Monday 15 August 2016

குறள் அமுது - (120)


குறள்:
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்”                           - 120

பொருள்:
வாணிகம் செய்வோர் பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணி இலாபத்தைப் பெறவேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் கடைசிக் குறளாக உள்ளது. வாணிகம் என்றால் ஊதியம் அல்லது இலாபம் என்ற கருத்தைத் தரும். வியாபாரத்தால் பெறுவது இலாபம் ஆதலால் வாணிகம் என்று வியாபாரத்தை அழைத்தனர். ஒரு பொருளை விற்றுக் கிடைக்கும் இலாபத்தை[வாணிகத்தை] பெறுவோரே வாணிகர் [வியாபாரிகள்]. எனவே வியாபாரம் செய்வோர் நடுவு நிலைமையோடு வியாபாரம் செய்ய வேண்டுமாம்.

எத்தொழிலைச் செய்தாலும் அதனால் இலாபம் பெறுவோர் யாவரும் வாணிகர்களே. பொருட்களை விற்பனை செய்வோர் நடுவு நிலைமை இல்லாமல் கூடுதலான இலாபத்தைப் பெற்று உலகின் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார்கள். இன்றைய உலகில் அது பெருமைப்படும் செயலாகாக் கருதப்படுவதால் அவர்கள் போற்றப்படுகிறார்கள். நம் கண்கள் விழித்திருக்க மனித நேயம் சிறிதுமின்றி அவர்களிடும் கொள்ளையும் சுரண்டலும் [இலாபங்கள்] எமக்குத் தெரிவதில்லை.

ஆனால் பண்டைத்தமிழர் வாணிகத்தால்[இலாபத்தால்] இட்ட கொள்ளையை நடுவு நிலைமையோடு செய்த கொள்ளை எனப்   பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கிய நூல்
“கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை”
                                            - (பட்டினப்பாலை: 205 - 212)
என்று சொல்கிறது. 'வளைந்த[கொடு] கலப்பையை[மேழி] விரும்பும்[நசை] - உழவுத்தொழிலை விரும்பும் உழவரது நீண்ட நுகத்தில் உள்ள பகலாணி போல [நுகத்தையும் கலப்பையையும் இணைக்கும் நுகத்தாணி] பக்கச் சார்பு இன்றி நடு நிலைமையோடு பழிக்கு அஞ்சி உண்மையைக் கூறும் நல்ல நெஞ்சம் உடையவராய் தமது பொருளையும் மற்றவர் பொருளையும் ஒன்று போல் பார்த்து தாம் எடுப்பதை அதிகமாக எடுக்காமலும் கொடுப்பதைக் குறைத்துக் கொடாமலும் பலவகைப் பொருட்களின் இலாபத்தையும் வெளிப்படையாகச் சொல்லிக்[பகர்ந்து] கொடுக்கும்[வீசும்] பழமை மிக்க[தொல்] கொள்ளையினையும்[கொண்டி] நெருங்கிய[துவன்று] குடியிருப்பையும் உடையது காவிரிப்பூம் பட்டினம் என்கிறது. 

பட்டினப்பாலையைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனக்கும் ஒருபடி மேலே சென்று இலாபம் பெறுவதை ‘பழங்காலத்தில் இருந்து வரும் கொள்ளை’[தொல் கொண்டி] என்று கூறியிருப்பதைப் பாருங்கள். நுகத்தாணி மாடுகள் இரண்டு, கலப்பை ஆகிய மூன்றுக்கும் நடுவாக இருப்பது போல மொத்த வாணிகர், சிறு வாணிகர், கொள்வோர் ஆகிய மூவர்க்கும் நடுநிலையாக இலாபம் பெறுதல் இருக்க வேண்டும்.

பெறுவதை அதிகம் பெறாமலும் கொடுப்பதை குறைத்துக் கொடாமலும் நடுநிலையோடு வாணிகம் செய்வதையே திருவள்ளுவர் ‘பிறவும் தமபோல் செயின்’ எனக் கூறியுள்ளார். ஆதலால் இலாபம் பெறுவோர்[வியாபாரம் செய்வோர்] பொருட்களுக்கான பணத்தை கூடுதலாக வாங்கி, கொடுக்கும் பொருளை குறைத்து அல்லது தரம் குறைந்ததாகக் கொடாது நடுவு நிலைமையோடு இலாபத்தைப் பெற வேண்டும். 

No comments:

Post a Comment