3500 வயதான மாரத்தின் கீழ் இருக்கும் கச்சி ஏகம்பன்
காளமேகப் புலவர் போட்ட இந்தக் கணக்கைச் சரிபார்க்கத் தெரிந்தவர்கள் எவரோ அவர்களே கச்சி ஏகம்பரேஸ்வரரை வணங்குவர். காஞ்சிபுரத்தையே கச்சி என்பர். காஞ்சி ஏகம்பரேஸ்வரர் கோயில்மரத்தின் கீழே இருக்கும் கடவுளை வணங்கத் தனது நெஞ்சிற்கு காளமேகப் புலவர் ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார். அந்தக் கணக்கை அவரது மனம் சரியாகப் புரிந்து கொண்டு அன்றே காஞ்சி ஏகம்பரேஸ்வரரை [கச்சி ஏகம்பனை] வணங்கியது.
காஞ்சி ஏகம்பரேஸ்வரர் கோயில்மரம், உலகில் உள்ள மிகவும் பழமையான மரங்களில் ஒன்றாகும். ஏகம்பரேஸ்வரக் கோயில் மரமான அந்த மாமரத்திற்கு வயது 3500 என்கின்றனர். எப்படிக் கணித்தார்களோ தெரியாது. அவ்வளவு பழமையான கடவுளின் பெயரைச் சொல்லி வணங்கத் தனது மனதிற்குக் கணக்குத் தெரிந்திருப்பது நல்லது என காளமேகப் புலவர் நினைத்திருப்பார் போல் தெரிகிறது. அதனாலேயே காஞ்சி மாமரத்துக்குக் கீழே இருப்பவரை பாடித் துதிக்கப் பின்னக் [Fractions] கணக்காகப் பார்த்து தன் மனதுக்குச் சொல்லியிருக்கிறார்.
காளமேகப்புலவரின் மனம் போல எமது மனமும் கச்சி ஏகம்பரேஸ்வரரை வணங்க வேண்டாமா? காளமேகப் புலவர் போட்ட அந்த மனக்கணக்கைப் பார்ப்போமா?
“முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்றோது”
மனித வாழ்க்கையே பல பின்னங்களால் ஆனது தானே! முதலில் இப்பாடலில் இருக்கும் பின்னங்களைப் பார்ப்போம்.
“முக்கால் உக்கேகாமுன் முன் அரையில் வீழாமுன்
அக் கால் அரைக்கால் கண்டஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணி க்கேகாமுன் கச்சி
ஒருமா வின் கீழரை இன்றோது”
எனப் பண்டைத் தமிழர் பாவித்த பின்னக் கணக்கில் இருந்து
முக்கால் = 3/4
அரை = 1/2
கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 1/10
மாகாணி = 1/16
ஒருமா = 1/20
கீழரை = 1/640
ஆகிய எட்டு பின்னங்களை வைத்து இப்பாடலை எழுதியிருக்கிறார். அவற்றின் அளவுகள் வரவர முக்கால், அரை, கால் எனக் குறைந்து வரும்படி பாடலை அமைத்திருக்கிறார். கச்சி ஏகம்பனை - ஒன்றாகிய இறைவனை எத்தனை ஆயிர ஆயிர உயிர்ப்பேதங்களால் பிரித்தாலும் மீண்டும் தானே தனித்துவமாய் ஒன்றே இறைவன் என ஏகம்பனாய் நிற்பான் என்பதை இக்கணக்குக் காட்டுகிறது.
காளமேகப் புலவர் எழுதிய பாடலை அவரது மனம் எப்படிப் புரிந்து கொண்டு கச்சி ஏகம்பனை வணங்கியது? அவரது மனம் பாடலில் இருந்த பின்னங்களைக் கண்டு பயப்படாமல் அப்பாடலை
“முக்காலுக்கு ஏகாமுன் முன் நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒரு மாவின் கீழரை இன்று ஓது”
எனப் பிரித்துப் படித்தது.
‘முதுமையின் காரணமாக ஊன்று கோலை மூன்றாவது காலாக ஊன்றி நடக்கமுன்னர் [முக்காலுக்கு ஏகாமுன்], முன் தலையில் நரை தோன்ற முன்னர் [முன் நரையில் வீழாமுன்], அந்தக் காலன் வருங்கால் [அக்காலரைக் கால்], கண்டு பயப்படமுன்னர் [கண்டு அஞ்சாமுன்], சேடம் இழுக்கும் போது விக்கல் வந்து இருமமுன் [விக்கி இருமாமுன்], உடல் சுடலைக்கு போக முன்னர் [மாகாணிக்கு ஏகாமுன்], காஞ்சிபுரத்து ஒரு மாமரத்தின் [கச்சி ஒரு மாவின்], கீழே இருப்பவரை [கீழரை], இன்றே துதிசெய் [இன்று ஓது].’ எனப் புரிந்து கொண்டு கச்சி ஏகம்பனை அன்றே வணங்கியது. நாமும் வணங்குவோம்.
இனிதே,
தமிழரசி.