இலங்கைத் தென்னைமரங்கள்
இயற்கையை பண்டைத் தமிழன் எவ்வளவு ஆழமாக நேசித்தான் என்பதை தமிழில் உள்ள முதுமொழிகள் எமக்கு எடுத்துச்சொல்கின்றன. நாம் முதுமொழிகளை பழமொழிகள் என்றும் சொல்கிறோம். அம்முதுமொழிகளில் ஒன்று “இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று” எனச்சொல்கிறது. இம்முதுமொழி என்ன சொல்கிறது என்பது புரிகிறதா?
இருந்த இடத்தில் இருப்பவை மரங்கள். ஓடித்திரிவன விலங்குகள். பறந்து திரிவன பறவைகள். தமிழர் தாம் பெற்றெடுத்த குழந்தையைப் பிள்ளை எனவும் அழைப்பர். தமது பெற்ற பிள்ளையைப் போல் தாம் வளர்த்த தென்னம் பிள்ளை, மருதம் பிள்ளை, கமுகம் பிள்ளை ஆகிய மூன்று மரங்களையும் இருக்கும் பிள்ளை என்றும் விலங்குகளான அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, முயல் பிள்ளை மூன்றையும் ஓடும் பிள்ளை எனவும் பறவைகளான கிளிப் பிள்ளை, நாகணவாய்[மைனா] பிள்ளை, புறா பிள்ளை மூன்றினையும் பறக்கும் பிள்ளை எனவும் அழைத்து மகிழ்ந்ததை இம்முதுமொழி சொல்கிறது. இது தமிழனின் இயற்கை நேயத்தைக் காட்டுகிறதல்லவா!
பண்டைய தமிழன் தெங்கு எனத் தென்னையை அழைத்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் சிலர் பிலிப்பையின்ஸ் நாட்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டில் தென்னை தமிழரிடம் வந்ததாக எழுதுகின்றனர். வேறு சிலரோ இந்தோனேசியாவில் இருந்து வந்தது என்கின்றனர். சங்க இலக்கியங்களைக் கற்காது கருத்து எழுதுவோராலேயே இத்தகைய ஆய்வுகள் வெளிவருகின்றன.
தமிழர் தெங்கு எனத் தென்னையை அழைத்ததை மூதுரை என்னும் நூலில்
“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாள்உண்ட நீரைத்
தலையாலே தாந்தருத லால்” - (மூதுரை: 1)
என ஔவையார் கூறியதைக் கூட ஆய்வாளர்கள் சிலர் அறிந்ததில்லைப் போலும். மூதுரைப்பாடலின் காலம் கி பி இரண்டாம் நூற்றாண்டு என்பர். சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த ஔவையாரால் அது பாடப்பட்டது என்பர். சங்ககால ஔவையார் பாடியது எனச்சொல்வோரும் உளர். சங்ககால ஔவையார் அதியமான் காலத்தவர். அதியமான் நெல்லிக்கனியை ஔவையாருக்கு கொடுத்த கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ‘அதியமான்’ என்ற பெயர் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்று கிடைத்திருக்கிறது. அதன் காலம் கி மு 1ம் நூற்றாண்டு.
கி மு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் புல்லுக்கும் மரத்துக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டும் இடத்தில்
“புறக்காழ் எனவே புல் என மொழிப" - (தொல்: 3: மரபு : 86)
என்கிறார். அதாவது புற வைரம் உள்ளவற்றை புல் என்று சொல்வர்[ மொழிப] எனக் கூறுகிறார். அதற்கு உரை எழுதியோர் ‘தெங்கு, பனை, கமுகு, மூங்கில் என்பன புறக்காழ் உடைய புற்கள்’ என்கிறார்கள்.
புல்லின் உறுப்புக்களைக் கூறும் தொல்காப்பியர் தமக்கு முன் வாழ்ந்த புலவர்கள் சொன்னதாகக் கூறியிருப்பதை
“தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே சேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”
- (தொல்: 3: மரபு : 88)
எனும் தொல்காப்பிய நூற்பா காட்டுகிறது அல்லவா? இன்றும் தென்னை ஓலை, தென்னம் பாளை, தென்னையீர்க்கு, தென்னங்குலை என்றே அழைக்கிறோம். ஆதலால் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தென்னை வளர்த்து அதிலிருந்து பயன் பெற்று வருவதும் நன்கு விளங்கும்.
சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்து தென்னை ஓலைகள் காற்றில் அசையும் பொழுது ஒலி எழுப்புவதை
“ஒலிதெங்கின் இமிழ்மருதின்” - (பதிற்: 13: 7)
என்கிறது. பெரும்பாணாற்றுப்படையோ உரல் போன்ற அடிமரமும் யானையின் உடம்பு போன்ற சொரசொரப்பும் வளம் மிகுந்த காய்களும் உள்ள முதிர்ந்த தென்னை[தெங்கு] ஓலைகளால் வேய்ந்த வீடுகளை மஞ்சள் செடிகள் வளரும் முற்றங்களை மணம் வீசும் தோட்டங்களைக் காட்டுகிறது. அத்துடன் கமுகு புடைசூழ்ந்திருக்க வளர்ந்த தென்னைந் தோப்பில் மூன்று புடைப்புள்ள தேங்காயை வழிப்போக்கர் பசிதீர உண்டதையும் சோறு சமைத்த பானை நசிய தேங்காய் விழுந்ததையும் காட்சிப்படுத்துகிறது.
“…………………………………கறையடிக்
குன்றுறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை”
- (பெரும்: 351 - 354)
“……………………. மாத்தாட் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச்
சோறு அடு குழிசி இளக விழூஉம்”
- (பெரும்: 363 - 366)
பட்டினப்பாலையும் வயல் முற்றங்களில் தேங்காய்க் குலையோடு தென்னையையும் வாழைக் குலையோடு வாழையையும் காட்டுகிறது.
“கோள் தெங்கின் குலைவாழை” - (பட்டினப்: 16)
கலித்தொகை ஓலைக்கூடையில் நெல்லைக் கொண்டு சென்றதை
“வரிகூழ வட்டிதழீஇ” - (கலி: 109)
எனப்பதிவு செய்துள்ளது.
பண்டைய தமிழர் தென்னையை தாழை என அழைத்ததை திருமுருகாற்றுப்படை
தாழை இளநீர் விழுக்குலை” - (திருமுருகு: 307)
காட்டுகிறது.
தென்னை மரத்தில் கட்டியிருந்த புளித்த கள்ளுச்சாடியின் கோப்பு உடைவதைச் கூறும் அகநானூறு
“நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்”
- (அகம்: 166: 1 - 2)
என்று தென்னையை சங்ககாலத் தமிழர் நல்மரம் என்று அழைத்ததையும் சொல்கிறது. எனவே தமிழன் தென்னங்கள்ளை இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலாகாக் குடித்து வருவதும் தெரிகிறது அல்லவா!
தென்னை தரும் பயன்கள்:
1. உயிர் வாயு[O2]: சுவாசிக்க வேண்டிய நல்ல காற்றைத் தருகிறது.
2. உண்ண உணவு: வழுக்கல், தென்னங்குருத்து, தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய்ப்பால் மா, உலர் தேங்காய்ப்பூ, தேங்காய் எண்ணெய், கருப்பட்டி, சீனி, இனிப்பு.
3. தாகம் தீர்க்க: இளநீர்.
4. மது: கள்ளு.
5. உண்கலம்: தொன்னை, கோம்பை, சிரட்டை.
6. குடிக்குங் கலம்: சிரட்டை, கோம்பை.
7. உணவு அள்ள: அகப்பை
8. உணவு வைக்குங்கலம்: சிரட்டை, கோம்பை
9. பயன்படுத்தும் பொருட்கள்: ஓலை - பச்சைஓலைப் பாய், விசிறி. மரம் - கயிற்றுக் கட்டில், முக்காலி, சட்டுவம் [அடிப்பிடிக்காது கிளரப் பயன்படுத்துவது], தும்பு - கயிறு, பை, தும்புத்தடி, துடைப்பம். ஈர்க்கு - விளக்குமாறு. பொச்சு மட்டை - தேய்க்கும் மட்டை, காகிதம்…
10. கட்டிடப் பொருட்கள்: கிடுகு - கூரை வேய, தட்டி - தடுப்புச்சுவர், படலை, தீராந்தி - முகட்டு வளை…
11. எரிபொருள்: எண்ணெய், கொப்பரை, சிரட்டை, பொச்சு மட்டை, மரம், ஓலை, பூம்பாளை….
12. மங்கலப் பொருட்கள்: குருத்தோலை - தோரணம், மணவறை, கிளி, சேவல், மயில், மான்…
13. விளையாட்டுப் பொருட்கள்: ஓலை - சுழல்விமானம், குரும்பை, ஈர்க்கு - தேர், பூம்பாளை - ஓடம்…
14. ஓவியப் பொருட்கள்: தும்பு - தும்புத் தூரிகை, ஈர்க்கு - ஓவியக்கோல்..
15. மருத்துவம்: குருத்தோலை, பூ, குரும்பை, பச்சை ஓலை, ஈர்க்கு, இளநீர், கருப்பட்டி, தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய்ப்பூ, தேங்காய் எண்ணெய் யாவுமே மருந்தாகப் பயன்பட்டது.
saline[Coconut water}
இவற்றுக்கும் மேலாக ஆங்கில மருத்துவத்தில் பயன்படும் Saline ஆகவும் இளநீரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் உண்மையை மேலே உள்ள படத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். செவ்விளநீரில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருப்பதால் அதனைப் பயன்படுத்தினர். இலங்கையில் அதனைப் முதன்முதல் பயன்படுத்தியதாக வாசித்திருக்கிறேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.
இன்று யாழ்ப்பாணத்தில் காலங்காலமாக வளர்த்து வந்த தென்னம்பிள்ளைகளை நாம் இழந்து வருகின்றோம். அவை 70, 80 ஆண்டுகட்ட்கு மேலாக சூறாவளிக்கும் அசையது நின்றன. தற்போது எத்தனையோ வகையான கலப்பினங்கள் வந்துள்ளன. அவை மூன்று வருடத்தில் காய்க்கத் தொடங்குவதால் நம்மவர்களும் வாங்கி நடுகின்றனர்.
2009ல் போர் முடிவடைந்த காலத்தில் மீள் குடியேற்றத்தின் போது இந்தியா எம்மவர்க்கு இக்கலப்பினத் தென்னம் பிள்ளைகளை இலவசமாகக் கொடுத்தது. அவையும் ஒரு குலையில் 25, 30 தேங்காய் எனக் காய்த்தன. காய்க்கத் தொடங்கி மூன்றுவருடத்தின் பின்னர் மிகச்சிறிய தேங்காய்களாகக் காய்க்கின்றன. அத்தேங்காய்களைத் துருவமுடியாது. துருவியின் விட்டத்தை விட தேங்காயின் விட்டம் குறைவு. தேங்காய்ச் சொட்டுகளாக எடுத்து அரைத்து பால் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகாற்றுக்கும் மரம் சாயும். 25 - 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழாது.
ஆனால் தமிழகத்தில் உள்ள குமரிமாவட்டத்திற்கு சென்று பாருங்கள். நம்மூர்த் தென்னையை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து ‘யாழ்ப்பாணத் தென்னை இனம்’ என மிகவும் போற்றி வளர்க்கிறார்கள். மாலை வெய்யிலில் அந்தத் தென்னோலை வளைந்து தூங்குவதை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவ்வளவு கொள்ளை அழகு அது. அவ்வினம் 8 - 9 வருடங்கள் வளர்ந்த பின்பே காய்க்கிறது. அத்தேங்காய்கள் பெரிதாகவும் அடைப்பம் உள்ளகாக இருப்பதால் அதிக தேங்காய்ப் பூவையும் பாலையும் கொடுக்கிறது. உணவகம் வைத்திருப்போரும் விரும்பி வாங்குகிறார்கள்.
யாழ்ப்பாணத்தாராகிய நாம் குமரி மாவட்டம் சென்று அந்த இனத் தேங்காய்களை எடுத்துவந்து குமரித்தேங்காய் என வளர்ர்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எம்மிடம் இருந்த நல்ல சுவைதரும் இளநீரைத் தந்த சந்திர காந்தி, சூரிய காந்தி, பொன்னிலாங்கலி எல்லாம் எங்கே போய் ஒழிந்தன? எனவே நம் யாழ்ப்பாண நாட்டுத் தென்னையை தேடிநடுவீர்.
இனிதே,
தமிழரசி.