Tuesday, 21 January 2025

வற்றல் மரங்கள் உணவு தந்திடுமோ?


மரங்கள் தாமே உணவையாக்கி பிற
            மன்னுயிர் மகிழ்ந்துவாழ தமைக் கொடுக்கும்
மரமே மண்ணுயிர் அனைத்தின் உயிர்நாதம்
            மறவாதவை தரும் காற்றே உயிர்மூச்சு
மரங்கள் மண்ணில் இல்லையெனில் வான்
            மழையும் இங்கு பொழியாது வற்றல்
மரங்கள் உணவு தந்திடுமோ உயிர் மூச்சுமின்றி
            மானுடம் மெல்ல நுடங்கிடலாமோ சொல்!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
"மரம் வளர்த்து மன்னுயிர் காப்போம்"

Tuesday, 14 January 2025

நீரில் மூழ்கித்திரிய உதவிய ஐம்பொறி அங்கலம்

        வீரமாதேவி சொன்ன ஐம்பொறி அங்கலம் [சுறாமீன் வடிவில் செய்தது]

இயற்கையும் அதன் உயிரினங்களும் பல துன்பங்களை மனிதனுக்குக் கொடுத்தன. அத்துன்பங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தேவையான கருவிகளை உண்டாக்க இயற்கையிடம் இருந்தே கற்றுக் கொண்டான். அப்படி மனிதன் உருவாக்கிய கருவிகளில் ஒன்றே ஐம்பொறி அங்கலம். சுறாமீன்களை பார்த்து கடல்வாழ் உயிரினங்கள் பயந்து ஓடுவதைக் கண்டு கட்டுமரத்தில், நாவாயில், படகில், கப்பலில் செல்லும் பொழுது எதிரிகளிடம் இருந்து தப்ப சுறாமீன் வடிவில் அதனைச் செய்தான்


மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் [கிபி 1251 - கிபி 1268] மகன் முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன். மாறவர்மன் குலசேகரபாண்டியன் மதுரையை கிபி 1268 - கிபி1311 வரை ஆண்ட பேரரசன் ஆவான். அதே காலத்தில் ஈழத்தின் பெரும்பகுதியும் அவன் ஆட்சியின் கீழே இருந்தது. ஆதலால் அவனின் மகள் வீரமாதேவி ஈழத்தில் இருக்கும் புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தாள். மாலிக்கபூர் படை எடுத்த போதே அவள் தன் கணவன் நரசிம்மனுடன் ஈழம்  சென்றாள். இவள் பற்றி முன்பும் பல முறை எழுதியுள்ளேன். மேலே சொன்ன ஐம்பொறி அங்கலத்தை எப்படி இயக்குவது என்பதை வீரமாதேவி தனது நாட்குறிப்பு ஏட்டில் குறிப்பிட்டிருந்தாள். போர் மேகம் சூழ்ந்த நேரத்தில் [கிபி 1311] கடல்வழியால் பாய்மரக்கலத்தில் செல்லும் போது எதிரிகளின் தாக்குதலில் இருந்து நீரில் மூழ்கித் [Diving] தப்பப் பயன்படுத்தியதே ஐம்பொறி அங்கலம்.


பரதவ சேரி பல்வினைக் கலைஞன்

புரவலன் செப்ப பாங்குடன்  சமைத்த

வளிகொள் மகரமீன் வடிவுடை மிதவை 

களிகொள காற்றினை கனியிதழ் வைத்து

செங்கயல் ஊதிட சற்றே விம்மி 5

அங்கலம் விரிய அற்புதம் அற்புதமென

செப்பினள் பதுமா செப்பியவள் தானும்

செயலெது ஆகும் செப்பிடு என்னலும்

செங்கயல் செங்கண் சினத்தினைக் காட்ட

பொங்கும் அழுகையைப் பதுமா அடக்கலும் 10

'மெல்லச் சென்று மென்கரம் பற்றி

சொல்லும் தருணம் அஃதில்லை ஆயினும்

நம்நிலை எண்ணி நயப்புடன் நாடிநட்ட

ஐம்பொறி அங்கலம் இஃதெனக் கூறி

மீனிடைப் புகுந்து மென்வாரது கொண்டு 15

மேனியைக் கட்டி மெல்லக் கிடந்தே

காலது கொண்டு வாலது இயக்கிமுழந்

தாளது கொண்டு தளரிடுப்பு இயக்கியும்

கையது கொண்டு முந்துடுப்பு இயக்கியும்

மெய்யது கொண்டு மேல்கீழ் உந்தியும் 20

துழாவியும் துவண்டும் துரிதமாய் நீரிடை

ஆழமாய் சென்றும் ஆங்கிடை நின்றும்

மூழ்கியும் எழுந்தும் முன்னும் பின்னும்

ஆழ்ந்தெழு அலையினை ஆற்றலொடு எதிர்த்தும்

உடலினை நீட்டிக் குறுக்கி வேண்டியவை 25

கடலிடைச் செய்யும் கருமங்கள் காட்டி

வாயது புகுநீர் வால்வழி ஓடிட

தாயது வயிற்றிடை தனிச்சேயது போல

அக்கருவறை கிடந்து அங்கலம் செலுத்தும்

பக்குவம் சொன்னேன்' பாவையோர் தமக்கே 30

                                             - (வீரமாதேவி நாட்குறிப்பு கிபி 1311)


அரசன் [புரவலன்] சொல்ல, பரதவர்களுடைய தெருவில் [சேரி] வாழ்ந்த பல தொழில்கள் [பல்வினை] தெரிந்த கலைஞன் ஒப்பற்றதாய் [பாங்குடன்] காற்று நிறையக் கூடிய [வளிகொள்] சுறாமீன் [மகரமீன்] வடிவில் செய்த [சமைத்த] மிதவை மகிழ [களிகொள], செங்கயல் என்பவள் தனது வாயை வைத்து காற்றை ஊதினாள். கொஞ்சம் [சற்றே] பருத்து [விம்மி] அங்கலம் விரிய, “அற்புதம், அற்புதம் என்று பதுமாசொன்னாள். சொன்னவள்இது என்ன செய்யும் [செயலது]” என்று கேட்டாள்[செப்பிடு]. அதைக் கேட்ட செங்கயல் என்பவளின் சிவந்த கண்கள் கோபத்தைக் [சினத்தைக்] காட்ட, பொங்கிவந்த அழுகையை பதுமா அடக்கினாள். மெதுவாகச் சென்று பதுமாவின் மென்மையான கரத்தைப் பிடித்துக் கொண்டு, ‘சொல்லவேண்டிய நேரம் [தருணம்] அதுவாக இல்லாதபோதும் எங்களுடைய நிலையை எண்ணி விரும்பி [நயப்புடன்] ஆராய்ந்து செய்த [நாடிநட்ட] ஐம்பொறி அங்கலம் இதுஎன்று கூறினேன்.


காற்றூதிய மகரமீனுக்குள் புகுந்து மெல்லிய வாரால் உடம்பை அதனுடன் சேர்த்துக் கட்டி, மெதுவாகக் [மெல்லக்] கிடந்து கால் இரண்டாலும் மீனின் வாலை இயக்கியும், முழங்காலால் [முழந்தாள்] வளையும் [தளரும்] மீனின் இடுப்பை இயக்கியும், கைகளால் மீனின் முன் துடுப்பை இயக்கியும் உடலால் [மெய்யது] மேலும் கீழும் நீரை உந்தியும் துழாவியும், தளர்ந்தும் [துவண்டும்] மிகவிரைவாய் [துரிதமாய்] நீரின் இடையே மிக ஆழத்திற்கு சென்றும் அங்கே [ஆங்கிடை] நின்றும் [எதிரி வந்தால் மறைவதற்கு] ஆழமாக தாழ்ந்து எழுகின்ற [ஆழ்ந்தெழு] அலைகளை வலிமையுடன் [ஆற்றலுடன்] எதிர்த்தும் உடலை நீட்டியும் குறுக்கியும் நீருக்குள் மூழ்கும் போது கடலில் செய்யும் செயல்களைக் எடுத்துக் காட்டி, மீனின் வாயல் புகும் கடல் நீர் வால்வழி ஓட தாயின் வயிற்றில் தனியாகச் சேய் இருப்பது போல மீன்வடிவ உடலினுள் [அக்கருவறை] கிடந்து அங்கலத்தை இயக்குவது எப்படி [பக்குவம்] என்பதைச் பெண்களுக்குச் [பாவையோர்] சொன்னேன் என வீரமாதேவி தனது நாட்குறிப்பு ஏட்டில் எழுதியிருந்தாள்.


வீராமாதேவியின் நாட்குறிப்பு ஏடு தந்த இவ்வரலாற்றில் இருந்து 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலில் பயணம் செய்வோர் பாய்மரக்கலம் எதிரிகளால் தாக்கப்பட்டாலோ, சூறாவளியால் உடைந்தாலோ ஐம்பொறி அங்கலத்தைப் பயன்படுத்தி தப்பிச் சென்றதை அறியமுடிகிறது. 


ஏன் ஐம்பொறி அங்கலம் என அழைத்தனர்? ஐந்து கருவிகளால் [ஐம்பொறி] ஆன அங்கலம். அதாவது அம் + கலம் = அங்கலம் எனப்புணரும். அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி என்பதில் வரும் அங்கயல் போல அம் + கலம் = அங்கலம் ஆகும். இதில் அம் நீரைக் குறிக்கும். ஐந்து கருவிகளையுடைய நீர்க்கலம் என்பதையே ஐம்பொறி அங்கலம் என்றனர். 


அந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்தோர் நீரில் மூழ்கித்திரிய ஐம்பொறி அங்கலம் பயன்படுத்தினர் என்பதை அவளது நாட்குறிப்பு வரலாறாய்க் காட்டுகிறது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் வாரலாற்றை எடுத்துக் கூறும் பதிவு இதுவாகும். 

இனிதே, 

தமிழரசி.


குறிப்பு:

வரலாற்று ஆர்வத்தால் என்னை அணுகி வீரமாதேவி வரலாற்றைக் கேட்ட இரு அன்பு உள்ளங்களுக்கும் படம் தந்த கீரனுக்கும் எனது மகிழ்ச்சியை அறியத்தருகிறேன். அவர்களுக்காகவே வீரமாதேவி சொன்ன இவ்வரலாற்றை இதழில் பதிவிட்டேன்.