Wednesday 14 September 2016

தமிழரும் தாளிப்பனையும்


 தாளிப்பனை - இலங்கை 1895
இயற்கையின் இன்பங்களைப் பார்த்து மகிழ்ந்த தமிழன் இயற்கை அளித்த தாளிப்பனையை தன் வாழ்க்கையின் தேவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொண்டான். தாளிப்பனையின் [Corypha Umbraculifera - Talipot] பிறப்பிடம் தமிழர் இருப்பிடமான இலங்கையும் தென் இந்தியாவுமே. மியான்மார், அந்தமான் தீவுகள், தாய்லாந்து, கம்போடியா, சீனா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வளர்கிறது. இப்போது அமெரிக்காவில் பெருமளவில் பயிர் செய்கிறார்கள். பண்டைத் தமிழரின் வாழ்வை வளம்படுத்திய தாளிப்பனை இன்று இலங்கையர்க்குத் தெரியாத பனையாக மாறிவிட்டது. தாளிப்பனை பூத்துக் குலுங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அது உள்ளத்தால் முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதன் முதுமையில் நரைத்த முடியோடு முகத்தில் அறிவின் ஒளிவீச புன்னகை சிந்த தலைநிமிர்ந்து நிற்பது போல் நிற்கும். 

அது என்ன தாளிப்பனை என நினைக்கிரீர்களா? அதனை இரத்தினபுரி பக்கம் வாழ்ந்தவர்கள் பார்த்திருப்பார்கள். இருப்பினும் பூத்திருக்கும் போது பார்த்தவர்கள் எத்தனை பேரோ? யாழ்ப்பாணத்தில் தாளையடி என்று ஓர் ஊர் இருக்கிறது அல்லவா? அங்கு தாளிப்பனை நின்றதால் அவ்வூர் தாளியடி என அழைக்கப்பட்டது. தாளியடி மருவி தாளையடி ஆயிற்று என்பர். தாளிப்பனையை மறந்த நம்மவர்கள் தாழையடி என்கிறார்கள். நம் புங்குடுதீவில் உள்ள ‘கள்ளிக்காடு’ என்ற இடத்தை கல்லிக்காடு என்றும், ‘கள்ளியாறு’ ஓடிய பகுதியை களியாறு எனவும் எழுதுகிறார்களே அது போன்றதே இதுவும்.

மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி. அவள் பதிநான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்து புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தாள். கப்பலில் வந்திறங்கும் வெளிநாட்டவர்க்கு பட்டனத்துப் பெண்கள் தாளிப்பனையின் ஓலையில் செய்த நிழற்குடையின் கீழே பொருட்களை வைத்து விற்றார்கள் என்பதை அவளது நாட்குறிப்பில் எழுதியுள்ளாள்.

பனைமரத்தின் பெயர்களை திவாகர நிகண்டு
“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே”  - (திவாகர நிகண்டு: 700)
என்று சொல்கிறது.

தாளிப்பனைக்கு கூந்தற்பனை, தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் குடப்பனை[குடைப்பனை] என்ற பெயர்களும் உண்டு.
கூந்தற்பனை: தாளி - (பிங்கல நிகண்டு: 2757)
எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது.
Talipot - Singapore Botanical Garden 2005

தாளிப்பனை பூத்திருக்கும் போது பார்த்திருக்கிறேன். என் தந்தையும்[பண்டிதர் மு ஆறுமுகன்] நானும் பள்ளிக்கூட விடுமுறை நாளில் சீனக்குடாவில் [ChinaBay] இருந்த [திரிகோணமலை] மாமி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் என் தந்தை உரையாற்ற வேண்டி இருந்தது. என்னையும் அவரோடு அழைத்துச் சென்றார். போகும் வழியில் எனக்குக் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகப் பாடல்களைச் சொல்லித் தந்தார். அவரோடு மேசையில் இருந்து சாப்பிடும் பொழுதும் பயணம் செய்யும் போதும் தனக்குத் தெரிந்தவற்றை கதைசொல்வது போல் எனக்குச் சொல்லித் தருவது அவரது வழக்கம். கையில் எந்தப் புத்தகமும் வைத்திருக்க மாட்டார். அன்றும் வழமை போலச் சொன்னார்.
“தாளிப் பனையின் இலைபோல்
           மயிர்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோடு
           இயம்பக் குழகன் ஆடுமே”   - (ப.தி.முறை: 11: 17: 5 - 8)

என்று அம்மையாரின் பாடல்வரிகளைச் சொன்னபோது “பனைக்கு இலை இருக்கா? ஓலை இருக்கா? எனக்கு பனையில் ஆண்பனை, பெண்பனை இருப்பது தெரியும். தாளிப்பனையா அது என்ன?” என்றேன். “ஓலையை இலை என்றது மரபு வழுவமைதி[இரண்டும் பொருள் ஒன்றே]; மகள் நீங்க சிறுவயதில் ‘வேர் வேர் வெட்டி வேர்’ பாடுவது ஞாபகமிருக்கா? அதில் தாளிப்பனை வருகிறதே” என்றார். அவர் அப்படிச் சொன்ன பொழுது நான் ஆறு அல்லது ஏழாம் வகுப்பில் படித்திருப்பேன். அதனால் தாளிப்பனை வருகிறதா என அறிய
“வேர்! வேர்! என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
பனை வெட்டி
என்ன பனை?
தாளிப்பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
தேன் மணம்
என்ன தேன்?
பூந்தேன்
என்ன பூ?
மாம்பூ
என்ன மா?
சும்மா”
என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தேன். ‘சின்ன வயதில் மரங்களின் வேறுபாடு தெரியவில்லை’ என்றேன். சிரித்தார். ‘இப்போ தெரிகிறதா?’ என்றார். ‘ஓம்’ என்று தலையை ஆட்டினேன். ‘நல்லது’ என்றார். நேரத்தைப் பார்த்தார். அடுத்த தரிப்பில் பேரூந்து நின்றதும் இறங்கினோம்.

மட்டக்களப்பு நோக்கி போன எங்கள் பயணம் காரைக்கால் அம்மையாரின் பாடலால் திசை மாறி இரத்தினபுரிப் பக்கம் சென்றது. அவரது உரை அடுத்தநாள் மாலை இடம்பெற இருந்ததால் எனக்குத் தாளிப்பனையைக் காட்ட அவருக்கு நேரம் இருந்தது. அன்று அவர் தாளிப்பனையைக் காட்டியதால் அது பற்றி எழுத முடிகிறது.

நம்நாட்டுக் காசில் தாளிப்பனை

இலங்கைக்கு சேரன் தீவு என்ற பெயரும் உண்டல்லவா? சேரர்கள் பனம்பூவை மாலையாக அணிந்தார்கள் என்பதை இலக்கியங்கள் சொல்கின்றன. தலைக் கண்ணியாகவும் கழுத்தில் அணியும் மாலையாகவும் பனம்பூவைச் அணிந்ததைச் சேரமன்னர்கள் புகழ்பாடும் பதிற்றுப்பத்து சொல்கிறது.

ஆண்பனை பூக்கும் துள்ளுப்பூக்களைத் தலையில் கண்ணியாகச் சூடமுடியுமா? அதனால் பலரும் பனங்குருத்தைச் சேரர்கள் சூடியதாக பாடல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
“மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூறு அளப்ப”                                                                                                 - (பதிற்றுப்பத்து: 51: 31 - 32)
மறத்தன்மை தெரியச்சூடிய பனையின் வெண்ணிறப் பூங் கண்ணி[தலையில் சூடும் மாலை] பகைவரது இரத்தத்தால் சிவந்து நிறம்மாற, பருந்து அதை எப்ப தூக்கலாம் என்று வட்டமடித்தது [பருந்து ஊறு அளப்ப]. என சேர அரசர்கள் பனம்பூங் கண்ணி சூடியதைக் காக்கைபாடினியார் சொல்கிறார்.

“வண்டு இசை கடாவா தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து”     - (பதிற்றுப்பத்து: 70: 6 - 8)

சங்க இலக்கியத்தில் தேர் கடாவா என்றால் தேரைச் செலுத்துதல் என்று பொருள் தருதல் போல ‘வண்டு இசை கடாவா’ என்பது வண்டு பாடுகின்ற எனும் கருத்தத் தரும். இப்பாடலில் ‘வண்டு பாடும் சீதாளிப் பனையின் குவிந்த அரும்பையுடைய ஊசிபோன்ற வெண்ணிறப் பூக்களும் சுனை மலரும் கொண்டு கட்டிய மாலையைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் சூடியதாகச் கபிலர் கூறுகிறார்.
ஊசி வெண்தோடு

காக்கைபாடினியாரும் கபிலரும் பனம்பூவை வெண்தோடு என்றே குறிப்பிடுகிறார்கள். வெண்தோடு என்பதை பனக்குருத்து எனப் பொருள் கொள்ள பனங்குருத்து வெண்மையா!

தொல்காப்பியர் புல்லின் உறுப்புகளை
“தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே சேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”                                                                                               - (தொல்: பொ: 9: 88)
எனக் கூறியவர், அடுத்து மரவகையின் உறுப்புக்களை
“இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையேஉள்ளுறுத் தனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப”     - (தொல்: பொ: 9: 89)
என்று சொல்கிறார். புல், மரம் இரண்டின் உறுப்பிலும் தோடு எனும் உறுப்பு இருக்கிறது. தொல்காப்பியர் சொல்லும் தோடு என்ன? அதற்கான விடையை புறநானூற்றில் கபிலர் தந்துள்ளார்.

பாரியின் பரம்புமலையில் வயலை உழுது வரகை விதைத்ததிலிருந்து கதிராய் வெட்டுவது வரை ஒரு காட்சியாக்குகிறார்.
“வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட்டு ஈரத்து
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின் தோடு ஒலிபுநந்தி
மென்மயில் புனிற்றுப்பேடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரிய” - (புறம்:120: 1 - 9)

வரகு

வெப்பத்தில் விளைந்த வேங்கை மரமுள்ள சிவந்த நிலத்தில் [செஞ்சுவல்] கார்காலத்தில் பெய்த மழையின் பெரும்போக [பெரும்பாட்டு] ஈரத்தில் புழுதி[பூழி] கலக்க[மயங்க] பலமுறை உழுது விதைத்து[வித்தி] ஊடடித்து[பல்லியாடுதல் - நெருங்கி முளைத்த பயிர்களைப் பிரித்து] பூங்கிளைப் பருவத்தில்[பல்கிளைச் செவ்வி] களையை அடியோடு[களைகால்] நீக்கியதால்[கழாலின்] பூந்தோடு செழித்துப்பெருக[ஒலிபுநந்தி] மெல்லிய மயிலினது முட்டையிட்ட பேடை[புனிற்றுப் பேடை] போல[கடுப்ப] உயர்ந்து[நீடி] ஊதா நிறத்தண்டு[கருந்தாள்] விலக[போகி] எல்லாம் ஒன்றாய் சூழ்[ஒருங்கு பீள்] விரிந்து கீழும் மேலும் எஞ்சாது யாவும் காய்த்து சீராக[வாலிதின்] விளைந்த புதிய வரகை அரிந்தனராம் என்கிறார் கபிலர்.
 மென்மயில் புனிற்றுப் பேடை

கபிலர் இப்பாடலில் வரகின் பூந்தோடு செழித்து வளர்ந்து சூழ் விரிந்து கதிராவதைக் காட்டுகிறார். இங்கு பூந்தோடுகளே முற்றிக் கதிராயின. எனவே கதிராகத் தொங்கும் பூங்கொத்துக்களில் தனித்தனியாக இருக்கும் சிறு பூக்களை தோடு என்றனர் என்பதை நாம் அறியலாம். புல் இனத்திலும் மர இனத்திலும் பூங்கொத்துக்களில் தோடுகளை காணலாம். பெண்கள் அணியும் தோடும் தனியானதே.

அந்நாளைய அரண்மனைகளிலும் கோயில்களிலும் செல்வந்தர் வீடுகளிலும் குடையாகவும் ஆலவட்டமாகவும் இருந்தவை தாளிப்பனையின் ஓலையால் செய்தவையே. பண்டைய தமிழர் பெருவாரியாக இதன் ஓலையில் செய்த குடையை பயன்படுத்தியதால் அது குடைப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. அதன் குடை, ஆலவட்டம், தொப்பி என்பவற்றை நாம் மறந்தாலும் கேரளாவில் இன்றும் செய்கிறார்கள்.
ஆலவட்டம்

தாளிப்பனை 80 அடி உயரத்துக்கு மேலேயும் வளரும். அதன் ஓலை 16 அடி விட்டமுடையதாக இருக்கும். தாளிப்பனை பூப்பதற்கு ஏறக்குறைய ஐம்பதில் இருந்து எண்பது ஆண்டுகள் வரை செல்லும். மரத்தின் உச்சியில் பூக்கும் வெண்ணிறப்பூ பல லட்சம் தோடுகளை உடைய பூங்கொத்துக்களால் ஆனது. பூ இணர்கள் பிஞ்சாகிப் பழமாக ஒருவருடத்திற்கு மேல் எடுக்கும். தாளிப்பனை ஆயிரக்கனக்கான பழங்களை தரும். வாழ்நாளில் ஒருமுறையே பூத்துக் காய்க்கும். Floridaவில் இப்பழங்களில் இருந்து ஒருவகை wine செய்கிறார்கள். பழங்கள் உதிர்ந்ததும் இறந்து போகும்.

இதன் ஓலையில் செய்த பாயை வண்டிகளின் கூரை வேயப் பயன்படுத்தியதை புறநானூறு சொல்கிறது.
“மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்”                                                                                              - (பெரும்பாணாற்றுப்படை: 49 - 50)
மாரி காலத்து குன்றில் மழைமேகம் தவழ்ந்ததுபோல[சுமந்தன்ன] கொத்தளிப்பாய்[ஆரை] வேய்ந்த பாதையை அறைத்துச் செல்லும்[அறைவாய்] வண்டி[சகடம்]. 

கொழும்பு 1952 - உமணர் ஓட்டிய சகடம் இதைவிடப் பெரியது

தாளிப்பனை ஓலையால் செய்த பாய் கொத்தளிப்பாய் எனப்படும். ஆனால் கொத்தளிப்பாய் என்னும் சொல் அதற்கும் மேலே நம் தமிழ் மூதாதையரின்  அறிவின் செழுமையைக் காட்டுகிறது. உமணர் உப்பு ஏற்றிச் செல்லும் வண்டி வெம்மையாக இருக்கும். அந்த வெம்மையைத் தணிப்பதற்கு வண்டியின் கூரையை வேய்ந்த தாளிப்பனை ஓலைப் பாயின் மேல் தாளி வெண்பூங்கொத்துகளை செருகி அலங்கரித்தனர். தாளிப்பனையின் பூங்கொத்து பல காலம் வாடாமலும் குளிர்ச்சியுடனும் இருக்கும். கொத்து + அளி + பாய் = கொத்தளிப்பாய். [கொத்து - பூங்கொத்து; அளி - குளிர்மை]. உப்பேற்றும் வண்டி குன்றுபோல் உயரமாகவும் பருமனாகவும் இருக்க அதன் கூரையில் தாளிப்பனையின் பூங்கொத்து இருப்பது மலைமேகம் தவழ்வது போல இருக்கும் அல்லவா! என்னே அவர்களின் அழகுணர்ச்சி!

சீதாளை என்று தாளிப்பனை ஓலையையும் சொல்வர். சீ என்பது குளிர்மையும் பளபளப்பும் நிறைந்தது என்ற கருத்தில் வரும். ஓலையின் பேற்பரப்பில் மெழுகுத்தன்மை இருப்பதால் தண்ணீர் தங்கி நிற்காது வழிந்து ஓடிவிடும். வெப்பமும் உள்ளே புகாது. ஆதலால் தாளிப்பனை ஓலையால் வேய்ந்த வீடுகளின் கூரைகள் நம் முன்னோரைத் கால நிலை வேறுபாடு தாக்காது காத்தன. நீண்ட காலத்திற்கு உக்காது இருந்தன. பெரிய ஓலையாதலால் குறைந்த ஓலைகளால் கூரைகள் வேயப்பட்டன.

அதன் ஓலை தடிப்பாகவும் அகன்ற விட்டமாகவும் இருந்ததால் ஒரே குடையின் கீழ் பலர் செல்லக்கூடியதாகவும் இருந்தது. பெருங்காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்தது. தாளிப்பனைக்கு அருகே  பனை சிறியதே. ஆறுகளுக்கு குறுக்கே பாலங்கள் கட்ட தாளிப்பனை பயன்பட்டது. குளங்களின் துருசுகளாயும் கிணறுகளின் துலாக்களாயும் பண்டைய தமிழரின் கமத்தொழிலுக்கு கைகொடுத்தது. கோட்டைச் சுவர்களின் பாதுகாப்பிற்கும் துணை புரிந்தது. அகன்ற நீளமான ஓலைச்சுவடிகள் உண்டாக்க உதவியது. அதனால் அரசர்களாலும் புலவர்களாலும் விரும்பப்பட்டது.
கரும்பில் 'தாளை பூத்தல்' நோய்

கரும்பு பயிரிடும் போது மண்ணில் இரும்புச்சத்துக் குறைவால் வரும் நோயை 'தாளை பூத்தல்' என்றே அழைக்கின்றனர். இலையில் நரம்புக்கு இடையே இருக்கும் பகுதி பச்சையம் இன்மையால் வெளிரி இருப்பது தாளை பூத்தது போல் தெரிவதால் அப்படி அழைக்கின்றனர். ஆதலால் தமிழர் முற்று முழுதாகத் தாளிப்பனையை மறந்து போயினர் என்று சொல்ல முடியாது. 

கடல் தென்னை - மாலைதீவு

என் தந்தை, தமிழர் வளர்த்த இன்னொரு அற்புதப்பனை பற்றியும் சொன்னார். அவரின் இளங்காலத்தில் புங்குடுதீவுக் கடற்கரையில் அதன் காய் ஒதுங்குமாம். அதனை எடுத்து விளையாடுவார்களாம். மாலைதீவில் இருந்து கடலலையில் மொத்துண்டு புங்குடுதீவுக் கரைக்கு வந்து சேரும் போது தும்புகள் அற்று பார்ப்பதற்கு இரட்டைத் தேங்காய் போல் தெரியுமாம். உடைத்தால் உள்ளே இரண்டு தேங்காய் இருக்கும் என்றார். அதைக் கேட்டு இது உங்கள் கற்பனையா? என்றேன். சிரித்தார்.
இரட்டைத்தேங்காய்

அது நடந்து ஏழு எட்டு ஆண்டுகளின் பின் என்னை மாலைதீவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பலவைகையான மரங்களைக் காட்டித் தந்தார். முதலில் காட்டியது இரட்டைத் தேங்காய் மரத்தையே. அதன் ஓலை 10 - 12 அடி விட்டமாய் பனை ஓலையைப் போல விசிறியாய் இருந்தது. ஆனால் நம் தமிழ் மூதாதையர் அதனை ‘கடல் தென்னை[ Lodoicea]’ என்று அழைத்தனர். தேங்காய் போல் அதன் காய் இருந்ததால் அப்படி அழைத்தனர் போலும். அதன் தேங்காயை என்னால் தூக்கமுடியவில்லை. இந்தக் கடல் தென்னையின் தேங்காயை இரட்டைத் தேங்காய் அல்லது கடல் தேங்காய் என்றே அழைப்பர். கடல் தென்னை எட்டு ஒன்பது வருடத்தில் காய்க்கும். இயற்கை அன்னை இப்படி எத்தனை எத்தனை அற்புதங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறாள்!
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. பெண்கள் அணியும் தாளி தாளிப்பனை ஓலையில் மணமகன், மணமகள் பெயர்களை எழுதி மஞ்சள் தோய்த்து மணநாளன்று கட்டுவார்களாம். அதனால் தாளி (தாலி,தாழி) என்ற பெயர் பெற்றது என்று என் தமிழாசிரியர் கூறியுள்ளார். தாளிபனை ஓலை எழுத்தாணியில் எழுத வாகாக இருக்குமாம்.நெடுநாள் மக்கிப்போகாமல் இருந்ததை பார்த்திருக்கிறேன்.

    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை, தாளிப்பனையின் ஓலைத் தாளி - தாலியாயிற்று. அதுமட்டுமல்ல முன்னோர் தாளிப்பனை ஓலைத் தாள் மேலே எழுத்தாணி கொண்டு எழுதினர். இன்று வெண்தாள் மேல் எழுதுகிறோம். தாளிப்பனையின் கொடையை மறக்காது இன்றும் ஐந்து ரூபாத்ததாள், நூறு ரூபாத்தாள் என்கிறோம்.

      Delete