Thursday 20 January 2022

விளக்கு இருக்கத் தீ தேடுவோர்


இறைவன் என்னும் ஒளிவெள்ளம் உலகெங்கும் நிறைந்திருக்கிறது. நாம் அது எங்கே இருக்கிறது என அறியாது காணும் கோயில்கள் தோரும் தேடித்தேடி அலைகிறோம். எம் நிலையை உமாபதிசிவாச்சாரியார் மிக நேர்த்தியாகச் சொல்வார்.

வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்திருளாம்

கள்ளத் தலைவர் கடன்

- (திருவருட்பயன்: 8)

ஒருவன் தனது கழுத்தளவு நீருள்ள ஓர் ஆற்றை கடந்து செல்கின்றான். அவனது நினைவெல்லாம் ஆற்று வெள்ளம் எப்போது பெருகி தன்னை இழுத்துச் செல்லுமோ என்ற பயத்தில் இருக்கிறது. அந்தப் பயம் அவனது நாக்கில் இருந்த நீர்த்தன்மையை வற்றவைத்தது. [நாவற்றி] அவனுக்கு தாகம் எடுத்தும் குடிக்க நீருக்கு எங்கே போவது என நினைக்கிறான். அவனால் தான் ஆற்று வெள்ளத்துள் [நீருக்குள்] நிற்பதை அறிய முடியவில்லை. அவனது வாய் அருகே நீர் இருந்தும் பயவுணர்வு, எங்கே நிற்கிறான் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலைத் தடுக்கிறதுஎங்கும் விடிந்திருந்தாலும் கண்மூடித் தூங்குபவர்க்கும் குருடர்க்கும் இருளாய் இருக்கும். இவை போன்று எங்கும் அருள் எனும் ஒளிவெள்ளம் சூழ்ந்திருந்தும் தானே தலைவர் என எண்ணும் உயிராகிய [ஆன்மாவாகிய] கள்ளத்தலைவர் ஆணவமிகுதியால் அதனை உணரார். இதனை உமாபதிசிவாச்சாரியார் எல்லோர்க்கும் பொதுவாகக் கூறிச்சென்றுள்ளார். 


கயவரின் தாடையை[கொடிறு] உடைக்கும் முட்டிக்கை[கூன்கை] வைத்திருப்போருக்கு அல்லாமல் மற்றோருக்குத் தமது எச்சிக்கையில் உள்ள பருக்கைச் சோறும் உதறார் கயவர் என்பது திருவள்ளுவர் முடிவு.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு - (திருக்குறள்: 1077)


அதுபோல் பட்டினத்தாரும் கூன்கையராக 'ஊர்கள் தோறும் போய்ப் போய் கோயில் திருவிழா பார்ப்போரை உழலுவீர்! ஊமர்காள்!! என விழித்து ஆரூரர்[இறைவர்] இருக்கும் இடத்தை எல்லோருக்கும் அடித்துச் சொல்கிறார். பட்டினத்தடிகள் இருந்த ஊர்க்காரர் மூட்டை முடிச்சோடு திருவாரூர்த் தேர் பார்க்கச் சென்றார்கள். மனதைக் கொள்ளைகொள்ளும் அழகும் தொன்னூற்றாறு அடி உயரமும் உடைய பெரியதேரே திருவாரூர்த் தேர். அத்தேரை தேர்திருவிழா அன்று பார்க்கமுடியும். அதனால் உலகின் மிக உயர்ந்த தேரைப் பார்க்க மக்கள் வெள்ளம் இன்றும் அலை மோதுகிறது. அது வியப்பல்ல. ஆனால் பட்டினத்தாரோ திருவாரூர்த் தேர்த் திருநாளுக்கு போவோரைப் பார்த்துக் கடுங்கோபத்தில்

ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று

ஊரூர்கள் தோரும் உழலுவீர் - நேரே

உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவீர்

விளக்கிருக்கத் தீ தேடுவீர்

- (பட்டினத்தார் தலப்பாடல்: 5)

என்று பாடினார். ஆரூரர் நெஞ்சில் நிறைந்து இங்கே இருக்க அந்தவூர்த் திருநாள் என்று ஒவ்வொரு ஊராக சென்றலைந்து துன்பமைடைகின்றீரே! [உழலுவீர்]. நேராக [நேரே] மனக்கருத்தை [உளக்குறிப்பை] ஆராய்ந்து அறியாத [நாடாத] ஊமைகளே! [ஊமர்காள்]. நீங்கள் [நீவீர்] விளக்கு கையில் இருக்க எங்கே தீ இருக்கின்றது? எனத்தேடுகின்றீர்! எனக் கோபத்தில் குமுறுகிறார்.


திருவருள் என்னும் அருளொளி விளக்கு எம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது. நாமோ அந்த ஊர்த்திருவிழா இந்த ஊர்த்திருவிழா என ஊர்கள் தோரும் இருக்கும் கோயில்களைத்தேடி ஓடி உழலுகிறோம். ஊரூராய் கோயில்களில் இருப்பதோ  விளக்கெரிக்க உதவும் சிறு தீ போன்ற அருளொளியே. நம் சிந்தையில் நிறைந்திருப்பதோ பேரருளொளி விளக்கு. அதனை ஆராய்ந்து அறியாது ஊமைகள் போல் இருக்கிறோம் என்ற கோபத்தில் ஊமர்காள்! எனக் கூக்குரல் இட்டு சொல்கிறார். உங்களிடமே அருளொளி விளக்கு இருக்க சிறு தீயைத் தேடுகின்றீர். எவ்வளவு பெரிய உண்மை இது? எப்போது நாம் இவ்வுண்மையை உணர்வோம்?

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment