Saturday, 29 October 2016

தீபாவளித் திருநாள்

எழுதியது - வாகீசன்

இந்து சமயத்தவரின் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. பெரும்பாலும் சைவசமயத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை முறையாகக் கொண்டாடுவதில்லை. இலங்கைத் தமிழரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. இது ஐப்பசி மாதத்துத் தேய்பிறையில் வரும் பதின்நான்காம் நாள் கொண்டாடப்படும். கொடுமைகள் பல செய்த நரகாசுரனைக் கொன்று, உலகிற்கு விமோசனம் அளித்த கிருஷ்ண பகவானின் பெருமையையும் சத்தியபாமாவின் வீரத்தையும் நினைவூட்டுவது இப்பண்டிகையின் நோக்கமாகும்.

தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றுவதையே தீபாவளி என்னும் சொல் குறிக்கிறது. தீபாவளி தினத்தை மக்கள் நீராடி, புது உடுப்பு அணிந்து, கடவுளை வணங்கி, வீட்டை விளக்கால் ஒளிசெய்து, உறவினருடன் சேர்ந்து நல்ல இனிய உணவுகளை உண்டு, வான வேடிக்கை வினோதங்களுடன் களித்துக் கழிப்பர்.

தீபாவளிக்கு ஒரு கதை உள்ளது. அதைக் கீழே காண்போம்:
பிரக்ஜோதபுரம் என்ற நகரத்தில் நரகாசுரன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் பிரமனை நினைத்து அருந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதனால் அவன் ஆணவம் மேலோங்கி எவரையும் மதிக்காமல் நடந்தான். மூவுலகையும் அடக்கி ஆள நினைத்தான். கொடுமைகள் பல புரிந்தான். இந்திரனுடன் போரிட்டு வென்றான்.  பார்க்கும் இடம் எங்கும் பயங்கரம் தலைவிரித்து ஆடியது.

நரகாசுரனின் கொடிமைகளை பொறுக்க முடியாத தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய கிருஷ்ணனும் தேவியான சத்தியபாமாவும் நரகாசுரனுடன் போர் புரிந்தனர். கடுமையான போர் நடந்தது. கடைசியில் கிருஷ்ணர் சக்கர ஆயுதத்தை ஏவினார். நரகாசுரனின் உடல் பிளந்தது.

நரகாசுரன் இறக்கும் நேரம் கிருஷ்ணபகவானைப் பார்த்து “பகவானே! இக்கொடியவன் இறக்கும் இந்த நாளை மனைஇருள் போக்கி, மன-இருளை அகற்றும் மங்கல நாளாகக் கொண்டாட வேண்டும்” என வேண்டினான். “அப்படியே ஆகுக!” என பகவான் அருள் புரிந்தார். நரகாசுரன் பரமபதம் அடைந்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று இந்து சமயத்தவர் கூறுவர்.

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

Tuesday, 25 October 2016

நினைந்து வாழும் உலகே!


உமதன்பின் எல்லை உணர்ந்தறிவார் யாரோ
          உவப்பிலா அந்த உணர்வரிய
எமதன்பின் எல்லை ஏதென்றறிய ஒண்ணா
          ஏழையேம் மாசு அறுத்து
தமதன்பின் தன்மை தன்னை உவந்து 
          தந்தருளு தாண்டவ ராஜ
நுமதன்பின் தன்மை தன்னால் நினை
          நினைந்து வாழும் உலகே!

Monday, 24 October 2016

துணைக்கு வரும் காளைகள்


வெள்ளை நிறக் காளை இது
           வைக்கல் உணும் காளை இது
கொள்ளை இன்பம் கொண்ட துமே 
           கொஞ்சி மகிழ் காளை இது

துள்ளி ஓடும் காளை இது
           துணைக்கு வரும் காளை இது
அள்ளி முத்தம் இட்ட துமே
            அன்பாய் முட்டுங் காளை இது

வெள்ளி நிறக் காளை அது
            வயல் உழும் காளை அது
தள்ளி நின்று தொட்ட துமே
            தலை யாட்டுங் காளை அது

தள்ளை போன்ற காளை அது
            தொல்லை தராக் காளை அது
பிள்ளை எனை கண்ட துமே
            பையப் போகுங் காளை அது
                                                     - சிட்டு எழுதும் சீட்டு 127

சொல் விளக்கம்:
1. தள்ளை - தாய்
2. உணும் - உண்ணும்
3. கொள்ளை - மிக்க
4. தொல்லை - துன்பம்
5. பைய - மெதுவாக

குறிப்பு:
மூன்று வயதுப் பேரன் படிக்க 10 - 10 - 2016 அன்று எழுதியது.

Sunday, 23 October 2016

குறள் அமுது - (124)


குறள்:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்                            -  0167

பொருள்:
மற்றவரது மேன்மையைக் கண்டு நெஞ்சம் வெதும்பி பொறாமைப்படுபவனுக்கு இலக்குமி தனது தமக்கையாகிய மூதேவியைக் காட்டிவிடுவாள்.

விளக்கம்:
இத்திருக்குறள் அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் ஏழாவது குறளாக இருக்கிறது. அழுக்காறு என்றால் என்ன? அழுக்குப் படிந்து படிந்து ஆறாகி அழுக்காறு ஆகிறது. பொறுக்கும் தன்மை பொறுமை. பொறுக்க முடியாத தன்மை பொறாமை அல்லவா! அந்தப் பொறாமை அழுக்காறாக மாறுகிறது. அழுக்கு + ஆறு = அழுக்காறு. அதாவது பிறரது அழகு, அறிவு, செல்வம், திறமை முதலானவற்றைப் பார்த்து மனம் பொறுக்கமுடியாது வெதும்ப வெதும்ப மனதில் மெல்ல மெல்ல அழுக்குப் படிகிறது. அந்த மன அழுக்குப் படிவு ஆறாக ஊற்றெடுத்து அழுக்காறாக ஓடத் தொடங்கும். இப்படி மன அழுக்கு ஆறு ஆகாத தன்மை ‘அழுக்காறாமை’ ஆகும்.

இத்திருக்குறளில் அழுக்காற்றையும் திருவள்ளுவர் அவ்வித்து அழுக்காறு என்று நீட்டி முழங்குகிறார். அவ்வித்து என்றால் என்ன? அவ்வி - ஔவி என்பது வேகுதல் என்று பொருள் தரும். அவித்த நெல் என்னும் போது வெந்த நெல் என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா! அது போல அவ்வித்து என்றால் வெந்து - மனம் வெந்து துடிப்பது. பிறரின் புகழ், உயர்ச்சி, பெருமை போன்ற நல்வாழ்வைப் பார்த்து மனம் வேக வேக மனதில் அழுக்குப் படிந்து அழுக்காறாகி சென்னையில் உள்ள கூவம் போல் நாறும். அதனாலேயே ஔவையும் ‘ஔவியம் பேசேல்’ என்றார்.

திருமாலின் நெஞ்சில் வீற்றிருப்பவள் செய்யவள் - திருமகள் - சீதேவி - இலக்குமி. அப்படிப்பட்டவள் அவ்வித்து அழுக்காறு ஓடும் மனதில் குடியிருப்பாளா? பூக்கூடைக் காரிக்கு மீன் கூடையின் பக்கத்தில் இருக்க முடியுமா? தவ்வை என்றால் தமக்கை - அக்கை - அக்கா. செய்யவள் ஆன சீதேவியின் அக்கா யார்? அவளே மூத்ததேவி - மூதேவி. அவள் வறுமையின் தெய்வம்.

எவர் நெஞ்சில் அழுக்காறு உண்டாகிறதோ அப்போதே சீதேவி தன் தமக்கையான மூதேவியை அழைத்து உனக்கு ஏற்ற இடம் இது எனக் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்கிவிடுவாளாம். செல்வம் உடையோரும் நெஞ்சில் அழுக்காறு உண்டானால் வறுமை அடைவர். எனவே அழுக்காறு ஆகாது நமது நெஞ்சை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

Friday, 21 October 2016

அடிசில் 108

சூடான நடெலா[Nutella] பால்
- நீரா -
  


தேவையான பொருட்கள்: 
பால் - 2 கப்
நடெலா [Nutella]  - ⅓ கப்
வனிலா - ½ தே. கரண்டி
Whipped cream - விருப்பத்திற்கு ஏற்ப
கொக்கோ பவுடர் - 1 தே. கரண்டி

செய்முறை: 
1. வாயகன்ற பாத்திரத்தில் ½ கப் பாலை ஊற்றி நடெலா சேர்த்து மிக குறைந்த சூட்டில் சூடாக்கவும்.
2. நடெலா முழுவதும் கரையும் வரை கலக்கியவாறு சூடாக்கவும்.
3. நடெலா கரைந்ததும் மிகுதிப் பாலையும்  சேர்த்து நன்கு கலக்கியபடி கொதிக்க வைக்கவும்.
4. கலக்கக் கலக்க பால் தடித்து பொங்கும் போது இறக்கி, வனிலா சேர்த்து கலக்கவும்.
5. பாலை கப்பில் விட்டு அதன் மேலே Whipped cream ஐ போடவும்.
6. கொக்கோ பவுடரை அதற்கு மேல் தூவிக் கொள்க.

Wednesday, 19 October 2016

கம்பனின் கவிதையை கனிரசமாய் தந்தவர்


கம்பனின் கவிதைச் சுவையில் தம்மையே இழந்தவர்கள் பலர். அப்படி இழந்தவர்களில் பாரதியாரும் ஒருவர். அதனாலேயே “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலில் 
“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு” 
என்று கம்பன் புகழைபாடிய பின்பே
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு”
என வள்ளுவனையும் சிலப்பதிகாரத்தையும் புகழ்ந்தார்.

தமிழில் உள்ள பா வகைகளில் எந்தெந்தப் புலவர் எந்தெந்தப் பா இயற்றுவதில் சிறந்து விளங்கினர் என்பதை பலபட்டைச் சொக்கநாதப் புலவர் ஒரு பாடலில் கூறியுள்ளார். அவர் அதில் “விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இருப்பினும் கம்பனை வம்பன் என்பாரும் உளர். எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்ட கம்பனின் கவிதை ஒன்று இருக்கிறது. சூர்ப்பனகையின் நடை அழகைச் சொல்லும் அந்த  கொஞ்சு கவிதையை விஞ்ச ஒரு கவிதை இல்லை எனலாம். கன்னித் தமிழ் அணங்கை கம்பன் மெல்லொலி எழக் கொஞ்சிக் கொஞ்சிச், சந்த நயம் சிந்திதச் சிந்த சிந்திய கவிதை அது.

“பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்”

இத்தகைய கொஞ்சு கவிதைகளில் தம் நெஞ்சு கரைந்தவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். கம்பனின் கவிதைச் சுவையில் நெஞ்சு கரைந்த கண்ணதாசன்
“பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளி வைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாகவில்லை என்று பாடு”
எனப் போற்றியுள்ளார்.
கொழும்பு இந்துக்கல்லூரி - கம்பர் சிலை

தன் நெஞ்சைக் கரைத்த கம்பனின் கவிதைகளைக் கண்ணதாசன் தான் எழுதிய எத்தனையோ திரைப் பாடல்களில் கனிரசமாய் வடித்தான். வாருங்கள் பருகலாம்.

கம்பனின் தனிப்பாடல் ஒன்று. சோழநாட்டில் பொன்னி நதி ஓடுவதால் அதனை பொன்னிவளநாடு என்பர். அங்கு மாத்தத்தன் என்ற அழகன் ஒருவன் இருந்தான். பொன்னிவளநாட்டுக் கன்னியர் அவனை விரும்பினர். காதலால் உடல் மெலிந்தனர். அதனால் கைவளையல்கள் கழன்று விழுந்தன. அக் கன்னியரின் தோழியொருத்தி எங்கே கைவளையல்கள் என்று கேட்கிறாள். அதற்கு அவர்களில் ஒருத்தி

“இருந்தவளை போனவளை என்னை அவளை
பொருந்தவளை பறித்துப் போனான் - பெருந்தவளை
பூத்தத்தத் தேன் சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து”
                                                       - (கம்பர் தனிப்பாடல்)
என்று பாடினாளாம் என்கின்றார் கம்பர். அவள் பாடிய பாடல் புரிந்ததா? இல்லையேல் 
“இருந்தவளை போனவளை என்னை அவளை
பொருந்த வளை பறித்துப் போனான் - பெருந்தவளை
பூ தத்தத் தேன் சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து”
                                                  
இப்போது புரிந்ததா? குளத்தில் இருக்கும் பெருந்தவளை தாமைரைப் பூவில் தத்த [பாய] தேன் சொரிகின்ற வளமான பொன்னி நாட்டில் மாதத்தன் வீதியில் வந்து; அங்கே இருந்தவளை, தெருவில் போனவளை, என்னை, அதோ நிற்கும் அவளை - எங்கள் எல்லோரதும் பொருந்திய வளையல்களைப் பறித்துப்போனான் என்றாளாம்.  
பண்டைத்தமிழர் போல்
திருமணத்தில் ஆண்கள் மெட்டி அணியும் 
வழக்கம் இருந்ததைப் பாருங்கள் 

கவிஞர் கண்ணதாசன் கம்பனைப் பின்பற்றி ‘அவளை’ வைத்தே புதிய பூமிப் படத்திற்கு 
“சின்னவளை முகம் சிவந்தவளை - நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை - நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு”
எனப்பாட்டு இயற்றி கம்பனின் கவிதையை கனிரசமாய் தந்திருக்கிறார்.

இராமாயணத்தில் உள்ள பாலகாண்டத்தில் இராமன் வீதி உலா வருவதை உலாவியற் படலத்தில் வரும் ஒரு காட்சி. இராமனைக் கண்ட கன்னியர் நிலையை
“தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்”
                                            - (இரா: பா.கா: 20: 19)
எனக் கூறும் கம்பனின் கவிதையை உள்வாங்கிய கண்ணதாசன் அதனை இதயக்கமலம் படத்தில் 
“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”
என்று கவிரசமாய்த் தந்துள்ளார்.

இப்படி கம்பனின் கவிதைகளை கனிரசமாய் கண்ணதாசனின் திரைப் பாடல்களில் கவிரசமாய்க் காணலாம்.
இனிதே,
தமிழரசி.

Saturday, 15 October 2016

முன்னின்று தடுப்பதேன்


விந்தையென் மனதில் நீயிருக்க
           வியனுலகில் தேடிடும் என்றன்
கந்தைமனக் கசடு அறுத்து
          காத்திருந்து அருளும் கந்த
சிந்தையுள் சிறை வைத்துனை
          சிக்கெனப் பிடித்து உணரா
முந்தையென் வினையெலாங் கூடி
          முன்னின்று தடுப்ப தேன்