Sunday 14 January 2024

ஈழத்து பாலிநகர்ப் பொங்கல்

இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்னரும் ஈழத்துப் பாலி நன்நகரில் பொங்கல் பொங்கி மகிழ்ந்துநாள் புதிது உண்டு,’ நம் தமிழ் மூதாதையர் இருந்தனர். ஈழத்து பாலி நன்நகர் ஈழத்தில் எங்கே இருந்தது? எனும் கேள்வி பலருக்கு எழக்கூடும். 

மாங்குளத்தில் இருந்து [A9 வீதியிலிருந்துதுணுக்காய் செல்லும் வழியில் வரும் கொல்ல விளாங்குளம், ஒட்டறுத்த குளம், வவுனிக் குளம், மல்லாவி, பூவரசங் குளம், துணுக்காய் என அழைக்கப்படும் பல இடங்கள் அடங்களாக அந்நாளில் பாலி நன்நகர் என்றே போற்றப்பட்டது. அங்கு கோயில் கொண்டு வீற்றிருந்து அருளும் சிவனும் பாலி நாதர் என்றே அழைக்கப்பட்டார். அதற்கு

சாலி செந் நெல் முத்துச் சிதறி காலடி சிவப்ப

பீலி கண முண்டு நடம் பயில பாலி யாற்றில்

ஆலி முழங்கி வாவி நிரப்ப ஆளும் பாலி நாதராய்

சூலி பாகம் கொண் டருள் சீர் மல்கு செம்மையனே"

        - (மாந்தை மாண்மியம்)

இந்த மாந்தை மாண்மியப் பாடல் ஓர் எடுத்துக் காட்டாகும். 

இன்றும் பாலிநாதராய் இருக்கிறார்


சாலி நெல் சங்ககால பழமை உடையதாகும். பொருநராற்றுப்படை 

சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையூட்டு ஆக

- (பொருநராற்றுப்படை: 246 -247)

எனச் சொல்வதால் அறியலாம். சாலி நெல்லில் வெண்சாலி, செஞ்சாலி என இருவகை நெல்லினங்கள் இருந்தன. மாந்தை மாண்மியப் பாடல் செஞ்சாலி நெல் இனத்தையே சாலிச் செந்நெல் எனச்சொல்கிறது. 

சிதறிய சாலிச் செந்நெல் முத்துக்களின் மேல் கால் அடிப்பக்கம் சிவக்க மயில்கள் [பீலிக்கணம்] நடந்து, உண்டு பாலியாற்றங் கரையில் நடனம் பயில்வதற்கு மழைமேகம் [ஆலி] முழங்கி மழை பொழிந்து வாவி நிறைக்கும் [நிரப்ப] இடத்தை ஆளும் சிறப்பு மிக்க செந்தண்மை உடைய பாலி நாதர்  சூலியை பாகம் வைத்து அருள் புரிபவர்என்கிறது. 

அன்றைய தமிழரால்பாலிவாவிஎன அழைக்கப்பட்ட வாவியே இன்று வவுனிக்குளம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அன்று நீரை அள்ளி வழங்கிய பாலியாறே இன்றும் பெயர் மாறாது பாலியாறாய் ஓடி நீர் வழங்குகிறது. பாலிவாவியில் உள்ள பாலி, வாவி ஆகிய இரண்டு சொற்களும் தமிழ்ச் சொற்களே. வேற்றுமொழிச் சொற்கள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். ஆலமரம் பால் உள்ள மரம் ஆதலால் தமிழர் அதனை பாலி என அழைத்தனர். வாகடங்கள் அல்லது அவற்றின் அகராதிகள் பாலி என்பதை ஆலமரம் என்றே குறிக்கின்றன. பற்களின் இரத்தக் கசிவுக்கு பாலிப்பால் [ஆலமரப்பால்] மருந்தாகும். 

வாவி எப்படி தமிழ்ச்சொல்லாகும் பார்ப்போமா? தமிழ்நெடுங்கணக்கில் உள்ள பல எழுத்துக்களை சிலர் நீக்கவேண்டும் எனச்சொல்வது போல் நீக்கிவிட முடியாது. அவ்வெழுத்துக்களை எல்லாம் நம் தமிழ் முன்னோர் பயன்படுத்தினர். எம் அறியாமையினால் அவற்றைப் புறந்தள்ளுகிறோம். தமிழில்வௌஎனும் எழுத்து உண்டு. வௌ எனும் அடியால் பிறந்த சொல்லே வௌவுதல். இச்சொல் பற்றிப்பிடித்தல், கைப்பற்றுதல், கவர்தல் எனும் கருத்துகளில் பயிலப்படும். மழை மேகம் பொழியும் நீரை வௌவிப்பிடிக்கும் வேலையையே வாவிகள் செய்கின்றன. பால் + ஆவி = பாலாவி என்பது போல் வௌ + ஆவி = வாவி  ஆகும். சொல்லிப் பாருங்கள். தமிழ் முன்னோர் வாவிகள் வௌவிப் பிடித்த நீரை ஆவியாக மேகத்திற்கு வழங்கி நீர்ச் சுழற்சியை உண்டாக்கும் என்பதை அறிந்தே வாவி என அழைத்தனர். மற்றைய மொழிகளில் இச்சொல் மருவி வழங்கப்படுவதால் இக்கருத்தை அச்சொற்களில் காணமுடியாது. இதுவே தமிழின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.


ஆற்றங்கரை நாகரிகம் பண்டைத் தமிழர் நாகரிகமாகும். ஈழத்தின் பழந்தமிழர் நாகரிகத்தை பேராற்றங் கரையும் பாலியாற்றங் கரையும் இன்றும் பறை சாற்ற்றுவதோடு அந்த ஆறுகள் இரண்டும் அங்கே தொடர்ந்து ஓடுகின்றன.

பாலி ஆற்றங்கரையில் மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலம் போட்டு, தெய்வத்திற்கு பொங்கலிட்டு தாரை, தப்பட்டை முழங்க, விளக்கை ஏற்றி வைத்து, தங்கத்தால் செய்த குடத்தில் ஏறிநின்று ஆணும் பெண்ணும் குரவை ஆடியதை கீழேயுள்ள பாலியாற்று நாட்டுப் பாடல் சொல்கிறது. 

குரவைக்கூத்தை தன்னுடன் சேர்ந்து ஆடுவதற்கு மச்சாளை அழைத்த மச்சானையும், இருவரும் சேர்ந்து ஆடும்பொழுது அவளின் ஆடலை, அழகைப் பார்த்து அவன் ஏங்கியதையும், அவன் பார்த்தாலும் பரவாயில்லை, ஆனா தெய்வக் குற்றம் வராம பார் என அவள் சொன்னதையும், பொங்கல் குரவை ஆடி தெய்வத்தை வணங்குவோம் என அவனை அவள்  அழைத்தையும் காட்டும் இந்நாட்டுப்பாடல்கள் பாலியாற்றங்கரை மக்களின் வாழ்வியலை சங்கத்தமிழர் வாழ்வியலோடு இணைக்கிறது.


ஆணும் பெண்ணும் மாவிலைத் தோரணம் தொங்கத் தொங்க

                                          மாக்கோலம் போட்டாச்சி

                                ஆவிலை அருகம்புல் சேத்துக் கட்டி

                                         அடுப்பில உலையு வைச்சாச்சி


                ஆண்:     தப்பட்டை தாரை கொட்டக் கொட்ட

                                        ஏமவிளக்கை ஏற்றிவைத்து

                               தங்கக் குடத்தில தாவி நின்னு 

                                       பொங்கல் குரவை ஆடுவ மச்சி!

                               

               பெண்:    பொங்கல் குரவை ஆடயில கூட

                                        ஏங்கித் தவிப்பது யாரு மச்சான்

                             தெய்வ பங்கம்வராம பாரு மச்சான்

                                        தெய்வம் பரவுவ வாரும் மச்சான்                                                                                    -  நாட்டுப்பாடல் (பாலியாறு)

                                      - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து


பாலி ஆற்றங்கரையில் மட்டுமல்ல வவுனிக்குளத்திலும் பொங்கிப் புதிது உண்ண உழவர் பொருட்களை எடுத்துவைத்த அழகை இன்னொரு நாட்டுப் பாடல் எடுத்துச் சொல்கிறது.


            பெண்:      செந்நெல் கதிரடித்து
                                       சிந்திய நெல்லுக் குத்தி
                             தீட்டிவந்த பச்சரிசி 
                                       சிரிக்குதலோ முத்து முத்தா
            ஆண்:      செம்மாதுள முத்தாக
                                       சிரிக்குமந்த முத்தோடு
                            சிறுபயறு வறுத்துக்குத்தி
                                      சேர்த்துவையு(ம்) மச்சியரே!
            பெண்:      செங்கரும்பு சாறெடுத்து
                                       தேனோடு கலந்தெடுத்து
                              கட்டிவெல்லொ(ம்) கடைந்தெடுத்து
                              கலந்துவையு(ம்) மச்சினரே!
                                            - நாட்டுப்பாடல் (வவுனிக்குளம்)
                                                 - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

புதிதாக விளைந்த தானியங்களை கொண்டு பொங்கி, அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பர். அந்த வழக்கத்தை பன்நெடுங்காலமாகத் தமிழர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வழக்கம் 'பொங்கிப் புதிது உண்ணல்' என்றும் 'நாள் புதிது உண்ணல்' என்றும் அழைக்கப்படும். வவுனிக்குளத்து நாட்டுப்பாடல் பொங்கிப் புதிது உண்ணலுக்காக செய்த ஏற்பாட்டைச் சொல்கிறது. வவுனிக்குளத்தில் உள்ள சிவன் கோயில் இரண்டாயிர வருடப்பழைமையானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தமிழரும் தமிழர் பண்பாடும் அங்கு இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக நிலைபெற்றிருக்கிறது.

இக்கால சூழ்நிலையில் இதுபோல் பாலியாற்றங்கரையிலோ வவுனிக்குளத்திலோ பொங்கல் இடமுடியுமா?


இப்படி பொங்கலிட்டு குரவையாடும் வழக்கத்தை சங்ககாலத் தமிழரும் செய்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. 


சிலப்பதிகாரத்தில் சங்ககாலத்தில் நடந்த இந்திரவிழாவை எடுத்துச்சொல்லும் இளங்கோஅடிகள் இந்திரவிழாவின் போது பெண்கள் - அவித்த கடலை வகை [புழுக்கல்] எள்ளுருண்டை [நோலை] ஊன்கலந்த சோறு [விழுக்குடை மடை] பொங்கல் முதலியவற்றைப் படைத்து துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் ஆடியதை

புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து

துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி”           

                                                  - (சிலம்பு: 5: 68 - 70)

என்கிறார்


பாலியாற்றங்கரையில் தப்பட்டையும் தாரையும் கொட்ட இரவுவிளக்கு ஒளியில் குரவை ஆடியதுபோல், விளக்கொளியில் முழவை முழக்கிக் கொண்டு துணங்கைக் கூத்து ஆடியதை பதிற்றுப்பத்து காட்டுகிறது.

சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து

முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணையாக”       

                                                     - (பதிற்று: 52: 13 - 14)


பாலியாற்றாங்கரை ஆணும் பெண்ணும் குரவையாடி தெய்வத்தைப் பரவியது (வணங்கியது) போல சங்ககாலத் தமிழரும் குரவையாடி தெய்வத்தைப் பரவியதை கலித்தொகையில் முல்லைத்திணை பாடிய சோழன் நல்லுருத்திரன் 

குரவை தழீஇ யாம் மரபுளி பாடி 

தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்

மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம்

ஆளும் கிழமையோடு புணர்ந்த 

எம் கோ வாழியர், இம் மலர்தலை உலகே     

                                                         - (கலி: 103: 75 - 79)

என்று கூறியுள்ளார். இதில் சோழன் நல்லுருத்திரன் முல்லை நிலத்தில் [காடும் காடுசார்ந்த இடமும் முல்லை நிலமாகும்] வாழ்ந்தோர் குரவையாடி தெய்வத்தை வணங்கியதாகக் கூறியுள்ளார். பாலியாற்றங்கரை இன்றும் காடும் காடுசார்ந்த இடமாக இருப்பதை நாம் காணலாம். எனவே பாலியாற்றங்கரையில் வாழ்ந்த ஈழத்தமிழரும் சங்ககாலப் பழமையான பண்பாட்டை தொடர்ந்து பேணி வந்தமையை இந்நாட்டுப்பாடல்கள் வரலாறாகச் சொல்கின்றன.  

இனிதே

தமிழரசி

குறிப்பு:

நாட்டுப்புறங்களிலும், கடற்கரையின் புன்னைமர நிழலிலும், பெருவிழாக்களிலும் பண்டைய தமிழர்கள் குரவை ஆடியதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. சங்ககாலத் தமிழரின் வாழ்வியலில் காணும் பல விடயங்களை மிகவும் சாதாரணமாக ஈழத்தமிழரின் வாழ்வியலிலும் காணலாம். அந்தவகையில் ஒப்புநோக்கி ஆய்வு செய்யப்பட்டால் அதற்கு இந்த நாட்டுப்பாடலும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

No comments:

Post a Comment