Tuesday, 14 January 2025

நீரில் மூழ்கித்திரிய உதவிய ஐம்பொறி அங்கலம்

        வீரமாதேவி சொன்ன ஐம்பொறி அங்கலம் [சுறாமீன் வடிவில் செய்தது]

இயற்கையும் அதன் உயிரினங்களும் பல துன்பங்களை மனிதனுக்குக் கொடுத்தன. அத்துன்பங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தேவையான கருவிகளை உண்டாக்க இயற்கையிடம் இருந்தே கற்றுக் கொண்டான். அப்படி மனிதன் உருவாக்கிய கருவிகளில் ஒன்றே ஐம்பொறி அங்கலம். சுறாமீன்களை பார்த்து கடல்வாழ் உயிரினங்கள் பயந்து ஓடுவதைக் கண்டு கட்டுமரத்தில், நாவாயில், படகில், கப்பலில் செல்லும் பொழுது எதிரிகளிடம் இருந்து தப்ப சுறாமீன் வடிவில் அதனைச் செய்தான். 


மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் [கிபி 1251 - கிபி 1268] மகன் முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன். மாறவர்மன் குலசேகரபாண்டியன் மதுரையை கிபி 1268 - கிபி1311 வரை ஆண்ட பேரரசன் ஆவான். அதே காலத்தில் ஈழத்தின் பெரும்பகுதியும் அவன் ஆட்சியின் கீழே இருந்தது. ஆதலால் அவனின் மகள் வீரமாதேவி ஈழத்தில் இருக்கும் புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தாள். மாலிக்கபூர் படை எடுத்த போதே அவள் தன் கணவன் நரசிம்மனுடன் ஈழம்  சென்றாள். இவள் பற்றி முன்பும் பல முறை எழுதியுள்ளேன். மேலே சொன்ன ஐம்பொறி அங்கலத்தை எப்படி இயக்குவது என்பதை வீரமாதேவி தனது நாட்குறிப்பு ஏட்டில் குறிப்பிட்டிருந்தாள். போர் மேகம் சூழ்ந்த நேரத்தில் [கிபி 1311] கடல்வழியால் பாய்மரக்கலத்தில் செல்லும் போது எதிரிகளின் தாக்குதலில் இருந்து நீரில் மூழ்கித் [Diving] தப்பப் பயன்படுத்தியதே ஐம்பொறி அங்கலம்.


“பரதவ சேரி பல்வினைக் கலைஞன்

புரவலன் செப்ப பாங்குடன்  சமைத்த

வளிகொள் மகரமீன் வடிவுடை மிதவை 

களிகொள காற்றினை கனியிதழ் வைத்து

செங்கயல் ஊதிட சற்றே விம்மி         5

அங்கலம் விரிய அற்புதம் அற்புதமென

செப்பினள் பதுமா செப்பியவள் தானும்

செயலெது ஆகும் செப்பிடு என்னலும்

செங்கயல் செங்கண் சினத்தினைக் காட்ட

பொங்கும் அழுகையைப் பதுமா அடக்கலும் 10

'மெல்லச் சென்று மென்கரம் பற்றி

சொல்லும் தருணம் அஃதில்லை ஆயினும்

நம்நிலை எண்ணி நயப்புடன் நாடிநட்ட

ஐம்பொறி அங்கலம் இஃதெனக் கூறி

மீனிடைப் புகுந்து மென்வாரது கொண்டு 15

மேனியைக் கட்டி மெல்லக் கிடந்தே

காலது கொண்டு வாலது இயக்கிமுழந்

தாளது கொண்டு தளரிடுப்பு இயக்கியும்

கையது கொண்டு முந்துடுப்பு இயக்கியும்

மெய்யது கொண்டு மேல்கீழ் உந்தியும் 20

துழாவியும் துவண்டும் துரிதமாய் நீரிடை

ஆழமாய் சென்றும் ஆங்கிடை நின்றும்

மூழ்கியும் எழுந்தும் முன்னும் பின்னும்

ஆழ்ந்தெழு அலையினை ஆற்றலொடு எதிர்த்தும்

உடலினை நீட்டிக் குறுக்கி வேண்டியவை         25

கடலிடைச் செய்யும் கருமங்கள் காட்டி

வாயது புகுநீர் வால்வழி ஓடிட

தாயது வயிற்றிடை தனிச்சேயது போல

அக்கருவறை கிடந்து அங்கலம் செலுத்தும்

பக்குவம் சொன்னேன்' பாவையோர் தமக்கே”         30

                                             - (வீரமாதேவி நாட்குறிப்பு கிபி 1311)


அரசன் [புரவலன்] சொல்ல, பரதவர்களுடைய தெருவில் [சேரி] வாழ்ந்த பல தொழில்கள் [பல்வினை] தெரிந்த கலைஞன் ஒப்பற்றதாய் [பாங்குடன்] காற்று நிறையக் கூடிய [வளிகொள்] சுறாமீன் [மகரமீன்] வடிவில் செய்த [சமைத்த] மிதவை மகிழ [களிகொள], செங்கயல் என்பவள் தனது வாயை வைத்து காற்றை ஊதினாள். கொஞ்சம் [சற்றே] பருத்து [விம்மி] அங்கலம் விரிய, “அற்புதம், அற்புதம் என்று பதுமா” சொன்னாள். சொன்னவள் “இது என்ன செய்யும் [செயலது]” என்று கேட்டாள்[செப்பிடு]. அதைக் கேட்ட செங்கயல் என்பவளின் சிவந்த கண்கள் கோபத்தைக் [சினத்தைக்] காட்ட, பொங்கிவந்த அழுகையை பதுமா அடக்கினாள். மெதுவாகச் சென்று பதுமாவின் மென்மையான கரத்தைப் பிடித்துக் கொண்டு, ‘சொல்லவேண்டிய நேரம் [தருணம்] அதுவாக இல்லாதபோதும் எங்களுடைய நிலையை எண்ணி விரும்பி [நயப்புடன்] ஆராய்ந்து செய்த [நாடிநட்ட] ஐம்பொறி அங்கலம் இது” என்று கூறினேன்.


“காற்றூதிய மகரமீனுக்குள் புகுந்து மெல்லிய வாரால் உடம்பை அதனுடன் சேர்த்துக் கட்டி, மெதுவாகக் [மெல்லக்] கிடந்து கால் இரண்டாலும் மீனின் வாலை இயக்கியும், முழங்காலால் [முழந்தாள்] வளையும் [தளரும்] மீனின் இடுப்பை இயக்கியும், கைகளால் மீனின் முன் துடுப்பை இயக்கியும் உடலால் [மெய்யது] மேலும் கீழும் நீரை உந்தியும் துழாவியும், தளர்ந்தும் [துவண்டும்] மிகவிரைவாய் [துரிதமாய்] நீரின் இடையே மிக ஆழத்திற்கு சென்றும் அங்கே [ஆங்கிடை] நின்றும் [எதிரி வந்தால் மறைவதற்கு] ஆழமாக தாழ்ந்து எழுகின்ற [ஆழ்ந்தெழு] அலைகளை வலிமையுடன் [ஆற்றலுடன்] எதிர்த்தும் உடலை நீட்டியும் குறுக்கியும் நீருக்குள் மூழ்கும் போது கடலில் செய்யும் செயல்களைக் எடுத்துக் காட்டி, மீனின் வாயல் புகும் கடல் நீர் வால்வழி ஓட தாயின் வயிற்றில் தனியாகச் சேய் இருப்பது போல மீன்வடிவ உடலினுள் [அக்கருவறை] கிடந்து அங்கலத்தை இயக்குவது எப்படி [பக்குவம்] என்பதைச் பெண்களுக்குச் [பாவையோர்] சொன்னேன் என வீரமாதேவி தனது நாட்குறிப்பு ஏட்டில் எழுதியிருந்தாள்.


வீராமாதேவியின் நாட்குறிப்பு ஏடு தந்த இவ்வரலாற்றில் இருந்து 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலில் பயணம் செய்வோர் பாய்மரக்கலம் எதிரிகளால் தாக்கப்பட்டாலோ, சூறாவளியால் உடைந்தாலோ ஐம்பொறி அங்கலத்தைப் பயன்படுத்தி தப்பிச் சென்றதை அறியமுடிகிறது. 


ஏன் ஐம்பொறி அங்கலம் என அழைத்தனர்? ஐந்து கருவிகளால் [ஐம்பொறி] ஆன அங்கலம். அதாவது அம் + கலம் = அங்கலம் எனப்புணரும். அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி என்பதில் வரும் அங்கயல் போல அம் + கலம் = அங்கலம் ஆகும். இதில் அம் நீரைக் குறிக்கும். ஐந்து கருவிகளையுடைய நீர்க்கலம் என்பதையே ஐம்பொறி அங்கலம் என்றனர். 


அந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்தோர் நீரில் மூழ்கித்திரிய ஐம்பொறி அங்கலம் பயன்படுத்தினர் என்பதை அவளது நாட்குறிப்பு வரலாறாய்க் காட்டுகிறது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் வாரலாற்றை எடுத்துக் கூறும் பதிவு இதுவாகும். 

இனிதே, 

தமிழரசி.


குறிப்பு:

வரலாற்று ஆர்வத்தால் என்னை அணுகி வீரமாதேவி வரலாற்றைக் கேட்ட இரு அன்பு உள்ளங்களுக்கும் படம் தந்த கீரனுக்கும் எனது மகிழ்ச்சியை அறியத்தருகிறேன். அவர்களுக்காகவே வீரமாதேவி சொன்ன இவ்வரலாற்றை இதழில் பதிவிட்டேன். 

Monday, 13 January 2025

பைந்தமிழர் வாழ்வு பெருஞ்சுவை பெறுமே!


பூங்குயில் கூவி பகலவன் வரவுரைக்க

பங்கயம் இதழ்விரிய பாரெங்கும் மணம்வீச

செங்கயற் கண்மடவார் சேர்ந்து நின்றே

செந்தமிழ்ப் பண்பாடி சிந்தை மகிழ்ந்து

மங்கலக் கோலமிட்டு மணிநீரும் மண்ணும்

மன்னுயிரும் சிறந்து மேதினி செழிக்க

பொங்கிடும் பொங்கல் பாற்சுவை யெனவே

பைந்தமிழர் வாழ்வு பெருஞ்சுவை பெறுமே

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

பகலவன் - சூரியன்

பங்கயம் - தாமரை

செங்கயல் - ஒருவகை மீன்/ சிவந்த கயல்மீன்

மடவார் - பெண்கள்

மேதினி - பூமி

Friday, 10 January 2025

களித்திலங்கு கந்தா!


பண்புறுவ பழமைபற்றி
            பைந்தமிழில் பாடலுற்றேன்
நண்புறுவ உனைநாடி
            நயந்தே நின்றேன்
கண்புருவ நடுவினிலே
            களித்திலங்கு கந்தா
மண்புருவ மடியினிலே
            மாயமுன் வந்தருளே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பண்புறுவ - பண்புடன் நடந்த
பழமைபற்றி - தொன்மைபற்றி
நண்புறுவ - நட்புடன் சேர்ந்து
நயந்தே - விரும்பியே
கண்புருவ - புருவத்தின்
நடுவினிலே - இடையே
களித்திலங்கு - மகிழ்ந்து திகழும்
மண்புருவ - மண்ணின் விளிம்பு
மடியினில் - மடியில்

Thursday, 26 December 2024

திருக்கேதீச்சரத் திருவாசகமட நடேசரே


திருவாசகத் தேனுந்து மாநடம்
        தித்திக்கத் தித்திக்க ஆடிய
                திருவாசக மட நடேசரே

பெருவாசகம் பெருந்துறை நாதர்க்கு
        பாடிய மணிவாசகங் கேட்க
                பாலாவியில் மார்கழி நீராடி

திருக்கேதீச் சரத்திரு வாசகமடந்
        தேடியே வந்தமர் சிவனடியார்
                திருக்கூட்டத்திற் கருள் கௌரிபாகனே

ஒருவாசகம் சொல் எம்கல்மனம் 
        உருகிப்பெருகி அருவிநீர் சொரிந்து
                உலெகெலாம் மகிழ்ந்து வாழவே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
தேனுந்து - பேரின்பத் தேனை பிலிற்றும்/சிந்தும்
மாநடம் - பேரனந்தக் கூத்து
பெருவாசகம் - திருவாசகம் [பெருவாசகம் என்றும் சொல்வர்]
பெருந்துறை நாதர் - திருப்பெருந்துறைச் சிவன்
மணிவாசகம் - மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம்
பாலாவி - திருக்கேதீச்சரத்தில் உள்ள தீர்த்தம்
மார்கழி நீராடி - மார்கழி மாதத்தில் அதிகாலை 3;30 மணிக்கு பாலாவியில் குளித்தல்
ஒருவாசகம் - திருவாசகம் [மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிவன் "சிவாயநம" என ஒருவாசகத்தில் ஐந்தெழுத்து மந்திரமாக எழுதினார் என்றும் சொல்வர்,]    
[நமசிவாய - சிவாயநம]
கௌரி பாகன் - திருக்கேதீச்சர அம்பாளின் பெயர் கௌரியம்பாள். கௌரியின் பாகத்தில் இருப்பவன்.

Thursday, 12 December 2024

வடிவேற்கு மூத்தோனே!

                                                

ஓங்கரனே யென்றும் எமதன்பனே
            ஓயாதே எம்மிதையத் துடிப்பானாயே
வாங்காரும் கலையுடுக்கும் வடிவேற்கு மூத்தோனே
            வேண்டியவை வேண்டமுன் வழங்கும் கரத்தோனே
தாங்காரும் துன்பங்கள் தகர்த்து எறிவோனே
            தண்ணளியுந் தன்னிறைவும் பெருக்கும் தகையோனே
பாங்காரும் மோனநிலைப் பக்குவம் பகர்வாய்
            பைந்தமிழை பண்ணோடு பாடுவோர்க்கே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஓங்காரன் - ஓங்கார வடிவுவான பிள்ளையார்
ஓயாதே - இடைவிடாது
வாங்காரும் - விலைமதிக்க முடியாத
கலை - உடை
வடிவேல் - முருகன்
வேண்டியவை - தேவையானவற்றை
வேண்டமுன் - கேட்கமுன்
வழங்கும் - கொடுக்கும்
கரம் - கை
தாங்காரும் - தாங்கமுடியாத
தகர்த்து - உடைத்து
தண்ணளி - கருணை
தன்னிறைவு - மனநிறைவு/எல்லாவற்றுக்கும் ஆசைப்படாத தன்மை
தகையோன் - தன்னையுள்ளவன்/இயல்புடையவன்
பாங்காரும் - பக்குவம் நிறைந்த
மோனநிலை - மௌனநிலை
பக்குவம் - ஆற்றல்
பகர்வாய் - சொல்வாய்

Monday, 2 December 2024

வளர் நயினைப்பதியுறை நாகேஸ்வரியே!


                            பல்லவி
வருக வருகவே வரந்தர விரைந்தே
வளர் நயினைப்பதி உறை நாகேஸ்வரியே
                                                                        - வருக
                            அனுபல்லவி
இருகரம் குவித்து இறைஞ்சிடும் எமையாள
திருவிழி மலர்ந்திட திருநகை பொலிய
                                                                        - வருக
                            சரணம்
விற்பிடித்த விசயற்கு வேண்டி அருள்செய்ய
புற்றரவம் பூண்ட புயங்கனும் நீயும்
வற்கலையின் உடையோடு வனத்தின் இடையே
பொற்பதம் நோவ போந்த வடிவுடனே
                                                                        - வருக
திருமகள் மார்பனும் திசைமுக நாதனும்
இருவரும் காண்பரிய எரியழலாய் நின்ற
உருவிலானை உன்பாகத்து உகந்த உமையே
இருநிலம் வாழ்த்திட இணையடி சூட்டிட
                                                                        - வருக
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
வளர் - வளர்ச்சி/மூலசக்தி
நயினைப்பதி - நயினாதீவு
உறை - வாழும்
இறைஞ்சிடும் - தாழ்ந்து வணங்கும்
திருநகை - புன்னகை
பொலிய - துலங்க
விசயன் - அர்ச்சுனன்
வேண்டி - விரும்பி
புற்றரவம் - பாம்பு
பூண்ட - அணிந்த
புயங்கன் - பாம்பை அணியும் சிவன்
வற்கலையின் உடை - மரவுரி/மரநாரால் ஆன உடை
வனதத்தின் இடையே - காட்டின் இடையே
பொற்பதம் - பொன் போன்ற பாதம்
போந்த - போன
திருமகள் மார்பன் - திருமால்
திசைமுக நாதன் - நான்முகன்/ பிரமா
இருவரும் - திருமால், நான்முகன் ஆகிய இருவரும்
காண்பரிய - காணமுடியாதபடி
எரியழலாய் - தீப்பிழம்பு
உருவிலான் - உருவம் அற்றவன் [சிவன்]
உன்பாகம் - உனது பகுதி [வலப்பாகம்]
உகந்த - ஏற்ற
இருநிலம் - நிலம், நீர் இரண்டாலும் ஆன பூமி
இணையடி - இரண்டு திருவடிகளும் சேர்ந்து