Saturday, 1 July 2017

சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு

இயக்கி

இயற்கை என்றால் என்ன? பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது எதுவோ, அதுவே இயற்கையாகும். இயற்கை எனும் சக்தியை ‘ஏது’ என்றும் கூறுவர். ஒன்றன் தோற்றத்திற்கு இயற்கை மூலகாரணமாக இருப்பதால் அதன் சக்தி ஏது எனச் சுட்டப்படும். இயற்கையின் தொழிற்பாடுகள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. அதன் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றமுடியுமே அல்லாமல் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆதலால் பௌதிக விஞ்ஞானம் இயற்கையின் சக்திக்கு அழிவில்லை  [Conservation of energy] என்கிறது. 

இயற்கையின் சக்தியே உலகை இயக்குகிறது. அது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர்
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என இந்த உலகம் ஐம்பூதங்களின் கலவை’1 என்கிறார். 

புறநானூறும்
‘மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇ தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை’2
என ஐம்பூதத்து இயற்கையைத் தெளிவுபடுத்துகிறது.

அ. இயற்கைத் தெய்வவழிபாடு

ஆதிமனிதன் ஐம்பூதங்களாலும் ஏற்பட்ட அழிவுகளால் தன்னைவிட அவற்றுக்குச் சக்தி அதிகம் என்பதை உணர்ந்தான். எனவே நிலநடுக்கம், எரிமலை, கடற்காற்று, மழைவெள்ளம், சூரியவெப்பம், இடிமுழக்கம் போன்றவற்றின் சக்தியைக் கண்டு பயந்தான். அந்தப் பயமே பக்திக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அதனாலேயே பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று இன்றும் சொல்கிறோம். பண்டைத் தமிழரின் எரிமலை வணக்கத்திற்கு திருவண்ணாமலைக் கார்த்திகத்தீப வழிபாடே சான்றாகும்.

சங்க காலமக்கள் நிலத்தின் - மலையின் சக்தியை மலைமகளாயும் தீயின் சக்தியை காடு கிழாளாயும் நீரின் சக்தியை கடல் கெழு செல்வியாயும், சூரைக்காற்றின் சக்தியை சூராமகளிராயும் ஆகாயத்தின் சக்தியை கொல்லிப்பாவையாயும் வழிபட்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அதனாலேயே பெண் தெய்வங்கள் இன்றும் கூட சக்தி என்ற பெயரால் போற்றப்படுகின்றனர். தொல்காப்பியம்
“வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே”3
எனச் சொல்வதால் தெய்வவழிபாடும் தெய்வத்தை வழிபட்டால் அது தம்மைக்காக்கும் என்ற நம்பிக்கையும் சங்ககாலத் தமிழரிடம் வேரூன்றி இருந்ததை அறியலாம்.

1. கொல்லிப்பாவை வழிபாடு:
இயற்கையின் வெவ்வேறு சக்திகளின் சீற்றங்களால் அழிவுகள் உண்டானாலும் அது தன் தன்மையில் இருந்து மாறது. அதனை
‘செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது நிர் நெடுங்கோட்டு
அவ்வெள் அருவிக் குடவரை அகத்துக்
கால்பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எரியினும் ஊறுபல தோன்றினும்
பெருநிலம் கிளரினும் திருநல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்….’4
எனப் பரணர் கூறியதால் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது ‘கொல்லித் தெய்வம் காக்கின்ற செவ்விய வேர்ப்பலா மரங்களையுடைய தீமையில்லாத உயர்ந்த மலையிலிருந்து வீழும் வெள்ளருவியின் மேற்குப் பக்க மலையில் காற்று மோதி இடித்தாலும் அதிக மழை பொழிந்தாலும் இடி இடித்து எரிந்தாலும் கேடு பல உண்டானாலும் பெருநிலப்பகுதியே மேலெழுந்தாலும் தனது அழகிய உருவம் அழியாத இயற்கைப்பாவை’ என்கிறார். ஆதலால் இயற்கையின் சீற்றங்களே கொல்லிப்பாவை வழிபாட்டிற்கு காரணம் என்பதையும் இந்த நற்றிணைப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. 

2. வையை ஆற்று வழிபாடு:
சங்க காலமக்கள் வையை ஆற்றைப் போற்றி வழிபட்டதைக்5 காட்டும் பரிபாடல் எதற்காக வணங்கினர் என்பதையும் சொல்கிறது. மையோடக் கோடனார் ‘உறுமி இடிக்கும் இடிமுழக்கம் போன்ற ஒலியோடு கரைகளை மோதிச்செல்லும் வையைப் பேராறே! திருமருதமுன்றுறையில் இன்று போல் நின்னிடத்தில் மூழ்கிப் பெறும் இன்பம் என்றும் நீங்காது நிலைக்கட்டும். உன்னால் பெறும் பயன்களைப் பாடி விடிவு பெற்று, இன்புற்று மகிழ்வோம்’ என்கிறார்’.6 எனவே சங்ககால மக்கள் வையையாற்றுப் பெருவெள்ளம் தம்மை அழிக்காது காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வையையை வழிபட்டதை இவை எடுத்தியம்புகின்றன.

3. சூரிய வழிபாடு:
மழையற்றுப் போக சூரியனின் வெப்ப சக்தியால் காடுகளும் அழிந்து நிலம் காய்ந்து வெடித்துப் பாலை நிலமாய் மாற உலகம் துன்புற்றது.7 அது சூரிய வழிபாட்டிற்குக் காரணமாயிற்று.
“………………………… ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்”8
என மதுரை மருதன் இளநாகனார் சூரியனும் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார்.


இசக்கியம்மன்

4. இயக்கி வழிபாடு:
இயற்கையின் எல்லாச் சக்திகளையும் இயக்குபவள் எனும் கருத்தில் ‘இயக்கி’ எனும் சக்தியை பண்டைத் தமிழர் வழிபட்டனர். இயக்கிக்குப் பாற்சோறு படைத்தாள் ‘மாதரி’ என்ற செய்தியை
“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் வெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்”9
எனச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அவ்வழிபாடு இன்றும் இசக்கி வழிபாடாய்த் தொடர்கிறது.

ஆ. கன்னித் தெய்வவழிபாடு

1. அணங்கு வழிபாடு:
அணங்கு என்னும் சொல்லிற்கு வருத்துதல் என்ற கருத்தை கலித்தொகை10 தருகிறது. அதனால் இயற்கையாகத் தமக்குத் துன்பத்தைக் கொடுத்தனவற்றை ‘அணங்கு’ எனும் அடைமொழி சேர்த்து சங்கத்தமிழர் அழைத்ததைக் காணமுடிகிறது. உலாவித் திரிந்து வருத்தம் செய்யும் மழைமேகம் அமைந்த மலைத்தொடர் என்பதை “ஆடு மழை அணங்கு சால் அடுக்கம்”11 என்றும் வருத்துகின்ற மலை என்பதை “அணங்குடை நெடுங்கோடு”12 எனவும் புறநானூறு சொல்கிறது. அணங்கு இடி இடித்து மின்னல் மின்னி மழையாக, எரிமலையாக, புகையாக, அனற் குழம்பாக வெடித்துச் சிதறி பல உருவம் எடுத்து வரும் என்பதை
“சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டுவ உருவில் அணங்குமார் வருமே”13
என்கின்றது அகநானூறு. இன்றும் தீ மிதிப்பதை பூ மிதித்தல் என்றே சொல்கிறோம். எனவே அன்றைய சுடர்ப்பூ என்பதே இன்றைய நெருப்பூ ஆனது.

இவ்வாறெல்லாம் தம்மை வருத்திய அணங்கைக் கண்டு பயந்ததால் அதனை வழிபடத் தொடங்கினர். அதனால் எதிரி அரசர்களின் பட்டத்து யானைகள் கதற அவற்றின் தந்தங்களை அறுத்துச் செய்த கட்டிலைக் கூட ‘அணங்குடை மரபிற் கட்டில்’ என தெய்வத்தன்மை பொருந்திய கட்டிலாக
“அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து”14
எனப் பதிற்றுப்பத்து சொல்கிறது. தொடர்ந்து ‘விழுப்புண்பட்ட மறவர் தமது புண்ணிலிருந்து ஒழுகும் குருதியைத் தெளித்து மடை கொடுத்தால் அல்லாது அயிரை மலைக் கடவுள், பலியை ஏற்காது’15 எனவும் கூறுகிறது. 

‘காட்டுப்பசுவின் மேல் குறவன் எய்த அம்பு தப்பிப்போனதற்கு மலைக் கடவுளான அணங்கிற்கு குறையுண்டென்று நினைத்துப் பலிகொடுத்து மகிழ்ந்ததை’16 நற்றிணை காட்டுகிறது.

2. செல்வி வழிபாடு:
அணங்கு வழிபாடாக மாறிய இயற்கைச் சக்தியின் வழிபாடு செல்வி வழிபாடாக மலர்ச்சி அடைந்ததையும் சங்க இலக்கியம் பேசுகிறது. சங்க இலக்கியம் பேசும் செல்வி வழிபாட்டை கன்னித் தெய்வவழிபாடு என்றும் கூறலாம். முல்லை நிலக் காட்டில் இருந்த கன்னித் தெய்வம் 
“ஓங்கு புகழ் கானமர் செல்வி”17 ஆனாள். காடமர் செல்விக்கு கோட்டம்[கோயில்] இருந்ததை மணிமேகலை செப்புகிறது.18

நெய்தல் நிலத்து கடற்கரைக் கன்னித் தெய்வத்தை
“கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு”19 என அகநானூறு சுட்டுகிறது. அந்தச் செல்வியே குமரியாய், கன்னியாய், கன்னியாகுமரிக் கடற்கரையில் இன்றும் மோனத் தவம் செய்கிறாள் போலும்! செல்வி வழிபாடே நாட்டுப்புறங்களில் செல்லியம்மன் வழிபாடு என்ற பெயரில் இப்போதும் நடைபெறுகிறது.

இ. தாய்த்தெய்வ வழிபாடு

செல்வியாய் நின்றவள் மெல்லத் தாயாய் உருவெடுக்கிறாள். அதனை
“வெண்டிரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு”20
எனக் கூறும் பெரும்பாணாற்றுபடை முருகனின் தாயாக ‘துணங்கையஞ் செல்வியைக்’ காட்டுகிறது. இதற்கு விளக்கம் தந்த நச்சினார்க்கினியார் மோடு என்பதற்கு எல்லோரையும் பெற்ற வயிறு என்கிறார்.

“போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்”21

எனத் தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனாரும் மோடியை சிவனின் சக்தியாகப் பாடியிருக்கிறார்.

மகன் நந்திகேசுவரர், தவ்வை[சேட்டை], மகள் அக்னிமாதா

1. தவ்வை வழிபாடு:
சங்க இலக்கியங்கள் காட்டும் தாய்த்தெய்வங்களிலே குழந்தைகளை ஈன்றெடுத்த பெருவயிறும் பரந்த சரிந்த கொங்கைகளுடன் இன்றைய சிற்பங்களில் காட்சிதருபவள் தவ்வையே. சங்கத்தமிழரின் நனிசிறந்த நாகரீகத்தை உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருப்பது திருக்குறள். அத்திருக்குறளே தவ்வை என்னும் சக்தி வழிபாட்டை எமக்கு எடுத்துச் சொல்கிறது. திருக்குறளுக்கு உரையெழுதியோர் திருமகளின் தமக்கையாகத் தவ்வையைக் கூறுகின்றனர்.
‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில் 
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்”22
எனத் ‘தவ்வை’ எனக்கூறும் திருக்குறள் அச்சக்தியை ‘ஆள்வினை உடைமை’ என்ற அதிகாரத்தில் ‘மாமுகடி’23 என்ற பெயரால் அழைக்கிறது. 

தவ்வையை பல்லவர் காலத்தில் பயிர்த்தொழிலின் தெய்வமாகவும் நந்திவர்மனின் குலதெய்வமாகவும் வழிபட்டதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. இவ்வம்மையே திருமுருகாற்றுப்படையில் மூத்தவள் எனும் கருத்தில் ‘பழையோள்’24 என்று அழைக்கப்படுகிறாள் என்பர். மூத்த தேவியை மூதேவி என்றும் ஜேஷ்டை எனவும் சொல்கிறோம். ‘வடதிருப்பரங்குன்றத்து குடவரைக் கருவறையில் இளமை எழிற்கோலத்தில் ஜேஷ்டையும்  வலப்புறம் மகன் நந்திகேசுவரனும் இடப்புறம் மகள் அக்கினி மாதாவும் மேடை ஒன்றில் அமர்ந்திருப்பதாக’ டாக்டர் இரா கலைக்கோவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.25

2. கொற்றவை வழிபாடு:
வையை ஆற்றில் நீராடி கொற்றவை போலக் கோலம்புனைந்த பெண்னொருத்தி கொற்றவையின் நெற்றிக்கண் போன்ற திலகம் இட்டதை பரிபாடல் சொல்வதால்26 அந்நாளில் கொற்றவைக்கு இருந்த மாண்பை அறியமுடிகிறது. ‘பெருங்காட்டுக் கொற்றி’ எனக் கலித்தொகை கூறுகிறது.27

தொல்காப்பியம் கொற்றவையின் வடிவத்தை ‘கொற்றவை நிலை’28 என சிறப்பித்துச் சொல்கிறது. கொற்றவை நிலையைப் போற்றி வழிபட்டவர்கள் வெட்சிப்போர் மறவர்கள். நச்சினார்க்கினியார் ‘வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோருக்கு கொற்றம் வேண்டியும் வென்றோருக்கு மேற்செல்லுங்கால் கொற்றம் வேண்டியும் வழிபடுவார் ஆதலின் வெட்சிக்கும் வஞ்சிக்கும் கொற்றவை நிலை உரியதாகும். ஆதலால் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் கொற்றவை நிலை உரியதாகும்’ எனக் கூறியுள்ளார்.

 சிலப்பதிகாரம் 
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’29
என்கிறது. எனவே சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய மூன்று நிலத்திலும் வாழ்ந்த மக்கள் கொற்றவையை வழிபட்டனர் என்பது தெளிவாகிறது.

பண்டைத்தமிழர் கொற்றவையை வெவ்வேறு பெயர்களால் அழைத்ததையும் அவள் குமரிக்கோலத்தில் இருந்ததையும்  சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.30 இளங்குமரியாய் அமர்ந்திருந்த கொற்றவையின்  உருவத்தை
“மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூலமேந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி”31
எனக் கூறும் இளங்கோவடிகள் இன்றைய சிவனின் தோற்றத்தில் கொற்றவையைப் படம்பிடித்துக் காட்டுவது அன்றைய சக்திவழிபாட்டின் முதன்மையைச் சொல்கிறது.

கொற்றவையை வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர் என்பதை
“வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை” எனச் சிலப்பதிகாரமும்
“வெற்றிவேல் போர்க் கொற்றவை” என்று திருமுருகாற்றுப்படையும் உறுதி செய்கின்றன.32

3. துர்க்கை வழிபாடு:
எருமைத் தலையும் மனித உடலுமான இருவேறு உருவில் திரண்ட தோள்களுடைய மகிடாசுரனைக் கொன்று அவனின் தலைமேல் நின்றவள் கொற்றவை என்பதை
“இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்”33
எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே கொற்றவையை மகிடாசுரனின் கதையோடு இணைத்து துர்க்கையாகவும் வழிபட்டதைக் காணமுடிகிறது.

4: காளி வழிபாடு:
சிலப்பதிகாரத்தில் கண்ணகி வரவுபற்றி மன்னனுக்கு
“அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி”34
எனச் சொல்லும் வாயிற்காப்போன் வாயிலாகவே காளி முதன் முதல் அறிமுகம் ஆகிறாள் எனலாம். அன்னையர் எழுவர் வழிபாட்டில் காளி ஏழாவது தெய்வமாக இருந்ததை ‘அறுவர்க்கு இளைய நங்கை’ எனச் சொல்வதால் உணரலாம். 

5. உமை[மலைமகள்] வழிபாடு:

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தானாக……”35
 என இராவணன் கைலை மலையை அசைக்கும் காட்சியோடு உமையம்மையை எமக்குக் கலித்தொகை காட்டுகிறது. முருகனை ‘மலைமகள் மகனே!’ என்றும் ‘கொற்றவை சிறுவ! எனவும் திருமுருகாற்றுப்படை கூறுவதால் கொற்றவையையே மலைமகளாயும் வழிபட்டனர்.36

6.  சிவசக்தி வழிபாடு:

உலகை இயக்கும் மாபெரும் சக்தியை தாம் வாழ்ந்த காலத்தோடு பலபடி நிலைகளில் காட்டும் சங்க இலக்கியங்கள் அவற்றை சக்திவழிபாடாக இயம்புகின்றன. அவை சிவனுடன் சக்தியை இணைத்த போதும் சக்தியின் ஆற்றலைப் போற்றின. அதனை
“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ் 
மூவகை உலகும் முகிழ்ந்தன முறையே”37
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து மிக உறுதியாகச் சொல்கிறது. 

கலித்தொகை கடவுள் வாழ்த்தும் சிவனை விளித்து
“படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்கால் கோடுயர் அகலல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ” என்றும்
“பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணை மென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ” எனவும்
“தலையங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ”38
எனப்பல கேள்வி கேட்கிறது. இக்கேள்விகள் ஊழிக்கூத்தின் ஆடல் நாயகனான இறைவனை ஆட்டுவது சக்தியே என்பதையும் சிவசக்தியின் ஆற்றலையும் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறன்றன.
ஆதிச்சநல்லூர் நாகரிககாலத் தாய்த்தெய்வம் - கி மு 1700

முடிவுரை:
இயற்கையின் சீற்றங்களின் தாக்கத்தால் அவற்றின் சக்திகளைக் கண்டு பயந்த சங்கத் தமிழர் அவற்றை வழிபடத் தொடங்கினர். இயற்கை அணங்கைத் தணிவிக்க அணங்கிற்கு பலி கொடுத்து வழிபட்டனர். சங்க இலக்கியம் காட்டும் சக்கி வழிபாடானது  இயற்கை, இயக்கி, அணங்கு, செல்வி, தவ்வை, கொற்றவை, துர்க்கை, காளி, உமை எனப் பலபல உருவோடும் பெயரோடும் கூர்ப்புப்போல் சிறந்து செல்கிறது. 

தொல்லியலாளர் ஆதிச்சநல்லூர் நாகரீகத்தின் காலத்தை தொல்லியல் சான்று கொண்டு கி மு 1700 எனக்கருதுகின்றனர். அங்கு நடந்த அகழ்வாராச்சியில் பறவையும், நெற்கதிரும் தாய்த்தெய்வமும் மானும் பொறிக்கப்பட்ட சுடுமண் பானை ஓடு ஒன்று 2004ல் கிடைத்தது. அப்பானை ஓட்டிலிருக்கும் இயற்கைக்காட்சி சங்க இலக்கியகால சக்தி வழிபாட்டின் நோக்கத்தை எடுத்தோதுகிறது. இதனால் சங்க இலக்கியம் சொல்லும் தமிழரின் சக்தி வழிபாடு 3700 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதைக் காணலாம்.

குறிப்புகள்:
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூபா: 635: 1 - 2.
புறநானூறு 2: 1 - 6.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூபா: 415: 1 - 3.
நற்றிணை 201: 5 - 11.
பரிபாடல் 10: 129 - 131.
மேற்படி 7: 85 - 86.
நற்றிணை 164: 1 - 3.
மேற்படி 283: 5 - 7.
சிலப்பதிகாரம் 15: 115 - 118.
கலித்தொகை 50: 6. 
புறநானூறு 151: 10 - 11.
மேற்படி 52: 1.
அகநானூறு 158: 8 - 9.
பதிற்றுப்பத்து 79: 13 - 14.
மேற்படி 79 15 - 18.
நற்றிணை 165: 1 - 5.
அகநானூறு 345: 4.
மணிமேகலை 6: 52 - 53.
அகநானூறு 370: 12.
பெரும்பாணாற்றுப்படை 457 - 459.
பன்னிருதிருமுறை: 4: 66: 8: 1.
திருக்குறள் 17: 7.
மேற்படி 62: 7.
திருமுருகாற்றுப்படை 265.
வரலாறு இதழ்: 86.
பரிபாடல் 11: 99 - 100.
கலித்தொகை 89: 8.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூபா: 62: 2.
சிலப்பதிகாரம் 11: 64 - 66.
மேற்படி 12: 66 - 73.
மேற்படி 12: 54 - 63.
மேற்படி 12: 64; திருமுருகாற்றுப்படை 258.
சிலப்பதிகாரம் 12: 65 - 66.
மேற்படி 20: 36 - 38.
கலித்தொகை 38: 1 - 5.
 திருமுருகாற்றுப்படை 263 - 264.
ஐங்குறுநூறு 1.
கலித்த்தொகை 1: 5 - 13
இனிதே,
தமிழரசி.

பின்குறிப்பு:
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிசேகம் நடைபெற்ற அன்று[04.06.2017], இந்து தமிழ் கலாச்சார சங்கம் வெளியிட்ட 'சௌந்தர்யம்' என்னும் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலுக்கு எழுதியது. அந்நூலில் இலங்கை, இந்திய அறிஞர்கள் எழுதிய எழுபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன. விரும்பியோர் படித்துப் பயன்பெறலாம்.

1 comment:

  1. நல்ல நோக்கம் முயற்சி வாழ்த்துகள்

    ReplyDelete