Saturday 16 January 2016

புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம் - பகுதி 2


உலகெங்கும் புங்குடுதீவின் புகழ் மணத்தைப் பரப்பிய புங்கைமரம் எப்படி இருக்கும் என்பதை சங்கப் புலவர்களிடம் கேட்டுப் பார்ப்போமா? சங்கப்புலவர்கள் புங்கைமரத்தை புன்கு, புங்கு, புங்கம், புங்கை என்றெல்லாம் அழைத்ததை சங்க இலக்கிய நூல்கள் காட்டுகின்றன. புன்னை மரமும், புன்க மரமும் வெவ்வேறானவை. ஆனால் சிலர் ஒன்றெனக் கருதுகின்றனர். உடைந்த ஊர்க்குருவி முட்டை போல் புன்னைப்பூ இருக்கும் என்று கூறுகின்ற சங்க இலக்கியம், புங்கம் [புன்கம்] பூவை அரிசிப் பொரிபோல் இருக்கும் என்று கூறுகிறது. ஆதலால் அவை வெவ்வேறு மரங்கள் என்பதை அறியலாம். புன்னை எப்படி இருக்கும் என்பதை அறிய இவற்றைப்பார்கவும்.


புங்கமரத்தின் பூ பார்ப்பதற்கு நமது வேலிகளில் இருக்கும் சீமைக்கிளுவை போல இருக்கும். இவை இரண்டும் வெவ்வேறான மரங்களே. தாவரவியல் குடும்பத்தில் இரண்டும் Fabaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை ஆதலால் அந்த ஒற்றுமையைக் காணலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை எனினும் இனத்தால் மாறுபடுகின்றன. புங்கைமரம் Pongamia இனத்தையும் சீமைக்கிளுவை மரம் Gliricidia இனத்தையும் சார்ந்தது. புங்கைமரம் 30 அடியிலிருந்து 70 அடி உயரம்வரை வளரும். புங்கைமர நெற்றுக்கள் [காய்ந்த விதைகள்] சீமைக்கிளுவை நெற்றுக்களைப் போல் தானாக வெடித்துச் சிதறாது. தாவரவியற் பெயரிலும் Ponga [புங்கை] எனத் தமிழ்ப்பெயரையே தாங்கி நிற்கிறது. இந்தக்குடும்பத்தில் பல இனங்கள் இருக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த Julia F Morton என்பவர் புங்கம்மரம் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் “The most commonly and widely used vernacular name, pongam, was taken directly from the Tamil language in India. The Tamilese may also refer to the tree as ponga or pongam.” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க விவசாயத் திணைக்களம் [US Department of Agriculture] ஓர் அரிய செய்தியைச் சொல்கிறது. புங்கைமர விதைகளை 1860ம் ஆண்டு Hawaiiக்கு அறிமுகப்படுத்திய ‘அமெரிக்க விவசாயத் திணைக்களம்’ அப்புங்கை விதைகளை இலங்கையிடம் இருந்து பெற்றுக் கொண்டது. இலங்கை கொடுத்த விதைகள் யாழ் தீவுப்பகுதியில் இருந்தும் பெறப்பட்டன. தமிழரின் சொத்தாய் தீவுப்பகுதியில் இருந்த புங்கைமரம் இன்று எப்படி இருக்கும் என தேடிப்பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம். இதைப் பார்க்கையில் நெஞ்சம் துவள்கிறது. என்னே! எங்கள் மரநேயம்!! எம் தமிழ் நேயம்!!!

சங்க இலக்கிய ஏட்டுச்சுவடிகளை தேடி எடுத்துப் பதிப்பித்து நூலாகத் தந்தவர் உ வே சுவாமிநாத ஐயர். அவருக்கு ‘ஐங்குறுநூறு’ என்ற ஏட்டுச்சுவடியை ஈழத்தச் சேர்ந்த ஜே எம் . வேலுப்பிள்ளை என்பவரே கொடுத்து உதவினார். ஈழத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அவர்கள் ஐங்குறுநூற்று ஏட்டுச்சுவடியை உ வே சுவாமிநாத ஐயருக்கு கொடுக்காது இருந்தால் இன்று ஐங்குறுநூறு என்ற சங்க இலக்கிய நூலே எமக்குக் கிடைத்திராது. ஈழத்தமிழரிடம் சங்ககால ஏட்டுச்சுவடிகள் இருந்தன என்பதற்கு இஃது ஓர் ஆதாரமாகும். அத்துடன் ஐங்குறுநூற்றில் வரும் பல பாடல்கள் தீவுப்பகுதி மக்களின் வாழ்வியலைக் காட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவை ஈழத்துத் தீவுகளா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். 

ஐங்குறுநூறு, புங்கைமரப் பூக்கள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் இடத்தில் அதன் தளிர்களைப் பெண்கள் மாலையாக அணிந்ததையும் சொல்கிறது. அது “அவர்தான் வரவில்லை, அழகுமிக்க இளமுலை பொலிவுற பொரி போன்ற பூவையுடைய புன்கின் தளிர்களை அணிகின்ற இளவேனிற்காலம் தான் வந்ததே” என்பதை
“அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இளமுலை பொலிய
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே”       - (ஐங்குறுநூறு: 347)
என்கிறது.

இப்பாடலைப் பாடிய சங்ககாலப் புலவரான ஓலாந்தையரே இன்னொரு பாடலில் பொரி போலும் பூவையுடைய புங்கைமர நிழலில் வேனிற்காலத்தில் இருப்பதும் இன்பம் என்கிறார்.
“எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்மலர்
பொரிப்பூம் புங்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்பநுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும!….”           - (ஐங்குறுநூறு: 368: 1 - 4)
பாருங்கள்! ‘நெருப்புப் போன்ற இலவம் பூக்கள் உதிர்ந்து, புங்கைமர நிழலில் கோலம்போட்டு [வரிக்கும்] நிலத்தைக் குளிரவைக்க, புங்கைமரக் காற்று உடலை வருடிச் செல்ல காதலரோடு இருந்து இன்பங்கண்டிருக்கிறார்கள்'. இது இயற்கையின் கொடையல்லவா? இயற்கை கொடுத்த இந்த இன்பத்தை நாம் ஏன் தொலைத்தோம்? குளிரூட்டிய அறையில் [AC] வாழ்வதற்கா! நன்றாகக் குளிரூட்டிய அறையில் சிலமணி நேரம் இருந்த பின்னர் வெய்யிலில் சென்று வாருங்கள். தலையிடியும் தடிமலும் சொல்லாமலே வரும். பணம் பணம் என்று ஓடி பணத்தைக் கொட்டி ACயில் இருந்து பெறுவது இன்பமா? துன்பமா? எப்போ சிந்திக்கப் போகிறோம்?!!!
புங்கமலர்
புங்கமலர்கள் செந்நெற் பொரி போல் இருக்கும் என்பதை
“செந்நெல் வான்பொரி சிதறி அன்ன”            - (குறுந்தொகை: 53: 4)
என்று கோப்பெருஞ்சோழன் கூறியுள்ளான்.

எமது புங்குடுதீவு போன்ற கடலும் கடல்சூழ்ந்த நிலமுமான நெய்தல் நிலத்தில் ‘பசுமையான அரும்பும் பூவும் கொண்ட குரவ மரங்களும், பொரிபோன்ற பூவுள்ள புங்கை மரங்களும் நிறைந்த அழகான சோலையின் கிளைகள் கண்ணுக்கு இனிமையாக இருந்ததை' மிளைக்கிழான் நல்வேட்டனார் என்னும் சங்கப் புலவர்
“பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும்”                - (குறுந்தொகை: 341: 1 - 3)
எனக் காட்டுகிறார்.


புங்கைமரச் சோலையில் குயில் இருந்து கூவியதை, திணைமொழி ஐம்பது என்ற சங்கம் மருவிய காலத்து நூல் காட்டுகிறது.
“புன்கு பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில் அகவும் போழ்து”            - (திணைமொழி ஐம்பது: 14: 1 - 2)

கொற்றவை கோயிலின் முற்றத்திலே புங்கைமரம் இருந்ததை இளங்கோவடிகள் வேட்டுவ வரியில்
“பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு இளந்
திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே”             - (சிலப்பதிகாரம்: 12)
எனச் சொல்கிறார். சிலப்பதிகார காலத்தில் கொற்றவை கோயிலின் முற்றத்தில் புங்கைமரம் இருந்தது போல கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் புங்குடுதீவின் கண்ணகி அம்மன் கோயில் முன்றிலிலும் புங்கைமரமும் புரசைமரமும் (முருக்கமரம்) பூவரசமரமும் நிறைந்தே இருந்தன என்பர்.

எமக்காகச் சங்கப் புலவர்களும், மருத்துவர்களும்  முன்னோர்களும் புங்கமரத்தை, தளிரை, பூவை புங்கஞ் சோலையை மிக நுட்பமாகக்  பாடியும் மருத்துவ வாகடங்களில் சொல்லியும் நாம் நம் அறியாமையால் மண்ணில் புதைத்துவிட்டோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக எம் தந்தையர் நாட்டின் முதுசமாய் இருந்த புங்கைமரத்தை மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. 

இன்றைய காலச்சூழலில் கற்கள் நிறைந்த வரட்சியான கடற்கரை ஓரங்களிலும் நீர்ப்பாங்கான வயல் வெளிகளிலும் மட்டுமல்லாமல் பாலை நிலத்திலும், தெரு ஓரங்களிலும் புங்கைமரம் வளர்வதைக் காணலாம். புங்கைமரம் அனேகமாக கடல்சார்ந்த நிலத்தில் நன்கு வளரும். இதனை அழகுக்காக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். 

புங்கைமரத்தால் நாம் அடையக்கூடிய பயன்கள் என்ன?
1. புங்கைமர வேர்களில் வேர்முடிச்சுக்கள் [root nodules] இருப்பதால் காற்றில் உள்ள நைட்ரயனை உள்ளெடுத்து மண்ணை வளமாக்கும். இதனால் பயிர்கள் விளையாத வளம் இல்லா மண்ணும் வளம் பெறும்.
2. புங்கைமரம் சூரியஒளியில் இருந்து தனக்கான உணவை உண்டாக்கும் போது அதிக அளவு ஒட்சிசனை வெளிவிடுகின்றது. மூங்கில் மரத்துக்கு அடுத்தபடியாக அதிக ஒட்சிசனை வெளிவிடும் மரம் புங்கைமரம் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும். எனவே நாம் சுவாசிக்கும் காற்றை புங்கைமரம் தூய்மை அடையச்செய்கிறது. அதாவது எம்மால் ஏற்படுத்தப்படும் காற்றின் மாசைக் சுத்தம் செய்கிறது.
3. இன்றைய மனிதர்களாகிய நாம் மரங்களை வெட்டியும், வாகனங்களை ஓட்டியும், பெருந்தொழிற் சாலைகளை இயக்கியும் காற்றின் மாசைக் கூட்டியதோடு வெப்பநிலையையும் கூட்டி காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறோம். அது உலக அழிவை ஏற்படுத்தும். அதனாலேயே உலக அரசியற் தலைவர்கள் ஒன்று கூடி ‘COP21’ மகாநாட்டை நடாத்தினார்கள். என்ன பயன் அடைந்தார்கள்?? ஏதும் உண்டா? புங்கைமர இலைகள் காற்றில் இருக்கும் வெப்பத்தை உள்ளெடுத்து காற்றின் ஈரத்தன்மையைக் கூட்டக்கூடியது. எனவே வெப்பநிலை மாற்றத்தைக் குறைத்து,  காலநிலை மாற்றத்தை தடுக்கும் சக்தியும் புங்கை மரத்திற்கு உண்டு. 
4. புங்கைமரம் மரம் பரந்து வளர்வதால் மண்ணுக்கு நிழலைக் கொடுத்து, சூரியவெப்பத்தால் நிலத்தடி நீர் ஆவியாகிப் போவதைத் தடுத்து, நிலத்தின் நீர்வளத்தைப் பெருக்குகிறது.
5.    கடலால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கிறது. 
6.    புங்கைமரத்தின் கீழேயும் மரம், செடி, கொடிகளை நட்டு வளர்க்கலாம்.
புங்கம் காய்
7.     புங்கைமரத்தின், தளிர், இலை, பூ, காய், விதை, பட்டை, வேர், யாவுமே மருந்துக்கு பயன்படுகின்றது. 
8.   புங்கம் விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெய் எமது உடலின் நிறத்தை பொன்னிறம் ஆக்கும். 
9. இப்போது பெற்றோலுக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதால் உலகசூழலை மாசுபடுத்தாத நல்ல எரிபொருளாய் இருக்கிறது.   
10. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களின் இடையே புங்கைமரங்களை நட்டு வீசும் காற்றை தடுத்தார்கள். அத்துடன் அவை பூச்சி கொள்ளிகளாக இருந்து தேயிலை மரங்களைக் காத்தன. அதுபோல் நம் தீவுப்பகுதிகளில் அதிக காற்றடிக்கும் கடற்கரை ஓரங்களில் புங்கையை நட்டு காற்று வேகத்தைக் குறைத்ததோடு பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லும் கிருமிகொல்லியாகவும் பயன்படுத்தினர்.
10.   நம்மவர்கள் வரகு, குரக்கன், தினை, நெல், சோளம் போன்ற தானியங்களை கோல்காலியின் மேல் அடுக்கியும் குதிருக்கு உள்ளே போட்டும் வைத்துப் பாதுகாத்தனர். கோற்காலியின் கால்களில் புங்கம் இலைகளைக் கட்டியும் தானியப்பெட்டகங்கள், குதிர் ஆகியவற்றுள் போட்டு வைத்து எலி, எறும்பு, பூச்சி போன்றவை தானியங்களை உண்பதைத் தடைசெய்தனர். 
   கோல்காலி: தானியங்களை, பெட்டகங்களை அடுக்கி வைத்த பல கால்களை உடையதாய் கட்டில் போன்று இருக்கும். கோல்களால் ஆன கால்களையுடைய ‘கோல்காலி’ என்பதே, இடத்துக்கு இடம் கோர்க்காலி - கோற்காலி - கோக்காலி என்றெலாம் அழைக்கப்பட்டது. கோல்காலி, பரண் இரண்டும் வெவ்வேறானவை. கோல்காலி 1’ - 2’ உயரமான  கால்களையுடையது. அதனை இடத்துக்கிடம் தூக்கி வைக்கலாம். பரண் 5’ மேற்றட்ட உயரமாய் இருக்கும். இடத்துக்கிடம் தூக்கி வைக்கமுடியாதது.

  குதிர்: தானியங்களைப் போட்டுவைத்து பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட மண்ணால் ஆன மூடியுள்ள மிகப்பெரிய கொள்கலம் அல்லது பாத்திரம். ஒருமனிதனின் உயரத்தைவிட, உயரமாகவும் அகலமாகவும்  செய்த பாத்திரத்தை, மண்ணுள் புதைத்து வைத்திருப்பர். அதனைக் குதிர் என்பர். 2011ம் ஆண்டு நடந்த தொல் பொருள் ஆய்வின் போது பழநியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தினமலர் செய்தியாக வெளியிட்டது. அது பத்தடி உயரமும் எட்டடி விட்டமும் கொண்டது. எனவே கிட்டத்தட்ட அதன் கொள்ளளவு 503 சதுர கன அடியாகும். [V = π × r² × h].
இரண்டாயிர வருடப்பழமையான குதிர்
      பெட்டகம்: அழகிய வேலைப்பாடு அமைந்த நான்கு கால்களுள்ள, கால்கள் இல்லாத மரத்தால் செய்த பெரிய பெட்டி என்று சொல்லலாம். கால்கள் இல்லாது இடத்துக்கிடம் தூக்கிச் செல்வதற்காக பெரிய வளையங்களால் ஆன கைப்பிடியுடனும் இருந்தன. அந்நாளில் அவற்றுள் ஏடுகள், வாள்கள், கேடயங்கள், உடுப்புக்கள், தானியங்கள் போன்றவற்றை வைத்துப் பூட்டி வைப்பர்.
பெட்டகம்

புங்கைமரத்தால் கிடைக்கக் கூடிய பொருளாதாரம்:
1.  அதிக அளவு புங்கைமரங்களை நட்டு வளர்த்தால் Carbon credit trading [கார்பன் கிரெடிட் ரேடிங்] மூலம் பணம் பெறலாம். 
2.  பூக்கள் நல்ல தேனுள்ளவை. பூக்களில் இருந்து தேன் கிடைக்கும். தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கலாம்.
3. பச்சை இலைகள் பூச்சிகளைக் கொல்லும். மரத்திலிருந்து காய்ந்து நிலத்தில் வீழும் இலைகளை நெல் வயல்களுக்கும் கரும்புத்தோட்டங்களுக்கும் உரமாகப் பாவிக்கலாம்.
4.  ஆலும் வேலும் மட்டுமல்ல புங்கைமரக் குச்சிகளும் பற்களையும் ஈறுகளையும் பாதுகாப்பதோடு வெண்மையாக வைத்திருக்கும். நல்ல பற்பசை தயாரிக்கலாம்.
புங்கமரத்தில் தொங்கும் நெற்றுக்கள்
5. புங்கம் விதைகள் 27 - 40% எண்ணெய் உடையவை. நம்மூதாதையர் புங்கம் எண்ணெயில் விளக்கு எரித்தனர். மண்ணெண்ணையை மேலை நாட்டினர் என்று எமக்கு அறிமுகம் செய்து வைத்து பணம் பண்ணத் தொடங்கினரோ அன்றே நாம் புங்கம் எண்ணையை மறந்தோம். இயந்திரங்களை, வாகனங்களை இயக்க மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பதை இப்போது தான் நாம் அறியத்தொடங்கி உள்ளோம். 
6. புங்கம் எண்ணெயின் அடியில் வரும் எண்ணெய் ஈ, கரப்பத்தான் போன்ற பூச்சிகளை தடுக்கும்.
7.  வடிகட்டிய புங்கை எண்ணெய் உடலின் நிறத்தை பொன்னாக்கும்.
8. இந்த எண்ணெய்யில் இருந்து அழகு சாதனப் பொருட்கள், சவற்காரம், போன்றவை செய்யலாம். 
9. புங்கம் எண்ணை எடுக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கை உரமாக்கலாம். யூரியா போன்ற இரசாயன உரங்கள் போடுவதைத் தவிர்க்கலாம். 
10.  பட்டையில் இருந்து கிடைக்கும் நார்களால் கயிறு திரிக்கலாம். தும்புத்தடி, பெட்டி, கைப்பை, கூடை, தொப்பி, போன்றவற்றைச் செய்யலாம்.
11. புங்கைமரப் பலகையை பூச்சிகள் அரிக்காது. அத்துடன் வளைந்தும் கொடுக்கும். எனவே கதிரை, மேசை,கட்டில், போன்ற தளவாடங்கள் செய்யலாம். விறகாகவும் பயன்படுத்தலாம்.
12. புங்கைமரத்தின் தளிரில் இருந்து வேர்வரை யாவுமே சித்தமருத்துவத்திற்கு உதவுகிறது.

இவ்வளவு நன்மை தரக்கூடிய புங்கைமரம் தன் மணத்தால் புங்குடுதீவின் புகழை அந்நாளில் உலக்கில் மணக்கவைத்தது. கடந்த அறுபது எழுபது வருடத்துக்குள் புங்கைமரம் இருந்த இடமே தெரியாது அழித்த பெருமை எம்மையே சாரும். இந்தியாவில் Indian Institute of Science 1997ம் ஆண்டிலேயே புங்கம் எண்ணெய் பற்றிய ஆய்வைத் தொடங்கி, இந்த எண்ணெய்யால் நீர் இறைக்கும் இயந்திரங்களையும் [pumps], மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரங்களையும் [generators] இயக்கலாம் என அறிந்து, அதனை ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் அறிமுகப்படுத்தியது. 2003ம் ஆண்டு The Himalayan Institute of Yoga Science and Philosophy என்ற தன்னார்வ அமைப்பு, கிராமப்புற மக்கள் புங்கம் எண்ணெயை biofuel ஆக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் பிரசாரத்தைத் தொடங்கியது. இந்தத் தன்னார்வ அமைப்பு 20 மில்லியன் புங்கை மரங்களை 45,000 விவசயிகள் மூலம் நட்டிருக்கிறது. ஆனால் நாம் இவற்றையும் கண்டு கொள்ளாது இருப்பது ஏன்? காலம் கடந்துவிடவில்லை. நன்றே செய்வதாயின் இன்றே செய்யலாமே. 

புங்கைமரத்தை வளர்ப்பது எப்படி என்று பார்ப்போமா?
புங்கைமரம் வறண்ட இடங்களிலும் வளர்வதால் அதனை வளர்ப்பதற்கு உரமோ, நீரோ அதிகமாகத் தேவையதில்லை. எனவே உடல்வருந்தி பாடுபட வேண்டிவராது. பாத்திகளில் [நாற்றாங்காலில்] புங்கம் விதைகளை நட்டு வரும் மரக்கன்றுகளை அல்லது ஒட்டுமரக்கன்றுகளை நடலாம். ஒரு ஏக்கர் [16 பரப்பு] நிலத்தில் 4மீட்டர் இடைவெளியில் புங்கங்கன்றுகளை நட்டால் 250 கன்றுகளை நடலாம் என்று கூறுகின்றனர். இரண்டு சதுர அடிக் குழிக்குள்  [2 x 2 x 2] மண்ணும் எருவும் 3 : 1 என்ற வீதத்தில் கலந்து இட்டு ஒவ்வொரு கன்றையும் நடவேண்டும். மூன்றாம் ஆண்டில் இருந்து காய்க்கத் தொடங்கும். 
ஜீவரட்னம் அண்ணா வீட்டில் பதிவைதிருந்த புங்கங்கன்று 
முதலாம் ஆண்டு நிலத்தைப் பண்படுத்தல், புங்கை மரக்கன்று வாங்குதல், நடுதல், தண்ணீர் விடுதல் எனக் கொஞ்சம் செலவு இருக்கும். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் அச்செலவின் கால் பகுதி செலவும் வராது. அதன் பின் பெரும்பாலும் செலவு இருக்காது. அது விவசாயிகளைப் பொருத்தது. முதல் மூன்று வருடத்திற்கு 25000 ஆயிரம் ரூபா செலவுகூட வராது. நான் இலங்கை சென்றிருந்த போது அண்ணன் வீட்டிற்குச் சென்றேன். அவர் மண்கும்பானில் வாங்கிய புங்கம் கன்றுகளை வீட்டில் வளர்த்து வருவதைப் பார்த்தேன். படம் எடுத்து வந்தேன். எனவே புங்கங்கன்றை  யாழ்ப்பாணத்தில் விலைக்கு வாங்கலாம். 

புங்கம் விதை
புங்கைமரம் ஐந்து, ஆறு வருடத்தில் முழுமையாகக் காய்க்கும். ஒருமரத்தில் இருந்து 90 கிலோகிராம் விதை கிடைக்கும் என்கிறார்கள். மூன்று வருட பராமரிப்பின் பின் ஐந்து வருடத்தில் இருந்து பணம் ஏதும் செலவு செய்யாமல் கிடைக்கக் கூடிய வருமானத்தைப் பார்ப்போம், 

ஒரு மரத்திற்கு 70 கிலோ கிடைத்தாலும் 250 மரத்திற்கு: 70 x 250 = 17,500 கி கி விதை வரும்.
4 கி கி விதையில் இருந்து 1 லீற்றர் எண்ணெய் எடுக்கலாம்.
எனவே 17,500 கி கி விதையில் இருந்து 4,375 லீற்றர் எண்ணெய் கிடைக்கும்.
லீற்றர் 40 ரூபாய்க்கு விற்றாலும் 4,375 லீற்றருக்கு: 40 x 4,375 = 175,000 ரூபா கிடைக்கும்.

இது எண்ணெயில் இருந்து மட்டும் கிடைக்கும் வருமானமாகும், இதைவிட எண்ணெய் பிழிந்த போது வரும் பிண்ணாக்கு, உதிரும்பூ, இலை, தேன் என பலவகை வருமானமும் புங்கை மரத்தால் கிடைக்கும். புங்கை மரத்திற்கு இடையே வேறு பயிர்களை, மரங்களை உண்டாக்கியும் வருமானத்தைப் பெருக்கலாம். அத்துடன் எம் நாட்டைவிட்டுச் சென்ற எத்தனையோ பறவைகள் புங்கை மரத்தில் குடியிருக்க வரும். குயில் கூவி எம்மை துயில் எழுப்பும். எனவே புங்குடுதீவின் புகழை மணக்கச் செய்த புங்கைமரத்தை மீண்டும் வளர்த்து குங்குமத்தீவாக மாற்றி புங்குடுதீவின் புகழை ஓங்கச் செய்வோமா?
இனிதே,
தமிழரசி.

3 comments:

  1. நான் இதை செயல்படுத்த விரும்புகிறேன். நான் ஒரு இயற்கை ஆர்வலன். பறவைகள் எனது நட்புறவுகள். புங்க மரம் வளர்ப்பதனால் எனக்கும் வருமானம் உண்டு, பறவைகள்க்கும் சரணாலயமாகும். எனக்கு விதைகள் கிடைக்கெச்செய்யுங்கள்.

    ReplyDelete
  2. அருமை. வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete