Friday, 27 May 2022

கருணைவிழியைக் காட்டக் காட்ட திளைப்பேன்!


பிரியா வினைப்பயனால் வெந்துயர்ப்பட்டு

  பிறந்து பிறந்து இளைத்தேன்

புரியா வினையுட்பட்டு புலனைந்தும்

  பிடிக்கப் பிடிக்க மலைத்தேன்

எரியா வினைகள் தொடர்ந்தேயென்றும்

  எரிக்க எரிக்கத் துடித்தேன்

கருகா வினையைக்கருக்கி கருணைவிழியை

  காட்டக் காட்டத் திளைப்பேன்

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

                          சொல்விளக்கம்

வெந்துயர்ப்பட்டு - கொடியதுன்பப்பட்டு

இளைத்தேன் - தோற்றேன்

மலைத்தேன் - மயங்கினேன்

திளைப்பேன் - மகிழ்வேன்

Thursday, 19 May 2022

தீராத தீர்வு

 

தீராத தீர்வுக்கு தீர்வெழுத
திரண்டு எழுந்த மாவீரரே!
போருக்குப் போர் என்று பாய்ந்தேகியே
பகைப்பாசறை தனையே பந்தாடினீர்
ஊருக்கு ஊராக உமைத்தேடியே
ஊடாடு மொற்றரை ஒட்டாட்டினீர்
வேருக்குக் குருதிப் புனலோடிட
வேங்கைகள் நாமென்றே மார்தட்டினீர்
கூராகத் துண்டாடி உடல்வீழினும்
குலமானமே பெரிதென்று வென்றாடினீர்.
 
இனிதே,
தமிழரசி.

Wednesday, 18 May 2022

காத்தருள் கலைமானே!



பாநீ பாநீ யென்றே பாவலர் பாடிய

  பழந்தமிழ்ச் சுவைப்பாகே

வாநீ வாநீ என்று அழைப்போர்

  வாக்கினில்வந் தமர்மாதே

தாநீ தாநீ என நாளும் அழுது

  தொண்டர்தொழு தேத்துதேனே

காநீ காநீ யெனக் கதறு அடியரைக்

  காத்தருள் கலைமானே

இனிதே,

தமிழரசி.

Saturday, 7 May 2022

சித்திரமும் கைப்பழக்கம்

 பதினைந்து வருடங்களுக்கு முன் கீறிக் கசக்கியது

இயற்கையையும் இயற்கையின் பல்வகைப்பட்ட ஆற்றல்களையும் பார்த்து மகிழ்ந்த பண்டைய தமிழர் அவற்றை குகைகளில் சுவர்களில் சித்திரமாக வரைந்து மகிழ்ந்தனர். அதனால் பிறந்தவையே

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்குவரோ

சுவர் இருந்தாற்றான் சித்திரம் வரையமுடியும் போன்ற பழமொழிகள். 


சங்க இலக்கியம் சித்திரத்தை ஓவியம், ஓவம், எழுத்து போன்ற பெயர்களால் சுட்டுகிறது.  மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்ற சங்ககாலப் புலவர் பாண்டியன் சித்திரமாடத்து துஞ்சிய மாறனைப் பாடியுள்ளார். அப்பாடல் புறநானூற்றின் 59வது பாடலாக இருக்கிறது. எனவே அக்காலத்தில் சித்திரங்களை வரைந்து காட்சிப்படுத்திய சித்திர மாடங்கள் இருந்ததை அறியலாம். அதனால் சித்திரம் என்ற சொல்லும் சங்ககாலப் பழமையதே. பட்டினதாரும் திருக்கழுமல மும்மணிக் கோவையில் சித்திரக்காரரைஓவியப்புலவன்என்று கூறிமகிழ்கிறார். 


ஔவையார் பாடிய தனிப்பாடல் ஒன்று

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்

என்கின்றது.

எவ்வளவுக்கு எவ்வளவு மீண்டும் மீண்டும் கீறிப் பழகிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு மிக அழகாக சித்திரம் வரையலாம். தமிழைப் பேசிப்பேசி, பாடிப்பாடிப் பழக செந்தமிழாகப் பேசவரும். கற்ற கல்வியும் மீண்டும் மனதில் நினைத்துப் பார்ப்பதால் என்றும் மறவாமல் நிலைத்து நிற்கும். அவரவரது ஒழுக்கமும் [நடை] ஒழுகும் தன்மையால் - பழக்கத்தால் மாறாதிருக்கும். ஆனால் எல்லோருடனும் நட்பாக இருப்பதும் பிறருக்காக இரங்குவதும் கொடுப்பதும் பிறப்போடு வருவது. சில மாங்கனி நாராக இருக்கும், சில புளிக்கும், சில இனிக்கும். அவை போல நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணமாக இருக்கும். அவற்றையும் நமது பழக்கத்தல் சிறிது மாற்றலாம்.


தமிழ்  மிகவும் இனிமையான மொழிஆனால் அதனைப் பேசிப் பழகும் பொழுது நன்கு பேசிப்பழக வேண்டும். ஏனெனில் தமிழில் எட்டு மயங்கொலி எழுத்துக்கள் உள்ளன. அந்த எட்டு எழுத்துக்கள் வருகின்ற சொற்களை முறையாகச் சொல்லிப் பழகப் பழக தமிழை நன்கு பேசலாம். அதனாலேயே செந்தமிழும் நாப்பழக்கம் எனக்கூறினர்.


தமிழில் உள்ள மூவகை லகர, ளகர, ழகர எழுத்துக்களையும் மூவகை நகர, ணகர, னகர எழுத்துக்களையும் இருவகை ரகர, றகர எழுத்துக்களையும் மயக்கொலி எழுத்துக்கள் என்பர். அவற்றின் வேறுபாடு தோன்ற பேசிப்பழக்க நம் முன்னோர் பல பாடல்களை சிறுவர்க்கு கற்றுக்கொடுத்தனர்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொற்கேளா தவர் 

எனும் இத்திருக்குறளைச் சொல்லிப் பழக லகர, ழகர ளகர வேறுபாடுகளை சிறுவர் புரிந்து கொள்வர்.


மயக்கொலியைக் கற்க திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் உள்ளதென் திருமுல்லைவாயில் பதிகத்தில்இருக்கும் இத்தேவரங்களைப் பாடிப் பழக்குவது நன்று.


பண்: பியந்தைக்காந்தாரம் [இராகம்: நவரோசு]

வாராத நாடன் வருவார் தம் வில்லின்

  உரு மெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பம் அகலாத அன்பன்

  அருள்மேவி நின்ற அரன் ஊர்

பேராத சோதி பிரியாத மார்பின்

  அலர் மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நொதி நேர நீடு

  திரு முல்லை வாயில் இதுவே      - (தி.முறை: 2: 954)


ன்று ஒன்றொடு ஒன்றும் ஒருநான்கொடு ஐந்தும் 

  இரு மூன்றொடு ஏழும் உடனாய்

அன்று இன்றொடு என்றும் அறிவு ஆனவர்க்கும்

  அறியாமை நின்ற அரன் ஊர்

குன்று ஒன்றொடு ஒன்று குலையொன்றொடு ஒன்று

  கொடி ஒன்றொடு ஒன்று குழுமிச்

சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த

  திரு முல்லை வாயில் இதுவே      - (தி.முறை: 2: 955)


ஊன் ஏறு வேலின் உருவேறு கண்ணி

  ஒளி ஏறு கொண்ட ஒருவன்

ஆன் ஏறு அதுஏறி ஆழகேறு நீறன்

  அரவு ஏறு பூணும் அரன் ஊர்

மான் ஏறு கொல்லை மயில் ஏறிவந்து

  குயில் ஏறு சோலை மருவித்

தேன் ஏறு மாவின் வளம் ஏறியாடு

  திரு முல்லை வாயில் இதுவே      - (தி.முறை: 2: 957)


அத்துடன்

ஒழுகலரிது அழிகலியில் உழியுலகு 

               பழிபெருகு வழியை நினையா

முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி 

               குழுவினொடு கெழுவுசிவனைத்

தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை 

                கழுவும்உ ரை கழுமலநகர்ப்

பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் 

                வழிமொழிகள் மொழி தகையவே

      - (தி.முறை: 3:725)


எனும் மூன்றாம் திருமுறையில் உள்ள திருப்பிரமபுரப் பதிகத்திலிருக்கும் இத்தேவாரத்தை பாடிப்பழக செந்தமிழும் நாப்பழக்கமாகி  விரைவாகப் பேசவரும்.

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

சிறுவர்க்கு தமிழ், இசை போன்றவற்றைக் கற்பிப்போர் இத்தேவாரங்களை சமயம் என்ற வரம்பைக் கடந்து தமிழைக் கற்பிப்பதற்கு பயன்படுத்தினால் மிகவிரைவாகத் தமிழை சரியான உச்சரிப்புடன் பேசவைக்கலாம்.