வைகல் தோறும் தெய்வம் தொழு
.jpg)
இளம் வயதில் ஔவையார் இயற்றிய ‘கொன்றை வேந்தன்’ படித்தது உங்களில் பலருக்கு ஞாபகம் இருக்கும். கொன்றை வேந்தன் படித்ததை மறந்திருந்தாலும்
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
- (கொன்றை வேந்தன்: 1)
என்பது இன்றும் நினைவிலிருக்கும். அதனைத் தொடர்ந்து
“வைகல் தோறும் தெய்வம் தொழு”
- (கொன்றை வேந்தன்: 89)
என்றும் படித்திருப்பீர்கள். இதில் வரும் வைகல் பல கருத்துக்களை தரும் ஒரு சொல். இந்த வைகல் எனும் ஒரு சொல்லை நாலடி வெண்பா ஒன்றில் ஏழு தரம் வைத்து சமணமுனிவர் ஒருவர் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்தப் பாடலில் வாழ்க்கையின் நிலையாமையையும், அறத்தின் முதன்மையையும் சொல் ஓவியமாகக் காட்டுகிறார்.
நாலடியார் என்னும் நூலில் அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ள
“வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது உணரார்
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணரார்”
- (நாலடியார்: 39)
எனும் பாடல் சொல்வது என்ன?
[வைகலும்] நாள்தோறும் [வைகல்] பகல் வரக்கண்டும் [அஃது] அதன் காரணத்தை [உணரார்] உணர்ந்து அறிய முடியாதார், [வைகலும்] என்றும் [வைகலை] பகலை [வைகும்] நிலைத்திருக்கும் என்று [இன்புறுவர்] இன்பம் அடைவர். அப்படி இன்பம் அடைவோர் [வைகலும்] ஒவ்வொருநாளும் அந்த [வைகல்] நாட்பொழுது [தம்] தமது [வாள்நாள்மேல்] ஆயுள் காலத்தின் மேல் [வைகுதல்] நிற்பதை கழிந்து போகும் [வைகலை] பொழுதை வைத்து [உணரார்] அறியமாட்டார்.
நாள்தோரும் பகல் வருதைப் பார்த்து அதன் காரணத்தை உணர்ந்து அறியமுடியாதார் எப்போதும் பகல் பொழுது இருக்கும் என நினைத்து மகிழ்ச்சி அடைவர். அதனால் ஒவ்வொரு நாளும் வரும் அந்தந்த நாட்பொழுது தமது ஆயுட் காலத்தின் மேல் நின்று ஆயுளை அழிப்பதை பொழுதைக் கொண்டு உணர்ந்து அறியார்.
எப்போது அறம் செய்யவேண்டும் என்பதைச் சொல்லவந்த சமண முனிவர் நாம் வாழும் நாள்[வாள்நாள்] கழிந்து குறுகி வருவதை ஒவ்வொரு நாளும் கழியும் பொழுதை வைத்து உணர வேண்டும் என்கிறார். ஏனெனில் எமது ஆயுள் என்றும் நிலைத்து இருக்காது. நாட்கள் ஓடிச்செல்வதைப் பார்த்து நிலையாமையை உணர்ந்து நேரம் காலம் பார்க்காது அறம் செய்யவேண்டுமாம்.
திருவள்ளுவர் ‘நிலையாமை’ என்னும் அதிகாரத்தில் ‘எப்படி எமது வாழும் நாள் சுருங்குவதை அறிவது?’ என்பதை
“நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார் பெறின்” - (குறள்:334)
எனக் கூறியுள்ளார். அதாவது ஒரு நாள் போவது போல எமக்குத் தெரிந்தாலும் அதுவே எம் வாழ்நாளை அறுத்தெடுக்கும் வாள் என்பதை நாம் உணரவேண்டும் என்றார்.
திருவள்ளுவர் கூறியதையே சமணமுனிவர் எடுத்து வைகல் எனும் சொல்லை வைத்து பழகு தமிழில் அறம் செய்வதற்கு படிப்பு, பட்டம், பணம், பதவி, பகல், நாள், கோள் எதுவும் பார்க்கத்தேவை இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார். நாம் என்றும் நிலைத்திருக்கப் போவதில்லை ஆதலால் அறம் செய்க. வாழும் நாள் என்றும் வளர்ந்து எம்மோடு வராது. எனவே இன்றே “அறம் செய்க!”
இனிதே,
தமிழரசி.