Thursday, 29 May 2014

பல் அழகி மச்சி!



ஈழத்தமிழரிடையே மாமன் மகளையோ, அத்தை மகளையோ காதலித்து திருமணம் செய்யும் வழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அதற்கிணங்க ஓர் இளைஞன் தன் மாமன் மகளை சிறுவயதில் இருந்து காதலித்தான். அவளைக் காணும் போது எல்லாம்  அவளின் முத்துப்பற்களின் சிரிப்பழகை, அவள் பேசும் சொல்லின் இனிமையை கேட்டும் இருக்கிறான்.  அவளைக் கண்டும் காணாதவன் போலவும், குரலைக் கேட்டும் கேட்காதவன் போலவும் இரசித்திருக்கின்றான்.  இப்போது அவள் பருவவயது மங்கையாக அவன் முன்னே வலம் வருகின்றாள். இதுவரை அவள் அவனுடன் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. அவள் அவனைக் காதலிக்கிறாளா! இல்லையா! என்பதை அறியமுடியாத தன் மனத்துடிப்பை நாட்டுப்பாடலாக வடித்து வைத்திருக்கிறான்.

மச்சான்: பல் அழகி மச்சி
                         பருவ வயதழகி
                சொல் அழகி வாய்திறந்து
                        சொல்லாள் ஒரு வார்த்தை
                                       - நாட்டுப்பாடல் (ஈழம்)
                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இந்த ஈழத்துக் காதலனைப் போலவே சங்க காலத்திலும் ஒருவன் ஒருத்தியைக் காதலித்தான்.    அவன் பொருள் தேடுவதற்காக வெளிநாட்டிற்குச் செல்லும் வழியில் மூங்கில் மலைக் காட்டின் ஊடாகச் சென்றான். வேர்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்த மூங்கில் மரங்களிலே காற்று மோதுவதால் ஏற்பட்ட இனிய ஒலியின் சத்தம் தறியில் கட்டப்பட்டிருக்கும் யானை வருந்தி பெருமூச்சு விடுவது போலக் கேட்டது. நீண்ட கோடை வெய்யில் எரிக்கும் மூங்கில் செறிந்த அந்த மலையின் உச்சியிலே மெல்ல ஊர்ந்து வரும் நிலவைப் பார்த்தான்.  நின்றான். "முள் போன்ற கூரிய பற்களையும் பொட்டிட்ட மணம் வீசும் அழகிய நெற்றியையும் உடைய நிலவுமுகம் ஒன்று என்னிடமும் இருக்கிறதே என நினைந்தேன். அந்த நிலவு - முழங்குகின்ற ஓசையோடு வீசுகின்ற காற்றால் இலைகள் அற்று, நிழல் தரமுடியாது கொம்புகளாக நிற்கும் மரங்களையும், கற்களையும் உடைய உயர்ந்த மலைக்கு அப்பால் உள்ளதே என நான் நினைந்தேன் அல்லவா?

“வேய் பிணி வெதிரத்துக் கால்பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினேன் அல்லெனோ யானே - முள் எயிற்று
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாட் திங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல்பிறங்கு உயர்மலை உம்பரஃது எனவே?                     - (நற்றிணை: 62)
என காதலியின் பல்லழகையும் முக அழகையும் நினைத்துப் பார்த்தானாம்.

சங்ககால காதலன் போல ‘கண்ணுபடப் போகுதையா’ படத்திலும் காதலன் தன் காதலியின் பொட்டழகையும் பல்லழகையும் நிலவோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு’ என்கிறான்.

“மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறைப் பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணி பல்லழகு

பத்துவிரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம்விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு”

காலங்காலமாக காதலியரின் பல்லழகு காதலரை மயக்கிக் கொண்டே இருக்கிறது.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 28 May 2014

குறள் அமுது - (90)

குறள்:
கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்                                - 116

பொருள்:
நெஞ்சம் நடுவுநிலைமை தவறி தவறான செயல்களைச் செய்யத் தொடங்குமானால் ‘நான் கெட்டு அழியப் போகிறேன்’ என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கம்:
தாம் செய்வது சரியா பிழையா என்பதை சிந்தித்து அறியும் தன்மை உள்ளோருக்கு அவர்கள் செய்யும் தவறுகளை அவரது நெஞ்சம் அவர்களுக்கு உணர்த்தும். நாம் செய்வது தவறு என்பதை நெஞ்சம் அறிந்து உணர்ந்தாலும், செய்யும் செயலின் மேல் உள்ள விருப்பத்தால் அதைச் செய்ய நம் மனம் நாடும். செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதும் எமது நெஞ்சமே.

அதனாற்றான் திருவள்ளுவர், நாம் செய்யும் தவறுகளை நம் நெஞ்சின் மேல் ஏற்றி ‘தன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின்’ என்றார். நடுநிலை இல்லாத் தன்மை நடுஒரீஇ என்று சொல்லப்படும். நடுநிலை உடையவர் நெஞ்சம் பாகுபாடு அற்று இருக்கும். பூமியில் மேடு பள்ளம் இருப்பது போல் மனிதவாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். எனவே நாம் மற்றவர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக நெஞ்சின் நடுநிலைமையை இழக்காக் கூடாது. 

நடுநிலையுள்ள நெஞ்சோடு வாழ்பவரின் நெஞ்சம் நடுநிலைவிட்டு தவறான செயல்களைச் செய்யத் தூண்டுமானால் அந்தக் கணமே ‘நான் கெட்டு அழிந்து போகப்போகிறேன்’ என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். ஆதலால் நாம் கெட்டு ஒழிந்து போகாதிருக்க நம் நெஞ்சை நடுநிலை தவறாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

Tuesday, 27 May 2014

தங்களூர் தமிழா?

நாரதர்

கதாபாத்திரங்கள்:
சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர்
[திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்]

நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா!

முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ விசேடம் இருக்க வேண்டும்.

பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள்.

முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா?

சிவன்: [சிரித்து] முருகா! அவசரப்படாதே! பூலோகத்தில் நாரதர் எங்கு சென்றார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

[நாரதர் ‘சம்போ மகாதேவா!’ எனக் கூறிக்கொண்டு நந்தியின் அருகே வருகிறார்.]

நந்தி: நாரதரே வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும். ஏன் இவ்வளவு களைத்து வருகிறீர்?

நாரதர்: உலகம் இப்போது மாறிவிட்டது. முன் போல் பிரயாணம் செய்ய முடியவில்லை. எங்கும் ஒரே தடங்கல். பரவெளியின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் உடல் சோர்வடைந்துள்ளது.

நந்தி: [குரலைத் தாழ்த்தி] சிவனே, சிவனே என்றிருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்? அம்மையப்பர் தங்கள் வரவை எதிர்பார்த்திருக்கின்றனர்.

நாரதர்: அப்படியா? சந்தோசம். நான் வந்த விடயம் மிக எளிதாகிவிடும். சம்போ மகாதேவா!
[நாரதர் உள்ளே செல்கிறார்]

சிவன்: வருக நாரதரே! வருக! பூலோகம் எப்படி இருக்கிறது?

பார்வதி: [இடைமறித்து] எங்கு சென்றீர் நாரதரே?

நாரதர்: தாயே! நீங்கள் அறியாததா? இலண்டனுக்குச் சென்றேன்.

பார்வதி: இறையனாரே தமிழ் ஆராய்ந்த தமிழ்நாட்டையும் நாரதமுனிக்கு நயம்பட உரைத்த நாவானான இராவணன் வாழ்ந்த ஈழத்தையும் புறக்கணித்து இலண்டன் சென்றீரா! இது என்ன வேடிக்கை!

நாரதர்: பெருமாட்டியே! ஈழத்தமிழர்கள் இலண்டனில் சைவசமயமகாநாடு நடத்துவதாகவும் அதில் தமிழக அறிஞர்களும் கலந்து கொள்வதாகவும் எனக்கு ஓர் அழைப்பிதழ் வந்தது.

சிவன்: ஓ!! சைவசமயமகாநாடு, அதுவும் தமிழர்கள் இலண்டனில் செய்திருக்கிறார்கள். நான் தமிழை ஆராய்ந்ததை விட, அவர்கள் என்னைப்பற்றி ஆராய்ந்திருப்பார்கள். அப்படித்தானே நாரதா?

நாரதர்: ஆம்! ஆம்! அதற்கு என்ன குறைவு? ஆனால்…………….

பார்வதி: என்ன ஆனால்……….

நாரதர்: வந்து…. .. அந்த மகாநாட்டில் தமிழர்கள் கிணறு வெட்ட நச்சுப் பூதம் புறப்பட்டிருக்கிறதாம்.

[நாரதர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த முருகன் ஆச்சரியத்துடன்]
முருகன்: என்ன நச்சுப் பூதமா?

நாரதர்: [முருகனுக்கு அருகே ஓடிச்சென்று] முருகா! நீரும் இங்கா இருக்கிறீர்? தமிழ்க் கடவுளே! உமக்கு மிக்க மகிழ்ச்சி தரும் செய்தியுடனே வந்துள்ளேன்.

முருகன்: [கோபத்துடன்நாரதரே! முதலில் பூதம் என்றீர். இப்போது எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்கிறீர். இதில் எது சரி? என்ன தடுமாற்றம்?

நாரதர்: தடுமாற்றம் எனக்கல்ல. ஈழத்தமிழர்கள் எதை எப்படிச் செய்வது என்று தடுமாறுகிறார்கள். பழைய கலை கலாச்சாரத்தை உட்கொண்டு வாழவும் பயம். புதிய கலை கலாச்சாரத்தை உருவாக்கி வழிநடத்தவும் பயம். அதனால் வரும் கேடுகள் பல. அதனை அவர்கள் உணர்கிறார்கள் இல்லை. அவர்களுக்கு பழைய கலை கலாச்சாரத்தின் பெருமை புரிகிறது. ஆனால் அது உண்மையாக என்ன கூறியது என்பதை ஆரய்ந்து அறிய விரும்பாது, பண்டைய தமிழைப் படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக, கடவுள் கொள்கையில் தம்மிலும் அறிவு குறைந்தோர் சொல்வதை கேட்பவர்களாக இருக்கிறார்கள். தமிழைப் படித்தவர்களும் உண்மையைக் கூறுகிறார்கள் இல்லை. ஈழத்தமிழர்கள் மேலோட்டத்திற்கு தமிழர்களாக வாழ்ந்து கொண்டு, புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் கலாச்சாரத்தில் தங்கள் குழந்தைகள் தொலைந்து போகாக் கூடாது என்ற அடிப்படை எண்ணத்தில் இருதோணியில் கால்வைத்தபடி வாழ்க்கைப் பிரயாணம் செய்கிறார்கள்.

முருகன்: நாரதரே! கலாச்சாரத் தடுமாற்றத்திற்கும் பூதத்திற்கும் என்ன தொடர்பு?

நாரதர்: சைவமும் தமிழும் பிரிக்க முடியாதன. தமிழர் கண்ட பெருநெறி, சைவத் திருநெறி. சைவசமயத்தை தமிழிலிருந்து வேறாக்கிய போது பிறநெறிகள் தமிழர் வாழ்வில் புகுந்தன. அந்த நேரத்தில் சமயகுரவர் தோன்றி மீண்டும் சைவசமயத்தை தமிழுடன் பிணைத்தனர். அப்பிணைப்பை சேக்கிழார் உறுதிப்படுத்தினார்.

பார்வதி: ஆமாம். திருஞானசம்பந்தரை ‘முத்தமிழ் வாசகர்’ என்றும், திருநாவுக்கரசரைத் ‘தமிழ்மொழித் தலைவர்’ என்றும் சுந்தரரை ‘நற்றமிழ் நாவலர் கோன்’ என்றும் சேக்கிழான் பாராட்டினான்.

நாரதர்: முற்றிலும் உண்மை தாயே! தமிழும் சைவமும் ஒன்றில் ஒன்று தங்கி அன்றைய தமிழரின் வாழ்வியலைப் பண்படுத்தியது. இன்றைய தமிழன் அவற்றைப் பிரிப்பதால் அவன் வாழ்க்கை நெறி தடுமாறுகின்றது. இலண்டன் சைவசமய மகாநாட்டில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், இல்லை! தமிழ் தோத்திர மொழி, ஆரியமே பூசைகுரிய மொழி ஆதலால் ஆரியத்திலேயே அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் குரல்கள் பிறந்தன. அநேகர் இதில் எதைச் செய்வது என்று தடுமாறுகிறார்கள். முருகா! ஆரியம், தமிழ் என்று அவர்களிடம் கிளம்பிய இந்த நச்சுப்பூதம் உனக்கு மகிழ்ச்சி தரும் என்றே நான் நினைத்தேன். தமிழில் அர்ச்சனை செய்வது புதுவிடயம் என்கிறார்களே! அது சரிதானா?

முருகன்: தமிழில் அர்ச்சனை செய்வது புதுவிடயமா?

திருக்கைலாயம்

சிவன்: ஆகா! பழைமையே புதுமைக்கு வித்து என்பதை தமிழர்கள் உணர்ந்துவிட்டார்கள். தொடரட்டும் அவர்கள் வாதம். பொறுத்திருந்து பார்ப்போம்.

முருகன்: தந்தையே! அது தவறு. எது உண்மை என்பதைத் தமிழர்கள் பழைய சமய, இலக்கிய நூல்கள் மூலம் அறியலாமே. ஆரியர் வரமுன் தமிழரிடம் தெய்வவழிபாடு இருக்கவில்லையா? தமிழர் ஐவகை நிலத்திற்கும் ஐந்து தெய்வங்களை [குறிஞ்சி - முருகன், முல்லை - திருமால், மருதம் - வேந்தன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை] வைத்து வணங்கவில்லையா? சைவசமய மகாநாட்டினருக்கு சங்கத்தமிழ் இலக்கியம் தெரியாவிடினும் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படை ஆயினும் தெரிந்திருக்க வேண்டுமே.

நாரதர்: திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் வருவதல்லவா? அது  சைவசமய நூலாகுமா?

முருகன்: ஆம். அது என்னை வழிப்படுத்துவதால் அதற்கு திரு என்னும் அடைமொழி கொடுத்து அதனை பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாகிய பதினொராம் திருமுறையில் சேர்த்திருக்கிறார்கள். தமிழர் இரண்டாயிர வருடங்களுக்கு முன் எப்படி தெய்வவழிபாடு செய்தார்கள் என்பதை நக்கீரன் கூறியுள்ளான். தமிழன் தன் பழைமையை அறிய வேண்டுமானால் சங்கத் தமிழைப் படிக்கவேண்டும்.

நாரதர்: ஆறாம் திருமுறையிற்றான் முதன் முதலில் தமிழன் என்ற பதம் வருகின்றதாம். அதற்கு முந்திய திருமுறைகளில் தமிழர் என்ற குறிப்பு வரவில்லையாம்.

[முருகன் வாய்விட்டு பலமாகச் சிரிக்கிறார், பின் நாரதரைப் பார்த்து]

முருகன்: சொல்வோர் சொன்னால் கேட்போருக்குப் புத்தி எங்கே போய்விட்டது? அது சரி, பன்னிரு திருமுறைகளும் தமிழில் தானே இருகின்றன. இன்றைய தமிழர் முதலாவது திருமுறை கூடப்படித்ததில்லையா? முதலாவது திருமுறையின் முதலாவது பதிகத்தையும் படிக்காமலா இலண்டனில் இத்தனை கோயில்களைக் கட்டிச் சைவசமய மகாநாடுகளை நடாத்துகிறார்கள்? 
முதலாவது திருமுறையின் முதலாவது பதிகத்தின் பதினொராவது தேவாரத்தில் 
“ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறிய தமிழ் வல்லார்
தொல்வினை தீர்தல் எளிதாமே”
என வருகின்றதே! இந்தத் திருநெறிய தமிழ்வல்லார் யார்? தமிழரா? ஆரியரா? தமிழ் படித்த ஆரியராய் இருப்பரோ?

முதலாவது திருமுறையின் ஆறாவது பதிகத்தின் எட்டாவது தேவாரத்தில்
"அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓதுநாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதீச்சரம் காமுறவே”
இதில் வரும் ‘செந்தமிழோர்கள்’ யார்? நாரதரே பாரும், “அடி முடி தேடிய நான்முகனும் திருமாலும் அறியமுடியாதவனாய், மந்திர வேதங்களை சொல்கின்றவனாய் திருமருகலில் இருக்கும் அழகனே! செந்தமிழ் பேசும் தமிழர்கள் வணங்கிப் போற்ற செங்காட்டங் குடியில் இருக்கும் கணபதீச்சரத்தில் காட்சி கொடுக்கும் காரணத்தைச் சொல்” என்று என் தந்தையைப் [சிவனைப்] பார்த்து இத்தேவாரத்தில் திருஞானசம்பந்தன் கேள்வி எழுப்பி உள்ளான். சும்மா தமிழர் என்று கூறவில்லை. மிக உயர்வாக ‘செந்தமிழோர்கள்’ என்றல்லவா கூறியிருக்கிறான். இதைவிடவா தமிழுக்கும் தமிழருக்கும் புகழ் வேண்டும்?

முதலாம் திருமுறையின் பதினொராம் பதிகத்தின் நான்காவது தேவாரத்தில் திருஞானசம்பந்தன் தந்தையைப்பற்றி
“பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழ் அவையும்
உண்ணின்றதோர் சுவையும் உறுதாளத்து ஒலி பலவும்
மண்ணும் புனல் உயிரும் வருகாற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிம்மிழ லையே”
எனக் கூறியிருக்கின்றான். தமிழும் தமிழரும் இன்றி தமிழவை உருவாகுமா?  தந்தையை [சிவனை] பலவோசைத் தமிழ் அவை என்றல்லவா சம்பந்தன் போற்றியுள்ளான்!

நாரதர்: முருகனே! சிவனாரை தமிழ் அவை என்று கூறியதாகச் சொல்கிறீர்கள். அவர்களோ, சிவன் ‘வேதம் ஓதி, வெண்ணூல் பூண்டு’ வருவதாகச் சம்பந்தனும், ‘புரிவெண்ணூல் திகழப் பூண்ட அந்தணன்’ என அப்பரும் கூறுவதால் அந்தணர் பூசை செய்வதா? எனக்கருதுவோர் அந்தணனாகவே காட்சி தரும் சிவனையும் கோயிலில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்கிறார்கள்.

முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து - அறிவு என்ற அடியால் பிறந்து அறிவு நூல் என்ற பொருள் தரும். தமிழரின் மூலநூல் - முதன்நூல் அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேசும். இதனையே பழந்தமிழ் இலக்கண ஆசிரியனான தொல்காப்பியன்
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்
என்றான். வடமொழி வேதம் தெய்வங்களைப் பற்றிப் பேசும். 

வெண்ணூல் பூண்டோர் யாவரும் அந்தணர்களா? திருமூலன் “நூலும் சிகையும் நுவலில் பிரமமோ” என திருமந்திரம் செய்திருக்கின்றான். அதாவது பூணூலும் தலைமுடியும் பிராமணர் என்பதைக் காட்டாதாம். அந்தணர் யார் என்பதைத் திருவள்ளுவன்
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்”
என்று மிக அழகாகச் சொல்லி இருக்கிறான்.

பூணூல் அணிந்த ஆரியன் ஒருவன், இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில் (112:3) ‘நான் பாடல்களைச் செய்கின்றேன், என் தந்தையோ ஒரு மருத்துவன், என் தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றவள். செல்வத்தைப் பெறுவதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளால் நாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கிறோம்’ எனக்கூறியிருக்கிறான். இதன் கருத்து என்ன?
திரிகைக்கல்

நாரதா! அத்திப்பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தையாக இருப்பதைக் காணலாம். அவர்கள் உடம்பில் ஓடுவது திராவிடத் தமிழ் இரத்தமே அன்றி வேறில்லை. அந்தணர்கள் யாவரும் தெய்வச் சந்நிதியில் படைக்கும் அமுது கூட தமிழரின் அன்ன வகைகளே! சப்பாத்தியும், சமோசாவுமா படைக்கிறார்கள்? ஏன் பழங்களைப் படைக்கும் போது கூட “கதலி பலம் நிவேதயாமி” என்றுதானே சொல்கிறார்கள். கதலி பழம் என்றுகூடச் சொல்லத் தெரியாது கதலி பலம் என்கிறார்கள். அதுகூடவா தமிழரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? கதலி வாழை எங்கே வளரும்? இந்த உலகையே வலம் வரும் நீ அறியாததா என்ன!

நாரதர்: இறைவா! அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன என்றும் அவர்களே முப்போதும் திருமேனி தீண்டுவார் எனவும் சேக்கிழார் சொன்னாராமே! தமிழ் அர்ச்சனை பற்றி திருமுறைகளில் பேச்சில்லையாமே!!

பார்வதி: நாரதா! பெரியபுராணத்தில் சேக்கிழான் மிக்க சொற்றமிழால் வேதமும் பாடினார்’ என்றும் ‘எழுதுமறை மல்லல் நெடுந்தமிழால் இசைத்தார்’ எனவும் சொன்ன இடங்களில் வேதம், மறை என்ற சொற்களை தமிழ்வேதம், தமிழ்மறை என்றே அறுதியிட்டுப் பாடி இருப்பதைப்பார். எனவே அவர்களை பெரியபுராணத்தைக் கருத்தூன்றிப் படிக்கச் சொல்.

[இவர்கள் உரையாடல்களைச் செவிமடுத்த சிவன்]

சிவன்: தேவி! தமிழன் தன்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் தமிழ் மொழியில் உருவான பக்தி இலக்கியங்கள் போன்ற சொல்நயமும், கவிநயமும், கருத்தாழமும் உள்ள பக்தி இலக்கியங்கள் வேறு எந்த மொழியிலும் உருவாகவில்லை. அவற்றை பக்தி இலக்கியங்கள் என்பதைவிட தமிழர் சரித்திரக் கருவூலம் எனலாம். ஞானசம்பந்தன் பிறப்பைக் கூறும் போது சேக்கிழான் என்ன சொன்னான்? 
"திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக”

பார்வதி: ஆகா! என்ன அருமையான பாடல். திருஞானசம்பந்தன் பிறந்ததால் உலகின் திசைகளை தென் திசை வெற்றி கொண்டு நிற்க. அதனால் வானுலகையும் மற்றைய உலகங்களையும் இப்பூவுலகம் தனித்து வெற்றிகொள்ள, பிறரால் அசைக்க முடியாத செந்தமிழ் அயல் [பக்கத்து] மொழியான ஆரியத்தை வென்றது.

நாரதர்: தாயே! திருஞானசம்பந்தன் பிறந்த நேரம் தெழுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற அயல் மொழிகள் தோன்றவுமில்லை, செந்தமிழுடன் போட்டியிடக்கூடிய நிலையில் இருக்கவுமில்லை. ஆரியமே தமிழுடன் போட்டியிட்டது என்று சேக்கிழான் சொன்னது உண்மையே.

முருகன்: தமிழ் அர்ச்சனை எது என்பதை சுந்தரன் வரலாற்றில் சேக்கிழான் குறிப்பிட்டானே!

நாரதர்: [சிவனிடம் ஓடிச்சென்று, உரத்த குரலில்] பிரபோ! அந்தப் பாடலைப் பற்றி நான் கேட்டதாக அவர்கள் கேட்க, சேக்கிழானும் சுந்தரனின் பாடலின் சிறப்புக்காக என மழுப்பிவிட்டான். நீங்கள் சுந்தரனிடம் என்ன கேட்டீர்கள்?

சிவன்: சுந்தரனைப் பற்றி உங்களுக்குத் தெரியும். எப்பொழுதும் என்னுடன் வாதுக்கு நிற்பவன். நான் அவனை ஆற்கொண்டபோது செந்தமிழ்ப் பாட்டினால் அர்ச்சனை செய்யச் சொன்னேன். அதற்கு அவன்
செந்தமிழ் திறம் வல்லிரோ சொலும் ஆரணிய விடங்கரே?”
என்று கேட்டான். நான் அதற்குச் சிரித்தேன்.

பார்வதி: [இடைபுகுந்து] உங்கள் சிரிப்பின் பொருள் உணர்ந்து, பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்! நீங்கள் இருப்பதைப் பாடினான்.

சிவன்: அதுமட்டுமா? பண்ணார் இன்தமிழாய் பரமாய பரஞ்சுடரே!’ எனவும், பக்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஏழிசையின் தமிழால் இசைந்தேத்திய பக்தியும்’ என்றும் ஏழாவது திருமுறையின் நூறாவது பதிகத்தில் பாடியிருக்கிறான்.

முருகன்: எந்தையே! நீங்கள் திருவீழிமிழலையில் அப்பருக்கும் சம்பந்தனுக்கும் படிக்காசு கொடுத்ததை, ‘தமிழோடு இசைகேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்’ என்றுகூட சுந்தரன் பாடியுள்ளானே!

சிவன்: முருகா! இன்றைய தமிழர்கள் பன்னிருதிருமுறைகளை நன்றாகப் படிக்கவில்லை. அதனால் வந்த குழப்பமே இது. ஞானசம்பந்தன் மூன்றாம் திருமுறையின் எண்பதாவது பதிகத்திலுள்ள நான்காவது பாடலில் என்ன சொல்லியிருக்கிறான் சொல் பார்க்கலாம்.

முருகன்:
செந்தமிழர் தெய்வமறை நாவர்
செழுநற்கலை தெரிந்த அவரோடு
 அந்தமில் குணத்தவர்கள் 
அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்”

சிவன்: இதில் யார் அர்ச்சனை செய்கிறார்கள்? எந்த மொழியில் செய்கிறார்கள்? இதைவிடவா கூடிய ஆதாரம் வேண்டும்? செந்தமிழரின் தெய்வமறை தெரிந்த நாவையுடைய கலைவல்லவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனை செய்திருக்கிறார்கள். அந்தமில் குணத்தவர்கள் யார்? குணமென்னும் குன்றேறி நின்றவர்கள். அவர்கள் பிறப்பால் பிராமணர்களாக இருக்கத் தேவையில்லை. எவனிடம் அந்தணாளன் ஆகும் தன்மை இருக்கிறதோ அவன் அர்ச்சனை செய்யலாம். அந்தமில் குணமுடையவன் பிறப்பால் நந்தனாகவும் இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். சம்பந்தன் தமிழ்மொழியில் செய்த அர்ச்சனையை செந்தமிழர் தெய்வமறை என அழுத்திக் கூறியதோடு நற்குணங்கள் நிறைந்த அந்தமில் குணமுடையோரே அர்ச்சனை செய்தனர் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளான். அப்படியிருக்க எப்படி ‘தமிழ் அர்ச்சனை பற்றி திருமுறைகளில் பேச்சில்லையாம்’ என்று கூறமுடியும்?

நாரதர்: அப்பனே! அவர்கள் சொல்வது போல் உம்முடன் சேர்த்து, பன்னிருதிரு முறைகளையும் தமிழர் வீசிவிட வேண்டியதில்லை என்கிறீரா?

சிவன்: இன்றைய தமிழர் போல் அன்று நாவுக்கரசனும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் என்னையும் மறந்து பிறமொழி மோகத்தால் சமணமதத்தில் சேர்ந்து இருந்தான். அவன் தனது தவறை உணர்ந்த போது
“வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறா ஆயிரஞ் சமணும் அழிவாக்கினான்”
என ஐந்தாம் திருமுறையில் பாடி வருந்தினான். தமிழர்களை தமிழைப் படித்து திருமுறைகளைப் படிக்கச் சொல். அவர்களுக்கு உண்மை தானாகவே விளங்கும்.

பார்வதி: ஞானசம்பந்தன் உங்களைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் பாவித்துப் பாடிய திருக்கானூர்ப் பதிகத்தின் எட்டாவது பாடலில் நீங்கள், தமிழின் இனிமையான தன்மையைப் பேசி, தன்னைக் காதலித்து, தன் நிறத்தை எடுத்துக் கொண்டு, தனக்கு குமிழம் பூ நிற மேனியைத் தந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினானே ஞாபகம் இருக்கிறதா?

நாரதர்: அம்மையே! என்ன சொன்னீர்கள்? இறைவனார் தமிழின் இனிய தன்மையைப் பற்றி ஞானசம்பந்தனிடம் பேசினாரா? அதைப் பாடிக்காட்டுங்களேன்.

பார்வதி:
தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணி நல்ல
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மையது கொண்டார்
கமழுஞ்சோலைக்  கானூர்மேய பவள வண்ணரே

நாரதர்: அபாரம்! அற்புதம்! இப்படியும் ஒரு பதிகத்தேவாரம் மாணிக்கப்புதையலாக திருமறைக்குள் மறைந்து கிடக்கிறதா? மகாதேவா! தாங்கள் தமிழ்மொழியில் திருஞானசம்பந்தனுடன் பேசினீர் என்று சொன்ன பிறகுமா தமிழருக்குத் தமிழ்மொழியில் அர்ச்சனை செய்யத் தடுமாற்றம்?

முருகன்: நாரதனே! ஞானசம்பந்தன் எந்தை பேசுவது தமிழ் என்று கூறினான். சுந்தரன் தந்தையின் ஊர் எது என்றும் கூறியிருக்கிறான்.

நாரதர்: [சிவனைப் பார்த்து] தங்களூர் எதுவோ?

சிவன்: நாரதா! சுந்தரன் தங்களூர் தமிழ் என்று சொன்னான். அது சரியே! இலிங்க வழிபாடும் தமிழருடையதே. ஆரியருடையது ருத்திர வழிபாடு. இருக்கு வேதத்தில் சிவலிங்க வழிபாடு இகழப்பட்டுள்ளது. அதனை நீ அறிவாய். 

நாரதர்: சுந்தரன் தங்களூர் தமிழ் என்று பாடிய தேவாரத்தை நான் அறியலாமா?

சிவன்: 
திங்களூர் திருவாதிரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநாலிசை நாவலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையாறிடை மருதே

நாரதர்: தங்களூர் தமிழானென்று பாவிக்கவல்ல எங்களூர் எய்தமான்என்றால் என்ன?

முருகன்: அதாவது, தனது ஊர் [தங்களூர்] தமிழ் எனத் தியானிக்கும் [பாவிக்கும்], எங்களூர் வந்த பெருமான் எனச் சுந்தரன் சொன்னான். தமிழான் என்பது தமிழ் + ஆன் எனப் பிரியும். இதில் ஆன் விகுதி. இணுவில் + ஆன் = இணுவிலான், உடுவில் + ஆன் = உடுவிலான், கொக்குவில் + ஆன் = கொக்குவிலான் என்று சொல்வது போல தமிழ் ஊரில் வாழ்பவனைத் தமிழான் என்று தானே சொல்லவேண்டும்?

நாரதர்: தண்ணார் தண்ணளிக்கும் தண்பாண்டி நாட்டானே! தங்களூர் தமிழா? அப்போ ஏன் ஆரியன் கண்டாய் என்று சொல்கிறார்கள்?

முருகன்: நாரதா! இது என்ன கேள்வி? ஆரியத்தில் மட்டுமல்ல பிறமொழிகளிலும் கலைகளிலும் தமிழர் வல்லவர்களாக இருக்கிறார்களே! அது தவறா? தமிழர்களின் ஆற்றலுக்கு வெளிநாட்டார் தலைதாழ்த்தவில்லையா? சீவாத்மாக்களே பலமொழிகள் தெரிந்தவர்களாக இருக்கும் போது பரமாத்மாவிடம் இப்படிக் கேட்கலாமா?

[நந்தி அங்கு வந்து வணங்கி]

நந்தி: தென்னாடுடைய சிவனே போற்றி!

நாரதர்: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

பார்வதி: நாரதா! இறைவன் யாருக்கு உரியவன் என்பதைப் புரிந்து கொண்டாயா?

நாரதர்: ஆம் தாயே! பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே! என்பதைப் புரிந்து கொண்டேன் தாயே!

[நாரதர் ‘சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா!!’ எனக்கூறியபடி கைலாசத்தைவிட்டுச் செல்கிறார்].

இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
'அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன' என்று திரு க உமாமகேஸ்வரன் அவர்களால் எழுதப்பட்டு 23வது கலசம் இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மறுப்பாக கலசம் 25வது சிறப்பு மலரில் [தை 1999ல்] இதனை எழுதினேன். அவர் குறிப்பிட்ட பெரியபுராணத்திலும் திருமுறைகளிலும் இருந்து எனது கருத்துக்கான ஆதாரங்களைத் தந்துள்ளேன். இந்த ஆய்வை - நாடகத்தை எழுதக் காரணமாக இருந்தவருக்கு எனது மகிழ்ச்சி உரித்தாகுக!

Monday, 26 May 2014

தூங்காத கண்கள்



மனித வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கம் இல்லாவிட்டால் உடலின் தசைநார்கள் தளர்வடைவதால் உடல் உறுப்புக்களும் தளர்வடையும். அத்துடன் மன இறுக்கம் ஏற்படவும் அது வழிவகுக்கும். அத்தகைய தூக்கத்தை தொலைத்து வாழ்வோர் பலராவர். மனிதன் பருவவயதில் காலடி எடுத்து வைத்த பின்பே தூக்கத்தை இழக்கத் தொடங்குகின்றான். அதற்கு பருவவயதின் எண்ணங்களும் கனவுகளும் காரணம் என்பர். அதனை முற்றிலும் சரி என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. 
மனிதன் வாழும் வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்து அது மாறுபடலாம். வறுமையால் பசி வாட்டும் போது தூங்கமுடியுமா? நோயால் உடல் நொந்து துவளும் போது தூங்கமுடியுமா? கொசுவும் முட்டைப் பூச்சியும் தெள்ளும் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் போது தூங்கமுடியுமா? உடன் வாழ்வோரின் தொல்லைகளும் புழுக்கம் குளிர் போன்ற இயற்கையின் தொல்லைகளும் இந்நாளைய ஐபோன், ஐபாட், மட்டுமல்ல பாடசாலைக் கல்விச் சுமையும் கூட இளவயதினரை தூங்கமுடியாது செய்கின்றன.

பருவவயதின் பின்னரும் தூக்கத்தை மனிதன் தொலைக்கின்றான். பொருளுக்காகவும் பெண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் தூக்கத்தை தொலைக்கின்றான். தாய்மையின் தலைவாசலில் நிற்கும் பெண்களும் தூக்கத்தை இழந்து தவிப்பர். குழந்தைக்காக, கணவனுக்காக, மனைவிக்காக, தாய், தந்தையர்க்காக தூக்கத்தை இழப்போரும் இருக்கிறார்கள். இவை பெரும்பாலும் மனிதவாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளேயாகும். இவர்களாவது சிலமணி நேரமாவது தூங்குவார்கள். ஆனால் தூக்கமே வராது கொட்டக் கொட்ட விழித்திருப்போரும் இருக்கிறார்கள்.

பிறர் பொருளை எப்படி வஞ்சகமாகக் கொள்ளையிடலாம் எனத் திட்டமிட்டு கால நேரம் பாத்திருக்கும் கள்வர்க்கும் தூக்கம் இருக்காது. காதல் வசப்பட்டு காதலியிடம் தன் உள்ளத்தை பறிகொடுத்தவர்க்கும் தூக்கம்   வராது. பெரும் பொருளைத்தேடுவோம் என்று நினைத்து எந்நேரமும் பொருள் தேடலிலேயே மூழ்கிக் கிடப்போருக்கும் தூங்க முடியாது. அப்படிச் சேர்த்த பொருளை மற்றவர்கள் எடுத்திடக்கூடாதே என்று விழித்திருந்து பாதுகாப்போருக்கும் துயில் கொள்ளமுடியாது என்கின்றது நான்மணிக் கடிகை. 

“கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்”                                - (நான்மணிக் கடிகை: 7)

எனவே நன்றாகத் தூங்க வேண்டுமா திருடத்திட்டம் தீட்டாமல், காதலியை நினைத்து உள்ளம் உருகாமல், பொருள்தேடப் பேராசைப்பட்டு ஓடியோடி உழைக்காமல், சேர்த்த பொருளை எப்படி பாதுகாப்பது என்று கவலையேபடாமல் ஆசை தீரத்தூங்கி எழுங்கள்.
இனிதே,
தமிழரசி.

பள்ளி கொள்ளும் பரந்தாமா!












பள்ளி கொள்ளும் பரந்தாமா பாவி உனைப் பார்த்து
எள்ளி நகையாடவில்லை ஏது குறை உனக்கோ
துள்ளித் திரி பருவமதில் துடுக்கடக்கா காரணத்தால்
நள்ளிரவு வேளைதனில் நாரியர் தம்மோடு நீயும் 
அள்ளி வெண்ணெய் உண்டு அடிபட்ட வேளையிலே
முள்ளில் வீழ்ந்து ஆங்கு முடமாய் ஆனதனால் மெல்ல
பள்ளி கொண்டாயோ அதுவும் பாற்கடல் அதனிடை
அள்ளி வெண்ணெய்தனை அடிக்கடி உண்பாயோ!