காடுகள் போச்சே கழனிகள் போச்சே
காற்றிடை மாசுகள் கலக்கலும் ஆச்சே
கூடிடை வாழும் குருகுகள் போச்சே
கூவியே அழைக்கும் குரல்களில் லாச்சே
காடிடைத் திரிந்த கணங்களும் போச்சே
கதறியே அழைக்கும் கதறலில் லாச்சே
நாடுகள் ஆச்சே நகரங்கள் ஆச்சே
நிலத்திடை நீரும் ஊறலில் லாச்சே
சூழலும் போச்சே சுற்றலும் போச்சே
சூனியமாய் யுலகு அடங்கலும் ஆச்சே
சூழலின் தினமோ சூதவர் மனமோ
சூழலின் தினமென சிறுவர்கள் தினமென
தாளினில் எழுதி நாளினைக் குறிப்போர்
தாளினின் கீழே நசிங்கிடும் எழுத்தால்
சூழலின் சுழற்சி அழிவது காணீர்!
செய்கையில் செயலைச் செய்திட விரைவீர்!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு: 1974ம் ஆண்டு ஐ நா சபை, யூன் 5ம் திகதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்தது. கடந்த 47 வருடங்களாக சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கங்களை ஒவ்வொரு வருடமும் கூடி மறுபடி மறுபடி ஆராய்வதே அவர்கள் வேலையாக இருக்கிறது. ஐ நா சபை கூடி ஒவ்வொரு வருடமும் ஆராயச் செலவிடும் பணத்தை இயற்கையைப் பாதிக்காத வகையில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து செயல்படுத்தி இருக்க வேண்டும். உலக முடக்கத்துக்கு ஐ நாவின் செயலற்ற தன்மையும் ஒரு முதன்மைக் காரணமாகும். அந்த நெருடலால் பிறந்ததே இக்கவிதை.
சொல் விளக்கம்:
கழனிகள் - வயல்கள்
குருகுகள் - பறவைகள்
கணங்கள் - விலங்குகள்
சூனியம் - ஏதும் அற்ற நிலை
சூது - வஞ்சனை
1. தாள் - கடதாசி
2. தாள் - கால்/பாதம்
நசுங்குதல் - கசங்கிச் செயல் கெடுதல்
சூழலின் சுழற்சி - இயற்கையின் வட்டம்.
No comments:
Post a Comment