Thursday 11 March 2021

வள்ளுவர் சொன்ன வாய்மை

 

வாய்மையே வெல்லும்என்பது பண்டைத் தமிழர் கண்ட முதுமொழி. வாய்மையைப் பற்றி திருவள்ளுவரைப் போல புதிர் போட்டவர்களை எவரும் காண முடியாது. திருக்குறளில் பல இடங்களில் ஒன்றுக்கொன்று முரணாக வள்ளுவர் சொல்வதாச் சிலர் கருதினும் அவையாவையும் எம் சிந்தனைக்கு விருந்தளிப்பனவே. திருவள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்திலும் புதிர் போட்டு எம்மைச் சிந்திக்க வைக்கிறார்.


எதை வாய்மை என்று சொல்வர்? என்ற கேள்விக்கு பதில் தரும் வள்ளுவர்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 

தீமை இல்லாது சொலல் - (குறள்: 291)

என்கிறார். 


எதற்கும் எதுவித தீமையும் இல்லாது சொல்வதே வாய்மை என்கிறார். மனிதரை மட்டுமல்ல மரஞ்செடி கொடிகளையோ விலங்குகளையோ உலகில் உள்ள எப்பொருட்களையோ குறிப்பதாயினும் அன்றேல் அரசியலாகவோ பொருளாதாரமாகவோ கல்வியாகவோ கலையாகவோ எதுவாக இருப்பினும் சொல்லும் சொற்கள் தீமை இல்லாத சொற்களாக இருப்பின் அதுவே வாய்மையாகும். 


இப்படி வாய்மைக்கு வரைவிலக்கணம் சொன்ன திருவள்ளுவர் இக்குறளுக்கு அடுத்த திருக்குறளில்எவ்வித குற்றமும் அற்ற நன்மை உண்டாகுமானால் வாய்மைக்காக பொய்யும் சொல்லலாம்என்கிறார். 

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின் - (குறள்: 292)


முதலில் எதற்கும் எதுவித தீமையும் இல்லாது சொல்வது வாய்மை என்றவர் அதற்கு முரணாக எதுவித குற்றமும் இல்லாமல் நன்மை வருமென்றால் வாய்மையைச் சொல்லாது பொய் சொல் என்கின்றார். ஏன் திருவள்ளுவர் இப்படி ஒன்றுக்கொன்று முரணாகப் புதிர் போட்டார்?


வாய்மையும் பொய்மையும் எதிரெதிரானவை. ஆனால் வள்ளுவரோ இரண்டையும் ஒரே எடை போட்டுக் காட்டுகிறார். சிந்தித்துப் பாருங்கள். நிறுப்பதற்குஒரு தட்டில் வாய்மையை எதுவித தீமையும் இல்லாது பார்த்துச் சொல்என வைத்தவர் மறு தட்டில்பொய்யை எதுவித குற்றமும் இல்லாத நன்மை வருமெனின் சொல் என வைத்து, சமன் செய்து சீர் தூக்கிக் காட்டுகிறார். இப்போ இரண்டு தட்டுகளும் சமநிலையில் இருக்கின்றன. எதுவித தீமை இல்லாத வாய்மை நன்மையைத் தருவது போல பொய்மையும் எதுவித குற்றமும் இல்லாத நன்மையைத் தரவேண்டும் என்பதே வள்ளுவன் சொன்ன வாய்மையாகும்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment