குறள்: “இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்” - 779
பொருள்: செய்த சபதத்தை முடிப்பதற்காகச் சென்று சாகும் வீரரை அது நடக்கவில்லை என இகழக்கூடியவர் யார்?
விளக்கம்: இத்திருக்குறள் படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது குறளாகும். போர் வீரர்களின் செருக்கையே படைச்செருக்கு என்பர். போர் வீரர்களுக்கு தமது வீரத்தின் மேல் இருக்கும் அளவுகடந்த நம்பிக்கையால் வருவதே படைச்செருக்கு.
ஒரு செயலைச் செய்வேன் எனச்சூளுரைப்பது இழைத்தது எனக் கூறப்படும். தப்பாமல் முடிப்பேன் என்பதை இகவாமை என்பர்.
தப்பாமல் செய்து முடிப்பேன் எனச் சூளுரைப்பதை இழைத்தது இகவாமை என்றார். சூளுரைத்து போருக்குச் செல்லும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது.
பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போருக்குப் புறப்பட முன்னர்
“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை”
எனச் சூளுரைத்துச் சென்றதைப் புறநானூறு காட்டுகின்றது. சூளுரைத்துப் போருக்குச் செல்வோர் வெற்றி பெறுவதும் உண்டு. வீரமரணம் அடைவதும் உண்டு.
ஏன் சூளுரைத்துப் போர் செய்யச் சென்றனர்? மனிதவாழ்வின் தேவைகளை இன்பங்களை மற்றவர்கள் சுரண்டும் போதும் அழிக்கும் போதும் நெஞ்சம் தொதிக்கின்றது. எடுத்துக்காட்ட தாயகத்தில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைக் கூறலாம். அச்செயல் இன மத வேறுபாடு அற்று அன்று வாழ்ந்த கற்றோர் மனதை எரித்தது.
இத்தகைய சீண்டல்கள் தமிழரை
“நல்லோர் இல்லாத் தொல்பதி வாழ்தலில்
கொல்புலி வாழும் காடு நன்றே”
என்னும் கோட்பாடு உடையவர்கள் ஆக்கியது. ஆம் இலங்கையும் ஒரு தொல்பதியே. மூவாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட இருக்கு வேதத்தில் இலங்கையின் பெயரும் உண்டு. அத்தகைய பெருமை மிக்க தொல்பதியான இலங்கையில் நல்லோர் இன்மையாலேயே இந்நிகழ்வுகள் நடக்கின்றன.
ஓர் இனத்தின் பண்பாட்டை இழிவு படுத்திய பொழுதும் இனவழிப்புகளின் போதும் உண்டாகிய மானமே சூளுரைத்து போருக்குச் செல்லத் தூண்டியது. தம்மினதுக்காக சபதம் செய்து செல்வோரில் இறந்தோர் தொகை, வெற்றி அடைந்தோர் தொகையிலும் கூடுதாலாக இருப்பினும் அவர்களை யாரும் இகழ்ந்து பேசுவதில்லை.
எந்தச் செயலானாலும்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்" - 664
என்ற உண்மையையும் திருவள்ளுவரே எமக்குக் கற்றுத் தந்துள்ளார்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment