Friday, 27 March 2026

மடத்துவெளி தன்னிலுறை வயலூரா!


மடமஞ்ஞை உடனாக மயிற்றோகை விரித்தாட

  மாலைக் கதிரொளியில் மதிமயக்கும்

  மடத்துவெளி தன்னிலுறை வயலூரா


தடமஞ்ஞை தடம்நாடி தனையர் செல்ல

  திரைவந்து தடமழிக்கும் ஊரதீவுமுனதாக

  தென்றல் சங்குபுக்கு தீம்பண்ணிசைக்க


மடமங்கையர் மனங்களித்து மருதயாழ் மீட்ட

  முன்னையோர் முகம்மலர்ந்து கேட்டிருந்த

  முத்தமிழின் சுவைநிறை புங்குடுதீவில்


வடபால் வடிவேலாய் வீற்றிருந்தருள் செல்வ

  வடிவேலனே விடிவெள்ளியாய் மிளிர்ந்தே

  வேண்டுவோர்க்கு வேண்டுவன தெரிந்தேநல்கு!

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

மடமஞ்ஞை - பெண்மயில்

மயில் - ஆண்மயில்

கதிரொளி - சூரிய ஒளி

மதிமயக்கும் அறிவைமயக்கும்/ வியப்பைத்தரும்

தடமஞ்ஞை - கடற்கழியில் வாழும் மயில்

தடம் - சுவடு

தனையர் - பிள்ளைகள்

திரை - கடல் அலை

தடமழிக்கும் - சுவட்டை அழிக்கும்

சங்குபுக்கு - சங்கில் புகுந்து

மடமங்கையர் - இளமங்கையர்

மருதயாழ் - வயலும் வயல்சார்ந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் வாசித்த இசைக்கருவி.

மருதப்பண் - தற்போது கரகரப்பிரியா இராகம்

வடபால் - வடதிசையில்

வடிவேலாய் கூரான/அழகான வேல்வடிவில்

விடிவெள்ளியாய் - விடிகிறது என்னும் நம்பிக்கையைத் தரும் வெள்ளிபோல்

தெரிந்தே நல்கு - தெரிந்து எடுத்துத் தருக.


குறிப்பு:

"சடாச்சர மந்திர சொரூபா சிவசிவ தாண்டவ நந்தினி பாலா

கடாச்சர கிருபானந்த ரூபா கட கட கங்கை பிரபாநதி பாலா"
என்னும்  இவ்வரிகளைத் தொடக்கமாக உடைய 'பாட்டும் பதிகத்தை' மடத்துவெளி அதிகாரிபுலத்தில் இருந்த பாலமுருகனுக்கு எழுதியவர் ஊரதீவு வரகவி முத்துக்குமாரப் புலவர். அவர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது.
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் 1951ல் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் 'ஊரதீவு வரகவி முத்துக்குமாரப் புலவர்' 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவராகாக் குறிப்பிட்டுள்ளார். எனவே பாலமுருகனாய் - வயலூர் முருகனாய் - மடத்துவெளி வாழ் பாலமுருகனுக்கு முதன்முதல் பாட்டும் பதிகமும் பாடிய காலம் 150+75 = 225 வருடங்கள். என் தந்தையும் 
"மங்கலம் தங்கிவிளை அதிகாரி புலமேவி
வளருமொரு இள வழகேன!" எனப் பதிகம் எழுதியிருந்தார்.

ஆதலால் புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் அருள்மிகு ஶ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு [25/03/2026] அன்று நான் சென்ற பொழுது எழுதிய  மேலேயுள்ள பாடலில் நம் முன்னோர் முகம் மலர்ந்து கேட்டிருந்த முத்தமிழைக் குறிப்பிட்டுள்ளேன். மடத்துவெளியில் காலங்காலமாக ஒரு பாலமுருகன் வாழ்ந்து வருகிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். 

Sunday, 15 February 2026

கண்ணில் அமுதூறுமே

திருக்கேதீச்சர திருவாசகமட நடராசர்

திருநின்று வளர்கின்ற தில்லைப்பதி வாழ்மன்னன்

  தருகின்ற அறிவெல்லாம் தண்ணளியே துணையாக

மருவுகின்ற மயக்கமோ மமதைதனை மேலாக்க

  மால்கொண்ட திருமாலும் மலரவனும் அடிமுடிகாணா

எரிகின்ற நீளுருவை ஏங்கியேத்தி அடிபரவு

  ஏற்றமிகு சிவராத்திரி நன்னாளில் கேதீச்சர

திருவாசக மடந்நண்ணி திருக்கூட்டச் சிவனடியார் 

  தேனுந்துமாநடங் காண கண்ணில் அமுதூறுமே

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

திருநின்று - அறிவுச்செல்வம் நின்று

தில்லைப்பதி - சிதம்பரம்

வாழ்மன்னன் - சிதம்பர நடராஜர்

தண்ண்ளியே - கருணையே

மருவுகின்ற - சேர்கின்ற

மயக்கமோ - மனக்குழப்பமோ

மமதை - நானே பெரியவன் எனும் எண்ணம்

மேலாக்க - மேலோங்கச் செய்ய

மால்கொண்ட - மயக்கம் கொண்ட

திருமால் - விஷ்ணு

மலரவன் - பிரம்மா

எரிகின்ற - எரியும்

நீளுருவை - நீளமான உருவை

ஏங்கிஏத்தி - ஏக்கத்துடன் வாழ்த்தி

அடிபரவ - அடியை வணங்க

திருவாசக மடம் - திருக்கேதீச்சரத்தில் இருக்கும் மடம்

நண்ணி - சென்று

தேனுந்து மாநடம் - ஆனந்தத் தேன் சிந்தும் சிவனின் திருநடம்


குறிப்பு:

விண்ணை நோக்கிப் பார்க்கும் நடராஜ வடிவம் மிகவும் அரிய ஒன்றாகும். சிறுவயதில் நான் பார்த்து இரசித்து மகிழ்ந்த ஒர் அற்புத நடனராசர் சிலையே இது. இச்சிலை [மேலே படத்தில் உள்ளது] அந்நாளில் திருவாசக மடத்தில் இருந்தது. பெரும்பாலும் நடராசர் சிலைகள் கடைக்கண்ணால் அம்பாளை பார்ப்பது போல் இருக்கும். அவற்றுக்கு மாறாக விண்ணை நோக்கியபடி இருப்பதே இச்சிலையின் சிறப்பாகும்

Wednesday, 28 January 2026

விரைந்துணர்வில் கலந்தான்


கந்தனவன் புந்தியுளே காட்சிதர வந்தான்
            கணப்பொழுதே ஆனாலும் கவின் முகத்தின்
                        காந்தமது பாய காய்ந்த மரமானேன்

காந்தனவன் கண்ணிரண்டும் கருணையினைக் காட்ட
            காலைவிரி கதிரொளியில் இருள்கலைதல் போல
                        காந்தங் கலைந்தெனது சிந்தை நிறைவாக

சேந்தனவன் சாந்தமுகம் சந்ததமும் சிந்தும்
            சிறுநகையில் சிக்குண்டே சித்தந் தடுமாறி
                        செய்தவினை போக்கென்று செப்பிடவே மறந்தேன்

விந்தனவன் விந்தமலர் குருவிந்தமென மின்ன
            விந்தையிது என்னயென வியந்துநான் பார்க்க
                        விரைகழலின் ஒலியெனவே விரைந்துணர்வில் கலந்தான்.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கந்தன் - முருகன்
புந்தி - மனம்
கவின் - பேரழகு
காந்தன் - இறைவன் [காந்தம் போன்ற சக்தியுள்ளவன்]
சிந்தை - சிந்தனை 
சேந்தன் - முருகன்/செந்நிற அழகன்
சாந்தம் - அமைதி
சந்ததம் - எப்பொழுதும்
சிந்தும் - மலரும்
சிறுநகை - குறுநகை/புன்னகை/புன்சிரிப்பு
சித்தம் - உள்ளம்
செய்தவினை - முற்பிறப்பில் செய்தவினை/கன்மவினை
போக்கு - நீக்கு
செப்பிட - சொல்ல
விந்தன் - மென்மையானவன் [தாமரை போல]
விந்தமலர் - தாமரைமலர் போன்ற பாதம்
குருவிந்தம் - செந்நிறமான இரத்தினக் கற்களில் ஒன்று
மின்ன - ஒளிர
விந்தை - அற்புதம்
வியந்து - திகைத்து
விரைகழல் - விரைவாக ஒலிக்கும் காலணி [ஆண்கள்/வீரர்கள் அணிவது]

குறிப்பு:
விரைகழல் - நறுமணம்[விரை] உள்ள திருவடி/திருப்பாதம் என்ற கருதிலும் வரும்.
உண்மையில் படை வீரர்கள் காலில் அணியும் ஒருவைகை கால் அணியை விரைகழல் என்பர். விரைகழல்களை கணைக்காலில்/கணுக்காலில் அணிவர். அது காற்பெருவிரலுடன்/ விரல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். யுத்தத்தில் மேலே பாய்ந்து எதிரியை தாக்கும் பொழுது அந்தக் காலணியில் தொங்கும் சதங்கைகட்கு உள்ளே பதுங்கி இருக்கும் சிறு சக்கரங்கள் அல்லது ஊசி, குறுவாள் போன்றவை  அதை அணிந்திருக்கும் வீரர்கள் காற்பெருவிரலை அழுத்த வெளியே வந்து பகைவரை, யானையை, குதிரையை காயப்படுத்தி வதம் செய்ய உதவும். விரைகழல் உள்ளே இருக்கும் பரட்கருவியை பரல் ஆயுதம் என்றும் கூறுவர்.

Monday, 19 January 2026

யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!


ஆனந்தத் தேனருந்த ஆசைகொண்ட நாளாய்
            ஆடிவிளையாடி பாடிமகிழ்ந்தே யுயர்
வானந்த மலைதோயும் வான்மதியம் சூடும்
            விண்ணவனாய் வேதமுதல்வனாய் விளங்கு ஒளியாய்
தானந்தம் இல்லாத் தன்மையைக் காட்டிட
            தனித்தே ஈமவனமே அரங்காய் ஆட்டுகப்பாய்!
யானந்தம் கண்டிலேன் யாதுசெய்வோம் 
            யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஆனந்தத்தேன் - திருவருட்தேன்
அருந்த - குடிக்க
உயர் - உயர்ந்த
வானந்தம் [வான் + அந்தம்] - வானத்து முடிவு 
மலைதோயும் - மலை முட்டும்
வான்மதியம் - சந்திரன்/பிறைச்சந்திரன்
விளங்கு ஒளியாய் - மிளிர்கின்ற ஒளியாய்
தானந்தம் - தனக்கு முடிவு
ஈமவனம் - சுடுகாடு
அரங்காய் - மேடையாய்
ஆட்டுகப்பாய் - ஆடிமகிழ்வாய்
யானந்தம் கண்டிலேன் - நான் முடிவைக் காணவில்லை
யாது செய்வோம் - என்ன செய்வோம்
யாமறிய - நாம் காண/அறிந்துகொள்ள
ஆனந்தத் தேன்நடம் - திருவருட்தேன் நடனம்

Friday, 2 January 2026

என்றென்றும் உவந்திட அருள்வாய்!


முன்னையே முயன்று தவம் செய்யா
          மூர்க்கத்தால் பிறந்துழன்று
அன்னையே என்றரற்றி அனுதினம்
          அன்பிலூறி நைந்துருகி
நின்னையே நாளும் நினைந்தறியா
          நோயினேனை நோய்நீக்கி
உன்னையே எண்ணி என்றென்றும்
          உவந்திட அருள்வாயம்மா
இனிதே,
தமிழரசி.
 
சொல்விளக்கம்:
முன்னையே - முற்பிறப்பிலே
முயன்று - முயற்சிசெய்து
மூர்க்கத்தால் - முரட்டுத் தன்மையால்
உழன்று - துன்பத்தில் வருந்தி
என்றரற்றி - என்று துன்பத்தை சொல்லி அழுதல்
அனுதினம் - எப்போதும்
அன்பிலூறி - அன்பால் கனிந்து
நைந்துருகி - மனம் கரைந்து
நோயினேன் - பிறவி நோயை உடையேனை
நோய் நீக்கி - பிறவி நோயை நீக்கி
என்றென்றும் - எப்போதும்
உவந்திட - மகிழ்ச்சி இன்பத்தில் மூழ்க