Tuesday 25 November 2014

குறள் அமுது - (98)


குறள்:
“இறல்ஈனும் எண்ணாது வெஃகின்     
                                            விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு”                  
                                                  - 180

பொருள்:
கேடுவரும் என்று எண்ணாது பிறர் பொருளை அடைய விரும்பினால், அது அழிவைக் கொடுக்கும். பிறர் பொருளை விரும்பாது இருக்கும் பெருமிதம் வெற்றியைக் கொடுக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் வெஃகாமை என்னும் அதிகாரத்தில் வருகின்றது. வெஃகுதல் என்றால் பிறருடைய பொருளை தமதாக்கிக் கொள்ள ஆசைப்படுதலாகும். பிறரது பொருளை விரும்பி எடுக்க நினையாதிருத்தல் வெஃகாமையாகும். ஆசையே பொய்பேசுதல், களவுஎடுத்தல், மதுஅருந்துதல், பிறரது பெண்களை விரும்புதல், கொலைசெய்தல் ஆகிய ஐம்பெரும் கேடுகளுக்கு வழி வகுக்கின்றது. 

அத்துடன் உலகில் நடைபெறும் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கும், இனம் என்றும் மதம்  என்றும் கூறி, நடைபெறும் போர்களுக்கும், அரசில் சூதுகளுக்கும் பிறர் பொருளை அடையவிரும்புதலே காரணமாகும். வறுமையோடு நாட்டுப்புறங்களில் வாழ்பவர்களை விட நகரங்களில் வாழ்வோரே பிறர் பொருளை அடைய ஆசைப்பட்டு எதையும் துணிந்து செய்கிறார்கள். அவர்களில் அரசியல்வாதிகளும், அறிவுடையவர்களும், சுவாமி வேடம் போடும் அருளார்களும் ஆசைவார்த்தைகளைக் கூறி பிறர் பொருளை எந்தக் கவலையும் இன்றி எடுக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தத் திருக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார் போலும். 

ஏனெனில் படிக்காத அறிவில்லாதோர் பிறருடைய பொருளுக்கு ஆசைபடுவதால் அழிவுவரும் என்பதை எப்படி அறிந்திருப்பர்? அவர்களால் இறல்ஈனும் என்று நினைக்க முடியுமா? ஆதலால் அறிவுள்ளோரே இறல்ஈனும் அதாவது  அழிவுவரும் என்று எண்ணாது ஆசைப்படுகின்றனர். உலக ஆசைகளைத் துறந்து எமக்கு எதுவும் தேவையில்லையென வேண்டாமை என்ற செருக்கோடு இருக்க வேண்டியவர்கள் அருளாளர்களாகிய சுவாமிமார்கள். பாருங்கள் இன்றும் பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டு சிறைக்குச் செல்வோர் யார்? அறிவுடையோரும், அறிவுடையோராய் மக்களால் மதிக்கப்படும் அரசியல்வாதிகளும், கள்ளச்சுவாமிமார்களும் தானே!

ஆதலால் நீங்கள் அறிவுடையோராயின் பின்னால் வரப்போகும் அழிவை நினைத்துப் பார்த்து, பிறருக்கு உரியதை விரும்பாதிருக்கும் செருக்கோடு வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்பதையே இத்திருக்குறள் சொல்கிறது.

No comments:

Post a Comment