Sunday 29 January 2023

திருநாவுக்கரசு நாயனார் காட்டும் வழிபாடு


இன்றைய சைவசமயத்தவர்க்கு எத்தனை எத்தனை கோயில்கள்? ஒரு கோயிலுக்குளே எத்தனை எத்தனை கடவுளர்?  எத்தனை எத்தனை வகைகளில் பூசைகள்? கோயிலுக்கு கோயில் குருக்களுக்கு குருக்கள் - இல்லை இல்லை ஒரே குருக்களும் நேரத்துக்கு நேரம் ஆளாளுக்குத் தகுந்தபடி - எதிரே நிற்பவர்களைப் பார்த்ததும் பூசைகள் மாறுபடும். என்னே எமது கடவுட் கொள்கை!

யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன்

ஆண்ட நீ அருளிலையானால் 

        - (திருவாசகம்: 28: 1)

எனக் கதறவே முடிகிறது.


இத்தகைய பூசைகள் வழிபாடுகள் நடப்பதைப் பார்த்தும் எமது இளம் தலைமுறையினர் இன்னும் கேள்வி எழுப்பாது பார்த்திருப்பது பெருவியப்பே! எனினும்  எத்தனையோ வீடுகளில் குழந்தைகள் இப்பூசைகளைப் பார்த்து கேள்வி கேட்கின்றனர் என்பதை என்று எம் கோயில் அறக்காவலர்  என தம்மை அழைத்துக் கொள்வோர் உணரப் போகிறார்கள்? அவர்களின் கண்டு கொள்ளாத் தன்மை நம் இளையோரை கடவுள் கொள்கை அற்றவர்களாக மாற்றக்கூடும். இங்குள்ள நம் கோயில்களை அடுத்த தலைமுறையினர் ஏறெடுத்தும் பாராத நிலை வரும்.  அதனை நாம் கருத்தில் கொள்வது நன்று. 


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் இறைவனுக்கு முன் ஏற்றத் தாழ்வுகள் ஏன்?

யானே பொய் என் நெஞ்சும் பொய் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

- (திருவாசகம்: 5: 90)


எனும் தன்மையுள்ள இயற்கையாம் கடவுளரின் கருவறை முன்பும் கருவறைக்குள்ளும் ஆளுக்காள் முறன்பாடுகள் ஏதற்கு?


இவற்றைப் பார்த்தே திருநாவுக்கரசு நாயனார் பல தேவாரங்களில் என்போன்ற ஞானசூனியர்களும் எப்படிக் கோயிலில் இல்லாக் கடவுளரை வழிபடலாம் எனும் வழியை காட்டித் தந்துள்ளார். கோயிலைத் தேடி நாம் போகத்தேவையில்லை. எம்மிடமே கோயில் இருக்கிறது. அக்கோயிலுக்கு குருக்களும் தேவையில்லை. பூசை செய்ய காசு கொடுத்துப் பற்றுச்சீட்டும் வாங்கத்தேவையில்லை. நெய் பால் எதுவும் வேண்டாம். வீட்டில் இருக்கும் ஓர் இடத்தில் இருந்தால் அங்கே எம்மை நாடி ஓடி கடவுளர் வருவர். அப்படி ஓடி வருவோரை வருவிக்க பக்தி பண்ணத் தெரிந்திருக்க வேண்டும் அதனை மனப்பழக்கத்தால் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

"காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய அட்டி

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே"

- (.திமுறை: 4: 76: 4)

எமது உடம்பே கோயில். எந்நேரமும் இயங்கிக்கொண்டு இருக்கும் எம் மனமே இறைவனுக்கு அடிமையான பக்தன். அடிமையாக இருக்கும் மனம் அலைபாய முடியாது. இறை என்ற எண்ணத்தில் பக்தியுடன் காத்திருக்கும். தூய்மையானதாக வாய்மை இருக்க வேண்டும். அல்லது வாய் தூய்மையான சொற்களையே பேசவேண்டும். [தூய்மையற்ற பொய், பொறாமை, கோபம், களவு என்பவற்றிற்கு அங்கு இடமில்லை.] எமது உடம்பினுள் மனமணியாக இருந்து ஒளிவீசும் எம் உயிராகிய ஆன்மாவை இலிங்க வடிவாக நினைத்து அன்பை நெய்யும் பாலுமாகச் சொரிந்து பக்தனாய் அடிமையாய் நிற்கும் மனம் இன்பப் பெருக்கில் நிறைவு காண பூசனை செய்து ஈசனாரைப் போற்றலாமே.


சிறந்த கோயிலும் பூசையும் இதைவிட வேறு உண்டா?

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment