Tuesday 16 June 2015

வயலினின் முன்னோடி எது?

திருமக்கூடலூர் கோயில்

மேற்கத்தைய வாத்தியமாகக் கருதப்படும் வயலின் இன்று தென் இந்திய இசையான கர்நாடக இசையிலும் வட இந்திய இசையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கர்நாடக இசையில் தனிக்கச்சேரி மட்டுமல்லாமல் மிகச் சிறந்த பக்கவாத்தியமாக விளங்குகிறது. வயலினை கர்நாடக இசைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரின் தம்பியான பாலசுவாமி தீட்சதரே. 

முத்துசுவாமி தீட்சதரின் தந்தை ராமசுவாமி தீட்சதர் தனது இளைய மகனான பாலசுவாமி தீட்சதரை மேல்நாட்டு இசை கற்றக ஒழுங்கு செய்தார். அவர் மேல் நாட்டு சங்கீதத்தை வயலினில் வாசிக்கக் கற்றுக்கொண்டார். மேல் நாட்டு முறையில் சுருதி சேர்க்கப்பட்ட அதாவது 'ஸ ப ரி த' என்ற ஷட்ஜ - பஞ்சம முறையில் சுருதி கூட்டப்பட்ட வயலினின் நான்கு தந்திகளை, கர்நாடக சங்கீத முறையில் ஸ ப ஸ ப என்று சுருதி கூட்டி கர்நாடக சங்கீதத்தை வாசிக்கத் தொடங்கினார். அதனை அறிந்த எட்டயபுர மன்னர் அவரைத் தனது சமஸ்தான வித்துவானாக அமர்த்தினார் என்பது கர்நாடக சங்கீதம் சொல்லும் வரலாறு ஆகும்.

இன்று உலகெங்கும் நாம் காணும் வயலினை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ராடிவேரியஸ் [Stradivarius] என்னும் இத்தாலியரே உருவாக்கினார். எனினும் பாலசுவாமி தீட்சதர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கர்நாடக சங்கீதத்தை வயலினின் வாசிக்கத் தொடங்கினார். 

ஆனால் நம் பண்டைத் தமிழ் முன்னோர் பல ஆயிர வருடங்களாக வேறு வேறு பெயர்களில் வயலின் போன்ற கருவியை வாசித்து வந்திருக்கிறனர். அக்கருவிகளை வாசித்தோரின் பேரிலும், அதில் இருக்கும் தந்திகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், அவற்றின் உருவத்திற்கு ஏற்பவும், வாசிப்போர் அணியும் ஆடைக்கு ஏற்பவும் பல பெயர்களில் அழைத்தனர். எப்படி அழைத்தபோதும் அவற்றை வில் கொண்டு வாசித்தனர் என்பதைக் கோயில் சிற்பங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இது போன்றது ஆமைவீணை [Photo: source t3licensing.com]

பண்டைத் தமிழர் தந்திக்கருவிகள் யாவற்றையும் வீணை என்ற பொதுப்பெயரால் அழைத்தனர் என்பதை பண்டைத்தமிழ் நூல்களால் அறியலாம். நம் முன்னோர் வாசித்த தந்திக் கருவிகளில் ஆமை வீணையின் வடிவம் [கூர்ம வீணையின் வடிவம்] இன்றைய வயலின் எனக் கூறலாம். ஆமைவீணையை வில்லால் வாசித்தார்கள். அதனை வாசிக்க தமிழர்கள் பாவித்த வில், இன்றைய வயலினின் வாசிப்பிலும் பயன்படுகிறது என்பதை Bow என்னும் சொல்லே எடுத்துக் காட்டுகின்றது. அது வில் வடிவில் இல்லை என்றாலும் வில் [Bow] என்னும் பெயரையாவது வைத்திருக்கிறதே.

இலங்கைத்தமிழரின் இசை ஆர்வத்திற்கு மூலகாரணன் இராவணன் எனச் சொல்லலாம். அவன் வாசித்த ஒரு இசைக்கருவியின் பெயர் 'ராவணஹஸ்தம்' ஆகும். அது 'இராவணாஸ்திரம்' என்றும் 'கிஞ்ஞரம்' என்றும் அழைக்கப்பட்டது. அதை வில்லைக் கொண்டே வாசித்தான். திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில்
“மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி
மெஞ்ஞரம்பு உதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரங் கேட்டு உகந்தார் கெடில வீரட்ட னாரே”                    
                                                  - (ப.திருமுறை: 4: 28: 6)
இராவணன் கிஞ்ஞரம் வாசித்ததைக் குறிப்பிட்டுள்ளார். எனவே வயலினின் பிறப்பிடம் இலங்கை எனலாமே. அன்று இராவணன் வாசித்த இராவண ஹஸ்தத்தின் [கிஞ்ஞரத்தின்] பரிணாம வளர்ச்சியே இன்றைய வயலின் எனச் சொன்னால் அது மிகையாகாது. பண்டைய தமிழர் அழைத்த 'கிஞ்ஞரம்' இன்று 'கின்னரம்' என அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் அதனை ‘கிங்கரி’ என அழைப்பர்.

இராவணன் வாசித்த இராவணஹஸ்தம் திருமக்கூடலூரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலிலுள்ள தூணின் சிற்பத்தில் இருக்கிறது. அச்சிற்பத்தில் இசைக்கருவி ஒன்றை தாங்கி இருக்கும் பெண் ஒருத்தி வில் கொண்டு அதனை வாசிக்கிறாள். அக்கருவியை இராவண ஹஸ்தம் என்பர். இச்சிலை 1500 வருடங்களுக்கு முன் செதுக்கப்பட்டதாகும். தற்போது திருமக்கூடலூர் கர்நாடகாவுடன் சேர்ந்திருப்பதால் அதனை திருமக்கூடலு என அழைக்கின்றனர்.

நம்முன்னோர் வில் கொண்டு வாசித்த தந்திக்கருவியே இன்று உலகெங்கும் உலாவரும் வயலினின் முன்னோடி எனக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment