Monday, 23 January 2017

அஞ்சாத சிங்கம் என் காளை


இக்காளையைப் போல் ஆனால் கருநிறம் இன்றி இருந்தது

நான் “கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்
          காடுஞ் சுனையும் கடந்து வந்தேன்” 
எனப் பாடியபடி, கல்லும் மலையும் குதித்து காடுஞ் சுனையும் கடந்து திரிந்த காலம் அது. அப்படிப் பாடித்திரிந்த காலத்தில் ஒரு காளையை நான் வளர்த்தேன். மாணவர்களால் ஜல்லிக் கட்டுக்காக சென்னை மரீனா கடற்கரையில் நடைபெறும் புரட்சிப்போராட்டம் அந்தக் காளையின் நினைவலைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தது. அத்துடன் நேற்று[21/01/2017] நடைபெற்ற ‘London Arena to Chennai Marina’ நிகழ்ச்சி அந்தக் காளையைப்பற்றி எழுதத் தூண்டியது.


சிந்துவெளி நாகரிக காலத்து மாடுகளின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுவது சிந்து இனமாடுகளாகும். இன்றும் அவ்வின மாடுகள் அப்பகுதியிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வின மாடுகள் நீளமாகவும் உயரமாகவும் சந்தன நிறம்கலந்த செந்நிறத்துடனும் இருக்கும். இவற்றிற்கு மிகச் சிறிய ஆடுகொம்புகள் இருக்கும். பசுக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10 - 12 லீற்றர் பால் கொடுக்கும். இவ்வின மாடுகளைச் சங்ககாலத் தமிழரும் வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் அப்பசுக்களை ‘சேதா’ என அழைத்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. செவ்விய - செந்நிறப் பசுவை சேதா என்பர்.

சங்ககாலப் புலவரான கபிலர் 
“சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா”  
                                            - ( நற்றிணை: 359: 1)
என மலையில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசுவைக் குறிப்பிடுகிறார். அத்தகைய சிந்து இனத்தைச் சேர்ந்த கலப்பினப் பசுவொன்றை என் தந்தை வாங்கி இருந்தார். அப்பசுவே எங்கள் வீட்டுப் பட்டியில் இருந்த நூற்றுக்கனக்கான மாடுகளில் உயரமாய் சந்தன நிறத்தில் மிக அழகாய் இருந்தது. அதை இலட்சுமி என்றே எல்லோரும் அழைப்போம். லட்சுமி ஈன்ற முதற்கன்றை ‘கப்பல்’ என்று அழைத்தனர் என நினைக்கிறேன். நான் சிறுமியாக இருந்ததால் அதைப்பற்றிய நினைவுகள் என்னிடத்தில் இல்லை. 

அதன் பின் லட்சுமி ஈன்ற கன்றேயே ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என்று சொல்லி வளர்த்தேன். அக்கன்று எப்போது நிலத்தில் கால் பதித்து தள்ளாடி வீழ்ந்து எழுந்து நின்றதோ அக்கணம் முதல் அது என் காளை ஆயிற்று. கன்றாக இருக்கும் பொழுதே அதுவும் மற்றக்கன்றுகளைவிட உயரமாகவும் நீளமாகவும் அதன் இனத்தைப் போல் இருந்தது. அதனைச் சின்னக்கப்பல் என்று எல்லோரும் அழைப்போம். வெள்ளையோடு வெளிர் peach நிறம் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. 

லட்சுமி கன்றை[சின்னக்கப்பலை] நினைத்து கமறிக்கொண்டு ஓடிவரும் பொழுது அதன் முலைகளால் பால் வடிந்து நிலத்தில் கோலமிடும். இப்படி கன்றை நினைத்து பால் வடியவடிய ஓடிவந்த பசுக்களை சீத்தலைச்சாத்தனாரும் 
“குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீபால் எழுதுகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர”           
                                       - ( மணிமேகலை: 5; 130 - 132)
‘குவளை மலரை மேய்ந்த திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலையிலிருந்து பொழிகின்ற இனிமையான பால் நிலத்திலிருந்து மேல் எழும் புழுதியை அடக்க, கன்றுகளை நினைந்து  கமறும் குரலோடு மன்று இருக்கும் வழியால் செல்ல’ என மணிமேகலையில் ஒரு காட்சியாகக் காட்டுகிறார். 

கன்றைத்தேடி ஓடிவரும் லட்சுமியின் மடியிலிருந்த பாலை ஒரு பக்கம் சின்னக்கப்பல் குடிக்க, மறுபக்கம் நானும் சுவைத்துக் குடித்திருக்கிறேன். சின்னக்கப்பலில் ஏறி சவாரி செய்வேன். அப்படிச் சவாரி செய்யும் பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பி சுசிலா குழுவினர் பாடிய

“அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்கவிடும் ஆளை

வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசை கொண்டு வீராப்பு பேசிக்கொண்டு

மாட்டை பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
ஆண் வாடை கண்டாலே ஆகாதது
இது ஆவேசம் கொண்டாலே பொல்லாதது”
என்ற பாடலைப் பாடித்திரிந்தேன். அந்த பாடலுக்கு ஏற்ப அதுவும் அஞ்சாத சிங்கமாகத்தான் வளர்ந்தது. அதனுடன் விளையாடுவது எனது பொழுது போக்காகவே இருந்தது. நான் மெல்ல நடந்தால் அதுவும் மெல்ல நடக்கும். ஓடினால் ஓடி வரும். நின்றால் நிற்கும். எப்போதும் என்னுடன் துணைக்கு வரும்.

சென்னை மரீனா கடற்கரையில் சல்லிக்கட்டுப் போராட்டம் நடக்க முன்னரே 10/10/2016 அன்று, காளை பற்றிய பாடல் ஒன்றை எழுதினேன். அதில் சின்னக்கப்பலை நினைத்துப் பார்க்காமலேயே அதன் குணத்தை பதிவு செய்திருந்தேன் என்பதை பின்னால் புரிந்து கொண்டேன்.
“வெள்ளை நிறக் காளை இது
  வைக்கல் உணும் காளை இது
கொள்ளை இன்பம் கொண்ட துமே
  கொஞ்சி மகிழ் காளை இது

துள்ளி ஓடும் காளை இது
  துணைக்கு வரும் காளை இது
அள்ளி முத்தம் இட்ட துமே
  அன்பாய் முட்டும் காளை இது

வெள்ளி நிறக் காளை அது
  வயல் உழும் காளை அது
தள்ளி நின்று தொட்ட துமே
  தலை யாட்டுங் காளை அது

தள்ளை போன்ற காளை அது
  தொல்லை தராக் காளை அது
பிள்ளை எனைக் கண்ட துமே
  பையப் போகும் காளை அது
இப்படி நானும் வளர அதுவும் என்னுடன் சேர்ந்தே வளர்ந்தது. 

அப்போது என் தந்தை வவுனியா பாவற்குளத்தில் அதிபராய் இருந்தார். விடுமுறை ஒன்றின் போது வவுனியாவில் இருந்து கிளிநொச்சியில் இருக்கும் எங்கள் வீட்டிற்குச் சென்றோம். என்னைக் கண்டதும் என்னிடம் ஓடி வந்தது. அது என்னை விட உயரமாக வளர்ந்து இருந்தது. முன்போல் அதன்மேல் ஏற முடியவில்லை. ஏற முயன்று நான் கீழே விழுந்ததைப் பார்த்து நிலத்தில் படுத்துக்கொண்டது. நான் அதன் மேல் ஏறி இருந்ததும் என்னைக் கொண்டு பவனி வந்தது. அந்த வயதில் அதைவிடக் கொள்ளை இன்பம் ஒன்றும் எனக்கு இருக்கவில்லை. சின்னக்கப்பலின் செய்கையைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தனர்.

அதைப்பார்த்ததும் அம்மாவின் தந்தை ‘இந்தக் காலத்தில் இந்தக் காளையை அடக்கிறவன் யார்? இதற்கும் ஆண்களைக் கண்டால் பிடிக்காது’ என்றார். அவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது புரியவில்லை. என் தந்தையிடம் கேட்டதற்கு கலித்தொகையின் 104 பாடலின் விளக்கத்தை எனக்குக் கதையாகச் சொன்னார்.

அக்கதை மதுரையிலிருந்த ஓர் ஊரில் பெருவிழாவாக ‘ஏறு தழுவுதல்’ நடந்தை மிகவிரிவாக எடுத்துக் கூறுகிறது. அப்பாடலின் தொடக்கத்தில்
“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவின்றி மேல் சென்று மேவார் நாடு இடம்பட” 
                                                - (கலி: 104: 1 - 2)
ஆழிப்பேரலை பாண்டிய நாட்டை விழுங்க, சேரசோழ நாடுகளை வென்று, புதிய பாண்டிய நாட்டை உருவாக்கி இயற்கையின் சீற்றத்தையும் வெற்றிகொண்டான் பாண்டியன் என  அவனின் புகழைச் சொல்கிறது.

கொம்பால் குத்திக் கொல்லும் காளையின் கொம்பைக் கண்டு பயப்படுபவனை சங்ககால ஆயர்குலப் பெண்கள் திருமணம் செய்ய விரும்பவில்லை என்பதையும்
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”                                      
                                                     - (கலி: 103: 63 - 64)
என கலித்தொகை கூறுகிறது. 
ஏறுதழுவும் கல்வெட்டு

சங்ககால மக்கள் வீரத்துக்கு முதன்மை அளித்ததால் படித்த அறிவுள்ளவனாக இருந்தாலும் கோழைகளைப் பெண்கள் விரும்பவில்லை. அதனால் முல்லை நில மக்கள் தங்கள் பெண்கள் வளர்க்கும் காளையை அடக்குபவனுக்கே அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். காதலித்திருந்தாலும் அவனும் காளையை அடக்கினாலே அவளைத் திருமணம் செய்யமுடியும். தாம் காதலித்தவன் காளையை அடக்கவேண்டுமே என்ற தவிப்போடு ஏறு தழுவுவதைப் பெண்கள் பார்ப்பதையும் கலித்தொகையில் காணலாம்.

என் தந்தை எனக்காக விடுமுறை முடிந்து செல்லும் போது சின்னக்கப்பலையும் பாவற்குளம் கொணர்ந்தார். வீட்டிலிருந்து மாங்குளம் வரை ஒரு லொறியிலும் மாங்குளத்திலிருந்து பாவற்குளத்திற்கு இன்னொரு லொறியிலும் ஏற்றிக் கொண்டு வந்தார். அங்கே பாடசாலை விட்டதும் நானும் எனது சிறுவயதுத் தோழி முத்தரசியும் அதனுடன் விளையாடுவோம். முத்தரசிக்கும் என்னைப் போல் அது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். இப்படிக் காலம் மெல்ல ஓடியது.

நாங்கள் தைப்பொங்கலுக்கு கிளிநொச்சி வந்தோம். அதிகாலையில் முற்றத்தில் கோலமிட்டு கரும்பு, வாழை நட்டு, மாவிலைத் தோரணம் கட்டி பொங்கற்பானையை அடுப்பில் வைக்கும் நேரம் பட்டியில் இருந்த லட்சுமி கமறத்தொடங்கியது. அதனால் பட்டி மாடுகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. லட்சுமியின் கமறல் வரவரக்கூடியது. அரிசி கொதிக்கும் போது இன்னொரு கமறல் சத்தம் தூரத்தே கேட்டது. நான் சின்னக்கப்பல் வருகிறது என்றேன். வீட்டார் நம்பவில்லை. சிறிது நேரத்தில் படலையில் சின்னக்கப்பல் ஓடிவந்து நின்றது. லட்சுமியும் பட்டியின் வேலிக்கு மேலால் பாய்ந்து சென்று அதனை நக்கியது. அன்று விலங்குகளுக்கும் தாய் மேல் அன்பும் பாசமும் இருப்பதை நேரிலே கண்டேன்.

எனது அம்மாவிடம் “நீங்க தைப்பொங்கலுக்கு உங்க அம்மாவைத்தேடி வந்தது போல அதுவும் தன் தாயைத்தேடி வந்திருக்கிறது” என்று என் தந்தை கூறினார். நானும் ஓடிச் சென்று சின்னக்கப்பலைக் கட்டிக்கொண்டேன். பாவற்குளத்தில் அதைக் கட்டிவைத்திருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு, அறுந்த கயிறும் நிலத்தில் இழுபட ஓடி வந்திருக்கிறது. அதன் உடம்பு முழுவதும் புழுதி படிந்து இருந்தது. அதனை வீட்டில் நின்றவர் குளிப்பாட்டிய பின், பொங்கல் உண்ணக் கொடுத்தேன். அது ஒரு வாழைப்பழம் கொடுத்தால் எப்பவுமே உண்ணாது. சீப்பு வாழைப்பழமாக அல்லது குலையாகக் கொடுத்தாலே உண்ணும். அன்றும் ஒரு வாழைக்குலை கொடுத்தேன் உண்டது. அதுவே அதற்கு நான் கடைசியாகக் கொடுத்த வாழைக்குலை. நாங்கள் பாவற்குளத்தில் இருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆகமுன்னர் என்னைத்தேடி கிட்டத்தட்ட 90 கி மீ தூரத்தை ஓடியும் நடந்தும் வந்திருந்தது. 

ஆனால் நாங்கள் மீண்டும் பாவற்குளம் சென்ற போது அதனைக் கொண்டு செல்லவில்லை. ஒரு கிழமைக்குப் பின்னர் சின்னக்கப்பலைக் காணவில்லை என்று தந்தி வந்தது. ‘அது என்னைத் தேடி பாவற்குளம் வருகின்றதோ! வரும் வழியில் ஏதும் நடந்ததோ!’ என்று முதலில் நினைத்தனர். அது உயரமாகவும் கொழுகொழு வென்று இருந்ததால் அதைக் களவெடுத்துக் கொண்டு சென்று அடிமாட்டிற்கு விற்றுவிட்டார்கள் என்பது தெரியவந்தது. அதனைக் களவு எடுத்தவர் தோலையும் தலையையும் புதைத்து வைத்திருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். ஆண்களால் அதனைப் பிடிக்க முடியாது. அதனால் அது படுத்திருக்கும் போது அதனை மயங்கவைத்து கடத்திச் சென்று கொன்றதை பொலிசாரின் விசாரணையில் அறிந்தோம்.

அழகும் எடுப்பும் அஞ்சாமையும் உடைய என் காளையை இழந்தேன். அதன் பின்னர் மீன்களைத் தவிர எந்தவொரு விலங்கையும் நான் வளர்த்ததில்லை. தமிழ்ப்பெண்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என காளைகளை வளர்த்து வருவதற்கு, கடந்த காலத்தில் நானும்   என்காளையும் ஒரு சாட்சியாய் இருந்தோம். 
இனிதே,
தமிழரசி.

Monday, 16 January 2017

முருகமூர்த்தி சக்தி அது

தல்லையப்பற்று முருகமூர்த்தி - புங்குடுதீவு

அருகாக அவன் இருக்க
       அலந்துதேடும் பக்தி எது
பருகாத இன்ப மெலாம்
       பருகவெண்ணும் பக்தி அது
உருகாத மனம் உருக்கி
       உணரவைக்கும் சக்தி எது
முருகாக முகம் மலரும்
       முருகமூர்த்தி சக்தி அது

இனிதே,
தமிழரசி.

Sunday, 15 January 2017

காலைவெயிலிற் காத்திருந்தேன்!

புங்குடுதீவே!

நீலக்கடல் அலையிடையே
         நிமிர்ந்தோடிடும் பாய்மரம் போல்
காலக்கடல் அலையிடையில் 
         குளிர்போர்த்த சோலையாய் நிதம்
தாலமரத்து ஓலையசைந்து
         தாளமிடும் புங்குடுதீவே யுன்
கோலஎழில் காண்பதற்கு
         காலைவெயிலிற் காத்திருந் தேன்!                     
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
1. தாலமரம் - பனைமரம்

Saturday, 14 January 2017

வண்டிச்சக்கர வாழ்க்கை


மனிதவாழ்வு மிகவும் சுவைமிக்கது. அன்பு, நட்பு, பகை, கோபம், இன்பம், துன்பம், பொறாமை, அறிவு, ஆற்றல் எனும் பல சுவைகளும் கலந்த கலவையே வாழ்க்கை.  இந்தச்சுவைகளை எல்லாம்  இனங்கண்டு பிரித்தெடுத்து நிறைந்த மனத்துடன் எப்படிச் சுவைப்பது? அதற்கு வழி இருக்கிறதா? ஆம் இருக்கிறது. எந்தச்சுவையை எப்படிச் சுவைத்தால் இன்பமாக வாழலாம் என்பதை முன்னோர்கள் தமது அநுபவ அறிவால் கூறியுள்ளனர்.

பாதைவழியே செல்லும் வண்டியின் சக்கரம் மேலும் கீழுமாக சுழன்று செல்லும். மனித வாழ்க்கைப் பாதையில் நாமும் வண்டிச்சக்கரம் போல் மேலும் கீழுமாகச் சுழன்று செல்கின்றோம். அந்தச் சுழற்சியிலும் மேடும் பள்ளமும், ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வந்த வண்ணமே இருக்கும். அதிலும் செல்வம், வறுமை இரண்டும் என்றும் நிலைத்து நிற்காது. ஆதலால் வாழ்க்கையில் பணத்தில் புகழில் ஏற்றம் வரும் நேரந்தொட்டு வாழ்வை எப்படிச் சுவைத்து வாழவேண்டும் என்பதை

“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்”                                    - நாலடியார்
என்று நாலடியார் கூறுகின்றது.

குற்றம்மில்லாத [துகள்தீர்] பெருஞ் செல்வம் உண்டான நேரம் [தோன்றியக்கால்] தொட்டு
எருமைக்கடா[பகடு] நடந்து உழுது விளைந்த உணவை[நடந்தகூழ்] பலரோடு[பல்லாரோடு] உண்க
வயிறுநிறைய[அகடுற] யாரிடத்தும்[யார்மாட்டும்] நில்லாது செல்வம்
வண்டிச்சக்கரம்[சகடக்கால்] போல வரும்.

பகடு நடந்த[எருமைக்கடா நடந்த]

கொலை, களவு, பொய், புரட்டு, அடுத்துக்கெடுத்தல், கைக்கூலி பெறுதல் போன்ற குற்றங்களைச் செய்யாது நேர்மையான உழைப்பால் பெருஞ்செல்வம் சேரத்தொடங்கும் பொழுதே உணவை உறவினர், நண்பர், விருந்தினர், வறியவர் முதலான பலரோடுங்கூடி வயிறு நிறைய உண்ணுங்கள். அந்தச் சுவைக்கு எதுவும் ஈடாகாது. ஏனெனில் செல்வமானது வண்டிச்சக்கரம் போல மேலும் கீழுமாக ஏறி இறங்கி ஒருவரிடமும்  நில்லாது வந்து போகும்.

செல்வம் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் ஒரு வண்டிச்சக்கர வாழ்க்கை என்பதை உணர்ந்து, இருப்பதை பகிர்ந்துண்டு வாழ்ந்தால் மனிதவாழ்க்கை சுவைமிகுந்ததாக மிகமிக இனிமையாக இருக்கும்.
இனிதே,
தமிழரசி.

Thursday, 12 January 2017

குறள் அமுது - (128)


குறள்:
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”                          - 1031

பொருள்:
சுற்றிச் சுழன்று பிறதொழில்களைச் செய்தபோதும் உழவுத் தொழிலின் பின்னே தான் இவ்உலகம் நிற்கின்றது. அதனால்  மிக்க துன்பப்பட்டு உழவுத்தொழிலைச் செய்தாலும் உழவுத் தொழிலே தலை சிறந்தது.

விளக்கம்:
உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள முதலாவது திருக்குறள் இது. நிலத்தை உழவு செய்து பயிர் செய்வதால் உழவுத்தொழிலை உழவு என்பர். மற்றைய தொழில்களைவிட உழவுத்தொழில் ஏன் தலை சிறந்தது என்பதை இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

மனிதன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்காக சுழன்று திரிகிறான். நல்ல தொழிலிலைத் தேடி அலைந்து, தொழில் கிடைத்ததும் அதனைச் செய்வதற்காக வேலைக்கும் வீட்டிற்குமாக மீண்டும் மீண்டும் சுழல்கிறான். அப்படி வேலை வேலை என்று சுழன்றாலும் உலகோர் யாவரும் உணவிற்காக உழவரின் பின்னால் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. 

நிலத்தை உழும் கலப்பையை ஏர் எனச்சொல்வர். ஏரால் நிலத்தை உழுது மண்ணைப் பண்படுத்தி பயிர் செய்வதாலேயே உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. மாடு, ஆடு போன்ற விலங்குகளையும் கோழி, வாத்து போன்ற பறவைகளையும் வளர்த்து, பால், முட்டை, இறைச்சி போன்ற உணவுப்பொருட்களையும் உழவர்களே தருகின்றனர். அவர்கள் எமது உடைக்கு வேண்டிய பருத்தி, பட்டு போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். உழவர்களிடம் பொருட்களை விலைக்கு வாங்கி மற்றைய வியாபாரிகள் விற்று பணத்தைப் பெருக்குகிறார்கள். உலகில் பலவகைப்பட்ட தொழில் தோன்ற உழவர்கள் காரணமாக இருக்கின்றனர்.

அரசாட்சி செய்வோரின் மாபெரும் சக்திகளாய் பெரும் வீரர்களாய் போர்முனையில் நின்று போர் புரிவோருக்கும் உணவு கிடைக்க ஏர்முனையால் நிலத்தை உழுதாக வேண்டும். ஏர்முனை மழுங்கின் போர்முனை அழுந்தும். உலகின் எந்த ஓர் அரசாட்சியும் நிலைத்து நிற்காது. 

இயற்கையை அரவணைத்து உழவுத்தொழிலைப் போற்றி வாழ்ந்த மனிதன் எப்போ பண்ட மாற்றைக் கைவிட்டு பண மாற்றை உண்டாக்கிக் கொண்டானோ அன்றே உழவுத்தொழிலுக்கு சாவுமணி அடித்துவிட்டான். அதனால் உழவுத்தொழில் துன்பத்தில் உழழும் தொழிலாய் மாறிவிட்டது.

எனினும் இந்த உலகம் ஏரினால் உழுது விளையும் பொருட்களை எதிர்ர்த்து நிற்பதால் உழவர்கள் உடல் வருந்தி உழைத்தாலும் உழவுத்தொழிலே எல்லாத் தொழில்களையும் விடத் தலைசிறந்ததாகும்.

Saturday, 7 January 2017

ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ!

பண்டடைக் காலத்தில் தில்லைவனம் இருந்த இடம் தென்புலியூர் என அழைக்கப்பட்டது. வனத்தில் புலி வாழ்வது இயற்கையானது. எனவே தில்லைவனத்தில் புலி வாழாமலா இருக்கும்? அங்கே ஒரு வேங்கை வாழ்ந்தது. வரிப்புலியை வேங்கை என்பர். நல்ல பசியோடு புறப்பட்ட வேங்கை, ஆட்டைக் கண்டால்  அதனைவிட்டு விலகிப்போகுமா? இல்லையே! அந்தத் தென்புலியூரில் இருந்த அம்பலத்தில் நடராஜர் நடனம் புரிந்தார். அதனால் அரசர்கள் அதனைப் பொன்னம்பலமாக மாற்றினர். அதுவே இன்றைய சிதம்பரம். அம்பலத்தில் சிவன் நடனம் ஆடுவதால் அவரை அம்பலவர் என்றும் அழைப்பர்.

இரட்டைப்புலவர்கள் பொன்னப்பலத்து நடராஜரை வணங்க சிதம்பரம் கோயிலுக்குச் சென்றனர். அங்கே நடராஜரின் அருகே புலி இருப்பதை முடவர் பார்த்தார். உடனே
“தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை” எனப்பாடினார். 

அதனைக் கேட்ட குருடர்
“வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தே விட்டே அகலாதோ அம்மானை” 
எனக் கேள்வி கேட்க

முடவர்
“ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை” 
என்றார்.
தஞ்சைப் பெருங்கோயில் ஓவியம்
அம்மானை என்பது பெண்கள் பாடிப் பந்தடித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டை முன்று பெண்கள் சேர்ந்து விளையாடுவர். ஒருவர் ஓரு செய்தியைச் சொல்லி அம்மானை என்று கூறிப் பந்தை அடிக்க இரண்டாமவர் அச்செய்தியில் கேள்வி கேட்டு அம்மானை என்று அப்பந்தை அடிக்க மூன்றாமவர் பதிலைச் சொல்லி அம்மானை என்றபடி பந்தை அடிக்க அது புதுப்புது செய்தியுடன் தொடர்ந்து பந்து கீழே விழும்வரை தொடரும்.

முடவர் சொன்ன செய்தி: 
தென்புலியூரில் இருக்கும் அம்பலவரின் தில்லைச் சிதம்பரத்தில் கொடும்புலி ஒன்று எந்நாளும் அமர்ந்திருக்கிறது. 

குருடர் கேட்ட கேள்வி:
கொடும்புலி ஒன்று அமர்ந்திருக்குமே ஆனால் அது அம்பலத்தை விட்டு அகன்று போகமாட்டாதா?

முடவரின் பதில்:
வரிப்புலி தன் உணவான ஆட்டை விட்டு அகன்று போகுமா! அதனாலேயே அது அங்கே அமர்ந்து இருக்கிறது.

இரட்டைப்புலவர்கள் பாடிய அம்மானைப்பாடலின் முழுவடிவம்: 
“தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை 
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தே விட்டே அகலாதோ அம்மானை
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை”
இப்பாடலின் உண்மையான உட்கருத்தைப் பார்ப்போமா? ‘தென்புலியூர் அம்பலவரின் தில்லைச் சிதம்பரத்தில் புலிப்பாத முனிவர் [வியாக்ரபாதர்] எப்போதும் அமர்ந்திருக்கிறார்’. ‘எந்நாளும் அமர்ந்திருக்கும் புலிப்பாத முனிவர் அம்பலத்தை விட்டு அகலமாட்டாரோ?’ ‘நடராஜரின் ஆட்டத்தைப் பார்ப்பதைவிட்டு புலிப்பாத முனிவர் போவாரா?’ என இந்த அம்மானைப் பாடலில் இரட்டைப் புலவர்கள் புலிப்பாத முனிவரைப் பற்றிக்கூறியுள்ளனர். அம்மானைப் பாடல்கள் சிலேடையாக இரட்டைக் கருத்துத் தருவனவே.
இனிதே,
தமிழரசி.

Thursday, 5 January 2017

பெருமை மிகு பாதம் அது!

பாதம் அது பாதம் அது
பரவ இனிய பாதம் அது
வேதம் தொழு பாதம் அது
வெற்றி தரும் பாதம் அது
ஏதம் அற்ற பாதம் அது
எழில் நிறை பாதம் அது
நாத கீத பாதம் அது
நடன ராசர் பாதம் அது
பேதம் இலா பாதம் அது
பெருமை மிகு பாதம் அது
இனிதே,
தமிழரசி.