Monday, 22 September 2025

கலைமகளே கருணைக்கண் பாரம்மா!


பிள்ளை உள்ளத்தாமரையில் பொற்புடனே நின்றவளே
            பல்கலையும் பைந்தமிழும் பயிற்றுவித்த தாயவளே
வெள்ளை மனத்தாமரையில் வீற்றிருக்க வருவாயா
            வேண்டும்வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்வாயா
கள்ளை விண்டுந்தாமரையின் கருவண்டெனக் கற்றிட
            கல்வியெனும் கோதிலா அமுதைக் கற்கண்டாய் தருவாயா
கொள்ளை இன்பகோமளக் கொழுந்தே கோதாட்டியெம்மை
            கருதிவளர்க்குங் கலைமகளே கருணைக்கண் பாரம்மா!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பிள்ளை - சிறுபிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தாமரையில் - உள்ளமாகிய தாமரையில்/உள்ளுதல்[நினைத்தல்-நிலைத்திருக்கும்]
பொற்புடன் - மிளிர
பயிற்றுவித்த - கற்பித்த
தாயவளே - தாயே
வெள்ளை - அழுக்கற்ற/வஞ்சனை இல்லாத
மனத்தாமரையில் - மனமாகிய தாமரையில்/சிந்தனை[கற்பனை-மாறுபடும்]
வேண்டும் வரம் - கேட்கும் வரம்
வேண்டுவோர்க்கு - கேட்போர்க்கு
வேண்டுவன - தேவையானவற்றை
கள்ளை - தேனை
விண்டும் - சிந்தும்
கருவண்டென - கருநிற தேன்வண்டு போல[பெருந்தேனி மீண்டும் மீண்டும் சுழன்று தேன்                                   அருந்துவது போல]
கற்றிட - படிக்க
கோதிலா - குற்றமில்லாத/ குறையில்லாத
அமுதை - அமிழ்தத்தை
கற்கண்டு - பலவகையாக சுவைத்து [கடித்து விரைவாக/உமிந்து மெதுவாக] உண்ணலாம்
கொள்ளை இன்பக்கோமளம் - அளவிடமுடியாத பேரின்ப அழகான
கொழுந்தே - தளிர் நெருப்பே [மேல் நோக்கி எரியும் தீச்சுடர்]
கோதாட்டி - பெருமைப்படுத்தி
எம்மை - எங்களை
கருதிவளர்க்கும் - கருத்தில் கொண்டு வளர்க்கின்ற

No comments:

Post a Comment