புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்த வீரமாதேவி ‘மாவலி கங்கையில் இருந்து இரத்தினங்களையும் முத்துக்களையும் சோழேசன் அள்ளிச் சென்றான்’ என்கிறாள். அந்தச் சோழேசன் முதலாம் இராசராச சோழனா? அன்றேல் முதலாம் இராஜேந்திர சோழனா என்பது தெரியவில்லை. இரத்தினங்கள் மலையில் பிறப்பன. அவை மலையில் இருந்து வீழும் அருவியோடு மாவலி கங்கையில் உருண்டோடி வரும். ஆனால் முத்துக்கள் வருமா? நன்னீர் ஆற்றில் வாழும் சிப்பிகள் முத்துக்களை ஈனும். இன்றும் வட அமெரிக்காவில் ஓடும் மிசிசிப்பி ஆறு போன்ற ஆறுகளில் முத்துக்கள் பிறக்கின்றன.
காளமேகப்புலவரும் இந்நிகழ்ச்சியை சோழேசன் என்றே பாடியுள்ளார். காளமேகப் புலவர் வசை பாடக் காளமேகம் என்று பெயர் பெற்றவர். அதற்கமைய எவரையும் புகழ்வது போல இகழ்வதும் உண்டு.
“காவலன் எங்கள் கனவைப்பாஞ் சோழேசன்
மாவலி கங்கை மணிவாரி - ஆவனலென்
றப்புளங்கை தோய்க்க வதில்வா ரியமுத்தை
கொப்புளமென் றூதுங் குரங்கு”
அதாவது
"காவலன் எங்கள் கனகவைப்பாம் சோழேசன்
மாவலி கங்கை மணிவாரி - ஆ! அனலென்று
அப்புளங்கை தோய்க்க அதில் வாரிய முத்தை
கொப்புளம் என்று ஊதும் குரங்கு”
‘எங்கள் காவலனும் பொற்செல்வம் போன்ற சோழமன்னன் மாவலி கங்கைக் கரை மணிகளை வாரி அள்ளினான். அவை நெருப்புத் தழல் போல் தெரிந்ததால் ஆ! அனல் எனக்கூறி மாவலிகங்கை நீரினுள் கையை விட்டான். அக்கையில் வாரிய முத்துக்களை நெருப்புச் சுட்ட கொப்புளம் என குரங்கு ஊதியது’ என்கிறார். ஈழத்துக் குரங்கே ‘பூ’ என ஊதித் தள்ளும் முத்தையா வாரி அள்ளிக் கொண்டுவந்தார் என்ற இகழ்ச்சியும் இப்பாடலில் இருக்கிறது.
பாண்டியன் சீமாற சீவல்லபனும் மனைவியும்
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment