Sunday, 28 August 2016

நுணலும் தன் வாயாற் கெடும்!


“மணலுண் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந் தன் வாயாற் கெடும்
                                                 - (பழமொழி நாநூறு: 114)
நுழல் என்பதே நுணல் ஆயிற்று. தழல் - தணல் ஆதல் போல். தமிழுக்கே உரிய ‘ழ’ கரம்  பேச்சு வழக்கில் ‘ண’ ஆக மாறுகிறது. நுழல் - நுணல் - தவளை இனத்தின் பொதுப்பெயர். மண்ணினுள் உறங்குநிலையில் வாழும் தவளையை நுழல் - நுணல் என்பர். மண்ணினுள், கல்லினுள், மர இடுக்கினுள் நுழைந்து வாழ்வதால் நுழல் என்பர். உறங்கு நிலையில் வாழும் தவளை மழை பொய்ததும் மகிழ்ச்சில் துள்ளி ஆரவாரமாய் சத்தம் போடும். அப்போது தவளையை உண்ணும் விலங்குகள் [பூனை, நரி] அதனைப் பிடித்து உண்ணும். தவளையின் ஆர்ப்பாட்டம் அதன் உயிருக்கு உலைவைப்பதால் தவளையும் தன்வாயால் கெடும் என்பர். தவளை போடும் சத்தத்தைக் கேட்டு பாம்பு தவளையைப் பிடிப்பதில்லை.

பாம்பு தன் இரையை கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இரைகளின் உடல் வெப்பத்தைக் கொண்டே அவற்றைப் பகுத்தறிகின்றன. பாம்பு பார்க்கும் இடங்கள் யாவும் Infra red rays காரணமாகச் சிவப்பாகத் தெரியும். பாம்பின் கண்களுக்கு அருகே ஒரு சிறு குழி உண்டு. அது எமது செவிப்பறை போல ஆனால் இரைகளின் உடல் வெப்பநிலையை உணர்ந்தறியும் உறுப்பாகத் தொழிற்படுகிறது. கண்ணருகே இருக்கும் அவ்வுறுப்பைக் கொண்டு பாம்புகள் கேட்காததால் தமிழர் பாம்பை ‘கட்செவி’ என்று அழைத்தனர். 

“கரகம் உந்திய மலை முழையில் கட்செவி
உரகம் முந்தின”
                                                       - (கம்பரா: 8343)
குடத்தைப்[கரகம்] போன்ற மலைக் குகைகளில்[முழையில்] கண்ணே செவியாக[கட்செவி] உடைய பாம்புகள்[உரகம்] புகுந்தன என்கிறார் கம்பர். அதாவது கண்ணே செவியாகவும் செவியே கண்ணாகவும் தொழிற்படும் என்ற கருத்தில் தமிழர் பாம்பைக் கட்செவி என்றனர். இன்றைய விஞ்ஞானமும் அதனை ஏற்கத்தான் செய்கிறது.

பாம்புகள் இரை தேடும் போது பார்த்திருக்கிறீர்களா? அது தன் நாக்கை வெளியே நீடியும் உள்ளே இழுத்தபடி ஊர்ந்து செல்லும். அப்படிச் செல்லும் பொழுது சுற்றுச் சூழலின் மணத்தை வைத்து இரைகளின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளும். பாம்பின் நாக்கில் உள்ள நரம்புகள் மணத்தை உணர உதவும் உறுப்பை 1813 ம் ஆண்டு Ludwig Jacobson கண்டுபிடித்தார். அதனால் அவ்வுறுப்பு Jacobson’s Organ [Vomeronasal Organ] என்றும் அழைக்கப்படும். பாம்புகள் மட்டுமல்ல உடும்பு, பல்லி, ஓணான் போன்ற ஊர்வன[reptile] யாவும்  தமது உணவை அவற்றின் மணத்தைக் கொண்டு அறிந்து பிடித்து உண்கின்றன என்பதே இன்றைய விஞ்ஞானம் சொல்லும் செய்தியாகும்.
இனிதே,
தமிழரசி.

9 comments:

  1. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  2. இதை என் முக நூலில் பகிர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
  3. இது தான் உண்மை, மகிழ்ச்சி

    ReplyDelete
  4. விஞ்ஞான பூர்வமான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி மீண்டும் புதிய ஒன்றை அறிந்து கொண்டேன் உங்கள் மூலமாக உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் இறை அருள் என்றும் உங்களுக்கு

    ReplyDelete