Tuesday 16 January 2024

மயன் மகள் - 1.5(சரித்திரத் தொடர்கதை)

நான் 'நச்செள்ளை' என்ற பெயரில் ஆம்பல் இதழில் 2009ல் எழுதியது 

சென்றது…

நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதிக்காக மாசுணத்திடமிருந்து மனோமயமாணியை எடுக்கச் சென்ற மயனும் நண்பர்களும்  மாசுணங்களிடையே அகப்பட்டுக்கொண்டனர். அவர்கள் தமது இசைத் திறமையால் மாசுணங்களை தம்வசப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். 

இனி.....


மாசுணம் உமிழ்ந்த மாமணி
“பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற”
                                                            -கபிலர்[குறிஞ்சிப்பாட்டு]
‘இசையின் ஆற்றலுக்கு கல்லும் கனிந்து உருகுமாயின் உயிருள்ள இந்த மாசுணங்கள் மயங்கி இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என மயன் நினைத்தான். அத்துடன் அவனது குரு பண்ணாகனாரிடம் குழல் வாசிக்க கற்றதையும் அங்கே வந்த இளமதியை அவன் முதன்முதல் கண்டதையும் நினைத்தான். பெண்களின் அழகுக்கு உவமையாகக் கூறப்படும் இரதியின் தங்கை மகளான இளமதி, அழகுக்கு வரைவிலக்கணம் அவளே என கண்கள் பளிச்சிட அங்கு வந்து பண்ணாகனார் முன் நின்றாள். அங்கு இருப்பவவர் எவரைப்பற்றியும் கவலைப்படாது, சுக்கிராச்சாரியாரிடம் படிப்பதாகவும் பண்கள்பற்றிய ஆய்வு செய்வதாகவும் அதற்கான சில ஏட்டுச்சுவடிகளை அவரிடம் வாங்கிப் போக வந்ததாகக் கூறினாள். அவளின் அழகுமட்டுமல்ல மிகவும் இளவயதுடைய அவளின் துணிவு, நளினம் யாவும் அவனைக் கவர்ந்தது. 
சுக்கிராச்சாரியாரிடம் படிக்கிறாள் என்பதை அறிந்ததும் பண்ணாகனார் மிகுந்த ஆர்வத்தோடு அவளிடம் பண்களைப்பற்றி நிறையக் கேள்விகளைக் கேட்டார். அவரின் மிக நுணுக்கமான கேள்விகளுக்குக் கூட அப்பண்களைப் பாடிக் காட்டி அவள் விளக்கம் அளித்தாள். அவரின் ஒரு கேள்விக்கு பதில் அளிப்பதற்காக, ‘எனக்கு ஒரு வீணை தரமுடியுமா? வீணைகளின் தந்திகளை மீட்டி பண்களின் வேறுபாடுகளைக் காட்டுகிறேன்’ எனக்கேட்டாள். அவளிடம் கொடுக்கப்பட்ட வீணையை கையில் எடுத்துப்பார்த்ததும் ‘இதன் நரம்பு மரல்நாரால் ஆனது அல்ல, மரல்நரம்பு இருக்கிறதா?’ எனக்கேட்டாள். குரு பண்ணாகனாரும் சிரித்தபடி மரல்நரம்பு கட்டிய இன்னொரு வீணையைக் கொடுக்கச் சொன்னார். 
அந்த வீணையைத் தொடாமலேயே அக்கூடத்தில் வீணை வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று, ஒவ்வொன்றாகப் பார்த்து வீணை ஒன்றை எடுத்து வந்தாள். ‘குருவே! என்னை மன்னிக்க வேண்டும். இரண்டாவதாக தரப்பட்ட வீணை முற்றாத மரத்தில் செய்யப்பட்டது. அதன் நாதம் கேட்க இனிமையாக இராது. எனவே அதைத்தவிர்த்து, இதை எடுத்துவந்தேன்’ எனக் கூறி, அவரின் பதிலுக்கு காத்திராமலே வீணையின் நரம்புக்கு சுருதிசேர்க்கத் தொடங்கினாள். வீணைக்கு சுருதி சேர்ப்பதற்கு தேவையான ஆதாரசுருதியை கொடுப்பதற்காக “மாயா! உன் குழலில் அளவிசை கொடு’ என்று பண்ணாகனார் மயனிடம் சொன்னார்.
மயன் தனது புல்லாங்குழலை எடுத்து இளமதியைப் பார்த்தபடி இசைத்தான். இசைவந்த திசையில் இளமதியின் பார்வை சென்றது. இருவர் கண்ணும் ஒன்றோடு ஒன்று கவ்விக்கலந்து பிரிந்தன. அக்கணம் முதல் இருவர் உயிரின் ஆதாரசுருதியும் ஒன்றாய் இணைந்து கலந்தன. உயிரோடு உயிர் கலந்ததை, பண்ணாகனாருக்கு குழலோடு வீணை கலந்து ததும்பிச் சிந்திய இசை காட்டிக்கொடுத்தது. அவரும் மெல்லத் தன் தாடியை வருடியபடி “மாயா! இளமதி கேட்கும் சுவடிகளை எடுத்துக் கொடு” என்று கூறி அவர்களின் காதலுக்கு நீர் ஊற்றினார். இளமதியின் நினைவு கொடுத்த உந்துதலால் மயனும் ஆம்பலந்தீங்குழலோடு ஒன்றினான்.
மயனின் ஆம்பற்குழலின் இசைக்கு ஏற்ப தனது இன்கிணையின் நடையை மாற்றியடித்த நத்தத்தன் ‘மனிதர்களாகிய நாம் போயும் போயும் இந்த மாசுணங்களுக்கா இசைத்திருவிழா செய்கின்றோம்’ என நினைத்தான். ‘அதுவும் நாக நாட்டு இளவரசனின் இசையைக் கேட்க இந்த மாசுணங்கள் எல்லாம் கொடுத்து வைத்திருக்கின்றன’ என எண்ணிச் சிரித்தான். கவிஞனான அவன் உள்ளம் மாசுணங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து இரசித்தது. நகரங்களில் கூட இசை கேட்க வரும் அவையோர் சிலர் வெட்டிப் பேச்சுப்பேசி, இசை கேட்பவர்களையும் கேட்க விடாமல் செய்வதைப் பார்த்திருக்கின்றான். பலரின் பார்வை அரங்கில் இருக்க, எண்ணமோ அந்த இசையரங்கிற்கு சம்பந்தம் இல்லாது எங்கெங்கோ சென்றிருக்கும். அப்படிப்பட்ட எத்தனையோ விசித்திர மனிதரை அவனின் கண்கள் எடை போட்டிருக்கின்றன.

ஆனால் இங்கே காட்டிலோ ‘மாசுணங்கள் எவ்வளவு ஒழுங்காக ஒன்றன் பின் ஒன்று அமர்ந்தும், அந்தரத்தே தொங்கியும் இசை கேட்கின்றன. சில தலையை மட்டும் அல்லாது தனது தாளகதிக்கு ஏற்ப வாலையும் ஆட்டுகின்றனவே’ ‘நாட்டு மனிதர்களை விட இந்தக் காட்டு மாசுணங்கள் எவ்வளவோ மேல்’ கைதேர்ந்த கலா விற்பனர்கள் போல் இருந்து அவை தலையை ஆட்டுவது அவன் மனதைக் கவர்ந்தது. அதிலும் தமது உடலையே வட்டமாக சுற்றி இருக்கையாக்கி, மேலே தலையை வைத்து சிம்மாசனத்தில் இருப்பது போல் அவற்றில் சில அமர்ந்திருந்தன. அப்படி மாசுணங்கள் இருந்து இசை கேட்கும் பாங்கு நத்தத்தனுக்கு பிடித்திருந்தது.
‘இசையை இரசித்துக் கேட்பது எப்படி என்பதை இந்த மாசுணங்களிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்’ என நினைத்தபடி முன்வரிசையில் வந்திருந்து இசை கேட்கும் குட்டி மாசுணத்தின் வாலாட்டலையும், தலையை இடைஇடையே நிலத்தில் அடிப்பதையும் பார்த்து இரசித்தான். இசை நிகழ்ச்சியின் நடுநடுவே ‘அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விபரத்தை குழலிசையிலேயே மயன் நண்பர்களுக்குச் சொன்னான். முகிலனும் சீழ்க்கையால் பதில் கூறினான்.
மயனும் முகிலனும் சேர்ந்தும், ஒருவர் மாறி ஒருவர் தனித்தும் வயிரகாந்தப் பண்ணை இசைத்தனர். நேரம் மெல்ல மெல்ல உருண்டோடிக் கொண்டிருந்தது. எங்கும் இருள் கவிந்தது.
அரங்கச் சுற்றுச் சூழல் மாறியது. ஆனால் இசை கேட்கும் அவையோரோ இடத்தைவிட்டு நகரவே இல்லை. கலைஞர்களும் நகர முடியாது. அசைந்தாலோ அவர்கள் உடல் துண்டாடப்படும். இந்த நிலை எந்தக் கலைஞனுக்கும் வரக்கூடாது. அவர்கள் மூவரது நிலையும் பேய் வாலை பிடித்தவன் கதையாகப் போய் விட்டது. மயன், ‘ஆம்பல் பண்ணை’ சீழ்க்கையில் அடிக்குமாறு வயிரகாந்தப் பண்ணில் முகிலனுக்கு கட்டளை இட்டான். ஆம்பல் பண்ணை நள்ளிரவுக்கு மேல்வரை, நாம் இசைக்க வேண்டி இருக்கும் என குழல் இசையிலேயே கூறினான்.
முகிலனுக்கு வயிரகாந்தப் பண்ணிலிருந்து ஆம்பல் பண்ணுக்கு மாற்றி சீழ்க்கை அடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. இரண்டு பண்ணும் ஒரு ‘தாய்ப் பாலையில் இருந்து பிறந்தவையே. அப்படி இருந்தும் ஒரு பண்ணில் இருந்து மற்றப் பண்ணிற்கு சீழ்க்கையை மாற்றிய போது அப்பண்களின் தனி இயல்புகள் சிறிதும் குலையாது அவற்றை இசைத்தான்.

அவர்களின் இசைக்குத் தக்கபடி தனது நடையை மாற்றி மாற்றி இன்கிணையில் வாசித்து வந்த நத்தத்தன் ஆம்பல் பண்ணிற்கு சரபந்தன தாளத்தில் வாசிக்கத் தொடங்கினான்.
பயங்கரமான ஆட்கொள்ளி மாசுணங்களிடையே அகப்பட்டு இருந்த போதும் தன் நண்பனின் திறமையை மயன் பாராட்டினான். அது அவனின் ஆளுமையையும் ஓர்மத்தையும் எடுத்துக் காட்டியது.
ஆம்பல் பண்ணையும், சரபந்தன தாளத்தையும் கேட்ட மாசுணங்கள் அவர்களை நெருங்கி வந்தன. அதைக் கண்டு தடுமாறாமல் மூவரும் இசையோடு ஒன்றினர். அதே வேளையில் அந்த மாசுணங்களிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அங்கே நான்கு மாசுணங்கள் புடைசூழ விசித்திரமான ஒரு மாசுணம் நிமிர்ந்து அசைந்தசைந்து வந்தது.
அம்மாசுணம் மிக அழகாகவும், தலையில் பூவல் கொண்டையுடனும் மற்றவற்றில் இருந்து வேறுபட்டும் இருந்தது. அதன் வால் மிகக் குறுகியும் ஐந்தாகப் பிரிந்தும் இருந்தது. அந்த ஐந்து வால்களை நிலத்தில் மாறி மாறி ஊன்றி அசைந்தசைந்து வந்தது. ஆதலால் அது நடை பழகுவது போல் தெரிந்தது. அது எல்லா மாசுணங்களுக்கும் முன்னே வந்து நின்றது. அவர்களைப் பார்த்து தன் தலையை ஆட்டியது. அதன் பார்வையில் அன்பு இழையோடுவது போல் மயன் உணர்ந்தான். அதைக் கண்டதும் மயனின் உள்ளத்தில் பேருவகை ஏற்பட்டது. மனோமய மாமணிக்காக எந்த மாசுணத்தை தேடி கிழக்கு மலைச் சாரல் முழுவதும் அலைய வேண்டும் என நினைத்தானோ அந்த அரசமாசுணமே இப்போது அவனைத் தேடி அவன் முன்னே வந்து நிற்கின்றது.
மா எந்தை கோயில் இறைவனின் கருணையை எண்ணி ஒரு கணம் வணங்கினான். அந்த அரசமாசுணம் தட்டம் தெரிய மயனைப் பார்த்து இளித்தது. அதன் கொடிய இளிப்புக்கூட மயனுக்கு சிரிப்பது போலிருந்தது. அகில உலகமே தன் காலடியில் வந்து அடிபணிவதாக அவன் உணர்ந்தான். அரசமாசுணத்தை தன் காலடியில் கொணர்ந்து சேர்த்த அந்த மானசசக்தியை மீண்டும் தொழுதான். இளமதியை நினைத்து ‘அவள் மிக அதிஷ்டசாலி’ என மனதினில் பாராட்டிக் கொண்டான். “எங்கள் இசை நிகழ்ச்சியைப் பார்க்க முக்கிய விருந்தினர் வந்துவிட்டார்” என முகிலன் சீழ்க்கையில் சொன்னான். நண்பர்கள் அதனை ஆமோதித்துக் கொண்டனர். நேரம் போவது தெரியாது மூவரும் மிக உற்சாகமாக ஆம்பல் பண்ணோடு ஒன்றினர். நேரம் நள்ளிரவை நெருங்கியும் வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல களைப்பு மிகுதியால் முகிலன் தான் இருந்த நிலையில் இருந்து சற்று மாறி இருந்தான்.
அப்படியே முகிலனை, அரசமாசுணம் கவ்வி எடுத்தது. மற்றைய மாசுணங்கள் ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தன. முகிலனை அரசமாசுணம் கவ்வியெடுத்த வேகத்திலேயே விழுங்காமல் காறி உமிழ்ந்தது. அது உமிழ்ந்த வேகத்தில் ஒரு கல்லில் மோதி முகிலன் விழுந்தான். அவன் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. விழுந்து கிடக்கும் முகிலனை கடித்துக் குதறுவதற்காக அரசமாசுணத்துடன் வந்த மாசுணமொன்று விரைந்து சென்றது. மற்ற மூன்று மாசுணங்களும் முகிலனை நோக்கிப் பாய்ந்தன. 
மயன் அதற்கும் கலங்காது ஆம்பற் குழலை இசைத்தான். நள்ளிரவில் வாசிக்கும் ஆம்பல் பண்ணின் சுத்த இன்ப இசையால் விலங்குகளை தன்வசப்படுத்த முடியும் என்பதை மயன் தன் குருவின் மூலம் அறிந்துவைத்திருந்தான். எனவே “நத்தத்தனை ஆடாது அசையாது இருந்த இடத்திலே இருக்கும்படி” இசையில் கூறினான். அரசமாசுணம் மயன் அருகே வந்து மீண்டும் மீண்டும் அவனை முகர்ந்து முகர்ந்து பார்த்தது. அவன் மடியில் தலை வைத்திருந்தது. அதன் தலையே மயனுக்கு பெரும் சுமையாக இருந்தது. மயன் ஆம்பல் பண்ணை துரிதகதியில் இசைக்கத் தொடங்கினான்.
அரசமாசுணம் எழுந்து துள்ளிப் பின்னால் சென்று, மயனின் ஆம்பல் பண்ணின் குழலிசைக்குத் தக்கபடி துரிதகதியில் ஆடியது. அடுத்த கணம் மிகவும் அற்புதமான ஒலி எழுப்பியபடி மயனின் அருகே மனோமயமாமணியை உமிழ்ந்தது. அதன் ஒளி அவ்விடம் எங்கும் செம்மஞ்சள் நிறத்தைப் பரப்பியது. மயனின் காலடியில் மனோமயமாமணி விழுந்த நேரம் புலத்தியபுரத்தில் சிவனைநிகர்த்த ஞானக் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் முகத்தில் மனோமயமாமணியை விஞ்சிய ஞானஒளி வீசியது.
ஒளிரும்......
இனிதே,
தமிழரசி.
சொல், சொற்றொடர் விளக்கம்:
 “பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற”  - பாம்பு மணியைக் கக்க, பல பக்கங்களில் இருந்து இடையர்கள் ஆம்பல் குழனின் தெளிய இசையைப் பயின்றனர். 
சுக்கிராச்சாரியார் - அசுரகுரு
நரம்பு - வீணையின் தந்தி 
மரல்நார் - மரல் ஒருவகைமரம் அதன் நாரை வீணைக்கு தந்தியாக பயன்படுத்தினர்
அளவிசை - ஆதாரசுருதி
கவிந்தது - மூடியது 
ஆம்பல் பண் - உதயசந்திரிக்கா ராகம் 
தாய்ப்பாலை - மேளகர்த்தா ராகம் 
சரபந்தன தாளம் - பூச்சரம் ஒன்றோடு ஒன்று இணைந்தது போன்ற தாளம் [79 அட்சர காலம்]
ஓர்மம் - மனத்திடம் 
மனோமயமாமணி - அணிபவர் மனநிலைக்குத் தக்கபடி நிறம் மாறும் கல் 
மா எந்தை - மாந்தை திருக்கேதீஸ்வரம் 
தட்டம் - நச்சுப்பல்
புலத்தியபுரம் - இன்றைய பொலநறுவை
சிவனை நிகர்த்த - சிவனைப்போன்ற 
விஞ்சிய - (அதைவிட) மிகக்கூடிய 


No comments:

Post a Comment