Tuesday 23 August 2016

புள்ளி வைத்து கால் எடுப்போமா?

தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று தண்டியலங்காரம். அந்த நூலை எழுதிய ஆசிரியரின் பெயர் தண்டி. அவர் அந்நூலில் தமிழின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களில் ‘அணி இலக்கணம்’ பற்றி விளக்கியுள்ளார். அணி இலக்கணத்தை விளக்குவதற்கு சில பாடல்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார். அப்பாடல்களை யார் யார் எழுதினார்கள் என்பதை அறியமுடியவில்லை. அவை பழைய பாடல்கள் என்று பலர் சொல்ல சிலர் அவர் எழுதியதாகச் சொல்கிறார்கள். தண்டியலங்காரம் எழுதியே ஆயிரத்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே எமக்கு அப்பாடல்கள் யாவும் பழமையானவையே.

பெண்ணைப் பற்றிப் பாடுவோரே புலவர்கள் என்று சொல்லும் அளவுக்கு பெண்களை வைத்துப் புலவர்கள் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இந்தப் பெயர் அறிய முடியாத புலவர் என்னவெல்லாம் சொல்கிறார் பார்ப்போமா?

அழகிய பெண்களின்[நேரிழையார்] கூந்தலில் ஒரு புள்ளி வைத்தால் நீண்ட மரமாக மாறும் என்கிறார். அதுபோல நீர் நிலையில் ஒரு புள்ளி வைத்தால் அது நெருப்பாகுமாம். காடு அதில் ஒன்றை நீக்கினால் இசையாய் மாறிவிடும் என்றும் அந்த இசையில் மீண்டும் ஒன்றை நீக்கினால் கழுத்தாகும்[மிடறு] என்றும் கூறியுள்ளார்.

“நேரிழையார் கூந்தலில் ஓர் புள்ளி பெற நீள் மரமாம்
நீர்நிலை ஓர் புள்ளி பெற நெருப்பாம் - சீரிய
காடு ஒன்று ஒழிப்ப இசை ஆகும் அதனுள்ளும்
மீட்டு ஒன்று ஒழிப்ப மிடறு”
                                  - (தண்டியலங்ககார மேற்கோள் வெண்பா)

இது என்ன பாடலா? பிதற்றலா? அப்படித்தானே எண்ணத் தோன்றுகிறது! இந்தப் புலவரை என்ன என்று அழைப்பது?  அழகிய பெண்களின் கூந்தலுக்கு அவர் ஒரு புள்ளி வைத்ததும் சின்ன மரமும் அல்ல நீண்ட மரமாகுமாம். மரம் தேவை என்றால் பெண்களின் கூந்தலுக்கு புள்ளி வைக்கலாமோ? நீர் நிலைகளை புள்ளி வைத்து நெருப்பாக்கினால் தண்ணிக்கு எங்கு போவது? 

தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களில் எ, ஒ ஆகிய எழுத்துக்களை இன்று நாம் எழுதுவது போல் அக்காலத்தில் எழுதுவதில்லை. மேல் ஒரு புள்ளி வைத்தால் அதனை என்று படிப்பர். அதுபோல் மேல் ஒரு புள்ளி வைத்தால் என்று படிப்பர். பெண்களின் கூந்தலை 'ஓதி' என்றும் அழைப்பர். இராவணனின் மனைவியின் பெயரை திருஞானசம்பந்தர் ‘வண்டமரோதி’ என்று தமது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். வண்டு அமரும் கூந்தலை உடையவளே வண்டமரோதி = வண்டு + அமர் + ஓதி. அவளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் வண்டோதரி என்கின்றார். கம்பர் மண்டோதரி என்றார். பெண்களின் கூந்தலாகிய ஓதி என்ற சொல்லின் ஓ மேல் ஒரு புள்ளி வைத்தால் அது ஒதி ஆகும். பெண்களின் கூந்தலாகிய ஓதி புள்ளி வைத்ததும் ஒதியமரம் ஆகும். நீர் தேங்கி இருக்கும் இடத்தை 'ஏரி' என்றும் அழைப்போம். ஏரி என்ற சொல்லின் ஏ மேல் ஒரு புள்ளி வைத்தால் அது எரி[நெருப்பாகும்] ஆகும்.

நாம் சிறுவயதில் தமிழ் எழுதப் பழகியதை கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். கனாவுக்கு[க] பக்கத்தில் கால்[அரவு] போட்டு காவன்னா[கா] எழுதியது நினைவிருக்கிறதா? அதனையே கடைசி இரண்டு வரிகளில் சொல்கிறார். காட்டைக் காந்தாரம் என்றும் சொல்வர். காந்தாரம் என்ற சொல்லிலுள்ள ‘கா’ எழுத்தின் காலை எடுத்தால்[ ஒழிப்ப] கந்தாரம் ஆகும். ஓர் இசைப்பண்ணின் பெயர் கந்தாரம். இந்தக் கந்தாரம் என்னும் இசைப் பண்ணின் சொல்லிலுள்ள ‘தா’ எனும் எழுத்தின் காலை எடுத்தால் கந்தரம் ஆக மாறும். கழுத்தைக் கந்தரம் என்பர்.

புள்ளி வைத்து கால் எடுத்து மீண்டும் பாடலைப் படித்துப் பாருங்கள் புலவரின் புலமை புரியும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment