Friday 19 June 2015

குறள் அமுது - (108)


குறள்:
“பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்”                            - 975

பொருள்:
மற்றோரால் செய்ய முடியாத அரிய செயலைச் செய்ய வேண்டிய முறையில் செய்து முடிப்பவரே பெருமை உடையவராவர். 

விளக்கம்:
திருக்குறளில் உள்ள ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் இத்திருக்குறள் உள்ளது. தனிமனிதப் பண்பை, பலவகையான நற்பண்புகளால் மெருகேற்றி பெரியாராகும் தன்மையில் மேன்மேலும் உயர்த்தல் பெருமையின் சிறப்பாகும். 

மனிதர் பெருமையுடன் வாழ்வதற்கும் சிறுமையுடன் வாழ்வதற்கும் அவரவர் செய்யும் செயலே காரணமாகும். பிறருக்காக தன்நலம் அற்று அரிய பெரிய செயல்களைச் செய்தோர் பெருமை உடையோயாராய் திகழ்வதையும், தான் வாழ்வதற்காகா பிறரால் இகழப்படும் செயல்களைச் செய்வோர் சிறுமை உடையோராய் புறக்கணிக்கப் படுவதையும் உலகவாழ்வியல் காட்டுகிறது. நாம் பெருமையுடன் வாழ்வதற்கென எதாவது தகுதி உண்டா?

பெருமை உடையவராய் வாழ்வதற்கு வயது முதிர்ந்தவராய், பொருளும் பணமும் மிக்கவராய், அறிவில் சிறந்த கல்வியாளராய், உடல் வலிமையுடைய வீரராய் பெருந்தொழில் அதிபராய், சினிமா நடிகனாய், சுவாமிமாராய், அரசியல்வாதியாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைய மக்களை மயக்கும் இத்தகைய தகுதிகள் எதுவும் அற்ற சிறுவரும் இளைஞரும் வறுமையால் வாடுவோரும் உடல் ஊனமுற்றோரும் கூட பெருமை உடையோர் ஆகலாம். அப்படியானால் பெருமை உடையார் என்று யாரை நாம் சொல்லலாம்? எவர் ஒருவர் பிறரால் செய்வதற்கு அரிய செயலை முறைப்படி செய்து முடிக்கிறாறோ அவரே பெருமை உடையவராவர்.

எதுவித தகுதிகளும் இன்றி தமது விடாமுயற்சியால் உண்மையாக முயன்று தருக்கித் திரியாது பணிவோடு நன்நிலைக்கு தம்மை இட்டுச் செல்வோர் பெருமை உடையராய்த் திகழ்வர். இராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையுடன் வாழ்ந்தும் உலகம் போற்றும் விஞ்ஞானியாய், இந்தியாவின் ஜனாதிபதியாய் வலம் வந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இந்தக் குறளுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

பிறரால் செய்யமுடியாத செயல்களைச் செய்து பெருமை உடையோராய் இருப்போர் எப்போதும் பெருமிதம் இன்றி வாழ்வர். 

No comments:

Post a Comment