Friday 19 February 2021

குறள் அமுது - (144)

குறள்: மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் - 969


பொருள்: உடலில் உள்ள மயிர் நீக்கப்பட்டால் உயிர்வாழாத கவரிமா போன்றவர் தமது மானத்துக்காக உயிர்விடுவர்.


விளக்கம்: இது மானம் என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது திருக்குறளாகும். உலகில் வாழும் அசையும் உயிரினங்கள் யாவற்றிற்கும் தற்காப்பு என்று கருதக்கூடிய மான உணர்ச்சி இருக்கிறது. அவை தம் கடைசி மூச்சை இழக்கும் வரையும் உயிர்வாழ மானத்துடன் போராடும்.


அப்படியிருக்க மனிதரின் மானத்தை எடுத்துக்காட்ட திருவள்ளுவர் ஏன் கவரிமா என்ற ஒரு விலங்கைச் சொன்னார்? இத்திருக்குறளில் கவரிமா என்று இருக்கிறதே அல்லாமல் கவரிமான் என்று இல்லை. 'மா' என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுப்பெயர் என்று சூடாமணி நிகண்டு சொல்கிறது. கவரி மயிரை உடைய விலங்கை பண்டைய தமிழர் கவரிமா என்றனர். அரியணையில் இருக்கும் அரசர்களுக்கு கவரி வீசுவார் அல்லவா! அக்கவரியை கவரிமாவின் மயிரைக் கொண்டே செய்வர்.


கவரிமா இனம் எருமை  இனத்தைச் சேர்ந்தது. அது இமயமலையில் வாழும் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இமயமலைப் பகுதி பனியால் மூடப்பட்டு இருக்கும். பனிக்குளிரின் தாக்கத்தைத் தாங்க கவரிமாக்களின் மயிர்கள் மிக நீண்டு அடர்த்தியாக வளர்ந்திருக்கும். மனிதர் தமது குளிரைத் தாங்கும் உடைககளுக்காகவும் போர்க்கும் கம்பளத்துக்காகவும் கவிரிமாவின் மயிரை வெட்டினர். 


கவரிமா மயிரை மிக இகுவாக வெட்டி எடுக்க முடியாது. அது தனது மயிரை வெட்ட வருபவரை முட்டும், உதைக்கும், துள்ளும், கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும்.  கவரிமா தன் உடல் பெப்பத்தைக் காக்கும் மயிருக்காக உயிரைக் கொடுத்துப் போராடும்.  சுதந்திரமாக உயிர் வாழ்வதற்காகவே கவரிமா போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் தோற்றவை குளிரில் நடுங்கி இறந்து போகின்றன.


நாம் செம்மறி ஆட்டின் மயிரையும் wool லுக்காக வெட்டி எடுக்கிறோம். ஆனால் பனி பொழியும் காலத்தில் வெட்டி எடுப்பதில்லை. அதுவும் தன் மயிரைக் காத்துக்கொள்ளப் போராடுகிறது. செம்மறியின் போராட்டம் கவரிமாவின் போராட்டம் போல் வீறு கொண்டு இருக்காது. எது தன் தேவைக்காக மிகமிக வீறுகொண்டு போராடுகிறதோ அதன் செயல் சிறந்த செயலாகக் கணிக்கப்படுகிறது. அதனாலேயே திருவள்ளுவர் கவரிமாவின் செயலை மானமுள்ள மனிதரின் செயலுக்கு எடுத்துக்காட்டினார்.


மானம் என்பது உலக உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயர்ந்த உயிர்த்துடிப்பாகும். அதைத் தன்மானம் என்றும் சொல்லலாம். தன்மான உணர்ச்சியானது உயிரை ஒரு பொருட்டாக நினைக்க விடாது. தனக்கென உள்ளதை அல்லது உள்ளவற்றை பிறர் எடுக்கும் போதும் தம்மைச் சீண்டும் போதும் உண்டாவதே தன்மானம். தமிழர் தமது வாழ்க்கைப் போராட்டத்தில் பெருமையையும் சிறுமையையும் கண்டனர். தனது பெருமைக்கு அழிவு வந்த இடத்து மனவுளைச்சளுடன் அடிமையாக வாழும் வாழ்வை வெறுத்தனர். அதனால்மானம் அழியுங்கால் வாழாமை முன்னினிதேஎன்னும் கோட்பாடு உடையவராய் வாழ்ந்தனர். 


மனிதவாழ்வுக்கு உரம் ஊட்டுவது மானமே. அந்த உரத்தையே வீரம் என்றும் சொல்கிறோம். அந்த வீரமே மனிதனை விலங்கு நிலையில் இருந்து மனிதநிலைக்கு மாற்றியது. பண்டைத் தமிழர் வீரத்தைப் போற்ற, அதுவே காரணம்.  மானவீரம் உள்ளோர் தம் நாட்டின், இனத்தின் புகழுக்கு, பெருமைக்கு, பண்பாட்டிற்கு இழுக்கு வந்தால் தமக்கு வந்தது போலவே எண்ணிச் சாடினர்.


அத்தகையோரே ஈழத்தமிழ் இனத்தின் மானத்திற்காய்  தமது உயிரை  முள்ளிவாய்க்கால் மண்ணில் காவியமாக்கினர்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment