Sunday, 21 September 2025

வாழ்வாங்கு வாழ்வோர்!


பாவியர் தம்மையும் படைத்தவன் நீயோ
            பரமன் எனும் பெயரைத் தந்ததுயாரோ
ஆவியை வைத்தாய் அனைத்துமே தந்தாய்
            ஆணவம் அற்று வாழவும் வைத்தாய்
கூவி அழைத்தே கும்பிட்டு நின்றேன்
            குணங்கெட்ட செயலை செய்பவர் தம்மை
வௌவி அழித்திடு! வையகம் எங்கும்
            வாழ்வாங்கு வாழ்வோர் வாழ்ந்திட நன்றே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பாவியர் - குற்றம் செய்வோர்/தீயவர்
பரமன் - மேன்மையான பண்புகளைக் கொண்டவன்
ஆவியை - உயிரை
அனைத்துமே - தேவையான அனைத்தையும்
அற்று - இல்லாது
குணங்கெட்ட - கெட்டதை
வௌவி - பற்றியெடுத்து
வையகம் - உலகம்
வாழ்வாங்கு - உலக ஒழுக்கத்தின் படி/மனிதப்பண்புடன்
வாழ்வோர் - வாழ்கின்றவர்கள்
வாழ்ந்திட - வாழ

No comments:

Post a Comment