Monday, 25 October 2021

ஞாலமெலாம் நீயாகி



ஞாலமெலாம் நீயாகி நின்றவாறென்னே

ஞாயிற்றின் ஒளியாகி நயந்தவாறென்னே

காலமெலாம் கருவாகி களித்தவாறென்னே

காற்றினின் அசைவாகி கரந்தவாறென்னே

கோலமெலாம் உருவாக்கி கொடுத்தவாறென்னே

கனன்று எரியாகி கலந்தவாறென்னே

மூலமெலாம் முகிழ்வாகி முளைத்தவாறென்னே

மூலமாய் ஞாலமாய் மூண்ட காலகாலனே

இனிதே,

தமிழரசி.

Thursday, 21 October 2021

நீணிலத்தைக் காத்தருள்வாய்!


புன்மலமே போந்து நின்று

  புறங்காட்டி மதி மயக்க

எம்மலமே எமை ஆட்ட

  ஏங்கித் தவித் துழன்று

வன்மலமே வகுத்த வழிஇ

  வாழ்வதற்கா நாம் பிறந்தோம்

நின்மலனே நின் அருளால்

  நீணிலத்தைக் காத் தருள்வாய்

இனிதே,

தமிழரசி.

Friday, 15 October 2021

சக்தி இன்றேல் உலகேது


இயற்கையின் எல்லாவடிவிலும் சக்தி கலந்திருக்கிறது. காற்று, நீர், விண், மண், மலை, நெருப்பு, உயிர்கள் யாவிலும் சக்தி இருக்கிறது. ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும். வெப்பசக்தி எரிசக்தியாகவும் எரிசக்தி வெப்ப சக்தியாகவும் மாறுவதை அறிவோம். அதனால் இயற்கையில் இருந்து சக்தியைப் பிரித்து எடுக்க முடியாது. சக்தியே உலகை இயக்குகிறது.


காட்டில் வாழ்ந்த மனிதன் குளிரிலும் வெப்பத்திலும் உணவு தேடித் கொடுத்தும் பிற கொடிய உயிரினங்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றி வளர்த்த தாயின் சக்தியை மதித்தான்.  சிறுவயதிலேயே தாயின் சக்தியைக் கண்டு வியந்த மனிதன் அவளைப் போற்றினான். அதுவே தாய் தெய்வ வழிபாடாக சக்திவழிபாடக முகிழ்ந்தது. அது பின்னர் சிவவழிபாடாக ஆண்தெய்வ வழிபாடாகக் கிளைவிட்டுப் படர்ந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.


அந்த உண்மையை சங்க இலக்கிய நூலான ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தும் 

நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்

இருதாள் நிழற்கீழ் மூவகை

உலகும் முகிழ்ந்தன முறையே

- (ஐங்குறுநூறு: கடவுள் வாழ்த்து)


எனக் கூறுகிறது. பிற்கால நூல்கள் சிவன் தனது இடது பாகத்தில் சக்தியை வைத்ததாக சொல்வதற்கு முற்றிலும் மாறாக அம்பாளின் பாகத்தில் சிவன் இருப்பதாகச் சொல்கிறது. இது சக்திவழிபாட்டில் இருந்து சிவவழிபாடு தோன்றியதைக் காட்டுகிறது. “சக்தி இன்றேல் சிவன் இல்லைஎனும் முதுமொழி தோன்ற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


இப்பாடல்சக்தியின் பாகத்தில் இருக்கும் சிவனின் இரு திருவடிகளின் நிழலின் கீழே மூவகை உலகும் முறையாகத் தோன்றினஎன்கின்றது. இக் கடவுள் வாழ்த்துச் சொல்லும்மூவகை உலகும்எது? இதற்கு விளக்கம் எழுதியவர்கள் மேல், கீழ், நடு என மூவகை உலகு தோன்றியதாக எழுதியுள்ளனர். அது பிழையான கருதுகோளாகும். 

1. மேல் உலகு

2. கீழ் உலகு

3. நடு உலகு 

என மூவகைப்பட்ட உலகு இருக்கிறதா? எங்கே இருக்கின்றது? ஒன்றிலிருந்து ஒன்றாக முறையே தோன்றியதா? என்கின்ற கேள்விகளுக்கு இவை விடை தருமா?


மூவகை என்பது இங்கே பொருளின் தன்மையை, பண்பைக் குறிக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்னும் உண்மையை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே சொன்ன ஓர் அரிய பாடல் இது. 


ஐங்குறுநூறு உலக தோற்றத்திற்குக் காரணமான பொருட்களின் நிலைகளை மூவகை  [The three states of matter] எனக் கடவுள் வாழ்த்தில் சொல்கிறதுதிண்ம [Solid], திரவ [Liqud], வாயு [Gas] ஆகிய மூன்றாலான உலகம் ஒன்றிலிருந்து ஒன்றாக முறையே தோன்றியது [முகிழ்ந்தது] என்கிறது.


அதாவதுதிண்ம, திரவ, வாயு எனும் மூவகைப் பொருளாலான உலகம் நீலமேனியும் வெள்ளை அணியும் பூண்டவளின் பாகத்தில் இருக்கும் ஒருவனின் இரண்டு திருவடிகளின் நிழலில் இருந்து முகிழ்ந்ததுஎன உலக தோற்றத்தை அறிவியல் கருத்துடன் சொல்கிறது. இம்மூவகைப் பொருட்களின் சக்தி இன்றேல் உலகேது?

இனிதே,

தமிழரசி. 

Sunday, 26 September 2021

வித்தகநெஞ்சனே வர்ண ராமேஸ்வரா!


தத்துவப்பாடலும் ஈழத் தனித்துவப்பாடலும்

  தந்தனை என்பது நின்புகழோ

இத்தரைமீதினில் தன்புகழ் நிறுத்திட

  தத்தித் தரிகிட போடுவாரிடையே

வித்தகநெஞ்சனே வர்ண ராமேஸ்வரா

  வையகம் யாவுமே நின்புகழானதே

வித்துவக்காச்சலுக்கு அப்பால் ஆனவா

  வியலகம் சென்றது விந்தையிலவே!

இறப்பும் பிறப்பும் எவர்க்கும் பொதுவே. எதற்காக வாழ்ந்தோம் என்னும் தன்மை முகம் தெரியாதோரையும் விரும்பவைக்கும். தன்முகம் அறியாதோரையும் விரும்பவைத்த இசையாளன். இன்று உலகில் உள்ள தமிழ் நெஞ்சங்கள் அவருக்காக மனம் நொந்து துடிக்கின்றன. இந்த இசையாளனின் குரல்தாயகக் கனவினைபலரின் நெஞ்சில் நிலைக்க வைத்தது. பாடல்களின் கருத்தின் ஆழம் பல நெஞ்சங்களை அழவைத்து சிந்திக்கச் செய்தன. அதனால் அறிவாலும் உணர்வாலும் வர்ணராமேஸ்வரனின் இசையோடு கலந்தவர் பலராவர். பாடலை எழுதி, பாடி, வயலின், வீணை, மிருதங்கம், Keyboard போன்ற இசைக் கருவிகளை வாசித்த பன்முகக் கலைஞன்.

யாழ் இராமநாதன்கல்லூரி நுண்கலைக்கூட இசை ஆசிரியர் வர்ணகுலசிங்கம் அவர்களின் மகனாய்ப் பிறந்து யாழ்பல்கலைக்கழகத்தில் இசை விரிவுரையாளராய் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த அன்பும் பண்பும் நிறைந்த இசையாளன் இயற்கையுடன் இசைந்ததுவும் பொலிவு தானோ?

இனிதே,

தமிழரசி