Saturday 20 January 2024

குறள் அமுது - (152)


குறள்:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்     - 33


பொருள்: 

அறச்செயல்களை முடிந்த வகைகளில் இடைவிடாது செய்யத்தக்க வழிகளில் எல்லாம் செய்யவேண்டும்.


விளக்கம்: 

இத்திருக்குறள்அறன் வலியுறுத்தல்என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. அறம் செய்வதை வலியுறுத்திக் கூறுதல் என்பதே அதன் கருத்தாகும். திருக்குறளில் உள்ள தலைசிறந்த குறளில் இதுவும் ஒன்று. (திருக்குறளுக்கு  பன்மை இல்லை. அதாவது குறள், தேவாரம் போன்றவற்றை பன்மையில் சொல்வதோ எழுதுவதோ இல்லை). அறத்தை எப்போதும் எவரும் எந்த இடத்திலும் செய்யலாம் என்பதை இக்குறள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது. 


அறம் செய்து அதை எடுத்து மிகைப்படுத்தி சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அதற்கு மாபெரும் மேடையோ அளவுக்கு மிஞ்சிய பொருளோ பணமோ இருக்க வேண்டும் என நினைப்பதும் தவறாகும். அறச்சிந்தனை உள்ள நல்ல மனமிருந்தால் போதும். தனக்குக் கண்டு தானம் செய்யலாம். 


உங்களால் இயன்ற வழிகளில்[ஒல்லும் வகையான்] அறச்செயல்களை[அறவினை] நிறுத்தாது தொடர்ந்து[ஓவாதே] எங்கெங்கே செய்யமுடியுமோ அங்கங்கெல்லாம்  [செல்லும்வாய் எல்லாம்] செய்யுங்கள். ஏழையாகவோ செல்வந்தராகவோ எவராய் இருந்தாலும் செய்யலாம். அறம் செய்வோருக்கு இத்திருக்குறள் மூன்று கட்டளை இட்டுள்ளது.

  1. இயன்ற வழிகளில் அறம் செய்க!
  2. ஓயாது [ஓவாது] அறம் செய்க!
  3. அறம் செய்யக்கூடிய வாய்ப்பு [செல்லும்வாய்] எங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அறம் செய்க!

எவ்வளவு உயர்ந்த நேர்த்தியான சிந்தனை இது. இத்திருக்குறளின் சாறு எடுத்து நாலடியாரும் தந்துள்ளது.

எத்துணை யானும் இயன்ற அளவினால்

சிற்றம் செய்தார் தலைபடுவார் - (நாலடியார்: 272)

எந்த அளவுப் பொருளாயினும்[எத்துணை யானும்] முடிந்த அளவில்[இயன்ற அளவில்] கொஞ்சமாவது[சிற்றம்] அறம் செய்தார் அறவாழ்வால் கிடைக்கும் முதன்மையை [தலைப்படுவர்/மீண்டும் பிறவாநிலையை] அடைவார்.


ஏன் நாம் அறம் செய்ய வேண்டும் என்பதை சங்ககாலத்தில் வாழ்ந்த கணிதமேதையார் என்னும் புலவர், ஓர் இளம்பெண்ணைப் பார்த்து 


இளமை கழியும் பிணிமூப்பு இயையும்

வளமை வலியவை வாடும் - உளநாளால்

பாடே புரியாது பால்போலும் சொல்லினாய்

வீடே புரிதல் விதி - (ஏலாதி: 21)

பால்போன்ற சொற்களை சொல்பவளே! இளமை நில்லாது கழிந்து போகும். பிணியும்[நோய்களும்] மூப்பும் வந்து சேரும்[இசையும்] செல்வமும்[வளமை] வலிமையும்  நலிவடையும்[வாடும்]. வாழும் நாளில்[உளநாளால்] இந்த ஐந்தாலும் வரும் துன்பத்தை[பாடே] நுகராது[புரியாது] வீடு பேற்றை விரும்பு. அதுவே பின்பற்ற வேண்டிய விதியாகும்எனக் கற்றுக் கொடுத்துள்ளார்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment