Thursday 29 May 2014

ஆசைக்கவிதைகள் - 89

பல் அழகி மச்சி!

ஈழத்தமிழரிடையே மாமன் மகளையோ, அத்தை மகளையோ காதலித்து திருமணம் செய்யும் வழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அதற்கிணங்க ஓர் இளைஞன் தன் மாமன் மகளை சிறுவயதில் இருந்து காதலித்தான். அவளைக் காணும் போது எல்லாம்  அவளின் முத்துப்பற்களின் சிரிப்பழகை, அவள் பேசும் சொல்லின் இனிமையை கேட்டும் இருக்கிறான்.  அவளைக் கண்டும் காணாதவன் போலவும், குரலைக் கேட்டும் கேட்காதவன் போலவும் இரசித்திருக்கின்றான்.  இப்போது அவள் பருவவயது மங்கையாக அவன் முன்னே வலம் வருகின்றாள். இதுவரை அவள் அவனுடன் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. அவள் அவனைக் காதலிக்கிறாளா! இல்லையா! என்பதை அறியமுடியாத தன் மனத்துடிப்பை நாட்டுப்பாடலாக வடித்து வைத்திருக்கிறான்.

மச்சான்: பல் அழகி மச்சி
                         பருவ வயதழகி
                சொல் அழகி வாய்திறந்து
                        சொல்லாள் ஒரு வார்த்தை
                                                                        - நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இந்த ஈழத்துக் காதலனைப் போலவே சங்க காலத்திலும் ஒருவன் ஒருத்தியைக் காதலித்தான்.    அவன் பொருள் தேடுவதற்காக வெளிநாட்டிற்குச் செல்லும் வழியில் மூங்கில் மலைக் காட்டின் ஊடாகச் சென்றான். வேர்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்த மூங்கில் மரங்களிலே காற்று மோதுவதால் ஏற்பட்ட இனிய ஒலியின் சத்தம் தறியில் கட்டப்பட்டிருக்கும் யானை வருந்தி பெருமூச்சு விடுவது போலக் கேட்டது. நீண்ட கோடை வெய்யில் எரிக்கும் மூங்கில் செறிந்த அந்த மலையின் உச்சியிலே மெல்ல ஊர்ந்து வரும் நிலவைப் பார்த்தான்.  நின்றான். "முள் போன்ற கூரிய பற்களையும் பொட்டிட்ட மணம் வீசும் அழகிய நெற்றியையும் உடைய நிலவுமுகம் ஒன்று என்னிடமும் இருக்கிறதே என நினைந்தேன். அந்த நிலவு - முழங்குகின்ற ஓசையோடு வீசுகின்ற காற்றால் இலைகள் அற்று, நிழல் தரமுடியாது கொம்புகளாக நிற்கும் மரங்களையும், கற்களையும் உடைய உயர்ந்த மலைக்கு அப்பால் உள்ளதே என நான் நினைந்தேன் அல்லவா?

“வேய் பிணி வெதிரத்துக் கால்பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினேன் அல்லெனோ யானே - முள் எயிற்று
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாட் திங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல்பிறங்கு உயர்மலை உம்பரஃது எனவே?                     - (நற்றிணை: 62)
என காதலியின் பல்லழகையும் முக அழகையும் நினைத்துப் பார்த்தானாம்.

சங்ககால காதலன் போல ‘கண்ணுபடப் போகுதையா’ படத்திலும் காதலன் தன் காதலியின் பொட்டழகையும் பல்லழகையும் நிலவோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு’ என்கிறான்.

“மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறைப் பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு

பத்துவிரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம்விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு”

காலங்காலமாக காதலியரின் பல்லழகு காதலரை மயக்கிக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment