Thursday 12 January 2023

உன் வாய்அரவை விட்டுவிடமாட்டாயா!


இயற்கையின் எழில் ஒழுகும் மாணிக்ககங்கைக் கரையில் கதிர்காமக் கந்தனின் திருக்கோயில் இருக்கிறது. நளன் சரிதையை வெண்பா பாடல்களால் இயற்றியவர் புகழேந்திப் புலவர். அதனால் பலபட்டைச் சொக்கநாதர் என்ற புலவரால் வெண்பாவிற் புகழேந்தி என்ற பாராட்டைப் பெற்றார்.

புகழேந்திப் புலவர் கதிர்காமக் கந்தனின் திருவருளில் திளைப்பதற்காக கதிர்காமத்திற்கு வந்தார். மாணிக்ககங்கையில் நீராடினார். மரக்கிளையில் இருந்து இறங்கிய பெரிய மயில் ஒன்று தோகைவிரித்து ஆடியது. மயிலின் ஆடலைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அங்கே ஒரு நாகபாம்பு வந்தது. மயில் தன் அலகால் அப்பாம்பைக் கவ்வி எடுத்தது. அப்பாம்பை மயில் அலகால் கொத்தியும் காலால் மிதித்தும் கொன்றுவிடும் என்பதை உணர்ந்தார் புகழேந்திப் புலவர். 

தாயார்அவை முன்வருத்தும் சந்திரோதயந் தனக்குஉன்

வாய்அரவை விட்டுவிட மாட்டாயோ - தீயர்அவை

சீறும் அயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள்

ஏறும் மயிற்பெருமா ளே

எனப் பாம்பின் மேல் கொண்ட இரக்கத்தால் தன்னைக் காதலியாகக் கருதி இப்பாடலைப் பாடினார்.

தீயவர்களான அசுரர் கூட்டத்தை [தீயர்அவை] கொல்லும் வடிவேல் [சீறும்அயில்] பெருமானே! தென்கதிர்காமத்துப் பெருமான் ஏறும் மயில் பெருமானே! என மயிலை அழைத்து, என் தாய்மார்க்கு [தாயர்அவை - பெற்றதாய், பாலூட்டியதாய், செவிலித்தாய் போன்ற தாய்மார்] முன் என்னை வருத்தும் சந்திரன் உதயமாகி வருகின்றான். உதய சந்திரனைக் கவ்விப் பிடிக்க உன் வாயிலிருக்கும் பாம்பை [வாய்அரவை] விட்டுவிடமாட்டாயோ? 

அது சென்று உதிக்கும் சந்திரனைப் பிடித்தால் எங்கும் இருள் சூழும் [கிரகணம்]. அந்த இருள் நேரத்தில் தாய்மார் அறியாது தென்கதிர் காமப்பெருமானைப் பார்த்து வருவேன் என மயிற்பெருமானை கெஞ்சிக் கேட்டார். மயிலும் நாகபாம்பை விட்டுவிட்டது. புகழேந்திப் புலவரும் கதிர்காமப் பெருமானின் திருவருளில் மூழ்கினார்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment