Wednesday 3 January 2024

மயன் மகள் - 1.4(சரித்திரத் தொடர்கதை)

நான் 'நச்செள்ளை' என்ற பெயரில் ஆம்பல் இதழில் 2009ல் எழுதியது 


சென்றது….

நாகநாட்டரசன் விசுவகர்மா. அவனின் மகன் மயன். ஓர் இரவு மயனின் மனைவி இளமதி வசந்த மாளிகையில் இருந்து நிலவொளியில் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே எதையோ பார்த்துகண்டு கொண்டேன்என ஆனந்தக் கூத்தாடினாள். அதனைக் காட்ட நிலா முற்றத்திற்கு மயனை அழைத்துச் சென்றாள். அவளது முன்நெற்றியில் அணிந்திருந்த சூடிகையில் இருந்த மனோமய மாமணியின் ஒளி அவனை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது. இளமதிக்காக மாசுணத்திடமிருந்து மனோமயமாமணியை எடுக்கச் சென்ற மயன் ஒரு மாசுணத்தை கொன்றான். அதனால் அவனும் நண்பர்களும் மாசுணங்களிடையே அகப்பட்டுக் கொண்டனர்.


இனி


ஆம்பலந்தீங்குழல் 


பாம்பு கயிறாக கடல்கடைந்த மாயவன்
ஈங்கு நம் மானுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீம்குழல் கேளாமோ தோழீ!

                                            - இளங்கோ அடிகள்[சிலப்பதிகாரம்]

இதயமே ஒரு கணம் நின்று மீண்டும் மெல்ல இயங்கத் தொடங்கியது போல் உணர்ந்தார்கள். அவர்கள் அதற்கு முன் அது போன்ற பேருருவத்தைக் கண்டதேயில்லை. அதுவும் உடலெங்கும் பெரும் பெரும் வெள்ளைச் சுணங்களுடன் பச்சைநிற மாமிச பிண்டத்தைக் கண்டதும், “இது என்ன கனவாஎன முகிலன் ஒருமுறை தன்னையே தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

நத்தத்தனோ, தலை துண்டாடப்பட்ட அந்தப் பேருருவம் உயர்ந்தோங்கிய மரத்தின் கிளையிலிருந்து தொங்கியபடி துடிதுடித்து ஊசலாடுவதைப் பார்த்து, அடுத்து என்ன செய்வது என யோசித்தான். அதிலிருந்து கொட்டிச் சிதறிய இரத்தம் மரம், செடி, கொடி யாவற்றிலும் பட்டு அவ்விடத்தை இரத்தக் காடாக்கியது. அதன் உடல், ஊசலாடித் துடிதுடித்த வேகத்தாலும், உடலின் பாரத்தாலும் மரக்கிளையில் இருந்து நழுவி, கீழே சிந்தியிருந்த இரத்த வெள்ளத்தில் மொல மொலவென விழுந்தது. அது விழுந்த சத்தத்தில் மரங்களில் இருந்த பறவைகள் கூக்குரல் இட்டு சிறகடித்துப் பறந்தன. பச்சைக் குன்று ஒன்று அங்கே திடீரென தோன்றியது போல் அதனுடல் குவிந்து கிடந்தது. அதிலிருந்து எழுந்த ஒருவித இரத்த வாடை அவர்களை மூச்சுத் திணற வைத்தது.

அது நச்சுவாயு என்பதை உணர்ந்த முகிலன், “நத்தத்தா! புகைக்குண்டு எங்கே? அதனை உடனே எடுஎன்றான்.

முகிலன் சொல்வதற்கு முன்பே, “அந்த நச்சு வாயுவை அவர்கள் சுவாசிக்காது இருப்பதற்காக நத்தத்தன் புகைக்குண்டை எடுத்து மெல்லத் திருகினான். புகைக் குண்டின் முனையில் இருந்த துவாரங்களின் ஊடாக பேரண்டப் புகை அங்கே பரவியது. அப்பேரண்டப் புகை மாசுணத்தின் நச்சு வாயுவை உள்வாங்கிக் கொண்டது. எனினும் மூவரும் சிறிது உடல் தளர்ந்திருந்தனர். தன்னை நிதானப்படுத்திக் கொண்ட நத்தத்தன், “மாயா! இது என்ன என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

மாசுணம்என்று மயன் ஒரு சொல்லில் பதிலளித்தான். மாசுணம் என்ற பெயர் காதில் விழுந்ததும், “ மாசுணமா?” என்ற முகிலன், “அப்படியானால் நாம் விரைவில் இங்கிருந்து போக வேண்டும். இருந்தால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கியவர் ஆவோம்.”

மாயா! உனக்கு வந்த கோபத்தின் காரணமும் புரிந்தது. நான் அடித்த ஆம்பல் பண்ணின் சீழ்க்கையால் வந்த கேடுதான் இதுஎன்றான்.

முடிந்ததைக் கதைத்து பயனில்லை. செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.” எனக் கூறியபடி நத்தத்தன் நடக்கத் தொடங்கினான்.

நத்தத்தனுடன் நடந்து கொண்டே, “நாம் விட்ட பிழை என்ன என்பதை சிந்திப்பதாலும், பேசுவதாலும் அப்பிழையில் இருந்து திருந்துவதற்கான வழியை நாம் அறிய முடியும்எனக் கூறிய மயன், “முகிலா! உன் சீழ்க்கை மட்டுமல்ல, இடி முழக்கத்தைக் கேட்டாலும் மாசுணங்கன் கொட்டம் அடிக்குமாம். இடியை யானையின் பிளிறல் என நினைத்து இடிமுழக்கம் கேட்ட திசையில் யானையைத் தேடி மாசுணங்கள் மலை பெயர்ந்து போவது போலப் போகுமாம். மாசுணங்கள் தனியே வாழ்வதில்லை. அவை கூட்டமாக வாழ்பவை. நான் ஒன்றைக் கொன்று விட்டேன். இனி எதுவும் இங்கு நடைபெறலாம். நாம் மிக விழிப்பாக இருக்க வேண்டும்என்றான்.

நத்தத்தன் மிக விரைவாக தன்னிடம் இருந்த பச்சைநிற ஆம்பல் குழலை எடுத்து மயனிடம் கொடுத்தபடி தன்னிடம் என்ன என்ன இருக்கின்றன என்பதை பார்த்துக் கொண்டான்.

முகிலன், மயனைப் பார்த்து, “மாயா! மாசுணங்கள் கூட்டமாக வாழும் என்றாயே, அதன் கூட்டத்தில் எத்தனை மாசுணங்கள் இருக்கும்என்றான். “முகிலா! எத்தனை என்பதை அறியவேண்டுமா? உன்னைச் சுற்றி இருப்பவற்றை நீயே எண்ணிப் பார்த்துக் கொள்என்று கூறிய நத்தத்தன் மயனைப் பார்த்தான். மயன் எவர் சொல்வதையும் கேட்க முடியாத ஓர் அதிர்ச்சியில் அவர்களைச் சூழ்ந்திருக்கும் மாசுணங்களைக் கண்டு அசைவற்று நின்றான். குமரிமலைத் தொடரின் நீலமலைச் சிகரத்திலா இவ்வளவு தொகையான மாசுணங்கள்! மேலே மரக்கிளையில் இருந்து சில ஒவ்வொரு விதமாக ஊசலாடிக் கொண்டிருக்க, சில மரங்களில் நழுவிவர, கண்களைச் சுழற்றி விநோதமாக சில பார்த்தன. சில மாசுணங்கள் இவர்களை வேடிக்கை பார்க்க ஒன்றை ஒன்று முந்தி அடித்துக் கொண்டு முன்னால் வந்தன. அப்போது அவை உண்டாக்கிய விநோத ஒலிகள் இர்………. இஸ்………. ஸ்; ப்பூ………. இஸ்………. சர்………. இஸ்………. ஸ்; மூர்………. இஸ்……….ஸ் என ஓர் இசைக் கோவையாக ஒலித்தது.

அந்த இசைக் கோவையை செவிமடுத்த மயன், நண்பர்களைப் பார்த்து, “ஆயுதங்களை உபயோகித்து நாம் இவற்றிடம் இருந்து தப்பிவிட முடியாது. நடந்தாலோ ஓடினாலோ நம் உயிர் நம்மிடம் இருக்காது. இந்த மாசுணங்கள் போல நாம் அசைந்தசைந்து மயூராசனத்தில் அந்தக் குன்றுக்கு ஊர்ந்து செல்ல வேண்டும்என மெதுவாகக் கூறி ஜாடை காட்டினான்.

அங்கு சென்றதும்முகிலா நீ உன் வேலையைத் தொடங்குநத்தத்தன் இன்கிணையை  அடிக்க நான் என் பங்கைச் செய்கின்றேன்என்றான்

மயன், “முகிலா! நீ உன் வேலையைத் தொடங்குஎன்றதைக் கேட்ட முகிலன் தான் எதைச் செய்வது எனச் சிந்தித்தான்.

நத்தத்தன் இன்கிணையை அடிக்கஎன்றதும், தனக்கு இடப்பட்ட வேலை எது என்பது முகிலனுக்குப் புரிந்தது. மூவரும் தத்தம் பொருட்களை முதுகில் சுமந்தபடி மயூராசனத்தில் குன்றை நோக்கி ஊர்ந்தனர். அவர்கள் அசையத் தொடங்கியதும் மாசுணங்களும் அசைந்தன. அவர்கள் நின்றால் அவையும் நின்றன.

அங்கே காணப்பட்ட மயான அமைதிதங்கள் மரண ஊர்வலத்தை மாசுணங்கள் நடத்துவது போல் நத்தத்தனுக்குத் தெரிந்தது. முகிலன் தான் செய்யப் போவதை மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான். ‘இவ்வளவு சொற்ப நேரத்தில் எப்படி இத்தகைய பெரிய மாசுணப்படையே தங்களைச் சூழ்ந்ததுஎன மயன் எண்ணினான். ‘முகிலனின் சீழ்க்கை மட்டும் இதற்கு காரணமாக இருக்காது. தன்னால் கொல்லப்பட்ட மாசுணத்தின் இரத்த வாடையும், அதனுடல் நிலத்தில் விழுந்த சத்தத்தின் அதிர்வும், மரங்களில் இருந்த பறவைகள், மிருகங்கள் எழுப்பிய ஒலிகளுமே மாசுணங்களை அவர்களை நோக்கி படையெடுக்க வைத்திருக்க வேண்டும்என எண்ணம் சுழன்றது. அப்போது, சர்ரென இரண்டு மாசுணங்கள் மரத்தின் கிளையில் தொங்கியபடி மேலிருந்து அவர்களிடம் வந்தன. ஒன்று பல்லைக் காட்டி இளித்தது. மற்றது அவர்களை விழுங்க வாயையும் திறந்தது. திறந்த வேகத்தில் அவர்களைப் பார்த்து ஒருவித பயங்கர ஒலி எழுப்பியது. இரண்டும் சேர்ந்து அதே ஒலியை எழுப்பியபடி மீண்டும் கிளைக்குச் சென்று பயத்துடன் தம்மை கிளையில் முடக்கிக் கொண்டன. அவற்றின் ஒலியைக் கேட்டு மாசுணப் படையும் மீண்டும் மீண்டும் ஒலி எழுப்பிக் கொண்டேயிருந்தன.

 மாசுணங்கள் எதற்காகவோ தங்களுக்குக் கிட்டவரப் பயப்படுகின்றன என்பதை மூவரும் புரிந்து கொண்டனர். ஆனால் அவை ஏன் அப்படிச் செய்கின்றன என்பது புரியவில்லை. அவற்றின் அமளி துமளிக்கிடையில் அவர்கள் மிக விரைவாகக் குன்றை அடைந்து ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடிய விதத்தில் அமர்ந்தனர். முகிலன், ‘வயிரகாந்தம்' என்னும் பண்ணை சீழ்க்கையில் அடிக்கத் தொடங்கினான். அப்போது மாலை வேளை ஆதலால் அப்பண்ணை அவன் அடித்தான். அந்தப் பண்ணின் நாதம் உடலில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. அவ்வதிர்வுகள் உடலிலுள்ள நரம்புகளை மீட்டும் தன்மை உடையவை. எனவே வயிரத்தின் ஒளிக்கதிர் பிரகாசிப்பது போல அப்பண்ணின் ஒலியலை மாசுணங்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தியது. நத்தத்தன் தனது 'இன்கிணை' வாத்தியத்தை எடுத்து வாசித்தான்.

வயிரகாந்தப்பண் குழல், யாழ், வீணை முதலியவற்றில் வாசிக்க நன்கு இடம் கொடுக்கும். ஆதலால் மயனும் தனது ஆம்பலம் தீம்குழலை எடுத்து முகிலனின் சீழ்க்கையுடன் சேர்ந்து வயிரகாந்தப் பண்ணிற்கு இசை கூட்டினான்.

மயனின் ஆம்பலந்தீங்குழலின் இசையைக் கேட்ட மாசுணங்கள் அமைதியாக ஒன்றை ஒன்று முந்திவந்து அவர்களைச் சூழ்ந்தன. அந்த மாசுணப்படை காத்த அமைதி மூவரையும் திகில் அடையைச் செய்தது. திடீரென ஒரு குட்டி மாசுணம் எல்லாவற்றிற்கும் முன்னே வந்து நின்றது. நின்றவேகத்தில் சுருண்டு கிடந்து, இசையைக் கேட்கத்தொடங்கியது. மற்ற மாசுணங்களும் இசையுடன் ஒன்றின.

அவற்றைப் பார்த்த மயனின் மனதில் நம்பிக்கையின் ஒளியாக மாசுணமாமணி ஒளிர்ந்தது.

மணி ஒளிரும்....

இனிதே,

தமிழரசி.


சொல், சொற்றொடர் விளக்கம்:

  1. பாம்பு கயிறாக கடல்கடைந்த மாயவன்
    ஈங்கு நம் மானுள் வருமேல் அவன்வாயில்
    ஆம்பலந் தீம்குழல் கேளாமோ தோழீ! - தோழியே! வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த மாதவன், இவ்விடத்தில் எமது ஆனிரையுள் [பசுக்கூட்டத்துள்] வந்தால் அவன் வாயால் ஊதும் இனிய ஆம்பல் குழல் ஓசையைக் கேட்போம்.
  2. சுணங்கள் - தேமல் [புள்ளிகள்]
  3. புகைக்குண்டு - வாயுக்களை அடைத்து வைத்திருக்கும் குண்டு (வாகடம் பார்க்க)
  4. பேரண்டப்புகை - ஒருவகை மருந்துப் புகை (வாகடம் பார்க்க)
  5. கொட்டம் - ஆரவாரம்
  6. பிளிறல் - யானை எழுப்பும் சத்தம்
  7. ஆம்பல் குழல் - ஆம்பல் தண்டால் செய்த குழல் [ஒருவகை புல்லாங்குழல்]
  8. மயூராசனம் - இரு உள்ளங்கைகளில் முழு உடலையும் தாங்கி கால்களை நிலத்துக்கு கிடையாக நீட்டியபடி கைகளால் நடப்பது [யோகாசனத்தில் ஒருவகை ஆசனம்]
  9. இன்கிணை - தாள இசைக்கருவிகளில் ஒன்று
  10. வயிரகாந்தம் - பண்டைத் தமிழ்ப்பண்களில் ஒன்று [வஜ்ரகாந்தி ராகம் என அழைக்கப்படுகிறது]
  11. மாசுணமாமணி - அரசமாசுணம் வைத்திருக்கும் மாணிக்கம்

No comments:

Post a Comment