Monday 1 February 2021

எஜமானன் இயமானன் ஆகுமா?

தற்செயலாககண் காட்டு நுதலானும்என்னும் தலைப்பால் ஈர்க்கப்பட்டுதினமணிநாளிதழில் திரு என் வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். அதில் 

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி

எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்

பெண்ணிணொடு ஆண் பெருமையொடு சிறுமையுமா பேராளன்

விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினானே

- (திருமுறை: 2: 48: 3)

என்ற தேவாரத்திற்கு அளித்த விளக்கத்தில்மேற்கண்ட பாடலில் எஜமானன் என்ற வடமொழிச் சொல் இயமானன் என்று தமிழ்ப்படுத்தப்பட்டு உள்ளதுஎன எழுதியிருந்தார். அவர் எழுதியது போல்வடமொழிச் சொல்லான எஜமானன் எனும் சொல்லைத் தமிழ்ப்படுத்தி இயமானன் என்னும் சொல்லை உருவாக்கினராஎன்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

சில அகராதிகளும் இயமான் என்பதை எஜமான் என பிழைபட எழுதியுள்ளன. அது பக்தி இலக்கியங்களுக்கு விளக்கம் எழுதியோரின் தவறாகும். எடுத்துக்காட்டாக சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுதியதிருவாசகம் ஒப்புள்ள உபநிஷத் மந்திரங்கள்என்னும் நூலிலும் 

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா

- (திருமுறை: 8: 1: 36)

எனும் திருவாசகவரியில் வரும் இயமானனாம் என்பதற்கு உயிராய் இருப்பவன், எஜமானனாயிருப்பவன் என்றே எழுதியுள்ளார். ஆனால் எஜமான் என்ற வடமொழிச்சொல் இயமான் எனத் தமிழ்ப் படுத்தப்பட்டது என எழுதவில்லை. இயமானன் என்பதற்கு சுவாமி சித்பவானந்தர் எழுதிய கருத்தும் பிழையானதே. ஈழத்தமிழர்எஜமான்என்பதை தமிழில்எசமான்என எழுதுவோம். சொல்வோம். எஜமான் என்பதை எவராயினும் இயமான் என்பரா?

தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழால் ஆனது. இயல் என்னும் சொல் இயம் எனும் சொல்லடியாகப் பிறந்த சொல்லாகும். அதுபோல் இயம் என்னும் சொல்லடியாகப் பிறந்த சொல்லே இயமானன்.

இலக்கியங்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருக்கின்றன. ஏனெனில் இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் வந்தது. தமிழில் உள்ள இலக்கியங்களை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கவிதை இலக்கியம், சிற்றிலக்கியம் எனப் பலவகையாகப் பிரிக்கலாம். தனியே சிற்றிலக்கியங்களை மட்டும் எடுத்துப் பார்த்தால் தொன்னூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களைக் காணலாம். 

ஏறக்குறைய 2500 வருடங்களாக தமிழரிடையே சங்க இலக்கியம், தொல்காப்பியம் இரண்டும் இருக்கின்றன. ‘இயம்என்னும் சொல்லை சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய இரு சொற்களின் முடிவிலும் காணலாம். இலக்கு + இயம் = இலக்கியம் எனப்புணரும். இலக்கு - நோக்கம் எனும் பொருளைத் தரும். இயம் - ஒலி, சொல் என்பவற்றைக் குறிக்கும். தமது நோக்கத்தை, சொல்வதற்கே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.

இயம் என்னும் சொல் ஒலியைக் குறிக்கும் என்பதை தமிழில் உள்ள கட்டியம், இன்னியம், பல்லியம், எல்லியம், சல்லியம், துல்லியம், வில்லியம் போன்ற சொற்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கட்டியம் கூறல் - புகழ்ந்து உரத்துக் கூறல்

இன்னியம் - இனிய இசையை, இனிய ஒலியை உடைய இசை.

பல்லியம் [Ochestra]- பலவகை இசையை, பலவகை ஒலியை உடைய இசை.

எல்லியம் - எல்லரி என்னும் கருவியின் இசை, எல்லரியின் ஒலி.

சல்லியம் - சல்லரி [திமிலைப்பறை], சல்லிகை, சல்லகம் போன்ற இசைக் கருவிகளின ஒலி/இசை. தற்காலத்து சல்லாரி.

இயம் - ஒலி, சொல்.

இயம்பல் - ஒலித்தல், சொல்லல்.

இயம்பு, இயம்புதல், இயம்புணர்தூம்பு [நெடுவங்கியம் என்னும் கருவி].

வங்கியம் - இசைக்குழல். 

வில்லியம் - வில்லின் ஒலி, வில்யாழின் இசை.

துல்லியம் - தெளிவாகக் கேட்பது. தற்காலத்தில் தெளிவு என்ற கருத்தில் மட்டும் பயன்படுத்துகிறோம்.

இவைபோல இயம் எனும் சொல்லடியாகப் பிறந்த நூற்றுக்கு மேற்பட்ட சொற்களை சொற்றொடர்களை தமிழில் எடுத்துக் காட்டலாம்.

இயம் இசையா மரபு ஏத்தி - (புறம்: 400: 4)

குழியில் அகப்பட்ட ஆண்யானையின் துயரை நீக்க பெண்யானை பெரிய மரங்களை முறிக்கும் சத்தம் வானளாவிய மலைமுகட்டில் சென்று ஒலிக்கும்[இயம்பும்] என்பதை

படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய

பிடி படி முறுக்கிய பெருமரப் பூசல்

விண் தோய் விடரகத்து இயம்பும் - (அகம்: 8: 10 - 12)

என்கிறது அகநானூறு. இளங்கோவடிகளும்

மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய

காலை முரசங் கனைகுரல் இயம்ப

- (சிலம்பு: 14: 12 - 14)

என சிலப்பதிகாரத்தில் காட்டுகிறார். நற்றிணை

…………………………..  வேலன் 

இன்னியம் கறங்கப் பாடி

- (நற்றிணை: 322: 10 - 11)

என்கிறது. பெரும்பாணாற்றுப்படையும்

நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த

விசிவீங்கு இன்னியம் கடுப்ப கயிறு பிணித்து

- (பெரும்பாண்: 55 -56)

என்கிறது. சங்ககாலப் புலவரான பரணரும் புறநானூற்றில்

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க

                                                           - (புறம்: 336: 6) 

எனக்கூறியுள்ளார். சிலப்பதிகார அரங்கேற்று காதையில் தலைக்கோலை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். அங்கே நடந்த காட்சியை இளங்கோவடிகள்

முரசு எழுந்து இயம்ப பல்லியம் ஆர்ப்ப

அரசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்

தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப” 

                                                            - (சிலம்பு: 3: 125 - 127)

படம் பிடித்துக் காட்டுகிறார்


திருவாசகத்தில்

 கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

                                                            - (திருவாசகம்: 20: 3: 1 - 2)

எனக்கூறி இயம்பின என்பதை ஒலி எனக்காட்டும் மாணிக்கவாசகரே மேலே சொன்ன

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா

    - (திருமுறை: 8: 1: 36)

என சிவபுராணத்திலும் ஒலியானவன் என்று சொல்கிறார். சூரியனின் சூடான ஒளியாயும் [வெய்யாய்], சந்திரனின் குளிர்மையான ஒளியாயும் [தணியாய்], ஒலியாயும் [இயமானனாம்] இருப்பன் விமலன் என்கிறார்.


மணிமேகலையில் சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் சைவவாதி தன் இறைவனின் தன்மையை மணிமேகலைக்குச் சொல்வதாக சீத்தலைச்சாத்தனாரும்

இரு சுடரொடு இயமானன் ஐம்பூதமென்

றெட்டு வகையும்

- மணிமேகலை: 27: 89 - 90)

எனக்கூறும் இடத்தில் சூரிய சந்திர ஒளியாகிய இருசுடரொடு ஒலி [இயமானன்], நிலம், நீர், தீ, காற்று, வானம் [ஐம்பூதம்] ஆகிய எட்டு வகையும் எனக்குறிப்பிடுகிறார். 

இயமானன் என்பது ஒலிவடிவைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது வடமொழியில் இருந்து பிறந்த சொல் அல்ல என்பதை உங்கள் நெஞ்சம் கொள்ளுங்கள். கடந்த எண்பத்து ஆறு வருடங்களாகத் தொடர்ந்து வெளிவரும் தினமணி நாளிதழையோ அதில் எழுதிய திரு என் வெங்கடேஸ்வரன் அவர்களையோ குறை கூறவில்லை. இயமானன் என்பது ஒலியைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பதை எடுத்துக்காட்டினேன். 

இனிதே,

தமிழரசி.

5 comments:

  1. மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. திருவாசகத்தில் இயமானன் என்பதற்கு சித்பவானந்தர் கூறும் பொருள் பற்றிய சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆனால், அவரே கூறியிருப்பதால் சரியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். உங்கள் ஆய்வு அது தவறு என்று ஆணித்தரமாக உரைக்கிறது. மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வடமொழி அறிந்தவர். அதனால் தமிழின் உண்மைக் கருத்துக்களை அறியவில்லை என நினைக்கிறேன். அதனாலேயே அவர் தமிழ்ப் பாடல்களுக்கு எழுதிய கருத்துக்களில் பிழைகள் நேர்ந்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு இதனைப் பாருங்கள். https://inithal.blogspot.com/2012/06/blog-post.html

      Delete
  2. இயமானன் என்பதற்கு ஒலி என்பதே பொருந்தும் என்று பல விளக்கங்களுடன் இங்கு பதிவிட்டு உதவியமைக்கு நன்றி. பதஞ்சலி யோகசூத்திரம் 1.27இல் ஈஸ்வரனின் பெயர் பிரணவம் என்று கூறுகின்றது. பிரணவம் = ஓங்காரம் = ஓம் = ஒலி = ஈஸ்வரன்.

    ReplyDelete
  3. பிங்கல நிகண்டு, வானவர் வகை, சூத்திரம் 220 - ஆன்மாவின் பெயர்களில் ஒன்று இயமானன் எனக் கூறுகின்றது.

    பசுவுயிர் சீவன் புற்கலன் சேதன
    னணுவிய மான னாதன் செந்து
    வாவி பூத னுறவி கூத்த
    னான வின்னவை யான்மா வாகும்.

    ReplyDelete