Monday 27 February 2017

சங்ககால உணவு உண்போமா! - 1


சங்ககாலத் தமிழர் காதலையும் வீரத்தையும் தமது இரு கண்ணெனப் போற்றினர் என்பதை சங்க இலக்கிய நூல்கள் காட்டுகின்றன. உணவை உண்ணாது காதலையும் வீரத்தையும் போற்றி வாழ முடியுமா? அத்துடன் பண்டைத் தமிழர் விருந்தோம்பலிலும் தலைசிறந்து விளங்கினர் என்பதையும் சங்கப்புலவோர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். எதை? எப்படி? எதனுடன் உண்ணவேண்டும் என்ற முறைமையினை அறிந்திருந்தனர் எனும் உண்மையையும் சங்க நூல்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

“ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துஉறுத்து ஆற்ற இருந்தனெ மாக” 
                                                 - (புறம்: 381: 1 - 4)
‘இறைச்சியையும் [ஊனும்] உணவையும் [ஊணும்] வெறுப்பது [முனையின்] நல்லதென்று [இனிதெனப்], பாலோடு ஊற்றியவற்றையும் பாகிற் போட்டவற்றையும் தக்க அளவோடு கலந்து கொஞ்சமாகப் [மெல்லிது] பருகி, விருந்து உண்டு இருந்தோம்’ என்கிறார் புறத்திணை நன்னாகனார்.

விருந்தென்றால் நாம் என்ன செய்வோம்? அங்குள்ள தின்பண்டங்கள் எல்லாவற்றையும் உண்டு தீர்ப்போம். அன்று இரவே வயிற்று வலியில் நித்திரை இன்றித் தவிப்போம். ஆனால் எம் சங்கத்தமிழ் மூதாதையர் விருந்தில் இருந்த உணவுகள் சிலவற்றை உடம்புக்கு நல்லதல்ல என வெறுத்து, அளவோடு பருகி வாழ்ந்திருக்கிறார்கள். இதனையே திருவள்ளுவரும்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
                                                        - (குறள்: 945)
எனச் சொல்லிச் சென்றுள்ளார். ஒன்றுக்கு ஒன்று மாறுபாடு இல்லாத உணவை அதிகமாக உண்ணாது இது போதும் என மறுத்து உண்போமேயானால் நோய்களால் உயிருக்குக் கேடு இல்லையாம்.

அப்படி உண்ட உணவுகளை உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன, கொறிப்பன எனப் பலவைகையாகப் பிரித்து உண்டதையும் சங்க நூல்கள் காட்டுகின்றன. சங்ககால மக்கள் தாம் உண்ட உணவுகளை எப்படிச் சமைத்தார்கள் என்பதையும் சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். புலவர்கள் கூறியவற்றில் சில உணவுகளை எனது தாயார் எனக்குச் சமைத்து தந்து நான் உண்டிருக்கிறேன். வேறுசிலவற்றை நானும் சமைத்து சுவைத்திருக்கிறேன். 

சங்ககால மக்கள் சமைத்து உண்ட ‘மாதுளம் பிஞ்சுக்கறி’ சமைப்பது எப்படி? தயிரைக் கடைந்து எடுக்கும் வெண்ணெய் இக்கறியைச் சமைப்பதற்குத் தேவையான பொருளாகும். அம்மா நெய்யை விட்டு சமைத்த மாதுளம் பிஞ்சுக்கறியை விட வெண்ணெய் போட்டு சமைத்த கறியே சுவையாக இருந்தது. இக்கறிக்கான மாதுளம் பிஞ்சைத் தெரிந்தெடுக்கும் போது பூ உதிர்ந்த பிஞ்சாக உள்ளே விதைகளைச் சூழ மெல்லிய இளம்சிவப்பு நிறச்சதைப்பற்றுள்ளதாய் எடுக்க வேண்டும். அல்லது கறி காறும்.

சங்ககால மக்கள் மாதுளம்பிஞ்சுக்கறியை
“சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ….”
                                           - (பெரும்பா.படை: 306 - 308)
சிகப்பு பசுவின் [சேதா] மோர் மணக்கும் வெண்ணெயில் நிறைய [உருப்புற] மாதுளம் பிஞ்சுகளை [பசுங்காய்] பிளந்து [போழொடு] மிளகு சேர்த்து [கறிகலந்து] கறிவேப்பிலை [கஞ்சக நறுமுறி] போட்டுச் சமைத்ததாகப் பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது.

சங்ககால மாதுளம் பிஞ்சுக்கறி

தேவையான பொருட்கள்:
மாதுளம் பிஞ்சுகள்  -  15
வெண்ணெய்  -  1 மே. கரண்டி
மிளகு தூள்    -  1 மே. கரண்டி
முழு மிளகு  -  1 தே.கரண்டி
கறிவேப்பிலை
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1. மிளகு தூளும் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கலந்து கொள்க.
2. மாதுளம் பிஞ்சுகளைக் கழுவி காம்புப் பக்கம் கீழே இருக்கும்படி பிடித்து [ஊறுகாய்க்கு தேசிக்காயை வெட்டுவது போல்] இரண்டு வெட்டில் நான்கு துண்டுகளாகப் பிளந்து கொள்க.
3. பிளந்த வாய்க்குள் மிளகுக் கலவையை இட்டு அரை மணிமேரம் ஊறவிடவும்.
4. வாயகன்ற பாத்திரதை சூடாக்கி வெண்ணெய் இட்டு, உருகிக் கொதிக்கும் போது முழு மிளகைப் போட்டு பொரிக்கவும்.
5. பொரிபட்டமிளகு வெண்ணெயில் மிதக்கும் போது கறிவேப்பிலையைச் சேர்த்து ஊறவைத்துள்ள மாதுளம் பிஞ்சுகளையும் போட்டு இளஞ்சூட்டில் வதக்கி வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இந்த மாதுளம் பிஞ்சுக் கறியை சோறு, பிட்டு, ரொட்டி எதனுடனும் உண்ணலாம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment