Tuesday 3 January 2023

குறள் அமுது - (150)


குறள்: வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

 வாழ்வாரே வாழா தவர்     - 240


பொருள்: தமக்கு வசை வராமல் வாழ்வோரே உயிருடன் வாழ்பவராவர். புகழ் இல்லாது வாழ்வோரே உயிர் வாழாதவர்.


விளக்கம்: இத்திருக்குறள் புகழ் எனும் அதிகாரத்தில் பத்தாவது குறளாக இருக்கிறது. இந்த உலகத்தில் என்றும் அழியாது நிலைத்து உயிர் வாழ்பவர் யார்? அப்படி நிலைத்து வாழமுடியாது இறந்து போவோர் யார்? என்ற கேள்விகளுக்கு ஏற்ற விடையை இத்திருக்குறள் தருகிறது. இன்னொரு வகையில் சொல்வதானால் இறந்தபின்னும் வாழ்வோர் யார்? உயிர் வாழ்ந்த போதும் இறந்தவராகக் கருதப்படுவோர் யார்? என்பதை விளக்கிக்கூறுகிறது. இத்திருக்குறள் இல்லறவியலின் கடைசிக் குறளாய் இருந்து  இல்வாழ்கை வாழ்வதே புகழுடன் வாழ்வதற்கே என்னும் பேருண்மையை எடுத்துச்சொல்கிறது. 


இல்லறவாழ்வில் தமக்கு வசை உண்டாகாது  நல்ல புகழ் உண்டாக வாழவேண்டும். அப்படி எவர் வாழ்கிறாரோ அவரே உயிருடன் வாழ்பவர். அப்படி வாழ்பவரும் வசை இல்லாது வாழ்ந்தால் நிலைத்த புகழுடன் வாழலாம். அன்பால், அறிவால், கொடையால், கல்வியால், செல்வத்தால், நற்குடிப்பிறப்பால், பண்பால், ஆற்றலால், செய்யும் செய்கையால், புதியனவற்றை உருவாக்குவதால் பலரும் புகழடையலாம். ஆனால் அப்புகழ் நிலைத்து இருக்க வேண்டுமானால் பழிச்சொல் ஏற்காது வாழவேண்டும். அவர் செய்யும் செயலால் மிகச்சிறிய வசைவரினும் புகழுக்கு இழுக்கு உண்டாகும். 


அதனாலேயே திருவள்ளுவர் வசைஒழிய வாழ்வாரே என்று முதலில் வசையை எடுத்துச் சொல்கிறார். ஒருவர் பழிச்சொல் ஏற்காது வாழ்ந்த வாழ்க்கையில் வந்த புகழே அவர் இறந்த பின்னும் அழியாது நிலைத்து நிற்கும். நல்ல புகழுக்கு அழிவு இல்லாததால் அவர் இறந்தும் உயிர் வாழ்பவராகக் கருதப்படுவார்.


மற்றோரிடம் அன்பில்லாமல், தனக்கென வாழ்ந்தும், அறியாமையால் கல்வி கற்காது களவு, பொய், கொலை போன்றவற்றைச் செய்து பழிச்சொல்லுக்கு அஞ்சாது பிறரைத் துன்புருத்தி வாழ்வோர் வசையோடு வாழ்வர். அத்தகையோர் உயிருடன் வாழ்ந்தாலும் உயிரற்றவரே என்பது திருவள்ளுவர் முடிவாகும்.

No comments:

Post a Comment