Wednesday 27 July 2016

புங்குடுதீவு எனும் அன்றில் தீவு

அன்றில் [குருகு] - கிரௌஞ்சம்

“கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது…………”
                                                 - (ப.திருமுறை: 8: 20: 3)
என்கின்றார் திருப்பள்ளியெழுச்சியில் மாணிக்கவாசகர். இதிலே வரும் குருகுகள் என்பதற்குப் பலரும் பறவைகள் என்றே பொருள் எழுதியுள்ளனர். குருகுகளைப் பறவைகள் என்றால் குயிலும் கோழியும் பறவையுள் அடங்காதா என்ற கேள்வி எழுகின்றது. நீர்வாழ் உயிர்களை உண்டு வாழும் பறவைகளை குருகுகள் என்பர். குயிலும் கோழியும் [நீர்க்கோழி வேறு] நீர்வாழ் உயிர்களை உண்டு வாழ்வதில்லை. அவற்றைப் பிரித்துக் காட்டவே குருகுகள் என்றார். தமிழர் பெரும்பாலும் குருகுகள் என்று அன்றில் நாரை இரண்டையும் அழைத்தனர் என்பதை கலித்தொகைக்கு நச்சினார்க்கினியார் எழுதிய உரை தருகிறது. [கலித்தொகை - கழகவெளியீடு - 1965; பக்கம் 382]. பண்டைத் தமிழர் அன்றிலை கரிஞ்சம் என்றும் அழைத்தனர். தற்காலத்தில் அரிவாள் மூக்கன் என்று கூறுவர். [Scientific name: Plegadis falcinellus]

அன்றில் தீவைப்பற்றி அறிய முன்பு அன்றில் பறவைகளின் ஒரு சில வகைகளையும் அவை நெய்தல் நிலத்தில் [கடலும் கடல் சேர்ந்த நிலத்தில்] வாழ்வதையும், எம் தமிழ் முன்னோர் குருகு என்றவுடன் அன்றில் என இனங்கடண்டதையும் அவர்கள் கூறியவற்றில் இருந்து அறிவோமா?

‘கடலைத்தாண்டியது போல இருமடங்கு வேகமாகத் தாண்டினாலும்  இலங்கையின் இடைநகரில் இருக்கும் அகழியைக் கடக்கமுடியாது’ என அநுமன் சொல்வதாகச் சுந்தரகாண்டத்தில் கம்பர் சொல்கிறார். இலங்கையில் இருந்த அந்த அகழியில்
“உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே”
                                                   - (க.இரா: சுந்.கா: 151)
இவ்வளவு பறவைகளும் ஒலிஎழுப்பினவாம். மகன்றில் என்பது அன்றில் பறவைகளில் ஒரு வகை. இவற்றின் கால்கள் கட்டையாக இருக்கும். அதனை ஐங்குறுநூறு
“………………… வார்சிறைக் 
குறுங்கால் மகன்றில்”
                                               - (ஐங்குறுநூறு: 381: 3 - 4)
எனக்கூறுவதால் அறியலாம்.
பகன்றில்

வெள்ளை நிற அன்றில் பகன்றில் என அழைக்கப்படும் [பகல் + அன்றில் = பகன்றில்]. செந்நிற அன்னத்தை சென்னம் என்பர். 
திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில்
“பகரத்தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப் பொழில்சேர் சண்பை நகராரே”
                                                  - (ப.திருமுறை: 1: 66: 3)
எனப் பகன்றிலைக் குறிப்பிடுகிறார். தகரம் [தகரச்செடியல்ல, இதுமரம் - Cassia glauca], புன்னை, தாழை யாவும் நெய்தல் நிலத்தாவரங்கள். சீர்காழியின் இன்னொரு பெயர் சண்பைநகர். அதுவும் நெய்தல் நிலமே. 

நம் முன்னோர்கள் அன்றில் பறவையை அவற்றின் உயரத்தை, நிறத்தைக் கருத்தில் கொண்டு மகன்றில், பகன்றில் என்று பெயரிட்டதோடு அவை எழுப்பும் குரலையும் இமிழல், நரலல், அகவல், உளரல் என்றெல்லாம் அழைத்துள்ளனர். அன்றில் பறவை ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும். அப்படி இணைந்து வாழும் போது எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் பெண் அன்றில் கருவுற்றிருக்கும் போது எழுப்பும் குரலை ‘அகவல்’ என்றும் அழைத்தனர் என்பதைக் குறுந்தொகை காட்டுகிறது. 
“நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலும்
                                                 - (குறுந்தொகை: 160: 1 - 4)

செந்தலை அன்றில்

நெருப்பைப் போன்ற சிவந்த தலையுள்ள அன்றில், இறால் போன்ற வளைந்த அலகு [கொடுவாய்] உடைய பெட்டையோடு தடா[தடவு] மரத்தின் உயர்ந்த கிளையின் [ஓங்குசினை] கூட்டில்[கட்சி] சேர்ந்திருந்து துணையைப் பிரிந்தோர் வருந்துமாறு [கையற] சத்தம்[நரலும்] செய்கிறதாம்.

“முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமடல் இழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுங்சூல்
வயவுப்பெடை அகவும்
                                                  - (குறுந்தொகை: 301: 1 - 4)

கருங்கால் அன்றில்

முழவு போன்ற அடியோடு பெரிதாய் நிற்கும்[தடவுநிலை] பனையின்[பெண்ணை] ஒன்றோடொன்று கொழுவிய ஓலையில்[கொழுமடல்] சிறுகுச்சிகளைக்[சிறுகோல்] கொண்டு கட்டிய[இழைத்த] கூட்டில்[குடம்பை] வாழும் கரிய காலையுடைய அன்றில் பெட்டை[பெடை] கருவுற்ற[கடுஞ்சூல்] நோயால் சத்தம்[அகவும்] செய்யுமாம்.

பண்டைத் தமிழர் எந்த அளவுக்கு அன்றிற்பறவைகளை நேசித்திருந்தால் இப்படியெல்லாம் பாகுபடுத்திப் பெயரிட்டு அழைத்திருப்பர்! 

குருகுகளாகிய அன்றில்கள் நெய்தல் நிலப்பறவை என்பதை
 “கழி தேர்ந்து அசைஇய கருங்கால் வெண்குருகு
அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும்”
                                                   - (குறுந்தொகை: 303 :1 - 3)

கருங்கால் வெண்குருகு 
இன்றும் புங்குடுதீவு கள்ளியாற்றில் இரைதேடுகின்றன

உணவுக்காக கழிநீரை ஆராயும் கரிய கால்களுள்ள வெண்நிறக் குருகுகள் கரையில் இருக்கும் தாழையில் கூடியிருந்து பெரியகடலலை மோதும் சத்தத்தில் தூங்கும் எனவும்

"தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரை மாந்திப்
பெண்ணைமேல் சேக்கும் வணர்வாய் புணர் அன்றில்
                                                      - (ஐந்திணையெழுபது: 55:1 - 2)
தெளிந்த நீருள்ள கடல் கழிமுகத்தே விரும்பிய இரையை உண்டு பனைமரத்தின் மேல் தங்கும் வளைந்த வாயையுடைய இணைபிரியாத அன்றில் என்றும் கூறுவதால் அறியலாம். 

அத்துடன் வளைந்த வாயையுடைய அன்றில் பனையின் மேல் தங்குவதைப் போல் வளைந்த வாயையுடைய குருகும் பனையில் வாழ்வதாக
“புலவுநாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடரைப் பெண்ணை தோடுமடல் ஏறி
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய
உயிர்செலக் கடைஇப் புணர்துணைப்
பயிர்தல் ஆனா பைதலம் குருகே
                                                   - (நற்றிணை: 338: 8 - 12)
என நற்றிணை சொல்கிறது. புலால் மணம் வீசும் சிறு குடியிருப்பின் மன்றத்தில் வளர்ந்துள்ள பருத்த அடியையுடைய பனை ஓலைமடலில் ஏறியிருந்து வளைந்த வாயையுடைய பேடையை கூட்டிற்கு[குடம்பை] வந்து சேருமாறு உயிர் போகும்படி குருகும் காமமயக்கத்தில்[பைதலம்] கூவிக்கொண்டிருந்ததாம். மன்றத்துப் பனையில் இருந்து அன்றில் கூப்பிடும் என்பதை
“மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்
                                                  - (குறுந்தொகை: 177: 3 - 4)
என்கிறார் சங்ககாலப் புலவரான உலோச்சன். இவை அன்றிலைக் குருகு எனவும் அழைத்தனர் என்பதைக் காட்டுகின்றன. மன்றத்துப் பனைகளில் மட்டுமல்ல வீட்டைச்[மனை] சேர்ந்துள்ள பனையில் வளைந்த[மடி] வாயையுடய அன்றில் வாழ்ந்ததை
“மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
                                                  - (பரிபாடல்: 58: 11] 
பரிபாடல் காட்டுகிறது.

அன்றில் பறவையே இராமாயணம் பிறப்பதற்கு முதற்காரணம் என்பதை வால்மீகி இராமாயணத்தின் முதல் சுலோகம் சொல்கிறது. அவர் அந்தச் சுலோகத்தில் ‘கரிஞ்சம்’ என்ற தமிழ்ச் சொல்லால் அன்றில் பறவையைக் குறிப்பிட்டார். இப்போது வரும் நூல்களில் ‘கரிஞ்சம்’ எனும் தமிழ்ச்சொல் ‘க்ரௌஞ்சம்’ ஆக சமஸ்கிருதமாய் மாற்றப்பட்டுள்ளது. 

வால்மீகி முனிவருக்கு இராமரின் கதையை நாரதர் சொன்னார். அந்த எண்ணத்தில் இருந்த வால்மீகி நதிக்குக் குளிக்கச் சென்றார். வழியில் ஒருவேடன் ஆணும் பெண்ணுமாய் இணைந்திருந்த அன்றில் பறவைகளில் ஆண் பறவையை அம்பு எய்தி கொன்றான். இணையின் பிரிவால் பெண்பறவை துடிப்பதைக் கண்ட வால்மீகி வேடனைப் பார்த்து
“மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: ஸமா:|
யத் க்ரௌஞ்ச மிதுனாத் ஏகமவதீ காமமோஹிதம் ||”
‘ஓ வேடனே! சோடியான அன்றில் பறவைகளில் காமமயக்கத்தில் இருந்த ஒன்றைக் கொன்றாய். அதனால் நீ இனி ஒருபோதும் அமைதி அடையமாட்டாய்!’ என்று சாபம் இட்டார்.

வேடனுக்குச் சாபம் கொடுத்தபின்னர் ஏன் அப்படிச் சொன்னேன் என வால்மீகி வருந்தினார். இராமரின் கதையைக் கேட்ட தாக்கமே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார். தான் கொடுத்த சாபத்தில் சிலேடையாக “ஶ்ரீநிவாசா! இராட்சத சோடியில் காமத்தால் புத்தி கெட்ட ஒருவனைக் கொன்றாய். அதனால் நீடித்த புகழை அடைவீராக” என்ற கருத்தும் இருப்பதைக் கண்டு இராமாயணத்தைப் பாடினார். இதிலே க்ரௌஞ்ச மிதுனம் - இராட்சத சோடியைக் [இராவணன், வண்டோதரி] குறிக்கிறது.

ஏன் க்ரௌஞ்ச மிதுனம் என்று இராட்சதச் சோடியை அழைத்தார்? பண்டைய க்ரௌஞ்ச மலையே இன்றைய இலங்கை. க்ரௌஞ்ச மலையில் வாழ்ந்த இராட்சதச் சோடி என்ற கருத்திலேயே க்ரௌஞ்ச மிதுனம் என்றார். அருணகிரிநாதரும் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழில் கந்தன் வேல் எறிந்து க்ரௌஞ்ச மலையைத் துளைத்ததை பாடுமிடத்தில்
“கொட்புற்றெழ நட்பு அற்ற அவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே” 
என அவுணரின் அதாவது அசுர குலத்தின் மலை என்ற பொருளில் ‘குலகிரி’ எனக் கூறுவதால் உணரலாம்.

எல்லாமாகப் பார்த்தோமேயானால் தமிழில் குருகு, அன்றில், கரிஞ்சம் என அழைத்த பறவையையே சமஸ்கிருதத்தில் க்ரௌஞ்சம், கிரௌஞ்சம் என்றும் அழைத்தனர். அன்றில்கள் வாழ்ந்த மலையாதலால் சமஸ்கிருதத்தில் கிரௌஞ்சமலை எனப் பெயர் பெற்றது. அருணகிரிநாதர் திருஎழுகூற்றிருக்கை 
“…………… முத்தலைச் செம் சூட்டு 
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை”
                                                 - (திருஎழுகூற்றிருக்கை)
என ‘அன்றிலங்கிரி’ என்ற பெயரில் அழைக்கிறார்.

சங்ககாலப் புலவர்கள் கிரௌஞ்சமலையை குருகின் பெயரையுடைய மலை என்றே சொல்கின்றனர். சங்கப்புலவரான கடுவன் இளவெயினனார் பரிபாடலில்
“தீயழல் துவைப்பத் திரிய விட்டெரிந்து……
நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடை
குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து
                                                             - (பரிபாடல்: 5: 3,8,9)
முருகன், ‘பேரொலியோடு தீ அழலைக் கக்குகின்ற வேலை விட்டெரிந்து நாவல்மரச்சோலை [நயினாதீவு], வடசோலைகளுக்கு [எழுவதீவு, அனலைதீவு, காரைதீவு] இடையே இருந்த கிரௌஞ்சமலையை உடைத்தார்’ என்கிறார். அந்தக் கிரௌஞ்சவலையே புங்குடுத்திவு.

சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவையில்
“சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திருமுலைப் பாலுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே”
                                                  - (சிலம்பு: 1: 9)
சக்கரம் போலச் சுழன்று வரும் அசுரனின் மார்பைப் பிளக்கக் கிரௌஞ்ச மலையை அழித்த நெடியவேல் சரவணப் பாயில் ஆறு தாய்மாரின் முலைப்பால் உண்டவனின் திருக்கை வேலேயாகும் என்கின்றார் இளங்கோவடிகள்.

மணிமேகலை
குருகுபெயர்க் குன்றங் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி”
                                                    - (மணிமேகலை: 5: 13 - 14)
கிரௌஞ்ச மலையை அழித்த முருகனைப் போன்ற உனது இளமை என்கின்றது.

இவ்வாறு பண்டைய இலக்கியங்கள் கூறும் கிரௌஞ்சமலை உடைந்த போது கிரௌஞ்ச மலைச்சிகரம் எழு துண்டுகளாகச் சிதறின. அவை வீழ்ந்து உண்டாகிய ஏழு தீவுகளையும் கந்தபுராணம் நாவலந்தீவு, இறலித்தீவு, குசைத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு  எனச் சொல்கிறது.

எமது புங்குடுதீவை கிரௌஞ்சத்தீவு என கந்தபுராணம் மட்டுமல்ல இராமாயணமும் கூறுகிறது. வால்மீகி இராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் தமது கம்பராமாயணத்தில் கிரௌஞ்சத்தீவை அன்றில்தீவு எனத் தமிழில் தந்துள்ளார். எனது சிறுவயதில் படித்த நாடோடிக் கதைகளில் அன்றில்தீவு வரும். அப்போது அது எங்கே இருக்கின்றது என யோசித்திருக்கின்றேன். பின்னர் அன்றைய அன்றில்தீவு நம் புங்குடுதீவு என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

யுத்தகாண்டத்தின் படைக்காட்சிப் படலத்தில் கம்பர்
“அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்
குன்றைக் கொண்டு போய் குரை கடலிட அறக் குலைந்தோர்
சென்று இத்தன்மையைத் தவிரும் என்று இரந்திடத் தீர்ந்தோர்”
                                                  - (க.இரா: யு.கா: ப.கா.ப: 13)
‘அன்றில் தீவில் வாழ்பவர்கள், தேவர்கள் எப்போதும் இருந்து வாழ்ந்த இடம் இது என்று சொன்னதும் மேருமலையைக் கொண்டுபோய் கடலில் போட முயல, அதனால் நிலைகுலைந்த தேவர்கள் இந்தச் செயலைக் கைவிடுங்கள் என்று கெஞ்ச, அச்செயலைக் கைவிட்ட வீரர்கள்’ ஆவார்கள் என்கிறார்.

அன்றில் பறவைகள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்த தீவாதலால் அந்நாளில் நம் புங்குடுதீவு அன்றில் தீவு என அழைக்கப்பட்டது. அன்றில்கள் இன்றும் புங்குடுதீவில் வாழ்கின்றன. கள்ளி ஆற்றங்கரையில் அன்றில்கள் இரை தேடுவதைப் பார்த்து மகிழலாம். புங்குடுதீவு என்று நாம் அழைக்கும் அன்றில் தீவில் வாழ்ந்த நம் முன்னோர்கள் தேவர்களையே கெஞ்ச வைத்த வீராதிவீரர்கள் என்பதை நினைத்துப் பெருமை கொள்வோம்.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
மேலே குறிப்பிட்ட ஏழு தீவுகளையும் எந்தெந்த தீவுகள் என்பதை அறிய கீழேயுள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும். https://inithal.blogspot.co.uk/2016/02/blog-post.html

4 comments: