Monday 26 May 2014

தூங்காத கண்கள்



மனித வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கம் இல்லாவிட்டால் உடலின் தசைநார்கள் தளர்வடைவதால் உடல் உறுப்புக்களும் தளர்வடையும். அத்துடன் மன இறுக்கம் ஏற்படவும் அது வழிவகுக்கும். அத்தகைய தூக்கத்தை தொலைத்து வாழ்வோர் பலராவர். மனிதன் பருவவயதில் காலடி எடுத்து வைத்த பின்பே தூக்கத்தை இழக்கத் தொடங்குகின்றான். அதற்கு பருவவயதின் எண்ணங்களும் கனவுகளும் காரணம் என்பர். அதனை முற்றிலும் சரி என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. 
மனிதன் வாழும் வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்து அது மாறுபடலாம். வறுமையால் பசி வாட்டும் போது தூங்கமுடியுமா? நோயால் உடல் நொந்து துவளும் போது தூங்கமுடியுமா? கொசுவும் முட்டைப் பூச்சியும் தெள்ளும் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் போது தூங்கமுடியுமா? உடன் வாழ்வோரின் தொல்லைகளும் புழுக்கம் குளிர் போன்ற இயற்கையின் தொல்லைகளும் இந்நாளைய ஐபோன், ஐபாட், மட்டுமல்ல பாடசாலைக் கல்விச் சுமையும் கூட இளவயதினரை தூங்கமுடியாது செய்கின்றன.

பருவவயதின் பின்னரும் தூக்கத்தை மனிதன் தொலைக்கின்றான். பொருளுக்காகவும் பெண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் தூக்கத்தை தொலைக்கின்றான். தாய்மையின் தலைவாசலில் நிற்கும் பெண்களும் தூக்கத்தை இழந்து தவிப்பர். குழந்தைக்காக, கணவனுக்காக, மனைவிக்காக, தாய், தந்தையர்க்காக தூக்கத்தை இழப்போரும் இருக்கிறார்கள். இவை பெரும்பாலும் மனிதவாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளேயாகும். இவர்களாவது சிலமணி நேரமாவது தூங்குவார்கள். ஆனால் தூக்கமே வராது கொட்டக் கொட்ட விழித்திருப்போரும் இருக்கிறார்கள்.

பிறர் பொருளை எப்படி வஞ்சகமாகக் கொள்ளையிடலாம் எனத் திட்டமிட்டு கால நேரம் பாத்திருக்கும் கள்வர்க்கும் தூக்கம் இருக்காது. காதல் வசப்பட்டு காதலியிடம் தன் உள்ளத்தை பறிகொடுத்தவர்க்கும் தூக்கம்   வராது. பெரும் பொருளைத்தேடுவோம் என்று நினைத்து எந்நேரமும் பொருள் தேடலிலேயே மூழ்கிக் கிடப்போருக்கும் தூங்க முடியாது. அப்படிச் சேர்த்த பொருளை மற்றவர்கள் எடுத்திடக்கூடாதே என்று விழித்திருந்து பாதுகாப்போருக்கும் துயில் கொள்ளமுடியாது என்கின்றது நான்மணிக் கடிகை. 

“கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்”                                - (நான்மணிக் கடிகை: 7)

எனவே நன்றாகத் தூங்க வேண்டுமா திருடத்திட்டம் தீட்டாமல், காதலியை நினைத்து உள்ளம் உருகாமல், பொருள்தேடப் பேராசைப்பட்டு ஓடியோடி உழைக்காமல், சேர்த்த பொருளை எப்படி பாதுகாப்பது என்று கவலையேபடாமல் ஆசை தீரத்தூங்கி எழுங்கள்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment