?  தவம் செய்பவர்களில் தனக்கு உயிர் இருக்கிறது என்ற எண்ணம் இல்லாது, பிற உயிர்களின் நன்மைக்காக வாழ்பவனை உலக உயிர்கள் எல்லாம் வணங்கும் என்பதை 
“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்”                     - 268
என திருவள்ளுவர் தவம் என்னும் அதிகாரத்தில் காட்டுகிறார். ஆதலால்  மாதவத்தோர் ஆன மாவீரரின் மாவீரம் மறக்கப்படுமோ? இழிநிலை வந்தபோது வாழாத மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு                      - 970

தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து மானவீரரை விளகேற்றித் தொழுது ஏத்துவோம்.
இனிதே,
தமிழரசி.

Sunday, 25 January 2015

பார்த்து மகிழ வாரீர்!பசுமை என்பது என்ன?
பார்க்கும் இடம் யாவும்
பச்சைப் பசேல் காட்சியா?
பார்த்து மகிழ வாரீர்!

காடு மலைகள் எல்லாம்
மரஞ்செடி காட்சி ஆகவேண்டும்
தேன் சிந்து மலரும்
வண்டும் இணைந்து காணவேண்டும் 

வானம் எங்கும் பறவைக்
கூட்டம் பறந்து திரியவேண்டும்
மானும் மரையும் சேர்ந்து
மனம் மகிழ்ந்து துள்ளவேண்டும்

குயிலும் மயிலும் அங்கே
கூடிப் பாடி ஆடவேண்டும்
மலையில் வீழ் அருவி
மெல்லத் தவழ்ந்து ஓடவேண்டும் 

நீர் நிலைகள் எங்கும் 
நன்னீர் பொலிந்து நிறையவேண்டும்
வயல் வெளிகள் தோறும்
பயிர்கள் செழித்து வளரவேண்டும்

காயும் கனியும் ஒன்றாய்
மரத்தில் காய்த்துத் தொங்கவேண்டும்
வாயும் நல்ல உணவை
ரசித்துப் புசித்து ருசிக்கவேண்டும்

கூனும் குருடும் இன்றித்
தரணி காட்சி தரவேண்டும் 
வாழும் மனிதர் தாமும் 
வாழும் வாழ்வில் பசுமைவேண்டும்

போர்கள் அற்ற நிலையில்
உலகம் புதுமை காணவேண்டும்
அப்போ பசுமை எங்கும்
மலரும் உயிர்கள் வாழ்வுசிறக்கும்.
                                                       - சிட்டு எழுதும் சீட்டு 96
இனிதே,
தமிழரசி.

Saturday, 24 January 2015

மருதமலைத் தேன்


மருத மலைத்தேனை பார்த்தேன்
மன மகிழ துதித்தேன்

மருத மலைத்தேனை இரசித்தேன்
மறு ஜென்மம் எடுத்தேன்

முருகு அருட்தேனை சுவைத்தேன்
மன தேனில் குழைத்தேன்

உருகு மனத்தேனை குடித்தேன்
உள தேனில் புதைத்தேன்

கருத நினைத்தேனை அடைந்தேன்
கன் மவினை தொலைத்தேன்