சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே. அதுவும் அந்த தமிழ்ச்சொல்லை யார் சொன்னார்கள் என்றதைப் பொறுத்து அதன் உயர்வு கூடும். அடுக்கடுக்காகச் சொற்களை அள்ளித் தொடுத்து முருகனுக்குப் பாமாலை சூடி மகிழ்ந்தவர் அருணகிரிநாதர். முருகனின் திருப்புகழ் மணக்கும் அருணகிரிநாதரின் தமிழ்ச் சொற்களுக்கு ஈடேது! இணையேது! அவர் பாடிய முதலாவது திருப்புகழே
“முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்”
என சந்தங்களோடு விரைந்து பாடக்கூடியதாக இருக்கிறது. அருணகிரிநாதரும் தன் பாட்டுத்திறத்தல் தமிழை நன்றாக வளைத்துத் தொடுத்தார்.
சந்தங்களோடு தமிழை வளைத்துத் தொடுத்தபோது சில திருப்புகழ்களில் உட்கருத்து ஒன்றாக இருக்க மேலோட்டமாகப் பார்ப்போருக்கு வேறு கருத்துப்படத் தமிழை வளைத்திருக்கிறார். அப்படிபட்ட ஒரு திருப்புகழைப் பார்ப்போம்.
“பாண மலரது தைக்கும் படியாலே
பாவி யிளமதி கக்கும் கனலாலே
நாண மழிய வுரைக்கும் குயிலாலே
நானு மயலி லிளைக்குங் தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் திருமார்பா
தேவர் மகுட மணக்குங் கழல்வீரா
காண அருணையில் நிற்குங் கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே”
இத்திருப்புகழைப் பிரித்துப் படிப்போம்
“பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மயலில் இளைக்கும் தரமோதான்
சேணில் அரிவை அணைக்கும் திருமார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே!”
மேலோட்டமாக இதனைப் பார்க்கும் போது
- மலர் தைக்குமா?
- மதி கனலைக் கக்குமா?
- குயில் நாணம் அழிய உரைக்குமா?
- தேவர்கள் மகுடம் மணக்குமா?
- காலனின் முதுகை விரிக்க முடியுமா? காலனின் முதுகை முருகன் விரித்தானா? எப்போது?
என்பன போன்ற கேள்விகள் எழலாம்.
தமிழ், அருணகிரி தரு தமிழில் வளைந்ததால் இத்திருப்புகழுக்கு கருத்து எழுதுவோர் தாமும் தடுமாறியதோடு மற்றவர்களையும் தடுமாற வைக்கின்றனர். இதில்
“காலன் முதுகை விரிக்கும் பெருமாளே”
என்ற கடைசி அடிக்கு பலரும் எழுதிய கருத்தை வாசித்த ஒருவர் ‘முருகன், காலனுக்கு முதுகில் அடித்தாரா?’ என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். அப்போது அவர் இத்திருப்புகழைக் கூறி ‘முருக பக்தர்களை காலன் அணுகும் போது காலனின் முதுகில் முருகன் ஓங்கி அடிக்க முதுகு விரிந்து போகுமாம்’ என்றும் ‘யமனுடைய முதுகைப் பிளக்கும் படி அடித்து விரட்டும் பெருமாள்’ என்றும் எழுதுகிறார்கள், அது சரியா? என்றார். அவர் சென்னதை நானும் பார்த்தேன். அருணகிரிநாதர் வளைத்த தமிழே அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது. அதனாலேயே இத்திருப்புகழின் கருத்தை எழுதுகிறேன்.
மன்மத பாணங்களாகிய மலர் [பாணமலர்] அம்பு தைக்கும் காரணத்தாலும் பேதலித்த [பாவி] இளைய நிலவு எரிப்பதாலும் [கக்கும் கனல்], [அருணகிரிநாதரது] நாணம் அழிந்து போகும்படி குயில் கூவுவதாலும் [உரைக்கும்] முருகன் மேல் கொண்ட மோகத்தால் [மையலில்] அருணகிரிநாதராகிய நானும் மெலிந்து [இளைத்து] போதல் சரிதானா [தரமோதான்]? விண்ணுலகில் [சேணில் - விண்ணில்] இருக்கும் தேவயானையை அணைக்கும் அழகிய மார்பை உடையவனே! தேவர்கள் தலைவணங்குவதால் [மகுடங்கள் - முடிகள் தாழ்வதால்] புகழ்மணக்கும் கால்களை [கழல்] உடைய வீரனே! நான் பார்க்க [காண] திருவண்ணாமலையில் [அருணை - அருணாசலம்] நிற்கின்ற ஒளிவீசும் வேலையிடையவனே [கதிர்வேலா]! காலன் தொன்றுதொட்டு செய்துவரும் செய்கையை [முதுகை] விரிவாக்கும் பெருமாளே!
“காலன் முதுகை விரிக்கும் பெருமாளே,” முதுகை = முது + கை எனப்பிரியும். 'முது' என்பது பழமை, தொன்மை என்ற கருத்தை இங்கு தருகிறது. பழமொழியை முதுமொழி என்போம் அல்லவா? ஒருவர் செய்யும் செயலை ‘கை’ என்பர். செய்யும் செயல் செய்கை. முதுகை என்பது தொன்றுதொட்டு செய்யும் செய்கையாகும். காலன் தொன்று தொட்டு செய்யும் செய்கை என்ன? உயிர்களைப் பறித்து எடுத்தலே காலனின் செயலாகும். முருகன் சேனாதிபதி - படைத்தலைவன். ஆதலால் முருகன் போர்களில் உயிர்களைக் கொல்லக்கொல்ல காலனின் தொழில் விரிவடையும் தானே! எனவே அருணகிரிநாதர் காலனின் முதுகினை ‘முதுகை’ எனக்கூறவில்லை என்பதை அறியலாம்.
அருணகிரிநாதர் பேரின்பத்துக்கு ஏங்கும் காதலியாகத் தன்னைப் பாவித்து இத்திருப்புகழைப் பாடியிருக்கிறார். அதனால் அவர் ‘மன்மதனின் மலரம்பு தைக்கும் காரணத்தாலும் பேதலித்த இளம் நிலவு எரிப்பதாலும் தனது நாணம் அழியும்படி குயில் கூவுவதாலும் நானும் மோகத்தால் மெலிந்து போதல் சரிதானா? தேவலோகத்தில் இருக்கும் தேவயானையை அணைக்கும் அழகிய மார்பை உடையவனே! தேவர்கள் தலை வணங்குவதால் புகழ்மணக்கும் கழலுடைய வீரனே! நான் காணும்படி திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலனே! காலன் தொன்று தொட்டு செய்யும் செயலை விரிவாக்கும் பெருமாளே!’ என முருகனை வணங்கியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment