Saturday 29 October 2016

தீபாவளித் திருநாள்

எழுதியது - வாகீசன்

இந்து சமயத்தவரின் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. பெரும்பாலும் சைவசமயத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை முறையாகக் கொண்டாடுவதில்லை. இலங்கைத் தமிழரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை.  பண்டைய தமிழ் இலக்கியங்கள் நரகாசுரன் கதையைக் கூறவில்லை. 

இது ஐப்பசி மாதத்துத் தேய்பிறையில் வரும் பதின்நான்காம் நாள் கொண்டாடப்படும். கொடுமைகள் பல செய்த நரகாசுரனைக் கொன்று, உலகிற்கு விமோசனம் அளித்த கிருஷ்ண பகவானின் பெருமையையும் சத்தியபாமாவின் வீரத்தையும் நினைவூட்டுவது தீபாவளியின் நோக்கமாகும். எனினும் பண்டைத் தமிழரின் கார்த்திகை விளக்கீட்டில் இருந்து முகிழ்ந்த ஒரு பண்டிகையாகத் தீபாவளியைக் கருதலாம்.

தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றுவதையே தீபாவளி என்னும் சொல் குறிக்கிறது. தீபாவளி தினத்தை மக்கள் நீராடி, புது உடுப்பு அணிந்து, கடவுளை வணங்கி, வீட்டை விளக்கால் ஒளிசெய்து, உறவினருடன் சேர்ந்து நல்ல இனிய உணவுகளை உண்டு, வான வேடிக்கை வினோதங்களுடன் களித்துக் கழிப்பர்.

தீபாவளிக்கு ஒரு கதை உள்ளது. அதைக் கீழே காண்போம்:
பிரக்ஜோதபுரம் என்ற நகரத்தில் நரகாசுரன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் பிரமனை நினைத்து அருந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதனால் அவன் ஆணவம் மேலோங்கி எவரையும் மதிக்காமல் நடந்தான். மூவுலகையும் அடக்கி ஆள நினைத்தான். கொடுமைகள் பல புரிந்தான். இந்திரனுடன் போரிட்டு வென்றான்.  பார்க்கும் இடம் எங்கும் பயங்கரம் தலைவிரித்து ஆடியது.

நரகாசுரனின் கொடிமைகளை பொறுக்க முடியாத தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய கிருஷ்ணனும் தேவியான சத்தியபாமாவும் நரகாசுரனுடன் போர் புரிந்தனர். கடுமையான போர் நடந்தது. கடைசியில் கிருஷ்ணர் சக்கர ஆயுதத்தை ஏவினார். நரகாசுரனின் உடல் பிளந்தது.

நரகாசுரன் இறக்கும் நேரம் கிருஷ்ணபகவானைப் பார்த்து “பகவானே! இக்கொடியவன் இறக்கும் இந்த நாளை மனைஇருள் போக்கி, மன-இருளை அகற்றும் மங்கல நாளாகக் கொண்டாட வேண்டும்” என வேண்டினான். “அப்படியே ஆகுக!” என பகவான் அருள் புரிந்தார். நரகாசுரன் இறைபதம் அடைந்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று இந்து சமயத்தவர் கூறுவர்.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

2 comments:

  1. சிந்தனைக்கு விருந்தான
    சிறந்த பதிவு

    ReplyDelete