Saturday, 24 September 2016

ஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமா?

விசுரவசு முனிவர், கைசிகி

இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் பண்பட்ட தமிழினமே ஈழத்தமிழினம். நம் ஈழத்திருநாடு உலகில் வாழும் மனிதருக்கு நனிநாகரீகத்தை ஈந்த நாகர்கள் வாழ்ந்த நாடு. மன்னாரின் மாந்தையைத் தலைநகராகக் கொண்டே நாகர்கள் ஆண்டார்கள். அதனை சங்க இலக்கியங்களும் மாந்தை மாண்மியமும் மாந்தைப் பள்ளும் மட்டுமல்ல வடமொழி இலக்கியங்களும், வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் கூடச் சொல்கின்றன. திருக்கேதீஸ்வர இறைவனை ‘நாகநாதர்’ என்றே இன்றும் அழைக்கிறோம் என்பதைக் கருத்திற்கொள்வது சிறந்தது. 

பண்டைய ஈழத்தின் மேற்குத் திசையை நாகர்களும் கிழக்குத் திசையை இயக்கர்களும் ஆண்டார்கள் என்பதற்கான தொல்பொருள் ஆதாரங்கள் இன்றும் இருக்கின்றன. கிடைக்கின்றன. நாகர்கள் வணங்கிய திருக்கேதீஸ்வரம் ஈழத்தின் மேற்கே மாந்தையில் இருப்பது போல இயக்கர்கள் வணங்கிய திருக்கோணேஸ்வரம் ஈழத்தின் கிழக்கே இருக்கிறது. அவை இரண்டும் பாடல் பெற்ற தலங்களாகும். 

இவ்விரு கோயில்களுக்கும் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. திருஞானசம்பந்தர் கி பி 640களில் வாழ்ந்தவர். அவர்
“தென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன்                                                                                                    முடிதிண்தோள்
தன்னலங்கெட  அடர்த்து அவற்கருள் செய்ததலைவனார்                                                                                              கடல்வாயப்
பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னியன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே”
                                                  - (பன்னிருதிருமுறை: 2: 107: 8)
என்னும் இத்தேவாரத்தை 1360 வருடங்களுக்கு முன் பாடியிருக்கிறார். 
திருக்கேதீஸ்வரம் [சிவராத்திரி அன்று]

‘இராவணன் மேலது நீறு’  என்று முழங்கிய மேடைப்பேச்சாளர் எவரும் இந்தத் தேவாரத்தில் சம்பந்தர் இராவணனை ‘தென்னிலங்கையர் குலபதி’ எனச் சொன்னதைக் கண்டு கொண்டதில்லை. திருஞானசம்பந்தர் இத்தேவாரத்தை பாடிய காலத்தில் இலங்கையில் சிங்கள மொழியோ, கண்டியன் நடனமோ இருக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே இடப்பட்டுள்ள தலைப்பில் இதனை எழுதுவதற்கான காரணத்தைக் கூறவேண்டியவளாக இருக்கின்றேன்.  24 - 09 - 2016 இன்று ‘tamilwin’ படித்தேன். அதில் ‘ஈழத்தமிழர்களுக்கு என்று ஆடல் வடிவத்தை ஏன் கண்டு பிடிக்க வில்லை?’ என்ற கேள்வியோடு ஒரு செய்தி இருந்தது. அக்கேள்வி தந்த வியப்பைவிட அச்செய்தி கொடுத்த அதிர்வால் இதனை எழுதுகிறேன். என்னைப்போல் உங்களில் பலரும் அச்செய்தியப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அச்செய்தியை வெளியிட்ட tamilwinக்கு என் வாழ்த்து.

அந்தச் செய்தியை அருட்தந்தை நேசன் அடிகளார் சொன்னாரா! அதுவும் வடமாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் மன்னார் மண்ணில் நின்று சொன்னாரா! அவர் கிறிஸ்த்துவர் ஆதலால் அம்மண்ணில் பண்டை நாளில் வாழ்ந்தோர் என்ன செய்தார்கள் என்ற வரலாறு தெரிந்திருக்காது. ஈழத்தின் பண்டைய வரலாறு அறியாதோருக்காக இதனை எழுதுகிறேன்.

முதலில் பரத நாட்டியத்தை நம்முடைய நடனம் என்று சொல்ல முடியாதா? அது இந்தியாவில் இருந்து இங்கு வந்ததா?  இந்தியாவிலிருந்து இங்கு[ஈழத்திற்கு] வந்த கர்நாடக இசையையும், பரதநாட்டியத்தையும் நம்முடைய பாரம்பரரிய இசை வடிவம் என்றோ, கலை வடிவம் என்றோ நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாதா? அதைக் கொஞ்சம் பார்ப்போமா!

மாந்தையைத் தலைநகராகக் கொண்டு பண்டைய ஈழத்தின் வடமேற்குப் பகுதியை ஆண்டவன் மயன். அவன் துகளினுள்[அணுவினுள்] இருந்து ஒடுங்கி விரியும் ஒளியின் சீரான நடுக்கத்தை கண்டறிந்திருந்தான். அவனது மகள் வண்டமரோதி/வண்டோதரி/மண்டோதரி சிறுமியாக இருந்தாள். [அவளை திருஞானசம்பந்தர் வண்டமரோதி என்று சொல்ல, மணிவாசகர் வண்டோதரி எனக் கூற கம்பர் மண்டோதரி என்றார்.] ஒரு நாள் அவளது தாய் “சிவலிங்கத்தைப் பாடி வணங்கினால் சிவன் உன்னுடன் ஆடவருவான்” என்று சொன்னாள். “எப்படி கை, கால் இல்லாத சிவலிங்கம் ஆடும்” என அவள் தன் பெற்றோரைக் கேட்டாள். அதனால் அணுவினுள் ஒளிரும் சீரான நடுக்கத்தை ஆடல் என்று கூறி அந்த ஆடலுக்கு மயன் கொடுத்த மானுடவடிவமே நடராசர் சிலையாகும். அதனை ‘மாந்தை மாண்மியம்’ கூறுகிறது. 


மன்னார் நிலப்பரப்பிலேயே மயன் நடனராஜனுக்குச் சிலை அமைத்தான். அத்தகைய பெருமையுடைய மன்னாரில் நின்று பரதநாட்டியம் நமது இல்லை என்று சொல்லலாமா! மயன் நடராஜ சிலையை அமைத்த காலத்தில் பரதசாஸ்திரம் எழுதிய பரதமுனிவர் பிறக்கவுமில்லை. இன்று நாம் அழைக்கும் பரதநாட்டியம் என்ற சொல்லும் இருக்கவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தரதாசரே ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்பர்.

மயனைப் பற்றியும் வண்டமரோதியைப் பற்றியும் முன்னர் பலமுறை எழுதியும் பேசியும் இருக்கிறேன். புதிதாக இப்போது இதைக் கூறவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்கிறேன். ஈழத்தின் தொன்மையை அறிய linkஐ அழுத்திப் பார்க்குக.

மாந்தை மாண்மியமும் உத்தரகோச மங்கை புராணமும் சொல்லும் வண்டமரோதியின் கதையை ‘நித்திய கன்னி’ என்ற பெயரில் நாட்டிய நாடகமாக எழுதினேன். அந்நாடகத்தை அன்றைய இலங்கை வானொலி புகழ் யோகா தில்லைநாதன் அவர்களின் மகள் துளசி     10 - 06 - 1995 அன்று Acton Town Hallல் அரங்கேற்றினார்.

இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரத முனிவர் ‘நாட்டிய சாஸ்திரத்தை' எழுதுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே நமது ஈழத்தில் நாட்டியம் மிக வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது என்பதற்கு  ‘நாட்டிய சாஸ்திரமே' சாட்சி. அவர்
“தக்ஷிணாத்யாஸ் தாவத்
பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச”
எனக் கூறுகிறார். இதில் தக்ஷிணாத்யாஸ் என்று அவர் குறிப்பிடுவது தென்னவர்களை. அதாவது தென் நாட்டவர். எங்கே இருக்கிறது தென் நாடு? அத்துடன் ‘கைசிகீ’ என்று ஓர் அரிய பெயரைச் சொல்கிறார் பாருங்கள். இராவணனின் தாயே அந்தக் கைசிகி. இலக்கியங்கள் இவளை கைசிகி என்றும் கைகசி என்றும் சொல்வதைக் காணலாம். கைசிகியைப் பற்றி நாட்டிய சாஸ்திரத்தில் பல இடங்களில் பரதமுனிவர் குறிப்பிட்டுள்ளார்.


இப்போதுள்ள பரதநாட்டிய பாணிகளை பந்தணை நல்லூர் பாணி, வழுவூர் பாணி என்று சொல்வோமே அதுபோல் கைசிகி பாணியை சிவன்[நீலகண்டன்] ஆடியதாகவும் நாட்டிய சாஸ்திதிரம் கூறுகிறது.
“I have witnessed the Kaisiki style during the dance of the blue-throated lord”
                                                    - (The Natya Sastra: 1: 45 - 46)

நாட்டியத்தில் நான்கு வகை விருத்திகள் உண்டு. அதில் ஒன்று கைசிகி விருத்தியாகும்.
“Thereupon the Kaisiki vrtti was evolved graceful style”
                                                    - (The Natya Sastra: 22: 13)

“The Bharati vrtti was from the Rgveda; the Sattvati from the Yajurveda; Kaisiki from the Samaveda and the remaining one i e. Arabhati from the Atharvaveda”
                                                     - (The Natya Sastra: 22: 24)

தமிழ் நூல்கள் மட்டுமல்ல வடமொழி நூல்களும் இராவணன் சாமகானம் பாடி இறைவனை வணங்கியதாகாக் கூறும். திருஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில்
“சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும் 
நாம தேயம் அது உடையார்”
                                                  - (பன்னிருதிருமுறை: 2: 92: 8)
என இராவணன் சாமவேதம் பாடி வணங்கியதைச் சொல்வார். இராவணனின் தாய் கைசிகி சாமவேதத்தில் வல்லவளாக இருந்ததால் இராவணன் இசைவல்லவனாய் சாமவேதம் பாடியது பெருவியப்பில்லை.

“Kaisiki vrtti (graceful style) They call Kaisiki vrtti if is extremely interesting thanks to the delicate costumes worn by the characters mostly women; and if it comprises of diverse types of dances and songs and the themes are the activities conducive to the enjoyment of love”
                                                     - (The Natya Sastra: 22: 47)

சிருங்கார ரசத்தையே பொதுவாக கைசிகி விருத்தி என்பர். இராவணனின் தந்தை விசுரவசு முனிவரும் ஆடற்கலை பயின்றதாக நாட்டிய நூல்கள் சொல்கின்றன. விசுரவசு முனிவரின் பெயரில்லாது பரதக்கலையின் பரம்பரையைச் சொல்லமுடியாது. மேலே உள்ள படத்தில் [இசுருமுனிய - விசுரமுனிவர் கோயிற் புடைப்புச் சிற்பத்தில்] இராவணனின் தாய் தந்தையர் இருக்கின்றனர். அதில் கைசிகி இருக்கும் நளினம் அவள் ஆடற்கலையில் தேர்ந்தவள் என்பதைக் காட்டுவதோடு விசுரவசு முனிவர் இருக்கும் பாங்கும் கைசிகியை மடியில் வைத்திருக்கும் நேர்த்தியும் அவரையும் ஆடற்கலை வல்லவராகவே காட்டுகிறது.

இராவணன் இசையில் மட்டுமல்ல தாய் தந்தையரைப் போலவே நாட்டியத்திலும் சிறந்து விளங்கினான் என்பதையும் நாட்டிய நூல் எழுதினான் என்பதையும் “மகாபரத சூடாமணி’ என்னும் நாட்டிய நூல் சொல்கிறது.
“திறமான ராவணனும் வாணாசுரன்……
முறையாக நூல்களை உண்டாக்கித் தாமுமுன்வி
  நடித்தும் உலகோர்க்கு உரைத்திட்டானே”
                                                   - (மகாபரத சூடாமணி: 1: 11)

நாட்டியம் ஆடுவதற்கு வேண்டிய கை அமைதிகள் பதினாறில் ஆறு இராவணன் கூறியதாம்.
“கமழ்தச வதனன் ஆறு புஜபேதங் கருதினானே”
                                                   - (மகாபரத சூடாமணி: 1: 134: 8)
அவை 
உத்வர்த்திகம் - கையை உயரச் சுற்றல்
பிருஷ்டானுஸாரிதம் - கையப் பின்னே நீட்டல்
நம்ரம் - கையை வளைத்து ஏந்துதல்
சரலம் - கையை பக்கத்தில் நீட்டி உள் வாங்குதல்
ஆந்தோளிதம் - கையை அகல வீசி நடத்தல்
உத்ஸாரிதம் - நளினமாகப் போகச்சொல்லி கைகாட்டி நடத்தல்

இப்படித் தாயும் மகனுமாக ஈழத்தில் வளர்த்த நாட்டியக்கலையை எப்படி நமது இல்லை என்று சொல்லமுடியும்? நாம் ஏன் சொந்தங் கொண்டாட முடியாது? ‘மறந்த சொத்து மக்களுக்கும் இல்லை’ என்பது இதைத்தானோ!

பஞ்சாபி என்ற மொழியே 10ம் நூற்றாண்டில் தோன்றிய ஒன்றாகும். பஞ்ச + அப் = பஞ்சாப்[ஐந்து ஆறுகள்] என வரும். இச்சொல்லில் உள்ள ‘அப்’ என்பது தமிழ்ச்சொல்லான ‘அப்பு’ என்பதன் திரிபாகும். அப்பு என்றால் தண்ணீர். தண்ணீரைப்போல் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டியவர் என்ற கருத்தில் தந்தையை ‘அப்பு’ என்று ஈழத்தமிழர் அழைத்தனர். இன்றும் கூட பிள்ளைகளை ‘அப்பு இங்கே வா!’ என அழைக்கிறோம் அல்லவா? பங்காரா ஆடல் வடிவம் [Bhangra dance] பஞ்சாப் மாநில மக்களது அறுவடையின் கொண்டாட்டமாக [harvest celebration] புதுவருடத்தின் போது சித்திரை மாதம் 13 - 14ம் திகதிகளில் வழிவழியாக ஆடப்பட்டு வந்ததாகும். ஆண்களே இந்த நடனத்தை ஆடினார்கள். 

கண்டியன் நடனம் பேயோட்டும் நடனாமாகத் தோன்றியதால் [சங்க கால வெறியாடல்] ஆண்கள் மட்டுமே ஆடினர் ஆதலாலும் பங்காராவில் வாசிக்கப்படும் ‘டோல்’ [Dhol] மத்தளம் போல் கண்டியன் நடனத்திலும் ‘கெத்த பெர’ [Geta Beraya] மத்தளம் இருப்பதாலும் பங்காரா கண்டியன் நடனத்தில் கலந்தது என்று சொல்லமுடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே பங்காரா மெல்ல வளர்ச்சி அடைந்தது. 1954ல் முதல் முதல் மேடையில் ஆடப்பட்டது. தமிழரின் சிங்களக்கூத்து வடிவமே கண்டியன் நடனத்தின் அத்திவாரமாகும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய ஆடலை
“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு”
                                                          - (சிலம்பு: 3: 12 - 15)
என இளங்கோவடிகள் சொல்கிறார். அதற்கு விளக்க உரை எழுதிய அடியார்க்கு நல்லார் “இருவகைக் கூத்தாவன:- சாந்தியும் விநோதமும் என்னை?
“சாந்திக் கூத்தே தலைவனின் இன்பம்
ஏந்தி நின்றாடிய ஈரிரு நடமவை
சொக்கம் மெய்யே அவிநய நாடகம்
என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”
சொக்கமென்றது சுத்தத நிருத்தம். அது நூற்றெட்டு கரணமுடைத்து.
மெய்க்கூத்தாவது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்தாயின” என்கின்றார். அடியார்க்கு நல்லார் கி பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர்.

சிவன் ‘சொக்கம்’ என்ற சுத்த நிருத்தத்தை நூற்றெட்டு கரணங்களுடன் ஆடியதால் சொக்கநாதர் என அழைக்கப்பட்டார். மெய் - உடல். சிங்களக்கூத்து கரணங்கள் இல்லாத உடல் அசைவுகளால் செய்யப்படும் கூத்தாதலால் மெய்க்கூத்து என அழைக்கப்பட்டது. பண்டைத் தமிழரின் சிங்களக் கூத்து பற்றி கீழ் உள்ள linkல் பார்க்கவும்.

ஈழத்துக் கூத்து வடிவங்களின் சில ஆடல் வடிவங்கள் கண்டியன் நடனத்துள் உள்வாங்கப்பட்டுள்ளது உண்மையே.

‘ஈழத்தமிழருக்கான ஆடற்கலை வடிவம் ஒன்றினை ஏற்படுத்துகின்ற முன்முயற்சிகள் சிலவற்றை ஆடற்கலைஞர் வேல் ஆனந்தன் போன்றோர் ஏற்கனவே ஆரம்பித்து உள்ளனர்’ என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. ஒன்றல்ல பல ஆடற்கலை வடிவங்களை உருவாக்குவதால் ஆடற்கலை சிறக்கும். வேல் ஆனந்தன் அவர்கள் சேர்ந்து செய்வதாயின் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நான் சிறுமியாக இருந்த போது எனக்குப் பரதத்தின் அரிச்சுவடியைக் கற்றுத்தந்தவர். அவர் இந்தியாவில் பரதம் பயின்று தேர்ச்சி பெற்று வந்த நேரம் பண்டிதர் ஆறுமுகன் [எனது தந்தை] அதிபராக இருந்த பாடசாலையில் கற்பித்தார். அப்போது எங்களுடன் இருந்தார். எனக்கு ஆடற்கலையில் ஈடுபாடு வருவதற்கு வேலானந்தம் அவர்களும் காரணமாவார். 

நம் ஈழத்தில் உள்ள சப்ததீவுகளிலே இசைச்சுரங்கள் பிறந்தன. அந்த உண்மையை சாரங்கதேவர் தானெழுதிய 'சங்கீத ரத்னாகரம்' என்ற நூலில் எழுதியுள்ளார். அதனை நான்  எழுதிய “ஏழிசையும் பிறந்தன இங்கே” என்ற கட்டுரையை வாசித்தவர்கள் அறிவர். எனவே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் நம் ஈழத்தமிழ் முன்னோர் எமக்கு அளித்த பெருநிதியம் என்றே கொண்டாடவேண்டும். 
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. அருமையான திறனாய்வுக் கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    ReplyDelete