Wednesday, 28 January 2015

மறக்கப்படுமோ மானவீரம்?


மானம் என்பது உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயிர்த்துடிப்பாகும். பூனை மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் அதனையே ஓர் அறையுள் பூட்டிவைத்து அடித்துப்பாருங்கள். தன் முன்னங்கால் நகங்களை விரித்து கொடும்புலியைவிட வேகமாகப் சீறிப்பாய்ந்து கடித்துக் குதறும். அதுவும் மானமே. இப்படி உலக இயற்கையிடமிருந்து மனிதன் முதலில் கற்றபாடம் தற்காப்பு. தற்காப்பால் எழுந்ததே தன்மானம். அதனை மனித வரலாற்றின் அடிச்சுவட்டை நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் அறிவர். 

மொழியும் இனமும் தோன்றமுன் மனிதன் தன்னந் தனியாக நின்ற போது ஏனைய கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கையின் சீற்றத்தில் இருந்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவியது அவனது தன்மானம் கொடுத்த நெஞ்சத்துணிவே. தன்மானம் கொடுத்த நெஞ்சத் துணிவுடன் சேர்ந்த வேகத்தையே வீரம் என்கின்றோம். அந்த வீரம் மட்டும் மனிதனுக்கு இல்லாது இருந்தால் இன்றும் மனிதன் விலங்காகவே வாழ்ந்திருப்பான். காட்டுவாழ் விலங்கினத்திடமிருந்து மனிதனை மனிதனாக இனங்காட்டிய மனித செயற்பாடுகளுள் முக்கிய பங்குவகிப்பது தன்மான வீரமே. 

அதனால் பண்டைத்தமிழர் வீரத்தைப் போற்றினர். தமிழரின் வீரம் என்னும் அந்த நெஞ்சக்கனலை ஊட்டி வளர்த்தோர் தாய்மாரே. அதனாலேயே வீர சுதந்திரம் வேண்டி நின்ற பாரதியாராலும் ‘வீரம் சேர்ப்பது தாய்முலைப்பாலடா’ என்று பாடமுடிந்தது. எந்த உயிரும் தாய்மையின் செழுமையின் சிலிர்ப்போடு தான் பெற்றதை எதிரிகளிடம் இருந்து காக்க வீறு கொண்டு எதிர்த்து போராடும். அது இயற்கையின் நியதி. அந்தத் தனிப்பண்பில் சிறிதும் குறைந்தவர்களாக தமிழ்ப்பெண்கள் இருக்கவில்லை என்பதை பண்டைய இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், நடுகற்களும் இன்றும் சான்றுபகர்கின்றன. தமிழ்ப் பெண்களில் வீரைகள் இருந்ததை மணிமேகலை சொல்கிறது. பல மாவீரம் மிக்க மறக்குல வீரைகளை புறநாநூறு காட்டுகிறது.

குழந்தை இறந்தாலும், தசைப்பிண்டமாய்ப் பிறந்தாலும் அவற்றின் மார்பில் வாளால் கீறி வீரத்தழும்பு ஏற்படுத்திய பின்னரே அவற்றைச் நம்முன்னோர்கள் புதைத்தார்கள் என்பதற்கு  
“குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்”
என்று சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை எழுதிய சங்க இலக்கியப் பாடலே சாட்சி. 

தன்னலம் பொதுனலனாக மாறும் போது தன்மானம் இனமானமாக மாறுகிறது. தம் இனமானம் காப்பதற்காக இறந்தோரை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருன்ந்தே தமிழர் வணங்கினர் என்று சொல்வதைவிட அவர்களை விடச்சிறந்த கடவுளும் இல்லை என்று நம்பினர் என்பதை புறநானூறு சொல்கிறது. இனமானத்துடன் பகைவரின் படைகளின் முன்னின்று எதிர்த்துவராது  விலக்கிப் பாதுகாத்து, தாமும் இறந்து நடுகல்லானோரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு கிடையாது என்பதை
“கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”
என்று மாங்குடிமருதனார் என்னும் புலவர் சொல்வதால் அறியலாம்.

புறநாநூற்று மறக்குல வீரர்களை விடச்சிறந்த மாவீரர்களை மாவீரைகளை கடந்த முப்பது வருடத்தில் நமது ஈழம் கண்டது. மா என்றால் மரணம் என்ற கருத்தையும் தரும். மரணத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளும் வீரமே மாவீரமாகும். எமது மாவீரர்கள் யாருக்காக, எதற்காக, வன்னிமண்ணில் சாவே வா! உன்னை சாப்பிடுகின்றேன் என நின்றார்கள்? எதை நினைந்து தம் ஆசைகளை, பாசங்களைத் துறந்து களம் புகுந்தார்கள்? தம் இன்னுயிரை கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் ஏன் கொட்டிக் கொடுத்தார்கள்?

தன் இனம் வாழ, தன் தாய்மொழி நின்று நிலைக்க, வருங்கால ஈழத்தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ தம்மையே ஈந்த அந்தச் செம்மல்களை நாம் மாறப்போமா? ஒன்றா! இரண்டா! எத்தனை ஆயிரம் மாவீரர் தம் ஆருயிரைக் ஈழத்து விடியலுக்கு வித்திட்டுச் சென்றிருக்கிறார்கள். சுந்திரம் வேண்டும் மனிதராய், தமிழராய் அவற்றை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா? 

ஆசை, பாசங்களைத் துறத்தல் தவம் என்றால், தன்நலம் கருதாது பிறர் நலனுக்காக தம் இன்னுயிரத் துறந்து மாவீரர் ஆனோர் யாவரும் மாதவத்தோர் அல்லவா?  தவம் செய்பவர்களில் தனக்கு உயிர் இருக்கிறது என்ற எண்ணம் இல்லாது, பிற உயிர்களின் நன்மைக்காக வாழ்பவனை உலக உயிர்கள் எல்லாம் வணங்கும் என்பதை 
“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்”                     - 268
என திருவள்ளுவர் தவம் என்னும் அதிகாரத்தில் காட்டுகிறார். ஆதலால்  மாதவத்தோர் ஆன மாவீரரின் மாவீரம் மறக்கப்படுமோ? இழிநிலை வந்தபோது வாழாத மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு                      - 970

தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து மானவீரரை விளகேற்றித் தொழுது ஏத்துவோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment