Saturday, 5 April 2025

வியந்து நாம்காண விரைந்து நீயாடு


மணிமிடற் றந்தண மயக்கங்கள் போக்கவே

மனதினிற் தங்கியே மாயையை காட்டவே

அணிநிழல் காட்டினை அரங்கது ஆக்கியே

அனைத்துயிர் வாழவே ஐம்பூ தமொடு

பணிவளை குலுங்கிட பறையது ஆர்ப்ப

பலவிசை இயம்ப பல்லுருவம் பெயர்த்து

வேணிமுடித்த சடை விண்திசை அலம்ப

வியந்து நாம்காண விரைந்து நீயாடு

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

மணிமிடறு - நீலமணி போன்ற கழுத்து [நஞ்சுண்டதால்]

அந்தணன் - செந்தன்மை பூண்டொழுகும் சிவன்

மயக்கங்கள் - தடுமாற்றங்கள்

மாயை காட்டல் - பொய்யா? மெய்யா? எனும் உண்மையைக் காட்ட

அணிநிழல் காடு - மரநிழலால் செறிந்த காடு

அரங்கம் - மேடை

அனைத்துயிர் - எல்லா உயிரும்

ஐம்பூதம் - நிலம், தீ, நீர், காற்று, வான்வெளி

பணிவளை - பாம்பாலான காப்பு

பலவிசை இயம்ப - பலவகை இசைகளின் ஒலி எழ

பல்லுருவம் பெயர்த்து - பல உருவங்களை மாறி மாறி எடுத்து

வேணிமுடித்த சடை - முடித்த கூந்தல் சடை

விண்திசை அலம்ப -வானத்துத் திசையெங்கும் அலைய

வியந்து - வியப்போடு

Friday, 28 March 2025

சாமரை வீசின நீர்த்துளிகள்


தாமரைபூத்த தடாக மென்றே அதை
            தளத்திருந்து பார்த்து ரசிக்கவந்தேன்
தாமரைமேல் இருகயல் துள்ளிடக் கண்டு
            தாவியோடி அருகில் சென்றேன்
பாமரன்போல் அவற்றைப் பற்றிட கைவிரித்தேன்
            பாவையவள் பதறியே எழுந்து நின்றாள்
சாமரை வீசின நீர்த் துளிகள்
            சற்றே சாடியகூந்தல் இடையிருந்தே
இனிதே,
தமிழரசி.

Friday, 14 March 2025

சக்திவேல் ஏந்தும் சண்முகா!


சக்திவேல் ஏந்தும் சண்முகா சரவணா
            சித்தமதில் குடியிருக்க சித்தமிரங்கி வா
பக்திவேல் ஏந்தும் பக்தர்கள் நாமென்றே
            பத்திமை அறியாது பத்தராய் தடுமாறி
உத்திவேல் ஏந்தி உண்மை உணராதே
            உவந்து உழன்று உழைத்து அழிவேமை
தத்தி வேலேந்தி தத்துவம் உரைக்க
            தளர்நடை இட்டுவா தண்டபாணி தெய்வமே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
சக்திவேல் - ஆதிசக்தி கொடுத்தவேல்
சண்முகா - அழகிய முகத்தை உடையவன். சண் - அழகு.
                    சண்+முகன் = சண்முகன், முருகன்.
சரவணா - சரவணம் - ஒருவகை நாணல் புல். சரவணப் பாயில்                              பிறந்தவன், முருகன்.
சித்தமதில் - மனதில்
சித்தமிரங்கி - மனமிரங்கி
பக்திவேல் - பக்தியாகிய வேல்
பக்திமை - பக்தியின் தன்மை
பக்தராய் - பக்தர் எனக்கூறி
தடுமாறி - மனம் ஒன்றாது
உத்திவேல் - உந்தி எழும் நுண்ணறிவாகிய வேல்
உண்மை உணராது - மெய்ப்பொருள் உண்மையை உணராது
தத்தி - தத்தி தத்தி
தத்துவம் - மெய்ப்பொருள் உண்மையை [கடவுள் உண்மை]
உரைக்க -  சொல்ல
தளர்நடை இட்டு - தத்தித்தத்தி குழந்தை நடக்கும் நடைநடந்து
தண்டபாணி தெய்வம் - முருகன்[தண்டக்கோல் வைத்திருப்போன்]

Wednesday, 26 February 2025

பண்ணிய புண்ணியமேது?


சிவனவன் திருக் கேதீச்சரத்தான் 

  செந்தமிழோர் போற்றும் செய்யுளி லுளான்

அவனவன் எண்ணும் எண்ணத்துள் உளான்

அணுமுதல் அண்டம் அனைத்து முளான்

அயனவன் அரியவன் காணா நீள்

அனலுருவாய் முகிழ்ந்த முதல்வன்

சிவனவன் சிவ ராத்திரியான் எம்

சிந்தை நிறைய பண்ணிய புண்ணியமேது

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

சிவனவன் - சிவனாகிய அவன்

திருக்கேதீச்சரத்தான் - திருக்கேதீச்சரத்தில் உள்ளான்

எண்ணும் - நினைக்கும்

அண்டம் - univers

அயனவன் - பிரம்மாவும்

அரியவன் - விஷ்ணுவும்

காணா - பார்க்க முடியாமல்

நீள் அனல் - நீண்ட தீ

உருவாய் - வடிவாய்

முகிழ்ந்த - தோன்றிய

முதல்வன் - எல்லாவற்றுக்கும் காரணன்

சிவராத்திரியான் - சிவராத்திரிக்கு உரியவன்

நிறைய - நிறைந்திருக்க

பண்ணிய - செய்த

புண்ணியம் - நல்வினைப் பயன்.

ஏது - என்ன?


குறிப்பு:

சிவராத்திரியான இன்று திருக்கேதீச்சரத்து மகாசிவலிங்கம் முன்பு உருவான பாமாலை இது.

Monday, 10 February 2025

பேரருள் பொழிவாய் பெம்மானே!

ருகா இன்பம் பரு என்றே
பகலிரவாய் பயின்ற நற்றமிழால்

முருகா வென அழைத்தழைத்து

முன்னை வினைகள் வேரறுக்க

உருகா மனஉருக்கை உருக்கி

உன் நினைவில் நித்தமிருத்தி

பெருகா இன்பப்பெருக்கை பெருக்கி

பேரருள் பொழிவாய் பெம்மானே

இனிதே,

தமிழரசி


சொல்விளக்கம்:

பருகா இன்பம் - முத்தியின்பம்

மனஉருக்கு - மனமாகிய உருக்கு[Seel]

நித்தமிருத்தி - எப்போதும் இருத்தி

Friday, 7 February 2025

கண்ணப்பன் அப்பிய கண் போதாதோ


ஒற்றியூர் அதனில் ஒண்மலர் மாலைசூட்டி

உன்கழல் நாளும் பரவு சங்கிலியார்க்காய்

சுற்றிநின்றோர் கேட்க சுந்தரத்தமிழ் தந்த

சுந்தரரின் கண் கொண்ட சுந்தரனே

கற்றிலா கற்புடைக் கண்ணப்பன் அப்பிய

கண் போதாதோ என் கண்கொண்டு

மற்றியாது மகிழ்ந்து காணத் திருவுளமோ

மனமன்றினில் ஆடும் மைந்த சொல்வாய்


இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

ஒற்றியூர் - திருவொற்றியூர்

ஒண்மலர் - இயற்கையான அழகுள்ள மலர்

உன்கழல் - உனது திருவடி

பரவும் - வணங்கும்

சங்கிலியார் - சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவி

சுந்தரத்தமிழ் - அழகியதமிழ்

சுந்தரரின் - சுந்தரமூர்த்தி நாயனாரின்

கண்கொண்ட - கண்ணைக் குருடாக்கிய

சுந்தரனே - அழகிய சிவனே 

கற்றிலா - படித்தறியாத

கற்புடை - கல்வியறிவுடைய

கண்ணப்பன் - கண்ணப்ப நாயனார்

அப்பிய - ஒற்றிவைத்த

மற்றியாது - மற்று + யாது/மற்றையதுஎன்ன?

திருவுளமோ - விருப்பமோ

மனமன்று - மனமேடை

ஆடும் - இதயத்துடிப்பாய் ஆடுகின்ற

மைந்த - மகனே