Monday, 31 December 2018

பொங்கும் மங்கலப் புத்தாண்டிலே.....



மெச்சியுலகு வியக்கும்நல் மஞ்சள்நில வொளிதனிலும்
உச்சிவெயில் வேளையிலும் உவகையுடன் ஊஞ்சலாடும்
பச்சையிளம் பிள்ளைபோல் பரவசமாய் நாளும் நாளும்
இச்சையுடன் வாழ்வதனை இயக்கி மேலாம் இன்பமதை
நச்சியுயர் புகழனைத்தும் நயந்து காண்பீர்! நன்றே!!
இனிதே,
தமிழரசி.

Friday, 21 December 2018

இன்பம் என்று தணியுமோ!



மரம்படு துயரம் அறியா
          மூர்க்கராய் மனிதர் தாமும்
சிரமென எழுந்து நின்று
          செழுங் குளிர்மை தருநல்
மரங்களை செடி கொடிகளை
          மனமிக மகிழ்ந்தே தம்
நரம்பெழு கைகள் கொண்டு
          நரநர வென வெட்டி
இரக்கமதின்றி வீழ்த்தி மகிழ்
          இன்ப மென்று தணியுமோ!
இனிதே,
தமிழரசி.

Tuesday, 18 December 2018

நானென தற்ற நிலையில் நின்றே!



நெகிழ்ந்து நெஞ்சு உருகிடும் போதும்
          நயன நீர் பெருகிடும் போதும்
அகழ்ந்து மாயை மயக்கிடும் போதும்
          அயர்ந்து போய் அமர்ந்திடும் போதும்
மகிழ்ந்து பாடி மனமதினில் வாழும்
          மன்றுள் ஆடி மைந்தனைத் தேடி
நெகிழ்ந்து வாடி நைந்ததே யுள்ளம்
          நானென தற்ற நிலையில் நின்றே
இனிதே,
தமிழரசி.

Thursday, 13 December 2018

குறள் அமுது - (140)


குறள்:
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று"                           - 655

பொருள்: 
பின்னர் நினைத்துக் கவலைப்படக் கூடிய செயல்களச் செய்ய வேண்டாம். நினைத்துக் கவலைகொண்டாலும் மீண்டும் அது போன்ற செயலைச் செய்யாதிருப்பது நல்லது.

விளக்கம்:
இத்திருக்குறள் வினைத்தூய்மை என்னும் அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது குறளாகும். நற்செயல் செய்வதை வினைத்தூய்மை என்பர். எற்று - நினைத்து, எற்றுதல் - நினைத்தல். பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்குதல் நற்செயலே ஆகும். ஆனால் நாம் ஒரு தீயசெயலை செய்துவிட்டு அதை நினைந்து நினைந்து தன்னிரக்கம் கொள்ளுதல் நல்ல செயலல்ல. 

பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்போர் மிகச்சிலரே. தாம் தீமை செய்கின்றோம் என்பதை உணராமலேயே தீமை செய்வாரும் உளர். அறிந்தோ அறியாமலோ ஒழுக்கம் தவற நேரிட்டாலோ, கெட்ட வழிகளில் செல்ல நேரிட்டாலோ பிறருக்குத் தீமை செய்ய நேரிட்டாலே காதலியோ காதலனோ கைவிட்டாலோ அவற்றை ஓயாமல் எண்ணுவது தவறு. அது சில வேளைகளில் அப்படி நினைப்போரது மனநிலையைப் பாதிக்கும். அது புத்தியில் பேதலிப்பை ஏற்படுத்தி தன்னிலை மறந்து தகாத செயல்களைச் செய்யத் தூண்டும்.
பணத்தை செலவு செய்தாலும் மனத்தை செலவு செய்யாதே
மனம் வாசனையானால் வாய்ப்பது முத்து

இது என் தந்தை கூறும் பொன்னான ஒரு சொற்றொடர். பணத்தை மட்டுமல்ல நம்மை நாமே தீயவழியில் செலவு செய்ய நேரிட்டாலும் கழிவிரக்கம் கொள்ளக்கூடாது. [நடந்ததை எண்ணி ஒருவர் தன்மேல் கொள்ளும் பேரிரக்கம் கழிவிரக்கமாகும்.] 

தன்னிரக்கம் எம்மை மனநோயாளர்களாக்கும். மனதை செலவு செய்தால் மனநோயாளர் ஆவோம். மன அழுக்குகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எம்மை மன அழுத்தத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே திருவள்ளுவர் இக்குறளில் செய்தவற்றை எண்ணி தன்னிரக்கம் கொள்ளவேண்டாம் என்கிறார்.

அப்படி நினைப்போமேயானால் திரும்பவும் [மற்று] அதுபோன்ற [அன்ன] செயலைச் செய்யதிருப்பது நன்று.

Monday, 10 December 2018

பேசிடவல்லார் யாரோ!



ஆராய்ந் தறிந்தவ ரெவரு ளரோ
          ஆய்தமிழின் ஆழமெலாம்
நீராய்ந்த நற்றமிழ்த் தொன்மை யெலாம்
          நிகரற்றே தொலைந்தனவோ
பாராய்ந்த செந்தமிழ்ப் பான்மை யெலாம்
          பாரறியச் சொல்வேனோ
போராய்ந்த பொற்றமிழ்ப் பெருமை யெலாம்
          பேசிடவல்லார் யாரோ!
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
ஆய்தமிழ் - நுண்மையான தமிழ்


Wednesday, 5 December 2018

நின் எழில் காணேனோ!


                    பல்லவி
காணேனோ! நின் எழில்
காணேனோ! கந்தனே!
                                     - காணேனோ
                அநுபல்லவி
நாணேனோ! உன் முன்
நாணேனோ! சித்தனே!
                                    - காணேனோ
                சரணம்
நானேனோ உன்னை 
நினைந்து நலிகிறேன்
நீயேனோ என்னை
நினைந்து நளிக்கிறாய்
தீயேனோ முன்னை
தீயால் அழிகிறேன்
மாயேனோ பின்னை
மறுமை தீயவே
                                    - காணேனோ
இனிதே,
தமிழரசி

சொல்விளக்கம்:
நலிகிறேன் - மெலிகிறேன்
நளிக்கிறாய் - வருத்துகிறாய்
முன்னைத்தீயால் - முற்பிறப்பு வினைப்பயன்
மாயேனோ - அழிந்து போதல்
பின்னை மறுமை - வர இருக்கும் பிறப்பு
தீயவே - இல்லாது எரிந்து நீறாகித் தீர்ந்து போதல்

Monday, 3 December 2018

மகாமேரு மலர்


வெண்ணிற மகாமேரு மலர்

மனிதர்கள் தமது வாழ்நாளில் பார்க்க முடியாத மலர்களில் இதுவும் ஒன்று. குறிஞ்சிமலர் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும். ஆனால் மகாமேரு மலர் 400 வருடங்களுக்கு ஒருமுறை பூக்குமாம். இம்மலர் இந்த வருட [2018] ஆவணி மாதத்தில் பூத்திருந்தது. இப்பூவைத் தேடி மேருமலைக்குச் செல்ல வேண்டாம். 


சதுரகிரி மலை

மதுரை மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர்[ஆண்டாளின் ஊர்] இருக்கிறது. அதிலிருந்து 10கிமீ தூரத்தில் சதுரகிரி மலை உள்ளது. சித்தர்களும் மூலிகைகளும் இருக்கும் இடம் சதுரகிரி மலையாகும். ஆடி அமாவாசை அன்று அங்குள்ள அருவியில் நீராடுவர். அத்தகைய சதுரகிரி மலையில் மகாமேரு மலரும் பூத்தது. எனது சித்தி அனுப்பி வைத்த மகாமேருமலரின் படத்தை உங்களுடன் பகிர்கிறேன். 

இம்மலரை மகாமேரு புஸ்பம் என்றும் அழைப்பர். குறிஞ்சி மலர் போல் நம் குறிஞ்சி நிலத்திற்கு சொந்தமான மலர் என்கின்றனர்.
இனிதே,
தமிழரசி.