பல்லவி
கலைகளில் சிறந்தது எக்கலையோ தமிழ்
கலைகளில் சிறந்தது எக்கலையோ
- கலைகளில்
அனுபல்லவி
கோலக்கிளியே கொவ்வை வாய்திறந்து
கன்னித் தமிழில் கொஞ்சிப் பேசிடுவாய்
- கலைகளில்
சரணம்
எக்கலை கற்பினும் எண்ணும் எழுத்தும்
கண்ணெனப் போற்றிய தெம் தமிழே
எழுத் தறிவித்தவன் இறைவன் என்றோம்
ஏற்றமாய் நீஇ யாஅ துரைப்பாய்
- கலைகளில்
இயல்இசை நாடக முக் கலையேஏ
இயற்கையில் முகிழ்ந்து முத் தமிழானது
இயற்றமிழ் எழுத்து சொற் பொருளென
இலக்கண மிசைந்ததை தேர்ந்து செப்பு
- கலைகளில்
வண்டின் இமிழிசை யாழிசை யானது
எண்திசை முழக்கம் முழவிசை யானது
நுண்துளைக் காற்றிசை குழலிசை யானது
பண்ணொடு பாவிசை பழகிச் சொல்வாய்
- கலைகளில்
இயற்கையில் இசைந்தது இசைக் கலையே
இயல் இசைகூடி இசைந்தது நாடகமே
மயலது கொண்டும் மனமது மகிழ்ந்தும்
மயக்கிடு தமிழ்க்கலை மரபெனச் சாற்று
- கலைகளில்
ஓவிய சிற்பக்கரணம் ஒப்பனை யணிகலம்
காவிய கற்பனை கவிராகதாள பாவமும்
பாவிசை கருவியென பலகலை சேர்ந்து
மேவிய நாட்டிய மென்கலை சிறந்ததே
- கலைகளில்
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment