Saturday 25 February 2017

குறள் அமுது - (130)


குறள்:
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”                              - 340

பொருள்:
உடம்பினுள் ஒண்டிக் குடியிருந்த உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையோ?

விளக்கம்:
நிலையாமை எனும் அதிகாரத்தில் வரும் பத்தாவது திருக்குறள் இது. உலகின் நிலையில்லாத் தன்மையை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துச் சொல்கிறார். இந்த உலகில் பிறந்த எந்த ஓர் உயிரும் ஏன் உடம்பினுள் நிலைத்து இருப்பதில்லை? எனும் கேள்விக்கான விடையை இக்குறள் தருகிறது.

புகுந்து நிலையாகத் தங்கிவாழும் இடம் புக்கில் எனப்படும். புக்கு + இல் = புக்கில். இருக்க இடம்மில்லாது மற்றவர் வீட்டில் ஒண்டி இருப்பவனை 'துச்சிருப்பவன்' என்பர். அதனை பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான ‘திரிகடுகம்’ எனும் நூலில்
துச்சிருந்தான் ஆளும் கலம் காமுறுதலும்”
ஒண்டிக் குடியிருந்தவன் வீட்டுக்காரனின் பொருட்களை விரும்புவது போல என நல்லாதனார் சொல்வதால் அறியலாம்.

வீட்டுக்காரனின் பொருட்களை ஒண்டிக் குடியிருந்தவன் விரும்புவதை விட, வீட்டுச்சொந்தக்காரர் அதைச்செய்  இதைச்செய் என ஒண்டியிருப்போரை பாடாய்ப் படுத்துதலும் உலகவழக்கே. எமது உடலாகிய வீட்டிற்கு உரிமைக்காரர்கள் பலர். அவர்கள் அவ்வுரிமை  காரணமாக ஆளாளுக்கு எம்மைப் போட்டு புரட்டியெடுப்பர். அதற்குக் காரணம் உடம்பினுள்  எமது உயிர் ஒண்டிக் குடித்தனம் இருப்பதே  என்கிறது தேவாரம்.

“சாற்றுவர் ஐவர் வந்து 
    சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் 
    கண் செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன் 
    ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன் 
    கோவல்வீ ரட்டனீரே!” - (ப.திருமுறை: 4: 69: 4)

உயிர் உடலினுள் ஒண்டிக்குடி[சந்தித்த குடிமை] இருப்பதால் எனது உடலை உரிமை கொண்டாடும் ஐம்பொறிகளும்[ஐவர்] கனல்பறக்கப் பேசி கண், செவி, மூக்கு வாய் வேண்டியவற்றைக் கேட்டு என்னை வழிநடத்துவதாகச் [ஆற்றுவார்] சொல்வர் [சாற்றுவர்]. அதனால் தடுமாறி ஆதியாய் இருக்கும் உன்னை அறியும் அறிவில்லாது கூற்றுவனிடம் அகப்பட்டேன் எனச் திருநாவுக்கரசர் சொன்னதை இத்தேவாரம் சொல்கிறது. ஆதலால் உயிர் உடபினுள் ஒண்டிக்குடி இருப்பதாக நம் முன்னோர் கருதினர் என்பதை அறியலாம்.

எப்போதும் உடம்பினுள் ஒண்டிக்குடி இருக்கும் உயிருக்கு நிலையாய்க் குடியிருக்க ஓர் இடம் இன்னும் கிடைக்கவில்லைப் போலும்.

No comments:

Post a Comment