அன்று உலக நாடுகளில் உலக மொழிகளில் எல்லாம் தனது பெயரை - தன் மணத்தைப் பரப்பி, உலகை அகிலம் ஆக்கிய அகில் தமிழரைப் போல் தன் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எவருமற்று இருக்கிறது. தமிழராகிய எமக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணமுள்ளது. அதனால் கள்ளி தந்த அகிலை மறந்து, சமஸ்கிருத நூல்கள் கூறும் அகரு மரத்தை அகில் எனக் கொண்டாடுகிறோம். அகரு ஒரு மரம். அகில் - கள்ளிச்செடியின் வைரம் என்பதையும் அறியாது சித்த மருத்துவர்களும் ஆயுள் வேத மருத்துவர்களும் அகில் என்று அகருக் கட்டைகளை மருந்துகளுக்குப் பாவிக்கிறார்கள். அகில் புகை நீக்கிய நோய்களை அகருப் புகை நீக்குமா? என்ற சிந்தனையும் இல்லாது தொழிற்படுவது மருத்துவத் துறைக்கே கேடாகும். மருந்துக் கடைகளில் அகிற்கட்டை கேட்டால் அகருக்கட்டை கிடைக்கிறது.
சூரிய வெப்பத்தில் காய்ந்து எரிந்த கள்ளிக்காட்டின் அகிற்புகை நறுமணம் உள்ளதாகவும், உடலில் ஏற்பட்ட காயங்களை மாற்றுவதையும் கண்ட நம் தமிழ் முன்னோர் அகில் புகையை மருந்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அகிற்புகை வயது போகப் போக வரும் உடற்சுருக்கத்தை நீக்கி, வீரியத்தைக் கூட்டும், அதன் மணம் காய்ச்சல்களைப் போக்கும் என்கின்றது அகத்தியர் குணவாகடம். மருத்துவ ஏடுகளை ‘வாகடம்’ என்பர். ஒரு புத்தகம் எழுதக்கூடிய அளவிற்கு சங்க இலக்கியம் அகிற்புகை பற்றிய செய்திகளை புதைத்து வைத்திருக்கிறது.
மருத்துவத் தேவைக்காக பண்டைய உலகிற்கு அகில் பிளவுகளை தமிழர் ஏற்றுமதி செய்தனர். இஸ்ரேலின் பேரரசனான சொலமன் கி மு 931ல் இலங்கையிலிருந்து அகில் பெற்றதை ‘Ceylon an account of the Island’ என்னும் நூல் (1860) சொல்கிறது. தமிழரிடமிருந்து சென்ற அகில், எபிரேய [Hebrew] மொழியில் [இஸ்ரேல் மொழியில்] ahalim ஆகி, கிரீக் மொழியில் alóē எனவும் லத்தின் மொழியில் aloē எனவும் அழைக்கப்பட்டது. பழைய ஆங்கிலத்தில் alwe என்றனர். உச்சரிக்கும் ஒலி வேறுபடினும் பொருள் ஒன்றே. இப்படி அகிலின் பெயரை உலக மொழிக்கு வழங்கிய தமிழ், கள்ளிக்காட்டின் மாண்பை உலகறியச் செய்தது. ஆனால் அகில் கட்டையின் பெயர், இன்று கள்ளி இலையின் சதைப்பற்றைச் சுட்டி நிற்கிறது.
ஆயிரக்கணக்காக கள்ளி இனங்கள் இருப்பது போல அவை தரும் அகிலும் பலவகையாக இருக்கின்றன. அதனை அடியார்க்குநல்லார், “அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என்று சொல்லப்பட்ட பல்வகைத்தாகிய தொகுதியும்” என சிலப்பதிகார உரையில் சொல்வதால் அறியலாம். திரிகோணமலையில் காரகிலும் தீவுப்பகுதியில் அருமணவனும் கேரளத்தில் வெள்ளகிலும் கிடைத்து இருக்கின்றன. இப்போது கிடைக்கின்றனவா?
பழம்
நான் 2015ல் நம் நாட்டிற்குச் சென்றிருந்த பொழுது கள்ளிப்பழத்தை விலைக்கு வாங்கி உண்டேன். 600 கிராம் நிறையுள்ள ஒரு பழத்தை 700 ரூபாவுக்கு வாங்கினேன். முருங்கனில் பயிரிடுகிறார்கள். எனது காணி ஒன்றில் பயிரிடுவதற்காக அதனைச் சென்று பார்த்தேன். அவர்கள் சொட்டுத் தண்ணீரில் சிக்கனமாக பயிரிடும் பாங்கு பாராட்டத்தக்கது. புங்குடுதீவு மண்ணில் இயற்கையாகவே நன்கு வளர்ந்து நிற்கின்றன. எனவே கள்ளி இனங்களை புங்குடுதீவில் வளர்த்தால் என்ன? கேரதீவு, ஊரதீவு, கள்ளிக்காடு, நடுவுத்துருத்தி பகுதிகளில் வாழ்வோர் இதனை கருத்தில் கொள்வது நன்று.
மூவாயிர வருடங்களுக்கு முன்பே அகில் கட்டையை மேற்கத்தைய நாடுகளுக்கு அனுப்பியதில் புங்குடுதீவுக் கள்ளிக்காடும் தன் பங்கைச் செய்திருக்கிறது. ஏனெனில் புங்குடுதீவின் ஊடாகவே உலகின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான கடல் வாணிபம் நடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல கி பி 1311ல் புங்குடுதீவில் கோட்டை கட்டி[கோட்டைக் காட்டில்] வாழ்ந்த வீரமாதேவி
“கத்துகடல் ஓதம்கரைமோத கள்ளியாற்றில் அகில் மணக்கும்
பத்துதிசையும் புகழ்மணக்க பாய்மரங்கள் அதில் மிதக்கும்
நத்துநிலமும் நீர்நனைக்க நித்திலமங்கு பாய் விரிக்கும்
முத்துடை மன்னவன் முறுவல் கண்டே”
என்று தன் தந்தையான மாறவர்மன் குலசேகர பாண்டியனின் பெருமை பேசுகிறாள்.
முதலாம் புவனேகபாகு மன்னார்க் கடலில் முத்துக்குளிக்கும் உரிமைக்காக யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியுடன் போர் தொடுத்தான். அவன் எகிப்திய மன்னனான மம்லூக்கிய[Mamluk] சுல்தானின் உதவி கேட்டு தூதுவரை கைரோவுக்கு அனுப்பினான். அதனை அறிந்த மதுரை மன்னனான மாறவர்மன் குலசேகர பாண்டியன் இலங்கைமேல் போர் தொடுத்து புவனேகபாகுவை முறியடித்து, கி பி 1284ல் இலங்கையைக் கைப்பற்றினான். கி பி 1284ல் இருந்து கி பி 1311ல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறக்கும் வரை இலங்கை அவன் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் பாண்டியர்களின் அரசப் பிரதானிகளே.
மாறவர்மன் குலசேகர பாண்டியன் புங்குடுதீவில் கி பி 1311ல் இறந்தான். அந்த மாமன்னனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் ‘குலசேகரன் வளவு’ என அழைக்கப்பட்டது. புரெக்டர் கதிரவேல் அவர்கள் புங்குடுதீவுக் காணி உறுதி ஒன்றில் ‘குலசேகரன் வளவு’ என்ற பெயர் இருப்பதாகச் சொன்னார். தான் கொழும்பில் இருப்பதால் அவ்வுறுதியைத் தேடித் தரமுடியாதிருக்கிறது எனவும் கூறினார். அப்போதிருந்த நம் நாட்டின் நிலைமையே அவர் அப்படிக் கூறக்காரணம். புங்குடுதீவைச் சேர்ந்த எவரிடமாவது அந்தக் காணி உறுதி இருப்பின் எனக்கு அதன் பிரதியைத் தாருங்கள். அது மாறவர்மன் குலசேகர பாண்டியன் புங்குடுதீவில் இறந்தான் என்ற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்ல உதவும். அது ஈழத்தமிழரின் வரலாற்றைச் சற்று விரிவுபடுத்தும்.
இவர்களைப் போலவே நம் முன்னோர் கள்ளியாற்றில் அகில்கட்டைகளைத் தள்ளினர்
புங்குடுதீவில் வாழ்ந்த நம் முன்னோர் கள்ளிமரத்தால் கிடைத்த அகில் கட்டைகளை கள்ளியாற்றில் போட்டு கழைகளால் தள்ளி, முகத்துவாரத்துக்கு (கேரதீவுப்பக்கம்) எடுத்துவந்து, பாய்மரங்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பினர். அதனாலேயே வீரமாதேவி
“கத்துகடல் ஓதம்கரைமோத கள்ளியாற்றில் அகில் மணக்கும்
பத்துதிசையும் புகழ்மணக்க பாய்மரங்கள் அதில் மிதக்கும்”
என்று சொன்னாள். கள்ளியாற்றில் போடப்பட்ட அகில் கட்டைகளே கள்ளியாற்றில் அகில் மணக்க வைத்தன.
கோழி கூவும் பொழுதே எழுந்து, கள்ளிக்காட்டில் வாழ்ந்த மக்கள் கள்ளி ஆற்றில் போட்ட அகிற்கட்டைகளைத் தள்ளவும், ஓடங்களை, பாய்மரக்கப்பல்களைத் தள்ளவும் கழைகளை எடுத்துச் சென்றதை
“பெட்டக் கோழி முட்டையிட
பேணுகின்ற பெருங்காடு
கட்டக் கோழி கூவயில
கழை எடுக்கும் கள்ளிக்காடு”
- நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
எனும் புங்குடுதீவின் நாட்டுப்பாடலும் சொல்கின்றது. வேர்களால் கற்களை மண்ணாக்கி, தண்டாலும் இலைகளாலும் கடும் வெப்பத்தைத் தாங்கி, இலைகளையும் மடல்களையும் அகிலையும் மனிதர்க்கு மருந்தாகத் தந்த அகிலால் அகிலம் எங்கும் தமிழின் பெருமை பேசும் புங்குடுதீவின் கள்ளிக் காட்டின் மாண்பை மாண்மியத்தைக் காப்பது நம் கடமை அல்லவா!
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
கள்ளிக்கான விளக்கம் வியப்பளிக்கிறது. இப்போது கள்ளியில் அகில் தோன்றுவதில்லையா என்பதை விளக்கின் இன்னும்மகிழ்வேன்
ReplyDeleteஇப்போதும் கள்ளியில் அகில் இருக்கிறது. கள்ளியின் காழ்ப்பகுதியே(வைரமே) அகிலாக மாறுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட வயதுடைய கள்ளியில் அகில் உண்டாகும். நாம் அத்தனை வருடங்கள் காத்திருக்கிறோமா? எதனைக் கடைப்பிடிக்கிறோமோ இல்லையோ வள்ளுவர் சொன்ன 'இளைதாக முள்மரம் கொல்க!' என்பதை கள்ளியைக் கொல்வதில் கடைப்பிடிகிறோம். அதனால் உண்மையான அகிலை அறியாது இருக்கிறோம்.
Deleteகள்ளிப் பழம் இன்று DRAGON FRUIT என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இது மருத்துவம் குணம் கொண்டது. நீரழிவு நோயைப் குணப்படுத்தும் என்று தெரிவிக்கிறார்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு. ஊரில் இருக்கும் போது இவற்றின் அருமை தெரியவில்லை கற்றாழை உடபட. இங்கு காசு கொடுத்து தேடி வாங்குகிறார்கள். .
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை.
Deleteசிந்திக்கத்தக்கது. சிறப்பு, அருமை
ReplyDeleteமகிழ்ச்சி.
Delete